கௌசிகனைக் கண்டால் இன்னுமே அவளுக்கு அதே பயமும் நடுக்கமும் உண்டுதான். என்ன, பிரமிளாவின் தயவில் அதை மனத்துக்குள் வைத்துக்கொண்டு அவன் முன்னே சாதாரணமாக நடமாடப் பழகி இருந்தாள்.
மோகனன் அப்படியன்று. சவூதி போனபிறகு, அவனோடு தொலைபேசி வாயிலாகப் பேச ஆரம்பித்து, அவர்கள் இருவருக்குள்ளும் அண்ணா தங்கை என்கிற பாசத்தோடு சேர்த்து, ஒருவித நட்புணர்வும் உண்டாகியிருந்தது.
இப்போதெல்லாம் யாழினிக்கு அவனிடம் துளியும் பயமோ நடுக்கமோ வருவதில்லை.
“நோ அத்த! சித்தப்பா ஹாண்ட்ஸம் கை! சிக்ஸ் பேக் எல்லாம் வச்சிருக்கிறார். அப்பிடித்தான் இருப்பார்.” என்ற மிதுனா, தங்களின் அறைக்கு ஓடிப்போய்ச் சீப்பையும் அவளுடைய பேண்ட் ஒன்றையும் எடுத்துக்கொண்டு ஓடிவந்தாள்.
மோகனனை இழுத்துக்கொண்டுபோய் சோபாவில் அமர்த்தி, அவனுக்குப் பின்னால் ஏறி நின்று, அவன் தலையை வாரி, அனைத்து முடியையும் ஒன்றாக்கி பிடறியில் பேண்ட் போட்டுவிட்டாள்.
வீட்டில் இருந்த எல்லோருக்குமே முகம் முழுக்கச் சிரிப்பு.
இதில், அவளின் குட்டிக் கைகளால் இறுக்கமாகப் போட முடியவில்லை என்று, பேண்டை கழற்றிவிட்டு கைகள் இரண்டாலும் கோதி, மீண்டும் இறுக்கமாகப் பேண்ட் போட்டான் மோகனன்.
கௌசிகன் பிரமிளா உட்பட நடப்பதை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த எல்லோருக்குமே அவனை எண்ணி வியப்புத்தான். ஆனாலும் எதையும் காட்டிக்கொள்ளவில்லை. இயல்புபோல் ஏற்று நடந்தனர்.
காலை உணவின்போது, “உனக்கு ஏதும் வேலை இருக்கா?” என்றான் கௌசிகன்.
“இஞ்ச எனக்கு என்ன வேலை? பிரெண்ட்ஸ ஒருக்கா பாக்கப் போகோணும். மற்றும்படி ஒண்டும் இல்ல.”
“அப்ப வா, நாங்க கட்டுற வீட்டைப் பாத்துக்கொண்டு வரலாம்.”
மதுரனை அன்னையிடம் விட்டுவிட்டு, பிரமிளாவையும் மிதுனாவையும் கல்லூரியில் இறக்கி விட்டுவிட்டு, மோகனனோடு அவன் வீடு நோக்கிக் காரைச் செலுத்தினான் கௌசிகன்.
ஊரையும், இந்த ஏழு வருடங்களில் உண்டாகியிருந்த மாற்றங்களையும் அவதானித்துக்கொண்டு வந்தான் மோகனன்.
“உனக்கும் ஒரு கார் ஓடர்(order) பண்ணவா?” அவர்களுக்கிடையில் இருந்த மௌனத்தைக் கலைத்தான் கௌசிகன்.
“வேண்டாம் அண்ணா. ரெண்டு மாதத்துக்குத்தானே. என்ர பைக்கை சேவிஸ்க்கு விட்டு எடுத்தா காணும்.” என்றான் அவன்.
கௌசிகனின் முகத்தில் அந்தப் பேச்சுப் பிடிக்காத பாவம் உண்டாயிற்று. கூடவே, “அங்க அப்பிடி என்ன இருக்கு எண்டு திரும்பவும் அங்கேயே போக நிக்கிற? இவ்வளவு காலம் இருந்தது காணாதா? அம்மாவைப் பாத்தனிதானே, நீ இல்லாம எவ்வளவு கவலை பட்டவா எண்டு. ரெண்டு மாதத்தில நீ திரும்பிப் போறாய் எண்டு இன்னும் நான் சொல்லேல்ல. சொன்னனோ மனுசி அழுதே கரைவா.” என்றான் இறுக்கம் மிகுந்த குரலில்.
அதற்கு அவன் ஒன்றும் சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தான்.
“என்னடா? இப்பிடிப் பேசாம இருந்தா என்ன அர்த்தம்? அமைதியா இருந்தே உன்ர மறுப்பச் சொல்லுறியோ?”
“அப்பிடி இல்லை அண்ணா. ஆனா, இஞ்ச இருந்து… நான் என்ன செய்ய?”
“இதென்ன கேள்வி. எனக்கு என்ர ஹோட்டலை பாக்கவே நேரமில்லை. திருகோணமலையில கட்டிக்கொண்டு இருக்கிற ஹோட்டலை பாக்க மாதத்தில ஒருக்கா போறதே பெரிய பாடா கிடக்கு. பள்ளிக்கூடத்தில பெயருக்குத்தான் நான் நிர்வாகி. முழுக்க முழுக்கப் பாக்கிறது மாமாதான். அப்பாக்கு வயசு நல்லா போயிட்டுது. அவர் நகைக்கடைகளை எப்பிடிப் பாப்பார்? ரஜீவன்தான் பொறுப்பெடுத்து நடத்துறான். அவனுக்கும் அவன்ர தொழில் இருக்கு. அப்பப்ப ராதாவும் வந்து உதவி செய்வாள். அது எத்தின(எத்தனை) நாளைக்கு? அவளுக்கு ஒரு கலியாணம் நடக்கிற வரைக்கும்தானே. அப்பாக்குப் பிறகு நகைக்கடைகளை ஆரு பாக்கிறது? நீ பொறுப்பெடுத்தா அப்பா சந்தோசப்படுவார்.” என்று வேகமாய் அடுக்கினான் தமையன்.
அவன் சொன்னவற்றுக்கு ஒன்றும் சொல்லாமல், “அது ஆர் ராதா? புதுப் பெயரா இருக்கு?” என்று விசாரித்தான் அவன்.
“தெரியாதா உனக்கு? யாழியும் சொல்லேல்லையா? ரஜீவன்ர தங்கச்சி. ருஹுன யுனிவர்சிட்டில(University of Ruhuna) படிச்சவள். அவளும் டீச்சர்தான். கண்டில மூண்டு வருசமா இருந்திட்டு இப்பதான் இஞ்ச ஒருவருசமா டிரான்ஸ்பர் வாங்கிக்கொண்டு வந்து இருக்கிறாள்.”
“ஓமோம்! ராது எண்டு யாழி சொல்லுறவள்தான். அது ராதா எண்டு நான் யோசிக்கேல்ல.”
அவனுக்குக் காதலிக்கக் கற்றுக்கொடுக்கப் போகிற, வாழ்வின் வரைமுறைகளை விளங்க வைக்கப் போகிற ஒருத்தியைப் பற்றி, வெகு சாதாரணமாக உள்வாங்கிக்கொண்டு இருந்தான் மோகனன்.
இப்படி, எதிலுமே அக்கறையற்றவன் போன்று இருக்கிறவனை என்ன செய்வது என்கிற யோசனையுடன் நோக்கினான் கௌசிகன். கூடவே, அவனுடைய கேள்விக்கான பதிலையும் அவன் தரவில்லை என்பதையும் கவனிக்காமல் இல்லை.
அதில், “முதல் நீ ஒரு கலியாணத்தைக் கட்டு. நானே முப்பதுல கட்டிட்டன். நீ முப்பத்தியொண்டு ஆகியும் இப்பிடியே இருந்து என்ன செய்யப்போற? கடையப் பொறுப்பெடு. என்னை மாதிரி நீயும் மனுசி, பிள்ளைகள் எண்டு சந்தோசமா வாழு!” என்று புத்தி சொன்னான்.
ஜன்னல் வழியே வெளியில் பார்வையைப் பதித்திருந்த மோகனன் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.
அவனை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு, “ஏனடா இப்பிடி தலைகீழா மாறிப்போய் நிக்கிறாய்? தெரிஞ்சோ தெரியாமலோ ஒரு பிசகு நடந்திட்டுதுதான். நானும்… யோசிக்காம தண்டனை எண்டு சவுதிக்கு அனுப்பி இருக்கக் கூடாது. ஆனா, அதெல்லாம் நடந்து முடிஞ்சுது. நீயும் நிறைய மாறிட்டாய். புது வாழ்க்கையைச் சந்தோசமா வாழப்பார் மோகனன்.” என்றான் பொறுமையாக.
முகத்தில் அரும்பிய முறுவலோடு தமையனைத் திரும்பிப் பார்த்தான் மோகனன்.
“கேட்ட கேள்விக்குப் பதிலைச் சொல்லாம என்னடா சிரிப்பு?”
“நிறைய மாறிட்டீங்க அண்ணா. இவ்வளவு பொறுமையா கதைக்க உங்களுக்குத் தெரியுமா? அண்ணி கெட்டிக்காரி. உங்களையே மாத்தி இருக்கிறாவே.” என்றான் அவன்.
கௌசிகனின் முகத்திலும் மலர்ந்த சிரிப்பு. மோகனன் பற்றிய கவலை கூட அந்த நொடியில் மறந்து போனது.
“நான் எண்டு அகம்பாவம் பிடிச்சுத் திரிஞ்ச அந்தக் காலத்தில நான் செய்த ஒரே நல்ல காரியம் என்ன தெரியுமா? தலைகீழா நிண்டு உன்ர அண்ணியக் கட்டினதுதான். அதால தான்டா என்ர வாழ்க்கை இந்தளவுக்கு நிம்மதியாவும் சந்தோசமாவும் இருக்கு. உன்னையும் ஒரு கலியாணத்தைக் கட்டு எண்டு இதுக்குத்தான் சொல்லுறன். வாழ்க்கை எவ்வளவு அழகு எண்டு அப்பதான் உனக்கும் விளங்கும்.” என்று மீண்டும் தன் பேச்சுக்கே வந்தான் அவன்.
“கலியாணம்…” என்று இழுத்து யோசித்துவிட்டு, “அதுல எனக்குப் பெருசா நாட்டம் இல்லை அண்ணா. அதேமாதிரி, இஞ்ச எனக்குச் சரியா வரும் மாதிரியும் இல்ல.” என்று மெல்லத் தன் மனத்தை உரைத்தான்.
அவ்வளவு எடுத்துச் சொல்லியும் தன் முடிவிலிருந்து மாறாதவனின் பேச்சில் கௌசிகனுக்குக் கோபம்தான் வந்தது.
“ப்ச்! நீ இன்னும் சின்ன பிள்ளை இல்ல. நல்லது கெட்டதுகளை யோசிச்சு முடிவு எடுக்க உனக்கு வயசு காணும். எனக்கும், அதைச் செய் இதைச் செய் எண்டு உன்னக் கட்டாயப்படுத்த விருப்பம் இல்ல. நான் சொன்ன எல்லாத்தையும் யோசி. ஆனா ஒண்டு, நாங்களும் உன்ன அவ்வளவு ஈஸியா இஞ்ச இருந்து போக விட்டுட மாட்டோம். அதையும் நினைவில வச்சிரு.” என்றபடி, கட்டுப்பட்டுக்கொண்டிருக்கும் அவர்களின் வீட்டின் முன்னே காரைக் கொண்டுவந்து நிறுத்தினான்.
விசாலமான அறைகளோடு இரண்டு மாடியில் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் எழும்பியிருந்தது அந்த வீடு. கிட்டத்தட்ட கட்டி முடித்திருந்தனர். நிலை, யன்னல்கள் கூட வைத்து முடித்திருந்தார்கள். இப்போது வயரிங் வேலையும் பூச்சும் பூசப்பட்டுக்கொண்டு இருந்தது.
“வீடு பாக்க லட்சணமா இருக்கு அண்ணா.” வீட்டைச் சுற்றிப் பார்த்துவிட்டு மனத்திலிருந்து சொன்னான் மோகனன்.
“பிளான் உன்ர அண்ணிதான். வயரிங் ரஜீவன் செய்றான். யாழின்ர கலியாணம் முடிஞ்ச கையோட இஞ்ச வாறதாத்தான் பிளான் போட்டோம். கொஞ்சக் காலம் சீமெந்துக்கு தட்டுப்பாடு வந்திட்டுது. அதுல லேட்டாயிட்டுது. எப்பிடியும் இன்னும் ஒரு மாதத்தில வேல முடிஞ்சிடும்.” என்றான் கௌசிகன்.