ஞாயிறுக்கே உரித்தான சோம்பல் நிறைந்த காலைப்பொழுது புலர்ந்திருந்தது. அதற்கு மாறாக, அடுப்படியில் நின்று சுறுசுறுப்பாகச் சமைத்துக்கொண்டிருந்தார் பரிமளா.
முதல் நாள் இரவே குழைத்து, புளிக்க வைத்திருந்த அப்ப மாவுக்கு அளவாக உப்பு இட்டு, தேவையான அளவுக்குத் தேங்காய்ப் பாலும் சேர்த்து நன்றாகக் கலக்கினார்.
அதிலிருந்து ஒரு கரண்டி கலவையை அள்ளி, மெல்லிய சூட்டில் அடுப்பில் இருந்த சட்டியில் ஊற்றி, அதே கையோடு சட்டியை மெதுவாக ஒரு சுழற்றுச் சுற்றவும், ‘ஸ்ஸ்ஸ்’ என்ற சத்தத்தோடு அப்பமா சட்டி முழுவதுக்கும் பரவி நின்றது.
அதற்குள் ஒரு முட்டையையும் உடைத்து ஊற்றி, உப்பும் மிளகும் சேர்த்தார். அதை அடுப்பில் வைத்து மூடி விட்டுவிட்டு, அடுப்பை மிக மெல்லிய சூட்டுக்கு மாற்றிவிட்டார்.
மொறுமொறுப்பான அப்பத்துக்குச் சுவையாக இருக்கும் என்று ஏற்கனவே காரசாரமாக வெங்காயச் சம்பல் செய்து வைத்திருந்தார். பிளேன் அப்பங்களும் சுட்டிருந்தார். அதோடு கூடவே இப்போது முட்டை அப்பம். கடைசியாகப் பால் அப்பம்.
‘மொறுமொறுப்பா சாப்பிட்டாத்தானே நல்லாருக்கும். எங்க இந்தப் பிள்ளைகளை இன்னும் காணேல்ல…’ என்று எண்ணியபடி திரும்பி நேரத்தைப் பார்த்தார். காலை எட்டு நாற்பது என்று காட்டியது அது.
“ராதா! வீட்டை ஒதுக்கினது காணும். சோம்பி இருக்காம வந்து சம்பலை இடிச்சுத் தாம்மா. இப்ப அண்ணியைக் கூட்டிக்கொண்டு அண்ணா வந்திடுவான்.” என்று அவளை அழைத்தார்.
“சோம்பி இருக்கிறனோ? நீங்க பாவம் எண்டு முத்தத்தைக் கூட்டிப்போட்டு வந்தா என்னையே குறை சொல்லுறீங்க, என்ன?” என்றபடி வந்தாள் அவள்.
“குறை எங்க பிள்ளை சொன்னனான்? காலம சாப்பாட்டுக்கே வாங்கோ எண்டு சொல்லிப்போட்டு, அண்ணி வந்தபிறகும் சமையல் முடியாட்டி பாவம் எல்லாம்மா. வயித்தில பிள்ளையோட இருக்கேக்க பசி தாங்கேலாது.”
“விடுங்க விடுங்க! அதெல்லாம் அண்ணா வரமுதல் வேல முடிஞ்சிடும். உரலை கழுவி விட்டீங்களா?” என்றபடி, அவர் எடுத்து வைத்திருந்த, தேங்காய் துருவல், சிவப்பு வெங்காயம், செத்தல் மிளகாய்(காய்ந்த மிளகாய்), உள்ளிப்பல்லு, இஞ்சி, கறிவேப்பிலை, கூடவே கொஞ்சம் மாசி, உப்பு என்று அனைத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டின் பின்பக்கம் நடந்தாள்.
யாழினிக்கு உரலில் இடிக்கும் சம்பல் பிடிக்கும் என்பதில் முதலில் செத்தல் மிளகாயையும் வெங்காயத்தையும் சேர்த்து இடித்து, பின்னாலேயே ஒவ்வொன்றாய்ச் சேர்த்தவளுக்கு, காரசாரமான அந்தச் சம்பலைப் பார்க்கையில், கண்டியில் வைத்து ரொட்டியும் சம்பலும் சாப்பிட்ட நினைவு வந்தது.
அவளும் மஞ்சுவும் ரொட்டிக்குச் சம்பலை தொட்டுக்கொள்ள, அவன் மட்டும் சம்பலுக்கு ரொட்டியைத் தொட்டுக்கொண்டு சாப்பிட்டான். அந்தளவுக்குக் காரம் பிடிக்கும் போலும்.
அந்த இரண்டு நாட்களும் எவ்வளவு நன்றாகக் கவனித்துக்கொண்டான். அதை அவள்தான் கெடுத்துக் கொண்டது. அன்றிலிருந்து அவளோடு முறுக்கிக்கொண்டு நிற்கிறான்! இருந்தாலும், நேற்று கண்ணாலும் புருவத்தாலும் போ என்று காட்டியது எவ்வளவு பெரிய அவமானம். இதில் அவள் அவனைப் பரிதாபம் பார்த்தாளாம். ‘அவனை..’ என்றவள் உலக்கையால் ஓங்கி உரலை இடித்தாள்.
ஆணவம் பிடிச்சவன்! அவளைப்போட்டு என்னவெல்லாம் பாடு படுத்துகிறான். இது தெரியாத மஞ்சு, எடுக்கிறபோதெல்லாம், ‘அண்ணா எப்பிடி இருக்கிறாரடி? சமாதானம் ஆகிட்டியா?’ என்று, என்னவோ அவள்தான் அவனோடு சண்டை பிடித்துக்கொண்டு இருப்பதுபோல் கேட்டுக்கொண்டு இருக்கிறாள். அவளின் திருமணத்துக்கும் அழைக்கப் போகிறாளாம். அழைக்கட்டும்; அழைத்து அவனை மடியிலேயே வைத்துக் கொஞ்சட்டும்; எனக்கு என்ன!
ஒருவழியாக அவனோடு சேர்த்து அவள் சம்பலையும் இடித்துமுடித்தபோது ரஜீவனின் பைக் வீட்டின் முன்னே வந்து நின்றது.
“வாங்க அண்ணி, வாங்கோ அண்ணா.” வாசலுக்கே ஓடிவந்து இன்முகமாய் வரவேற்றாள் ராதா. இருந்தாலும், யாழினியைப் பார்க்கமுடியாமல் அவள் விழிகளில் மெல்லிய தடுமாற்றம்.
யாழினிக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. அடக்கிக்கொண்டு, “எப்பிடி இருக்கிறீங்க மாமி?” என்று பரிமளாவை விசாரித்தாள்.
ராதாவின் முகம் மெலிதாக வாடிப்போனது. காட்டிக்கொள்ளாமல், “இருங்க அண்ணி, குடிக்க ஜூஸ் கொண்டுவாறன்.” என்றுவிட்டு அடுப்படிக்கு ஓடிப்போனாள்.
யாழினிக்குப் பிடிக்கும் என்று, மாதுளை முத்துக்களை ஒவ்வொன்றாக எடுத்து, அதோடு பாதாம் பாலும் சீனியும் சேர்த்து, மிக்சியில் போட்டு அடித்து, வடித்து ஏற்கனவே பிரிட்ஜில் எடுத்து வைத்திருந்த, மாதுளம் பழ ஜூஸினை இரண்டு கிளாஸ்களில் வார்த்து கொண்டுவந்து கொடுத்தாள்.
வாங்கி மேசையில் வைத்தாள் யாழினி. ஆனால், ரஜீவன் அருந்தி முடித்தபிறகும் கூடத் தொட்டும் பார்க்கவில்லை. அதற்குமேல் பொறுக்க முடியாமல், “அண்ணி!” என்றாள் ராதா அழுவாரைப்போன்ற குரலில்.
“சொல்லு ராதா, அண்ணிக்கு என்ன?” அவளை நேராகப் பார்த்துக் கேட்டாள் யாழினி.
“கோவமா அண்ணி?”
“நான் கோவப்படுற அளவுக்கு நீ என்ன செய்தனி?”
பதில் சொல்லாமல் அவளையே பார்த்தவளின் மூக்கு நுனி சிவக்க, விழிகள் மெல்ல மெல்ல கரிக்கத் தொடங்கியது. அப்போதும், அவளையே பார்த்துக்கொண்டு இருந்தாள் யாழினி. ஒருகட்டத்தில், இதற்குமேல் தாங்கமாட்டாள் என்று புரிந்துவிட எழுந்து கைகளை விரித்தாள்.


