அடுத்த நொடியே, “அண்ணி!” என்றபடி அவளின் கைகளுக்குள் புகுந்திருந்தாள் ராதா.
“சொறி, சொறி அண்ணி! அது கோபத்தில யோசிக்காம..”
“ஓ..! அப்ப கோவம் வந்தா நீங்க என்னவும் கதைப்பீங்க. அப்பிடியா மேடம்?”
“அண்ணி..” அவள் சிணுங்கவும் கலகல என்று சிரித்தாள் யாழினி.
“விடு விடு! நான் செஞ்சதும் பிழை தானே. அதைவிட, என்ர மச்சாளுக்கு இல்லாத உரிமையா?” என்று தட்டிக்கொடுத்த பிறகுதான் கலக்கம் தெளிந்தாள் ராதா.
“அப்ப, இவ்வளவு நேரமும் கோவமா இருக்கிற மாதிரி நடிச்சு இருக்கிறீங்க, என்ன? எனக்கும் ஒரு சான்ஸ் வருமெல்லோ. அப்ப இருக்கு உங்களுக்கு..” என்று, அவர்கள் அடுத்த நொடியே தமக்கான உலகத்துக்குள் நுழைந்திருந்தனர்.
அதுவரை நேரமும் வெளியே காட்டிக்கொள்ளாத போதிலும், வந்ததில் இருந்து யாழினி ராதாவிடம் முகம் திருப்பியதைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தனர் பரிமளாவும் ரஜீவனும். மனதில் வலித்தாலும் தாம் இதில் தலையிடக்கூடாது என்றுதான் பொறுத்திருந்தனர். இப்போதுதான் நிம்மதியானது.
அதுவும் ரஜீவன் சற்று வியந்துதான் போனான். இப்படி ஒன்று அவனுக்கு நடந்திருந்தால் நிச்சயம் அவன் அதனைத் தன் தன்மானப் பிரச்சனையாகத்தான் பார்த்திருப்பான். யாழினியைப்போல் இவ்வளவு இலகுவாகக் கையாண்டிக்க மாட்டான். ‘நான் செய்ததும் பிழைதான்’ என்று கௌரவம் பாராமல் ஒத்தும் கொண்டாளே.
இத்தனை நாட்களாக விலகி நின்ற அவன் மனது மனைவியின் புறமாக இளகிற்று. அவளைப் பார்த்தான். காலை நேரத்துப் பூவைப்போல் மலர்ந்திருந்த அந்த முகம், தாய்மையின் காரணமாகச் சற்றுச் சோர்ந்து தெரிந்தாலும் அதுவும் அழகாகத்தான் இருந்தது.
எதேர்சையாக அவன் பார்வையைச் சந்தித்த யாழினி, ஏன் இப்படிப் பார்க்கிறான் என்று முதலில் குழம்பி, அவனிடம் தெரிந்த வித்தியாசத்தை உணர்ந்து தடுமாறி, முகம் சூடாகப் பார்வையை வேகமாக விலக்கிக்கொண்டாள்.
அவன் உதட்டினில் முறுவல் அரும்பிற்று. தங்கையையும் அவளையும் கவனித்தான். அவர்கள் இருவருக்குள்ளும் இருக்கும் அன்னியோன்யம் மனத்தைக் கவர்ந்தது. தானும் இப்படித்தான் மோகனனிடமும் நடந்துகொள்ள வேண்டுமோ என்று ஓடியது.
அவன் ஞாபகம் வந்ததும் அவன் சொன்ன காரியம் நினைவு வந்தது. உடனே அன்னையிடம் திரும்பி, “அம்மா, பேரின்பநாதன் அங்கிள் வீட்டை விக்கப்போறாராமா?” என்று விசாரித்தான்.
“ஓம் அப்பு. வாங்க ஆக்கள் இருந்தா சொல்லச் சொன்னவர். எங்களுக்கு ஆர தெரியும் எண்டு நான் பெருசா எடுக்க இல்ல.” என்று சொன்னார் அவர்.
“ஓ..! மோகனனுக்கு வாங்க விருப்பம் போல. நான் அவரோட கதைச்சிட்டு வாறன்.” என்றுவிட்டு அங்கு நடந்தான்.
“சாப்பிட்டு போப்பு.”
“நீங்க யாழிக்கு குடுங்க. வெளிக்கிடேக்கையே பசிக்குது எண்டவள். நான் வந்து சாப்பிடுறன்.”
தன் காதுகள் கேட்டவை உண்மைதானா என்று அதிர்ந்து நின்றாள் ராதா. மோகனனுக்காக அண்ணா ஒரு காரியம் செய்யப் போகிறானா? கேள்வியுடன் யாழினியைப் பார்த்தாள்.
“என்ன ராது? உலகம் மாறிச் சுத்துதா?” என்று கேட்டுச் சிரித்துவிட்டு, நேற்றிரவு நடந்த அதிசயத்தைப் பகிர்ந்துகொண்டாள் யாழினி.
இன்னுமே அவளால் நம்ப முடியவில்லை. ஆனந்த அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். வார்த்தைகளில் வடித்துவிட முடியாத நெகிழ்ச்சியில் அவள் விழிகள் கரிக்கப் பார்த்தது. ‘எனக்காகவா மோகன்? என்ர நிம்மதிக்காக உங்கட விருப்பு வெறுப்பை தள்ளி வச்சிட்டு அண்ணாவோட கதைச்சீங்களா?’ அவள் இதயம் ஆத்மார்த்தமாக அவனைத் தேடிற்று.
இந்த நொடியே இந்தக் கணமே அவனைப் பார்க்கத் துடித்தாள். தன் கண்களுக்குள் அவனை நிரப்பிக்கொள்ள ஏங்கினாள். என்னென்னவோ உணர்வுகள் எல்லாம் பொங்கிக்கொண்டு வந்தன. அத்தனைக்குள்ளும் அவனே நிறைந்து வழிந்தான். அவள் அவள் வசத்தில் இல்லை.
—————————–
ரஜீவன் விசாரித்தபோது, ஆரம்பத்தில் மோகனன் சொன்ன தொகையைத்தான் சொன்னார் பேரின்பநாதன்.
“என்ன அங்கிள், மற்ற ஆக்களுக்குத்தான் இந்த விலை எண்டால் எனக்கும் அதையேதான் சொல்லுவீங்களா?” என்று அவன் உரிமையுடன் கேட்கவும், அவரால் தன் பிடியில் நிற்க முடியாமல் போயிற்று. கடைசியில், கதைத்துக் கதைத்தே அவரைக் கரைத்து, மோகனன் சொன்னதைவிடவும் இன்னும் சில லட்சங்களை குறைத்திருந்தான்.
அங்கிருந்தே மோகனனுக்கு எடுத்துச் சொல்லவும் அவனுக்கும் சந்தோசம். உடனேயே வீட்டைப் பார்க்க புறப்பட்டு வந்தான். பார்த்தவனுக்கு மிகுந்த திருப்தி. வீடு உண்மையில் நல்ல நிலையில் இருந்தது. திருத்துவதற்குப் பெரிய வேலைகளும் இல்லை. இப்படியே விட்டுவிட்டு இன்னும் இரண்டொரு வருடத்தில் விற்றாலே நல்ல இலாபம் பார்க்கக்கூடிய வீடு என்பதில் தானே வாங்கிக்கொள்வதாக அவரிடம் தெரிவித்தான்.
பத்திரப் பதிவுக்கான வேலைகளைப் பார்ப்பதாகச் சொல்லிவிட்டு மோகனன் புறப்பட, “வீட்ட வாங்கோ. ரெண்டுபேரும் சாப்பிட்டு சேர்ந்தே போவம்.” என்று அழைத்தான் ரஜீவன்.
திடீரென்று வீட்டுக்குள் அவனைக் காணவும் அப்படியே நின்றுவிட்டாள் ராதா. அன்றைய நாளின் அடுத்த ஆனந்த அதிர்ச்சி அவளை அசையவிடவில்லை. அதுவும், அவனும் தமையனுமாகச் சேர்ந்து வந்த காட்சியைக் கண்டு தன்னை மறந்து நின்றாள்.
எதற்காகவும் தன் உயரத்தில் இருந்து இறங்காதவன். நான் திமிர் பிடித்தவன்தான் என்று நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நிற்கிறவன். அவளுக்காக அவள் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக அண்ணனோடு இணக்கமாகியிருக்கிறான்.
அவளின் நெஞ்சில் அவன் பால் நேசம் அளவற்றுப் பொங்கியது. ஏனோ அழுகை வந்தது. ஓடிப்போய் அவன் கைகளுக்குள் புகுந்துகொள்ள வேண்டும் போலிருந்தது. பார்த்தது பார்த்தபடி நின்றாள்.


