உணவை முடித்துக்கொண்டு, கடைசியாகப் பால் அப்பம் ஒன்றைக் கையில் வைத்துச் சாப்பிட்டுக்கொண்டே வந்த யாழினியும் தமையனை அங்கு எதிர்பார்க்கவில்லை. “அண்ணா! என்னண்ணா இங்க நிக்கிறீங்க?” என்றாள் ஆச்சரியத்தோடு.
அவளின் சத்தத்தில் தான் திடுக்கிட்டுத் தன்னிலை அடைந்தாள் ராதா. தன்னைச் சமாளித்துக்கொள்ள எண்ணி வேகமாக அறைக்குள் விரைந்தாள்.
“வீட்டை பாக்க வந்தனான்மா. அப்பிடியே ரஜீவன் இங்க கூட்டிக்கொண்டு வந்திட்டார்.” என்று அவன் சொல்வதும்,
“ஓ..! வீடு எப்பிடி இருக்கு அண்ணா? நல்லாருக்கா? வாங்கப்போறீங்களா?” என்று யாழினி விசாரிப்பதும் அவளின் கருத்தில் பதியவே இல்லை.
யன்னல் கம்பிகளைப் பற்றிக்கொண்டு நின்றவளின் மேனியில் மெல்லிய நடுக்கம். நெஞ்சில் உணர்வுகள் பொங்கிப் பொங்கிப் வழிந்தன. அவன் அவன் அவன்! அவன் மட்டுமே அவளுக்குள் நின்று அலையடித்துக்கொண்டு இருந்தான்.
எவ்வளவு பெரிய பாரத்தை, கலக்கத்தை ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டான். இதெல்லாம் அவளுக்காகவா? அவள் கலங்கியதற்காகவா? திரும்பத் திரும்ப மனம் இதையேதான் கேட்டுக் குதூகலித்தது.
“சாப்பாட்டைப் போடுங்கம்மா. பசிக்குது. வாங்க மோகனன்.” என்று தமையனின் குரல் கேட்கவும், வேகமாகச் சார்ஜில் போட்டிருந்த போனை எடுத்து, “தேங்க்ஸ் மோகன். தேங்க்ஸ்பா!” என்று அனுப்பிவிட்டாள். அறையை விட்டு வெளியே வந்தவளின் விழிகள், உணர்வுகளின் தளம்பலில் இலேசாக நனைந்திருந்தது.
மெல்ல நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவனும் அப்போதுதான் போனை எடுத்துப் பார்த்து, அவளின், ‘மோகனில்’ விழிகளைச் சில நொடிகள் நிலைக்க விட்டுவிட்டு, பின் நிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
கணப்பொழுதுதான் என்றாலும் இருவர் பார்வையும் ஒன்றுடன் ஒன்று கலந்தது.
பரிமளாவுக்கு உதவியாக யாழினி பரிமாற வரவும், “நீங்க இருங்கோ அண்ணி. நான் பாக்கிறன்.” என்றவள், வேகமாக இருவருக்கும் இரண்டு தட்டை எடுத்துவைத்து அப்பத்தைப் பரிமாறினாள்.
மோகனனுக்கு வெங்காயச் சம்பலை விடவும் தேங்காய்ச் சம்பலை சற்று அதிகமாகவே வைத்தாள். ‘என்ன இது இவ்வளவு சம்பல்?’ என்று ரஜீவன் பார்க்க, அவனோ ஒன்றும் சொல்லாமல் சாப்பிட ஆரம்பித்தான்.
இருவரையும் பார்த்துப் பார்த்துக் கவனித்தாள் தான் ராதா. இருந்தும், ஒரு கண் சற்று அதிகமாகவே மோகனனில் இருந்தது. ரொட்டியையே எண்ணிக்கை இல்லாமல் உள்ளுக்குத் தள்ளியவனுக்கு மொறுமொறுப்பான குட்டி அப்பங்கள் எந்த மூலைக்கு? வஞ்சனையே இல்லாமல் சாப்பிட்டான். ‘இன்னொருவர் வீட்டில் சாப்பிடுகிறோமோ என்று கொஞ்சமாவது கூச்சப்படுகிறானா பார்..’ என்று எண்ணியவளுக்கு மெல்லிய சிரிப்பு.
இன்றைக்கு எல்லா முடியையும் தூக்கி போனிடெயில் போட்டிருந்தான். கூடவே, முடிகள் விலகிப் பறக்காமல் இருக்க சிக்சேக் பேண்டையும் மாட்டி இருந்தான். அதிசயமாக கை, கழுத்தில் ஒன்றையும் காணவில்லை. வேலைக்கு இடைஞ்சல் செய்யும் என்று போடவில்லை போலும்.
அவன் சாப்பிடும் போதும், பேசும்போதும் அதற்கேற்ப அசைந்தாடிய தாடியைக் கண்டவளுக்குச் சிரிப்பை அடக்குவது சிரமமாக இருந்தது. ‘முதல் இந்த அமேசான் காட்ட எரிக்கோணும்!’ முடிவு செய்துகொண்டாள். அவனோ, அந்த வீட்டை என்னவெல்லாம் செய்யலாம் என்று மும்முரமாக ரஜீவனிடம் சொல்லிக்கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டபடி, இயல்பாய்ப் பேசிக்கொள்ளும் அந்தக் காட்சி வேறு மனதை நெகிழ்த்தியது.
அப்பம் காணாமல் வரப்போகிறது என்று தெரிந்து பரிமளம் அம்மா சுட ஆரம்பிக்கவும், “நீங்க விடுங்கம்மா. களைச்சு போயிருப்பீங்க. நானே செய்றன்.” என்றவள், இரண்டு அடுப்பில் அப்பத்தை ஊற்றினாள்.
அவன் ஒவ்வொன்றாக முடிக்க முடிக்கக் கொண்டுபோய்க் கொடுத்தாள். என்னவோ, தன் கையால் அவன் சாப்பிடுவதைக் காணும்போது மனம் நிறைந்து தளும்பியது. ரஜீவன் சாப்பிட்டு முடித்திருந்தான். அவர்களின் பேச்சு இன்னும் தொடர்ந்தது. ராதா அவனுக்கு வைப்பதை நிறுத்தவில்லை. பேச்சு முடியும்போதுதான் நிறையச் சாப்பிட்டுவிட்டோம் என்று அவனே உணர்ந்தான். “போதும்.” என்றான் அவளிடம்.
“இன்னும் ரெண்டே ரெண்டு பால் அப்பம். அதோட காணும். எழும்பிடாதீங்கோ.” என்றுவிட்டு, அடுப்படிக்கு ஓடிப்போனாள்.
மீண்டும் இரண்டு சட்டியில் அப்பத்தை ஊற்றி, அதனுள் ஒரு துளி உப்பும் சீனியும் சேர்த்துக் கரைத்து வைத்திருந்த கட்டிப்பாலினை(திக் பால்) அளவாக விட்டு, மூடி அடுப்பில் வைத்தாள். எண்ணி இரண்டு நிமிடத்தில் பாலும் சீனியும் உருகி, ஏலக்காய் வாசத்தில் அப்பம் கமகமத்தது. சூட்டோடு சூடாகக் கொண்டுவந்து அவனுக்குக் கொடுத்தாள்.
“இப்பவே வயிறு நிறைஞ்சிட்டுது. இது கூட.” என்றான் அவன்.
“இந்த அப்பம் எல்லாம் உங்களுக்கு எந்த மூலைக்கு? ரெண்டுதான், சாப்பிடுங்கோ.” அவன் முகம் பார்த்துச் சொன்னவளிடம் அவனால் மறுக்க முடியவில்லை. அவளுக்காகச் சாப்பிட்டான்.
அவனுக்கு வயிறு நிறையச் சாப்பிடக் கொடுத்ததில் அவளுக்கு மனம் நிறைந்து போனது.
இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த மற்ற மூவருக்கும், எந்தக் கேள்விகளும் கேட்கப்படாமல், விளக்கங்களும் சொல்லப்படாமல் அவர்கள் இருவருக்குமான உறவு என்ன என்று நன்றாகவே புரிந்து போயிற்று. யாழினியின் விழிகள் பனித்துப்போனது. கையில் இருந்த போனில் கவனத்தைக் குவித்து அதை மறைத்தாள்.
ரஜீவனின் மனதில் இப்போதும் பாரம் ஏறாமல் இல்லை. இது நடந்திருக்க வேண்டாம் என்றுதான் நினைத்தான். ஆனால், நடந்துவிட்டது. ஏற்றுக்கொள்வதற்கு அவன்தான் அவனைத் தயார் செய்துகொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டான்.


