ஓ ராதா 31 – 1

இரண்டு நாட்கள் கடந்திருந்தது. பதுமை போன்று நடமாடிக்கொண்டிருந்தாள் ராதா. ஏன் இப்படியானோம் என்று அவளுக்குப் புரியவே மாட்டேன் என்றது. பள்ளிக்கூடம் சென்றாள். பாடம் நடத்தினாள். அன்னைக்கு உதவியாக இருந்தாள். வீட்டு வேலைகளைக் கவனித்தாள். எதிலும் குறை இல்லை. இருந்தும் அவள் அவள் வசத்தில் இல்லை. அவன் அவன் அவன்! அவன் மாத்திரமே அவளின் எங்கிலும்.

அன்றைக்கு, உணவை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கு முன், திரும்பிப் பார்த்து அவன் தந்த ஒற்றைப் பார்வையைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு நடமாடிக்கொண்டு இருக்கிறாள்.

அவர்கள் நிறையப் பேசிக்கொண்டதில்லை. ஒன்றாக நேரம் செலவளித்ததும் இல்லை. பேசிய பொழுதுகளின் பெரும்பகுதி கூட முரண்களோடே நிகழ்ந்திருக்கிறது. இருந்தும், இதயம் எங்கும் நிறைந்துபோயிருந்தான் அவன்.

அவனைப் பார்க்க வேண்டும்; அவனோடு கதைக்க வேண்டும் என்று இது மாத்திரமே ஓடிக்கொண்டிருந்தது. இரவுகள் இம்சிக்கத் துவங்கி இருந்தன. பகல்கள் நகரவே மாட்டேன் என்றன. இந்த இரண்டு நாட்களாகச் செல்லமுத்து நகைமாடத்துக்கும் மாலையில் போய், கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொடுத்துவிட்டு வருகிறாள்.

அங்காவது வருவான், பார்க்கலாம் என்று பார்த்தால் அவன் வரவேயில்லை. கோபம் கூட வந்தது. அவனைத் தேடிப்போகவும் ஒரு மாதிரி இருந்தது. அவனோடான மெசேஜ்களை எடுத்துப் பார்த்தாள். இதுவரையில் ஒரேயொருமுறைதான் அவனாகப் பேசியிருக்கிறான். மிகுதி எல்லாம் அவள்தான். அதற்குப் பதில் கூட அவன் போட்டதில்லை.

இப்படியெல்லாம் அவளைப்போட்டு வதைக்கிற அவனை என்ன செய்தால் தகும்?

பரிமளா அம்மாவும் அவளிடம் தெரியும் இந்த மாற்றத்தைக் கவனிக்காமல் இல்லை. இருந்தும், அன்று புறப்படும் முன், ‘இப்போதைக்கு அவளிட்ட ஒண்டும் கேக்காதீங்க, அம்மா’ என்ற மகனின் பேச்சைக்கேட்டு அமைதியாக இருந்தார். ஆனாலும், மனம் மிகவுமே கலங்கிப்போனது.

வளர்ந்த பிள்ளைகளின் விருப்பங்களை மறுக்கிறவர் அல்ல அவர். அவர்கள் சந்தோசமாக வாழவேண்டும். அதுதான் அவருக்குத் தேவை. இருந்தும், அவனைப் பார்த்தால் அவருக்கே பயமாய் இருக்கும். அப்படியானவனோடு மகள் எப்படி வாழ்வாள் என்கிற கவலை அவர் மனதைப்போட்டு அரித்தது.

அன்றைய நாளையும் அவன் நினைவுகளோடேயே கழித்துவிட்டு மாலையானதும் செல்லமுத்து நகைமாடத்துக்குப் புறப்பட்டாள் ராதா. அன்றைக்கும் ராஜநாயகம் தான் இருந்தார். ஏமாற்றத்தில் மனமும் முகமும் மெலிதாக வாடிப்போயிற்று. இருந்தும் சமாளித்துக்கொண்டாள்.

அவர் மும்முரமாகக் கணக்குப் பார்ப்பதில் மூழ்கியிருப்பதைக் கவனித்துவிட்டு, “நீங்க விடுங்கோ மாமா. நான் பாக்கிறன்.” என்றாள்.

“நானும் பாத்து வச்சா உனக்குக் கொஞ்சம் இலகுவா இருக்கும் எண்டு நினைச்சன். அது என்னவோ எனக்கு இடிக்குது.” என்றார் நெற்றியைத் தேய்த்துவிட்டபடி.

“ரெண்டும் ரெண்டும் நாலு எண்டு கூட்டிப் போடுறதில என்ன மாமா கஷ்டம்?” என்று கேட்டுவிட்டு, அங்கிருந்த குட்டி கேஸ் அடுப்பில் அவருக்குப் பிடித்த பதத்தில் பாலைக் காய்ச்சிக் கொண்டுவந்து கொடுத்தாள்.

அந்த நேரத்தில் அவருக்கு அது தேவையாகத்தான் இருந்தது. அதைச் சொல்லாமலேயே உணர்ந்து நடந்தவளிடம் மலர்ந்த புன்னகை ஒன்றைக் கொடுத்துவிட்டு அருந்தினார்.

அவள் கணக்கை ஆராய ஆரம்பித்தாள். அப்படியே, நினைவு வந்தவளாக, “போனமாத தங்க நகை சீட்டுல ரெண்டுபேர் காசு இன்னும் தர இல்ல மாமா. அவே இந்த மாதமும் இன்னும் தர இல்ல. என்ன எண்டு ஒருக்கா விசாரிங்கோ. மற்றது, மாதவன் நேற்றுவந்து கதைச்சவர். அவர் வாங்கின கடனை அவரின்ர சம்பளத்தில இருந்து கொஞ்சம் கொஞ்சமா பிடிக்கிறோம் எல்லா. அது இந்த மாதம் பிடிக்காம விட ஏலுமா எண்டு கேட்டவர். நான் உங்களைக் கேட்டுட்டுச் சொல்லுறன் எண்டு சொன்னனான். மற்றது, இந்தச் செக் திரும்பி இருக்கு. அதையும் நாளைக்கு விசாரிங்கோ.” என்று, அவர் செய்யவேண்டியவற்றை நினைவூட்டினாள்.

கேட்டவருக்கு மனதுக்கு இதமாய் இருந்தது. சின்ன விடயம் கூடக் கவனிக்காமல் விடமாட்டாள். நாளைக்குக் காலையில் அவர் வரும்போது அவர் செய்யவேண்டிய காரியங்கள் அனைத்தையும் மேசையில் குறித்து வைத்திருப்பாள்.

“மாதவனுக்கு என்ன செய்யலாம் எண்டு நினைக்கிறாயம்மா?” அவன் கடந்த ஐந்து வருடங்களாக அவர்களிடம் தான் வேலை செய்கிறான். நாணயமானவன் என்றும் தெரியும். ஆனால், அவருக்கு அவளின் கருத்தை அறியவேண்டி இருந்தது.

“ரெண்டு மாதத்துக்கு முதலும் வந்து கேட்டு, நீங்க ஓம் எண்டு சொல்லி இருக்கிறீங்க மாமா. அவரின்ர கணக்கு செக் பண்ணி பாத்தனான். பிறகு, அடுத்தமாதம் அதையும் சேர்த்து கழிச்சு இருக்கிறார். அதால இப்பவும் ஓம் எண்டு சொல்லலாம் எண்டு நினைக்கிறன்.” என்றாள் அவள்.

“அப்ப, நீயே ஓம் எண்டு சொல்லிவிடு.” என்றுவிட்டு எழுந்துகொண்டார் அவர்.

“அது.. நான் எப்பிடி மாமா?”

“அதெல்லாம் சொல்லலாம். நீதான் சொல்லுறாய்.” என்று முடித்துக்கொண்டு, “சரியம்மா, நான் வெளிக்கிடப்போறன். ஆக இருட்டினா சுந்தரத்தையும் கூட்டிக்கொண்டு போ, என்ன.” என்றபடி வீட்டுக்குப் புறப்பட்டார் அவர்.

அன்றைய கணக்கு எல்லாம் கொஞ்சம் குளறுபடியாகத்தான் இருந்தது. அவற்றை ஒன்றுக்கு இரண்டு முறையாகச் சரிபார்த்தாள். இன்றைக்கும் செக்குகள் திரும்பி இருந்தன. யாரின் செக்குகள் என்று பார்த்து குறித்து வைத்துவிட்டு நிமிர்ந்து வாசலைப் பார்த்தாள். இதோடு எத்தனையாவது தடவையாகப் பார்க்கிறாள் என்று அவளுக்கே தெரியாது. இப்போதும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இனி புறப்பட வேண்டும். இல்லையோ இருட்டிவிடும். இதற்குப் பிறகும் வருவான் என்கிற நம்பிக்கை போயிருந்தது.

இருந்தாலும், எழுந்துபோய் ஒரு தேநீரை ஊற்றிக்கொண்டு வந்து அமர்ந்தாள். கூடவே குட்டிக் கிண்ணம் ஒன்றில் கொஞ்சமாய் மிக்ஸரும்.

அவளோ அவனைப் பார்ப்பதற்குத் துடியாய் துடிக்கிறாள். அவனோ முகத்தைக் காட்டாமல் நின்று அவளை ஏங்க வைக்கிறான்.

பார்த்த கணக்கு எல்லாம் சரிதானா என்று மீண்டும் ஒருமுறை மேலோட்டமாக அவள் பார்த்துக்கொண்டு இருந்தபோது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ஆவலுடன் வேகமாக நிமிர்ந்தாள். அவன்தான் உள்ளே வந்துகொண்டிருந்தான்.

அவளின் முகம் அப்படியே மலர்ந்து போயிற்று. விழியாகற்றாமல் அவனையே பார்த்தாள். அப்போதுதான் தலைக்குக் குளித்திருக்க வேண்டும். கையால் அவன் கோதிவிட்ட கேசம் இரண்டாகப் பிரிந்து இரண்டு பக்கமும் அலையலையாய் விழுந்து கிடக்க, பரவிக்கிடந்த தாடியுமாகச் சேர்ந்து அட்டகாசமாய்த் தெரிந்தான்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock