அவன் அவளை அந்த நேரத்தில் அங்கு எதிர்பார்க்கவில்லை போலும். அவளைக் கண்டுவிட்டு கையைத் திருப்பி நேரத்தைப் பார்த்தான். அவளின் முகம் சுருங்கியது. இப்போது என்ன அன்றுபோலவே போ என்கிறானா? இல்லை, இன்னும் போகாமல் என்ன செய்கிறாய் என்று கேட்கிறானா? அவனை முறைத்துவிட்டு பார்வையை மேசையில் கிடந்த கணக்குக் கொப்பியின்(நோட்டு) மீது பதித்தாள். ஆனால், இருக்கிற அத்தனை புலன்களும் அவனின் அசைவுகளையே கவனித்துக்கொண்டு இருந்தது.
அவன் வந்து அவளின் அருகில் நின்றான். அவளுக்கு நெஞ்சு படபடக்க ஆரம்பித்தது. அவள் எழுதிக்கொண்டிருந்த கணக்கு வழக்கை நின்றுகொண்டே கண்களால் மேய்ந்தான். அப்படியே, அவள் ராஜநாயகத்துக்கு என்று குறித்து வைத்திருந்த துண்டுகளை ஒற்றை விரலால் தட்டித் தட்டி வாசித்தான்.
‘டேய்! போடா அந்தப் பக்கம்!’ அவனது அருகண்மையைத் தாங்கமுடியாமல் அவள் மனது அலறியது. அவன் மேசையில் இருந்த தேநீரை எடுத்துப் பருகினான்.
பதறிப்போனாள் ராதா. “அது என்ர தேத்தண்ணி.” என்றாள் அவசரமாக.
“கவனிச்சனான். லிப்ஸ்டிக் கறை கிடந்தது.” சொல்லிவிட்டு மீண்டும் ரசித்துப் பருகினான் அவன்.
அவளுக்கு அதிர்ச்சியில் விழிகள் விரிந்து போயிற்று. அவனையும் அவன் அருந்தும் அவளுடைய தேநீர் கோப்பையையும் மாறி மாறிப் பார்த்தாள். அவளையே பார்த்தபடி ஒரு வாய் தேநீரை நிதானமாய் பருகினான் அவன். அவள் முகமே சூடாகிப் போயிற்று. படக்கென்று குனிந்துகொண்டாள்.
அவன் பக்கத்து இருக்கையில் அமர்ந்து, அவளின் மிக்ஸர் தட்டையும் இழுத்துக்கொண்டான்.
“பிளீஸ்! அது நான் சாப்பிட்டது.” விட்டால் அழுதுவிடுவேன் என்கிற குரலில் சொன்னாள் அவள்.
ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டு மிக்ஸரை அள்ளி வாயில் போட்டான் அவன்.
இனியும் அவள் சொல்வதற்கு என்ன இருக்கிறது. கைகால்களில் எல்லாம் நடுக்கம் பிடித்தது. நெஞ்சு படபடவென்று அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. பார்த்துக்கொண்டிருந்த கணக்கு வழக்கு அனைத்தையும் மூடி, ராஜநாயகம் பார்ப்பதற்கு ஏதுவாக மேசையில் நகர்த்தி வைத்தாள். பர்சை எடுத்துக்கொண்டு புறப்பட, “நில்லுங்க. நானும் வாறன்.” என்றான் அவன்.
அதற்குமேல் நகரமுடியாமல் நின்றாள் அவள். ஒரு சொட்டு விடாமல் தேநீரை அருந்தி முடித்தபிறகுதான் எழுந்துகொண்டான் அவன்.
சுந்தரத்திடம் சொல்லிக்கொண்டு வெளியே வந்து அவள் ஸ்கூட்டியில் ஏறவும், “இருட்டிட்டுது. இனி நீங்க தனியா போகவேண்டாம். என்னோட வாங்க.” என்றான் அவன்.
‘இந்த ரெண்டுநாளா தனியாத்தானே போனாள். அப்போதெல்லாம் இவனா வந்து காவல் காத்தானாம்?’ அவனைப்போலவே புருவங்களையும் விழிகளையயும் ஒன்றாக அசைத்து, ‘உங்கட வேலைய பாத்துக்கொண்டு போங்க’ என்று சொல்ல நினைத்தாள். ஒழுங்காகச் சொல்லவில்லை என்று அவளுக்கே புரிந்தது. அவனும், “நீங்க எதிர்பார்த்த அளவுக்கு வரேல்ல. என்னோடயே வாங்க!” என்றபடி அவளின் ஸ்கூட்டியின் திறப்பை பிடுங்கினான்.
‘தேவையாடி உனக்கு இது?’ அவளுக்கு அவமானம் ஒரு பக்கம் ஆத்திரம் ஒரு பக்கம் என்று பொங்கிக்கொண்டு வந்தது.
“நாளைக்கு நான் பள்ளிக்கூடம் போறேல்லையா?”
“நீங்க விடிய நித்திரையால எழும்பேக்க ஸ்கூட்டி உங்கட வீட்டு வாசல்ல நிக்கும். இப்ப வாங்க!”
அவன் தன் பிடியிலேயே நிற்பதில் மறுக்கவேண்டும் போலிருந்தது. இருந்தாலும், அவனுக்காய் ஏங்கிய மனது அவனுடைய அருகண்மைக்கு ஆசையும் பட்டது. வீதியில் நின்று அவனோடு மல்லுக்கட்டவும் பிடிக்கவில்லை. பேசாமல் சென்று காரில் ஏறினாள்.
இருவருக்குள்ளும் மிகுந்த அமைதி. ராதாவுக்கு எதுவும் பேசவேண்டும் போலில்லை. மூன்று நாட்களாகத் தவித்த தவிப்புக்கு அவனுடன் பக்கத்தில் இருந்து பயணிப்பதே போதுமாக இருந்தது.
“கடைக்கு ஒவ்வொரு நாளும் வருவீங்களா?”
“ம், மாமாதான் வரச்சொல்லி கேட்டவர்.”
“ஓ! ஆனா இனி இவ்வளவு நேரம் வரைக்கும் நிக்காதீங்க. ஒவ்வொரு நாளும் எனக்கு வர டைம் இருக்காது. வீட்டு வேல முடியப்போகுது. அத முடிச்சிட்டு விக்கிறதுக்கு அலுவல் பாக்கோணும். அதால கொஞ்சம் நேரத்துக்கு வந்திட்டு நேரத்துக்கே வெளிக்கிடுங்க.” என்றான் அவன்.
அவன் வருவான் என்றுதானே அவளும் இவ்வளவு நேரத்தை கடத்திக்கொண்டு அமர்ந்து இருந்தாள். அவன் வந்தபடியால் பயமில்லை. இல்லையானால் இந்த நேரத்தில் அவள் தனியாகப் போவது பாதுகாப்பு இல்லைதான். சுந்தரத்தை அலைக்கழிப்பதும் நன்றாய் இராது. எனவே, வேறு பேசாமல், “ம்.” என்றாள்.
“வீட்ட போனதும் எனக்கு ஒரு மெசேஜும் போட்டு விடுங்க.”
அதைக் கேட்டதும் அவளுக்கு மீண்டும் சுர் என்று வந்தது. “கட்டாயம் போடுறன். நான் போடுற மெசேஜுக்கு எல்லாம் நீங்க பதில் போடுறீங்க தானே. அதால மறக்காமப் போடுறன்.” என்றாள் சிடுசிடுப்பாக.
சிறு சிரிப்புடன் அவளைத் திரும்பிப் பார்த்தான் அவன். “எதிர்பாத்தீங்களோ?” என்றான் மீண்டும் வீதியில் பார்வையைப் பதித்தபடி.
எதிர்பார்த்தாளா? ஏங்கியே போனாளே. அதெல்லாம் இவனுக்கு எங்கே புரியப் போகிறது என்கிற சினத்துடன், “நான் ஒண்டும் எதிர்பார்க்க இல்ல.” என்றாள் ராதா.
அப்போது, அவனின் கைபேசி ஒலி எழுப்பியது.
அண்ணா என்று காட்ட ,எடுத்து, “சொல்லுங்கண்ணா!” என்றான்.
“என்னடா நீ. இந்தப் பக்கம் வாறாயே இல்ல. உன்ன ஒவ்வொரு முறையும் கூப்பிட்டாத்தான் வருவியோ? முந்தி மிது மட்டும் தான் கேட்டாள். இப்ப தம்பிக்கும் நீ வேணுமாம்.” என்று அதட்டினான் கௌசிகன்.
“வீட்டு வேலையில கொஞ்சம் நேரமில்லாம போச்சுது அண்ணா. நாளைக்கு வாறன். நீங்க அந்தப் பெரிய மனுசனிட்ட குடுங்க; என்ன எண்டு கேப்பம்.”
“இந்தாங்கோ, தம்பியோட சித்தப்பா கதைக்கப்போறானாம்.” என்ற கௌசிகனின் குரலின் பின்னே, “டிட்ட..ப்பா..” என்றது மதுரனின் வெட்கம் நிரம்பிய குரல்.
பாதையில் கவனமாய் இருந்த மோகனனின் முகம் முழுவதும் சிரிப்பில் மலர்ந்தது. வியப்புடன் அவனையே பார்த்திருந்தாள் ராதா.
“சித்தப்பாக்கு என்னவாம்? சித்தப்பா வந்தா ஓட மாட்டீங்களே?”
“ஓடுவன்.” என்றுவிட்டு கிழுக்கிச் சிரித்தான் மதுரன்.
“மதுக்குட்டி ஓடினா சித்தப்பா வந்து பிடிப்பேனே.” அங்கு அதற்கும் சிரிப்புத்தான் கேட்டது.


