“சித்தப்பா! எனக்கு இன்னும் நீங்க பஞ்ச்பேக் வாங்கித் தரேல்ல.” இடையில் மிதுனாவின் குரல் புகுந்தது.
“உங்களுக்கு ஏற்றது இங்க இல்ல செல்லம். சித்தப்பா கொழும்புல ஓடர்(ஆர்டர்) குடுத்திட்டன். பார்சல் வந்ததும் கொண்டுவந்து தருவன், சரியா?” என்று அவர்களோடு பேசிவிட்டு, கௌசிகனோடும் கதைத்துவிட்டு வைத்தான்.
ஒரு தந்தைக்கு ஒப்பாய் அவன் குழந்தைகளோடு உரையாடிய அந்த அழகு ராதாவின் மனதை என்னவெல்லாமோ செய்தது. ஒரு மாய உலகில் தன்னை மறந்து சஞ்சரித்தவள், “என்னையும் ஒரு நாளைக்கு அண்ணா வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போறீங்களா?” என்று, மெல்லிய குரலில் வினவினாள்.
கேள்வியோடு திரும்பிப் பார்த்தான் அவன்.
“அது.. அண்டைக்கு அண்ணா அக்காக்கு முன்னால வச்சு கதைச்சது ஒருமாதிரி இருக்கு. எனக்குக் கோவம் அண்ணிலதான். எண்டாலும் எல்லாருக்கும் முன்னுக்கும் அப்பிடி.. கதைச்சு.. இப்ப அவேன்ர முகம் பாக்க ஏலாம இருக்கு.” என்றவளால் அவன் முகத்தைக் கூடப் பார்க்க முடியவில்லை.
மெல்லிய திகைப்புடன் அவளைப் பார்த்தான் அவன். அவள் யன்னலின் புறமாக முகத்தைத் திருப்பி இருந்தாள். காரை வீதியின் கரையாக நிறுத்தினான். நொடிகள் சில கடந்தன. அப்போதும், அவள் திரும்பிப் பார்க்கவில்லை.
“என்னைப் பாருங்க.” என்றான் அவன்.
அவள் அசையாமல் இருக்க, “உங்களை என்னைப் பாக்க சொன்னனான்.” என்றான் அழுத்தமாய்.
திரும்பி அவனைப் பார்த்தவளின் விழிகள் கலங்கி இருந்தது. அவன் பார்வை அவள் முகத்திலேயே இருந்தது. “படிக்கிற காலத்தில எனக்கும் அண்ணாக்கும் பிரமி அக்கா நிறைய உதவி செய்திருக்கிறா மோகன். கௌசிகன் அண்ணாக்கு நானும் அண்ணி மாதிரித்தான். இப்ப..” எனும்போதே அவளின் முகம், மூக்கு எல்லாம் சிவந்துபோனது. அதை அவனுக்கு காட்டமுடியாமல் மீண்டும் முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
ஒரு நொடி அப்படியே அமர்ந்திருந்தான் மோகனன். அடுத்த நிமிடமே ஒடுக்கமான அந்த வீதியில் காரை குறுக்கே விட்டு, முன்னும் பின்னுமாய் சரக் சரக் என்று எடுத்து, வந்த பாதைக்கே திருப்பி கௌசிகனின் வீடு நோக்கி விரட்டினான்.
“அச்சோ எங்க போறீங்க. இப்ப வேண்டாம். எனக்குப் பயமா இருக்கு. இன்னொரு நாளைக்குக் கூட்டிக்கொண்டு போங்கோ.” அவள் பதறினாள்.
“நான் இருக்கேக்க உங்களுக்கு என்ன பயம்? பேசாம வாங்க! இப்பவே கதைச்சிட்டா இரவைக்கு நிம்மதியா நித்திரை கொள்ளுவீங்க தானே.” என்றவன் காரை நேராகக் கொண்டுபோய்க் கௌசிகனின் வீட்டின் முன்னேதான் நிறுத்தினான்.
“என்னடா, நாளைக்கு வாறன் எண்டு சொல்லிப்போட்டு இப்பவே வந்து..” என்றுகொண்டு வந்த கௌசிகன், மற்றப்பக்கத்தில் இருந்து தயக்கத்துடன் இறங்கிய ராதாவை கண்டதும் ஒருகணம் பேச்சை நிறுத்திவிட்டு மோகனனைப் பார்த்தான்.
அவள் சங்கடத்துடன் நிற்க, “வாங்க!” என்று அவளை அழைத்தான் மோகனன்.
“வாம்மா. ஏன் அங்கேயே நிக்கிறாய்.” என்று தானும் அழைத்தான் கௌசிகன்.
“ராது! வாவாவா! வா மோகனன்.” பிரமிளாவும் முகம் மலர வரவேற்கவும் ராதாவுக்கு இன்னுமே குற்றவுணர்ச்சி ஆகிற்று. அதில், கணவன் மனைவி இருவரும் தமக்குள் வியப்புடன் பார்வையைப் பரிமாறிக்கொண்டதை அவள் கவனிக்கவில்லை. மோகனன் கவனித்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.
இவன் குரல் கேட்டதும், “சித்தப்பா!” என்றபடி மிதுனா அவனிடம் தாவிவர, எப்போதும்போல, தலைதெறிக்க வீட்டுக்குள் ஓடினான் மதுரன். எல்லோர் முகத்திலும் பெரும் சிரிப்பு. “அவனுக்கு இப்ப பயமும் இல்ல, வெக்கமும் இல்லையடா. சும்மா உன்ன கண்டா ஓடுறத ஒரு விளையாட்டு மாதிரி வச்சிருக்கிறான்.” என்றான் கௌசிகன்.
“அப்பிடியா மதுக்குட்டி. சித்தப்பாவோட விளையாடுறீங்களோ?” மிதுனாவை தூக்கி ஒற்றைத் தோளில் இருத்தியபடி மதுரன் இருந்த அறைக்குள் நுழைந்தான் மோகனன்.
அதன் பிறகான சற்று நேரத்துக்கு அந்த அறைக்குள் இருந்து சிரிப்புச் சத்தமாய் கேட்டது.
“பாத்தியா ராது, இதுக்குத்தான் ரெண்டுபேரும் சித்தப்பா சித்தப்பா எண்டு சாகிறது. அவன் எண்டா இவேக்கு ஏற்ற மாதிரி வளைஞ்சு குடுத்து விளையாடுவான்.” என்றாள் பிரமிளா.
குழந்தைகளோடு கைபேசியில் பேசுகையிலேயே அவன் முகம் எப்படி விகசித்திருந்தது என்று பார்த்தவள் தானே. இப்போதும் அவர்களின் குரலோடு சேர்ந்து ஒலித்த அவன் குரல் அவளின் நெஞ்சுக்குள் புகுந்து என்னவோ செய்தது. அவளே அறியாமல் அவளின் எண்ணங்கள் முழுவதையும் ஆள ஆரம்பித்திருந்தான் மோகனன்.
சற்று நேரத்தில் இருவரையும் இரண்டு கைகளில் அள்ளிக்கொண்டு வந்தவனைப் பார்த்த ராதாவுக்கு விழிகளை அகற்றுவது சிரமமாய் இருந்தது.
மிதுனாவை இறக்கி விட்டுவிட்டு, “உங்கட சிட்டிட்ட போகேல்லையா நீங்க?” என்று கேட்டபடி ராதா அமர்ந்து இருந்த சோபாவிலேயே வந்து இலகுவாய் அமர்ந்தான் மோகனன். அவளும், “மடுக்குட்டி! வாங்க வாங்க!” என்றபடி சிரிப்புடன் கைகளை நீட்ட, அவள் புறமாய்ச் சரிந்து மகனைக் கொடுத்தான் அவன்.
அவர்கள் அருந்துவதற்கு எடுத்துவந்த பிரமிளாவின் பார்வையும் கௌசிகனின் பார்வையும் மீண்டும் சந்தித்து மீண்டது. யாழினி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடந்தவை அனைத்தும் செல்வராணிக்கும் இவர்களுக்கும் வந்து சேர்ந்து இருந்ததுதான். இன்று, நேரிலேயே பார்த்தபோது மனதுக்கு மிகுந்த நிறைவாய் உணர்ந்தார்கள்.
இத்தனை நாட்களாக அவர்கள் காத்துக்கொண்டு இருந்ததும் இதற்காகத் தானே. எதையும் காட்டிக்கொள்ளாமல், “நீ வீட்டுப்பக்கம் வாறதே இல்லையாம் எண்டு மாமி சொன்னா ராது. நேரம் இல்லையா?” என்று விசாரித்தாள் பிரமிளா.
“அக்கா, அது..” என்று அவள் சங்கடத்துடன் ஆரம்பிக்கையிலேயே, “அவாக்கு அண்டைக்குக் கதைச்சதை நினைச்சு மனதுக்குச் சங்கடமா இருக்காம். உங்க எல்லாருக்கும் முன்னால அப்பிடி நடந்திருக்கக் கூடாதாம். உங்கட முகம் பாக்க ஒருமாதிரி இருக்காம் எண்டு சொன்னவா. அதுதான் அண்ணி கூட்டிக்கொண்டு வந்தனான்.” என்றான் மோகனன் முந்திக்கொண்டு.
அவளுக்காக அவன் பேசியது கௌசிகன் பிரமிளா இருவரிடமும் சிரிப்பை தோற்றுவித்தது. “சரியடா! அதை அவள் சொல்லட்டும். நீ ஏன் நடுவுக்க வாறாய்?” சிரிப்பை அடக்கியபடி கேட்டான் கௌசிகன்.
“அண்ணா அது…” என்று ராதா மீண்டும் ஆரம்பிக்க, “மன்னிப்பு எல்லாம் கேக்க தேவை இல்ல. அண்ணாவும் அண்ணியும் ஒண்டும் நினைக்காயினம்(நினைக்க மாட்டார்கள்).” என்று அப்போதும் இடையிட்டான் அவன்.
“இல்ல.. கேக்கோணும்..” என்றவளை, முடிந்தால் என்னைத் தாண்டி கேட்டுப்பார் என்று பார்த்தான் அவன். அவளுக்குப் பேச்சு நின்றுபோனது. பரிதாபமாய் அவனைப் பார்த்தாள்.
“அவளைக் கதைக்க விடடா”
“நான் ஒண்டும் சொல்ல இல்லையே.” என்றான் அவன், ராதாவின் மடியில் இருந்த மதுரனுக்கு விளையாட்டுக் காட்டியபடி.
“நீ ஏனம்மா இவனோட வந்தனீ? தனியா வந்து மன்னிப்பு கேள். நானும் மன்னிக்கிறன்.” என்றான் கௌசிகன்.
“இனி இந்த வீட்டுக்கு அவா என்னோட மட்டும் தான் வருவா.” பட்டென்று அறிவித்தான் மோகனன்.
அதற்குமேல் அடக்கமுடியாமல் சத்தமாகச் சிரித்தான் கௌசிகன். அவளை ஒரு சொல் சொல்லவிடாமல் தம்பி பாதுகாக்கிறான் என்று புரிந்து சந்தோசம் கொண்டான். அதற்கு ஏதுவாக, “நீயும் எங்கட வீட்டுப் பிள்ளைதான். விடு பரவாயில்ல. ஆனா, அப்பா அம்மா எங்களை விடவும் வயசில பெரிய மனுசர். அவே இருக்கேக்க இன்னும் கொஞ்சம் பாத்து கதைக்கோணும். சரியா?” என்றான் இதமான குரலில்.
“இனி இல்லை, அண்ணா!” என்றாள் அவளும் பாரம் நீங்கியவளாக.


