மோகனனின் கையில் கார் என்றுமில்லாத வேகத்தில் பயணித்தது. இடைஞ்சல் இல்லாத, தமக்கே தமக்கான தனிமை ஒன்று இருவருக்குமே தேவைப்பட்டது. அந்தத் தனிமைக்காகத் தம் உணர்வுகளை அடக்கியபடி பயணித்தனர். காரை கொண்டுபோய் திருத்திக்கொண்டிருந்த வீட்டின் முன்னே நிறுத்தினான், மோகனன்.
மாலையாகிவிட்டபடியினால் வேலையாட்கள் அன்றைய வேலையை முடித்துக்கொண்டு புறப்பட்டிருந்தனர். காரில் இருந்து இறங்கி, அவளின் கையைப் பற்றி, வீட்டுக்குள் அழைத்துக்கொண்டு போனான். மின் விளக்குகள் ஏதுமற்ற அந்த வீடு மெல்லிய இருட்டினில் மிதந்திருந்தது. ஒரு அறைக்குள் அழைத்துச் சென்று அவளை நிறுத்தியவன், அவளின் கன்னங்கள் இரண்டையும் பற்றித் தன் முகம் பார்க்க வைத்தான்.
“ஒரு நாள் இரவு இப்பிடித்தான் ராதா, என்ர மனமும் இந்த உலகமும் இருண்டு கிடந்தது. அப்பதான் வெளிச்சமா எனக்கு முன்னால நீங்க வந்து நிண்டீங்க. ‘உன்ர வழ்க்கைக்கு வெளிச்சம் தரப்போறவள் இவள்தான். விட்டுடாதடா மடையா!’ எண்டு மனம் சொன்னது. என்ர வாழ்க்கையில திரும்பவும் ஒரு பெட்டையா(பெண்ணா) எண்டு திகைச்சுப் போய்ட்டன். சேச்சே, இதெல்லாம் அந்த நிமிசத்துத் தடுமாற்றம் எண்டு ஒதுக்கியும் வச்சிட்டன். பர்வையிலேயே ஒட்டுமொத்த வெறுப்பையும் காட்டுற ஒருத்திக்கும் எனக்கும் சரியே வராது எண்டு விலகித்தான் போனனான்..” என்றவனின் பேச்சு ஒரு நொடி நின்றது.
ராதாவுக்கு மெல்லிய அதிர்ச்சி. உன் மனத்தைச் சொல்லு என்று கேட்கப்போகிறான் என்று அவள் நினைக்க அவனோ தன் மனத்தைத் திறந்திருந்தான்.
“அப்பிடி இருந்தும் அண்டுல(அன்றில்) இருந்து எனக்குள்ள நிறையப் போராட்டம். என்ர குடும்பத்தோட ஒட்டவும் முடியேல்ல. உங்களிட்ட இருந்து விலகவும் முடியேல்ல. அதாலதான் இந்த நாட்டை விட்டே போயிட வேணும் எண்டுறதில பிடிவாதமா இருந்தனான். ஆனா, நீங்க விட இல்ல. கண்ணுக்கு தெரியாத கயிறு ஒண்டால(ஒன்றினால்) என்னைக் கட்டி இழுத்துக்கொண்டே இருந்தீங்க.” என்றவனின் பேச்சில் அவள் விழிகளை விரித்தாள்.
“என்ன பாக்கிறீங்க? இப்பிடி என்னைப் பைத்தியக்காரனா மாத்தினதே நீங்கதான்.” என்றான் அவன். அவள் உதட்டினில் மெல்லிய முறுவல் மலர்ந்தது. அவன் பார்வையும் அங்கே சென்று வந்தது. “ஆனா, நான் உங்களுக்கு வேணாம், என்ன? எல்லாருக்கும் முன்னால வச்சு சொல்லுறீங்க!” என்றவனின் கோபத்தில் அவளுக்கு விழிகள் மீண்டும் விரிந்து போயிற்று.
“இப்ப என்னைப் பாக்கேக்க உங்களுக்கு என்ன நினைவு வருது?” நிதானமாய் கேட்டான் அவன்.
நம்ப முடியாத திகைப்புடன் அவனைப் பார்த்தாள் ராதா. மனக்கண்ணில், அவளின் முகத்தை வட்டமடித்துக் காட்டி, ‘அப்பிடியே மின்னுது’ என்ற மோகனன் வந்து நின்றான். ஃபோனை நீட்டி, ‘செக் பண்ணுங்க!’ என்று பற்களுக்குள் வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான். அவனது புருவங்களும் விழிகளும் ஒன்றாக அசைந்து அவளைப் போ என்றது. தாடையைத் தடவிச் சிரித்தபடி, ‘ஏன் நல்லா இல்லையா’ என்று கேட்டான். நினைக்க நினைக்க அவள் விழிகள் அகன்றுகொண்டே போயின. வேறு எந்த மோகனனும் அவளின் நினைவிலேயே இல்லையே! அவளை என்ன செய்து வைத்திருக்கிறான் இவன்? அடியோடு வெறுத்தவளை ஆதியும் அந்தமும் நீதான் என்று நினைக்க வைத்துவிட்டானே!
அவனும் அவளைக் கண்டுகொண்டான் போலும். “நீங்க எனக்குத்தான் எண்டு உங்களிட்ட சொன்னேனா இல்லையா?” என்று வினவினான். “அதுதான் கிடைச்ச சான்சை எல்லாம் பயன்படுத்தி உங்கட மனதில இருந்த என்னைப்பற்றிய எண்ணத்தை மாத்தினான்.” என்றான் அவளின் காதோரம்.
கன்னத்தை உரசிய அவன் தாடியும் மீசையும் தேகத்தையே சிலிர்க்க வைக்க மெல்லிய மயக்கத்துடன் விழிகளை மூடித் திறந்தாள் ராதா.
“ஆசை வச்ச உங்களுக்குப் பின்னாலேயே வந்தது இல்ல. என்னைப்போய் ஒரு பெட்டையப் பாத்தா காணும், காதல் கத்தரிக்காய் எண்டு சொல்லிக்கொண்டு வந்துடுவீங்க எண்டு சொல்லுறீங்க, என்ன?” என்றான் சீறலாக.
“சொல்லுங்க! என்னை பாத்தா அப்பிடியா தெரியுது உங்களுக்கு? ஒரு காலத்தில அறிவுகெட்டு நடந்தா திருந்தவே மாட்டனா? மனுசனா மாறவே மாட்டனா?”
முகத்துக்கு நேரே முகம் வைத்துச் சீறியவனைப் பார்த்தாள் ராதா. இவன் காதலைச் சொல்கிறானா? அல்லது, கோபத்தை கொட்டுகிறானா? எதுவாய் இருந்தாலும் அவன் காயம் மட்டும் பெரிது என்று புரிந்தது. ஒன்றும் சொல்லாமல் எம்பி அவன் கன்னத்தில் தன் உதடுகளை ஒற்றி எடுத்தாள்.
அதை எதிர்பாராத திகைப்புடன் அவளையே பார்த்தான் மோகனன். அவன் பேச்சு நின்றுபோயிற்று. அவன் வசனம் வசனமாய் சொன்ன காதலுக்கு இணையாய் அவளின் ஒற்றை முத்தம் வந்து நின்றது. அடுத்த நொடியே அவளைத் தன் உயிருக்குள் ஒளித்துக்கொள்கிறவனாக இறுக்கி அணைத்துக்கொண்டான்.
அணைப்பின் இறுக்கமும் கைகளின் மெல்லிய நடுக்கமும் தனக்காக அவன் எந்தளவுக்கு ஏங்கியிருக்கிறான் என்று ராதாவுக்குச் சொல்லிற்று. நெஞ்சில் நேசம் பொங்க தானும் அவனை அணைத்துக்கொண்டாள். அவன் முதுகை வருடிக்கொடுத்தாள். அவன் தன்னை மீட்டுக்கொள்கிற வரையிலும் அவனிடம் இருந்து விலகவும் இல்லை; முதுகை வருடிக் கொடுப்பதை நிறுத்தவும் இல்லை.
நொடிகள் அப்படியே கரைந்தன. மெல்ல மெல்ல அவன் அணைப்பின் இறுக்கம் சற்றே தளர்ந்தது. “நடக்கிறத நம்பேலாமா இருக்கு.” என்றான் அவளின் முகம் பார்த்து.
அதற்குப் பதில் சொல்லவில்லை அவள். மாறாக, அவன் கன்னம் பற்றி, “எல்லாத்தையும் யோசிச்சு உங்களுக்கையே வச்சு கவலைப்பட்டீங்களா?” என்று, மென் குரலில் வினவினாள்.
அவன் பேச்சு மீண்டும் நின்றுபோனது. பார்வையையும் அவளிடம் இருந்து அகற்றிக்கொண்டான். “அப்பிடி எண்டு இல்ல..” என்று ஆரம்பித்தவன், அதற்குமேல் அதைத் தொடரமுடியாமல், “வேற என்ன செய்யச் சொல்லுறீங்க?” என்று திருப்பிக் கேட்டான்.
“அழியாத கெட்ட பெயரை வாங்கியாச்சு. அடுத்ததா ஒருத்தில ஆசையும் வச்சாச்சு. வேற என்ன செய்யேலும்? எல்லாத்தையும் விடக் கொடும என்ன தெரியுமா? மனசார விரும்பிறவளை தனியா சந்திச்சு எனக்கு உன்ன பிடிச்சிருக்கு எண்டு சொல்ல ஏலாத நிலைமைதான். யோசிச்சு பாருங்க, அந்த நேரம் உங்கள நான் தனியா சந்திக்க வந்திருந்தா என்னைப்பற்றி என்ன நினைச்சு இருப்பீங்க?”


