ஓ ராதா 33 – 3

சிறு சிரிப்புடன் அவளின் தாடையைப் பற்றித் தன் புறமாய்த் திருப்பினான் அவன். “பாத்தா அப்பிடியா தெரியுது?” தாடையைப் பற்றியிருந்த கரத்தின் விரல் ஒன்று உயர்ந்து, அவளின் கீழுதட்டை சற்றே அழுத்தமாய் வருடிக்கொடுக்கக் கேட்டான்.

உதட்டின் மீதான உரசல் உடலில் தீயை மூட்ட, “கொடுமை செய்றீங்க மோகன்.” என்று முணுமுணுத்தாள் ராதா. அதற்கு ஒன்றும் சொல்லாமல் அவளின் இதழ்கள் நோக்கிக் குனிந்தான் அவன். அவள் விழிகள் தாமாக மூடிக்கொண்டன. இதழ்கள் அவன் வசமாயிற்று. அடுத்து வந்த நிமிடங்கள் ராதாவினால் விவரிக்க முடியாதவை. அவனின் சட்டையை இறுக்கமாய்ப் பற்றியவளின் மனமும் உடலும் அவளின் கட்டுப்பாட்டிலேயே இல்லை. தன்னை மறந்து அவனுக்கு இசைந்து நின்றாள். அவன் விடுவித்தபோது அவளால் அவன் முகம் பார்க்கவே முடியவில்லை.

அந்த வெட்கம் அவனை ஈர்த்தது. ஆசையோடு அவளை மீண்டும் தன் மார்பில் சேர்த்து, “நீங்க எனக்குள்ள புகுந்து என்னை என்னவெல்லாம் செய்றீங்க எண்டு உங்களுக்கே தெரியாது ராது. ஆனா…” என்றவன் சொல்ல வந்ததை நிறுத்திவிட்டு, “முதல் இந்தக் கழுத்தில ஒரு தாலிய கட்டுறனே. அதுக்குப்பிறகு எனக்கு உங்களை எவ்வளவு பிடிக்கும் எண்டு காட்டுறன்.” என்றான் அவன்.

அப்போதுதான் அவளுக்கு தமையனின் நினைவு வந்தது. அதுவரை நேரமும் அவனும் அவளுமாகக் சேர்ந்து தம் நேசத்தைக் கொண்டாடிய மகிழ்ச்சி வடிந்து போனது. “அண்ணா என்ன சொல்லுவாரோ தெரியா மோகன்.” நெஞ்சில் பாரமேறச் சொன்னாள் ராதா.

“என்ன சொன்னா என்ன?” என்றான் அவனும் சட்டென மூண்ட கோபத்துடன்.

கலங்கிப்போனாள் ராதா. இப்படி முரண்டு பிடித்தால் எப்படி என்று அவனைப் பார்த்தாள்.

“எனக்கு உங்கட சம்மதம் மட்டும் தான் வேணும்!” என்றான் அவன் மீண்டும் பிடிவாதக் குரலில்.

“ஆனா, எனக்கு அவரின்ர சம்மதம் வேணுமே மோகன்.”

“அவர் சம்மதிக்காட்டி?” அடுத்தக் கணமே அவனிடமிருந்து பாய்ந்து வந்தது கேள்வி. பதில் சொல்ல முடியாமல் நின்றாள் ராதா.

“சொல்லுங்க! அவர் சம்மதிக்காட்டி என்ன செய்வீங்க?”

“இந்தக் கேள்விய என்னட்ட கேக்காதீங்க மோகன். நான் என்ன சொல்லோணும் எண்டு எதிர்பாக்கிறீங்க. எந்தப் பதில சொன்னாலும் எனக்கு வலிக்கும். என்னை அழவச்சுப் பாக்க ஆசையா இருக்கா உங்களுக்கு?” கலங்கிய குரலில் கேட்டாள் அவள்.

அப்படி அவள் சொன்னது பிடிக்காமல் முகத்தைத் திருப்பினான் அவன். அதற்கே அவள் விழிகள் கரிக்க ஆரம்பித்தன. அவன் கன்னம் பற்றி, “மோகன், என்னைப் பாருங்க.” என்று தன்னைப் பார்க்க வைத்தாள்.

“உங்கட பக்கம் நான் திரும்பவே கூடாது எண்டு அவர் என்னட்ட சொல்லி இருந்தா, என்ர விருப்பம் நீங்களா இருந்தாலுமே நான் வந்திருக்க மாட்டன். அவரைத் தாண்டி என்னால வரேலாது. ஆனாலும் அவர் அப்பிடி சொல்லவே இல்ல. இவ்வளவு நாளுக்க என்ர மனம் உங்களிட்ட சாஞ்சிட்டுது எண்டு அண்ணாவே கண்டு பிடிச்சிருப்பார். இருந்தும் இதைப்பற்றி அவரா என்னட்ட ஒரு வார்த்த கூடக் கதைக்கவே இல்ல. அதே மாதிரி எனக்கு நீங்கதான் வேணும் எண்டு நான் சொன்னா அவர் மறுக்கப் போறதும் இல்ல. ஓம் எண்டுதான் சொல்லுவார். ஆனா, மனதில பாரத்தோட சொல்லுவார். வேற வழி இல்லாம சம்மதிப்பார். எனக்கு அப்பிடி வேண்டாம். அவர் சொல்லப்போற அந்தச் சம்மதத்தை நீங்கதான் முழு மனதோட சொல்ல வைக்கோணும். சந்தோசமா அவர் என்னை உங்களிட்ட தரோணும். உங்கட ராதாக்கு நீங்க ஏதாவது செய்ய நினைச்சா இதைச் செய்து தாங்க, ப்ளீஸ்.” என்றாள் அவள்.

ஒன்றும் சொல்லாமல் இறுகி நின்றான் அவன்.

“ப்ளீஸ் மோகன். எனக்காக..” என்றவளின் உதட்டின் மீது விரல் வைத்துத் தடுத்தான் அவன். “நீங்க சும்மா கேட்டாலே நான் செய்வன். பிறகு என்னத்துக்கு இந்தக் கெஞ்சல்?”

“தேங்க்ஸ்பா!” சந்தோச மிகுதியில் எம்பி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள் ராதா.

அதற்கு அவனிடம் எந்த அசைவும் இல்லை. அவளின் தலையை வருடிவிட்டபடி நின்றான்.

“என்ன யோசிக்கிறீங்க?”

அவளின் கேள்விக்கு ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, “எனக்கு நீங்க வேணும் ராதா. உங்களுக்காக என்னவும் செய்வன்.” என்றான் தன் ஆழ்ந்த குரலில்.

வெளியே வந்தபோது, அந்தப் பெயர் பலகை இப்போதும் அவள் கண்களில் பட்டது.

“அது என்ன chity? பெயர் வித்தியாசமா இருக்கு?”

அவன் கண்களில் சிரிப்புடன் அவளைப் பார்த்தான்.

“இப்பிடி ஒண்டும் சொல்லாம சிரிச்சா என்ன அர்த்தம்?”

“மதுக்குட்டி உங்கள எப்பிடி கூப்பிடுறவர்?”

“சித்..” என்று ஆரம்பித்தவள் ஆச்சரியத்தில் விழிகள் விரிய, “சிட்டி?” என்றாள்.

இதற்குள் இருவரும் காருக்குள் ஏறி இருந்தனர். ஆம் என்பதாக அவன் தலையை அசைத்தான். நம்ப முடியாமல் அவனைப் பார்த்தாள் ராதா. உள்ளம் நெகிழ்ந்து போயிற்று.

“முதன் முதலா அவர்தான் எனக்கு உங்கள காட்டித் தந்தவர். அதுவும் அவர் சொன்ன அந்தச் சிட்டி தான் பாக்க வச்சது.” காரை வீதியில் ஏற்றியபடி முதன் முதலாக அவளைப் பார்த்த கணத்தைப் பகிர்ந்துகொண்டான் அவன்.

அவளுக்கு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அந்தளவில் அவனுடைய நேசத்தில் உருகிப்போனாள். கியரை மாற்றிய அவன் கையின் விரல்களோடு தன் விரல்களைக் கோர்த்துக்கொண்டாள் ராதா.

மென் முறுவலோடு அவளை ஒருமுறை திரும்பிப் பார்த்துவிட்டு தன் விரல்களால் அவள் விரல்களை அழுத்திக்கொடுத்தான் அவன்.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock