செல்வராணிக்குக் கால்கள் நிலத்தில் பாவமாட்டேன் என்றது. பத்து வயது என்ன முப்பது வயது குறைந்துவிட்டது போன்று சமையல் கட்டில் மின்னலெனச் சுழன்றுகொண்டிருந்தார். பின்னே, எவ்வளவு பெரிய விடயம் எதிர்பாராத நொடி ஒன்றில் நடந்து முடிந்திருக்கிறது.
ஆசையாசையாய் எதிர்பார்த்து, இனி நடக்கவே நடக்காதோ என்று ஏங்கி, எப்படியாவது நடந்துவிடாதா என்று காத்திருந்த காத்திருப்புக்கு க் கைமேல் பலன் கிடைத்துவிட்டதே.
அவரின் வருங்காலச் சின்ன மருமகள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வரப்போகிறாள். அழைத்துவரச் சின்ன மகன் போய்விட்டான். அதுவும் அவன், “உங்கட தங்கச்சிய இந்த வீட்டுக்கு என்ர ராதாவா கூட்டிக்கொண்டு வரப்போறன்.” என்று ரஜீவனிடம் சொன்ன விதம் இப்போது நினைக்கையிலும் அவர் முகத்தினில் முறுவலை வரவழைத்தது.
அமைதியான கடல், ஆற்றல் மிக்க மாலுமியை உருவாக்குவதில்லையாம். கடுமையான சூழ்நிலைகளைக் கடக்காதவன் வலிமை பெறுவதில்லையாம். அவன் கடந்துவந்த கடினமான சூழ்நிலைகள்தான் அவனை இப்படி மாற்றியிருக்கிறது போலும். அப்படிப் பார்க்கையில் எல்லாம் நன்மைக்கே என்று இன்று மனத்தில் நிறைவோடு எண்ணினார்.
இந்தச் சந்தோசமான செய்தியை, மோகனன் புறப்பட்ட அடுத்த நொடியே பெரிய மகனுக்கும் எடுத்துச் சொல்லிவிட்டார். அவனும் குடும்பத்தோடு உடனேயே வருவதாகச் சொல்லியிருந்தான்.
சிந்தனை அதுபாட்டுக்கு ஓடினாலும் அவர்கள் எல்லோரும் வருவதற்குள் செய்ய எண்ணி, அரிசி மா, கோதுமை மா, கடலை மா எல்லாம் அளவாகச் சேர்த்து, அதற்குத் தேவையான அளவு உப்பு, உள்ளிப் பவுடர், சிவப்பு மிளகாய்த் தூள், கொஞ்சம் எள்ளு, பெரிய சீரகம், சின்ன சீரகம் என்று அனைத்தையும் சேர்த்துக் கலந்துவிட்ட பிறகு, இளம் சுடுநீர் விட்டு முறுக்குப் பதத்திற்குக் குழைத்து எடுத்தார். கடைசியாகக் கொஞ்சம் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துக்கொண்டார்.
ஒரு சட்டியில் எண்ணெயைச் சூடாக வைத்துவிட்டு, குழைத்த மாவிலிருந்து கைப்பிடி அளவில் அள்ளி எடுத்து முறுக்கு அச்சினுள் போட்டு, கவிழ்த்து வைத்திருந்த இடியப்பத்தட்டுகளின் மீது விறுவிறு என்று பிழிந்தார். சூடாகிவிட்ட எண்ணெயினுள் ஒவ்வொரு முறுக்காகப் போட்டு எடுத்தார்.
இங்கே, மோகனன் புறப்பட்டதும் தங்களின் அறை வாசலில் வந்து நின்றான் ரஜீவன். அவன் பார்வை கட்டிலில் அமர்ந்திருந்த யாழினியின் மீது இருந்தது.
கண்களில் கண்ணீரும் சந்தோசமும் மின்ன, நெஞ்சம் முழுக்க நெகிழ்ச்சியில் தளும்ப, அவன் முகத்தையே பார்த்தாள் அவள். மனத்தில் என்னென்னவோ உணர்வுகள் பொங்கின. அவனைக் கட்டிக்கொண்டு தன் மகிழ்ச்சியைப் பகிர விரும்பினாள். மனத்தில் இருக்கும் அனைத்தையும் அவனிடம் கொட்டிவிடத் துடித்தாள். ஆனால், அவர்களுக்குள் விழுந்திருந்த தடை அனைத்தையும் செய்ய விடாமல் தடுத்துப் பிடித்தது.
இதுவரையில் அவனை அவளும், அவளை அவனும் கவனித்துக்கொள்வதில் குறை வைத்ததே இல்லை. ஆனால், பத்து வருடங்களாகக் குறையாமலும் குன்றாமலும் நிறைந்து தளும்பிய அந்தக் காதல், அவர்களின் அறையின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்துகொண்டதைப் போன்றதொரு வெறுமையைக் கடந்த சில நாட்களாக இருவருமே உணர ஆரம்பித்திருந்தனர்.
இருந்தும், கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருந்த மௌனக் குமிழியை உடைக்கப் பயந்து அமைதி காத்தனர். இன்றைய நிகழ்வு அதுபாட்டுக்கு அந்தக் குமிழியை உடைத்துவிட்டுப் போயிருந்தது.
அவளின் அருகில் வந்து அமர்ந்தான் ரஜீவன். அதற்காகவே காத்திருந்தது போன்று, “தேங்க்ஸ் ரஜீவன்!” என்று தழுதழுத்தபடி அவன் தோளில் சாய்ந்துகொண்டாள் யாழினி.
இத்தனை நாட்களாய் நிம்மதியை இழந்து அலைபாய்ந்துகொண்டிருந்த அவன் மனமும் இன்று ஒரு நிலைக்கு வந்து அமைதி கொண்டிருந்தது. அதில், இயல்பாய்க் கரமொன்று உயர்ந்து வந்து அவளை அரவணைத்துக்கொண்டு தலையை வருடிக்கொடுத்தது.
“அண்டைக்கு நான் உங்களையும் யோசிச்சு, விளங்கிக் கதைச்சிருக்க வேணும் ரஜீவன். உங்கட பேச்சு திரும்பவும் அவரைக் காயப்படுத்திப்போடுமோ, திருந்தி வந்திருக்கிற அண்ணா பழையபடி மாறிடுவாரோ எண்டு பயந்ததில உண்மையாவே யோசிக்காம நடந்திட்டன். எனக்கும் இதெல்லாம் புதுசுதானேப்பா. இப்ப வரைக்கும் என்ர ரஜீவன நானே விளங்கிக்கொள்ளாம நடந்திட்டனே எண்டு என்ர மனமே என்னைக் குத்துது. இனி இப்பிடி நடக்க மாட்டன். பிளீஸ், என்னை மன்னிக்க மாட்டீங்களா?”
அவன் மார்பில் இருந்தே விழிகளை உயர்த்தி அவள் கேட்டபோது எதுவும் சொல்லாமல் அவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டான் அவன்.
செயலில் கனிவு இருந்தபோதிலும் அவன் பதில் சொல்லவில்லை என்பதை அவள் மனது குறித்துக்கொண்டது. விழியகற்றாமல் அவனையே பார்த்தாள். தானும் அப்படியே அவளையே பார்க்க முயன்றவன் ஒரு கட்டத்துக்குமேல் முடியாமல் போக, சிறு சிரிப்புடன், “என்ன?” என்று கேட்டான்.
“இந்த அக்கறையும் கவனமும் கடமையால வந்ததா? காதலால வந்ததா?”
அன்றைய தன் வார்த்தைகளுக்கான கேள்வி இது என்று அவனுக்கு விளங்கிற்று.
“உனக்கு எப்பிடித் தெரியுது?”
“கோபத்தில செய்ற மாதிரி இருக்கு.” அவன் வாயைப் பிடுங்கும் ஆசையில் வேண்டுமென்றே சொன்னாள் அவள்.
‘அப்படியா?’ என்று புருவங்களை உயர்த்திவிட்டு, “உனக்கே தெரியுது. பிறகு என்ன கேள்வி?” என்று, அதற்கும் அசராமல் பதில் சொன்னவனை முறைத்தாள் அவள்.
அவளை வாகாகத் தன் அணைப்புக்குள் கொண்டுவந்தான் அவன். கணவனின் நேசம் மிகுந்த அந்த அணைப்பு அவளின் கண்ணீர் சுரப்பிகளைத் திறந்துவிட்டது. “கோபம் போயிட்டுதா?” குரல் கமற வினவினாள்.
“கோபம்… எண்டு இல்ல யாழி. நீ கேள்வி கேட்டதை விடவும் வீட்டை விட்டு வெளிக்கிடுவாய் எண்டு நான் நினைச்சே பாக்கேல்லை. அது பெரிய அடியா இருந்தது. அங்க வீட்டை போனா, ‘நீ இப்பிடி வந்து நிண்டா தங்கச்சின்ர வாழ்க்கை என்னாகிறது?’ எண்டு கேக்கிறா அம்மா. ஒரு நிமிசம் எல்லாமே வெறுத்துப்போயிட்டுது. நான் என்னத்துக்கு வாழுறன், ஆருக்காக வாழுறன் எண்டு யோசிச்சிட்டன். அந்த வலிதான் ஆறவே மாட்டன் எண்டு நிக்குது.”
யாழினி துடித்துப்போனாள். அவளை உயிராக நேசித்தவனை எந்தளவுக்கு உடைந்துபோக வைத்திருக்கிறாள். கடவுளே…! விழிகள் அருவியாகக் கண்ணீரைக் கொட்ட ஆரம்பிக்கவும், “என்ன இது? இந்த நேரத்தில இப்பிடி அழுதுகொண்டு. இதாலதான் நான் கதைக்கவே பயந்தது. அதெல்லாம் முடிஞ்சு போச்சு. அழாத நீ.” என்று சமாதானம் செய்தான் அவன்.
“இல்ல. நான் அப்பிடி நடந்திருக்கக் கூடாது. என்ன கேக்கிறதா இருந்தாலும் தனியா வச்சுக் கேட்டிருக்கலாம். எல்லாருக்கும் முன்னால உங்கள விட்டுக் குடுத்திட்டன். அது… அது… எனக்கு…”
“சரி சரி விடு. இதுவும் என்ர குடும்பம்தானே.” என்றான் சமாதானமாய்.
எல்லாமே நடந்து முடிந்தாயிற்று. அதை ஒதுக்கி, கடந்துவர முயல்கின்ற இந்த நேரத்தில் மீண்டும் அதைப் பற்றிப் பேச விருப்பமில்லை அவனுக்கு.
“அப்ப, அண்ணாவில இருந்த கோபம் போயிட்டா?” கண்ணீரில் நனைந்திருந்த விழிகளை விரித்து, ஆர்வமே உருவாகக் கேட்டாள் யாழினி.
“தெரியா யாழி.” என்றான் அவன் மனத்திலிருந்து. “அவரும் ஆம்பிளை நானும் ஆம்பிளை. கிட்டத்தட்ட ஒரே வயசு. அப்பிடி இருந்தும் அவரின்ர கையால அடிவாங்கி, பிணம் மாதிரி அவரின்ர காலடில கிடந்தனான் யாழி. ஆர் என்ன சொன்னாலும், இல்ல எது எப்பிடி மாறினாலும் அதை என்னால மறக்கேலாம இருக்கு. என்னவோ புழு மாதிரி அவரின்ர காலில மிதிபட்ட அந்த அவமான உணர்வை உதறவே முடியுது இல்ல. ஆனா, இப்ப இப்ப அதை ஒதுக்கி வச்சிட்டு இப்ப இருக்கிற மோகனனை மட்டும் பாக்கிறதுக்கு முயற்சி செய்துகொண்டு இருக்கிறன். அதுவும் இண்டைக்கு ராதாக்காக அவர் என்னட்ட கெஞ்சினதச் சத்தியமா நான் எதிர்பாக்கவே இல்ல. ராதாவும் ஓம் எண்டு சொல்லிட்டாள். இனி உன்னால என்னடா செய்யேலும் எண்டு திமிரா கதைக்கப்போறார் எண்டுதான் நினைச்சனான். நான் நினைச்சதுக்கு மாறா அவர் நிதானமா கதைச்சது, கடைசியா கையப் பிடிச்சு கேட்டது… அதுக்கு மேல என்னால மறுக்க முடியேல்ல. அவருக்காக அவளும் அவளுக்காக அவரும் தவிச்ச தவிப்பப் பாத்த பிறகும் மறுத்தா நான் மனுசன் இல்ல. அவே ரெண்டுபேரும் கட்டிச் சந்தோசமா இருக்கட்டும். இருக்கோணும். என்ர ஆசை அதுதான் யாழி.” என்று சொன்ன கணவனின் மீது யாழினிக்குப் பெரும் காதல் பொங்கியது. நிறைய நாட்களுக்குப் பிறகு அவனை இறுக்கி அணைத்து முத்தமிட்டாள்.


