அடுத்துவந்த நிமிடங்கள் சில அவர்களுக்கே அவர்களுக்கானதாய் நிறைவுடன் கழிய ஆரம்பித்தது.
*****
தயக்கம் தடுத்தாலும் தமையன் தன்னுடன் பேசியதையும் தன் மனத்தையும் மெல்லிய குரலில் அன்னையிடம் சொல்லி முடித்திருந்தாள் ராதா.
அதிர்ந்து நிற்பதற்கு அது ஒன்றும் புதுச் செய்தி அல்லவே. இத்தனை நாட்களாகப் பயந்து, பின் யோசித்து, ஓரளவுக்கு இதை ஏற்றுக்கொள்ளத் தயாராகத்தான் இருந்தார் பரிமளா.
அதில், “அண்ணா என்ன சொல்லுறானோ அதுதானம்மா என்ர முடிவும். அவன் உனக்குக் கெடுதல் நினைக்கமாட்டான்.” என்று அவர் சொன்னதில், அண்ணா சம்மதித்துவிட வேண்டும் என்று தவிப்புடன் காத்திருந்தாள் ராதா.
அப்போது அழைத்து, “வெளிக்கிட்டு நில்லுங்க, கூட்டிக்கொண்டு போகக் கொஞ்சத்தில வாறன்.” என்றுமட்டும் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்திருந்தான் மோகனன்.
“பொறுங்க பொறுங்க! அண்ணா என்னவாம்?” என்று அவள் காற்றுடன்தான் பேசிக்கொண்டு இருந்தாள்.
‘இவனை…’ என்று பல்லைக் கடித்துவிட்டு, மிகுந்த பதட்டத்துடன் தயாராகினாள்.
அண்ணா என்ன சொன்னார்? இவன் என்ன பேசினான் என்று ஒரு வார்த்தையிலாவது சொல்லிவிட்டு வைத்திருக்கலாம். அவளைத் துடிக்க வைப்பதில் அவ்வளவு சந்தோசம் போலும்.
‘வரட்டும்! வளத்து வச்சிருக்கிற அந்தத் தாடியைப் பிடிச்சு ஒரு ஆட்டு ஆட்டுறன்!’ என்று கருவிக்கொண்டு புறப்பட்டு வந்து வாசலில் காத்திருந்தவளின் முன்னே காரை கொண்டுவந்து நிறுத்தினான் மோகனன்.
காரினுள் ஏறிக்கொண்டே, “நீங்க எல்லாம் என்ன மனு…” என்று ஆரம்பித்தவள், “மோகன்!” என்று அதிர்ந்து வாயில் கையை வைத்தாள். விழிகள் கோலிக்குண்டுகளாய் விரிந்து வெளியே வந்து விடுகிறேன் என்றன.
ஒன்றுமே தெரியாதவன் போன்று சிறு சிரிப்புடன், “மோகனுக்கு என்ன?” என்றபடி காரை எடுத்தான் அவன்.
“ஓ மை கோட்! மோகன்… மூக்கும் முழியுமா மனசை பறிக்கிறீங்கப்பா…” என்றவள் தன்னை மறந்து, அவன் கழுத்தைப் பற்றி இழுத்து, முடிகள் அற்றுப் பளீர் என்று பளபளத்த கன்னங்கள் இரண்டிலும் மாறிமாறி முத்தமிட்டாள்.
அவள் அதிர்வாள்; ஆச்சரியப்படுவாள்; விழிகளை விரிப்பாள் என்று எதிர்பார்த்தான்தான். ஆனால், சத்தியமாக இப்படி ஒன்றை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
பெரும் சிரிப்புடன், “ராது! என்ன செய்றீங்க?” என்றபடி, தன் கையில் தடுமாறிய காரை வேகமாகக் கரைக்கு எடுத்து நிறுத்தினான்.
அதையெல்லாம் பொருட்படுத்தும் நிலையில் அவள் இல்லை. “அச்சோ இந்தக் கியர் பொக்ஸ(box) எங்கயாவது தூக்கி எறிங்க. எனக்கு உங்களிட்ட வரேலாம இருக்கு.” என்று ஆர்ப்பரித்தவள் அவன் முகத்தைப் பற்றித் தன்னிடம் இழுத்தாள்.
“கடவுளே… எவ்வளவு வடிவா இருக்கிறீங்க தெரியுமா? எனக்குப் பாக்க ரெண்டு கண் காணாம இருக்கு மோகன். இந்த முகத்தையா அந்தக் காட்டுக்க மறைச்சு வச்சுக்கொண்டு இருந்தனீங்க?” தாடியற்று, அளவாய் நறுக்கிவிடப்பட்ட மீசையோடு, மூக்கும் முழியும் பளிச்சென்று தெரிய இருந்தவனிடமிருந்து அவளால் விழிகளை அகற்றவே முடியவில்லை. அவன் முகம் முழுவதையும் தன் முத்தத்தினால் ஈரமாக்கினாள்.
மோகனன் முற்றிலும் நிலைகுலைந்து போனான். அவனுக்குள்ளும் என்னென்னவோ ஆசைகள் பிறந்தன. அதையெல்லாம் நிறைவேற்றுவதற்கு இது பொருத்தமான இடம் இல்லை என்பதில், “நாங்க நடு ரோட்டில நிக்கிறம் ராது.” என்று அவளுக்கு நினைவூட்டினான்.
“உங்கட வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போங்க, பிளீஸ். வேலையாட்கள் போயிருப்பினம்தானே. எனக்கு ஆசை தீர உங்களப் பாக்கோணும்.”
அவளின் ஆசையை அவன் மீறுவானா? அடுத்த பத்தாவது நிமிடம் அன்றுபோலவே அவன் வீட்டின் அறையில் நின்றிருந்தனர் இருவரும்.
அவளுக்கு மற்றவை அனைத்தும் மறந்து போயிற்று. அவள் மனத்தைக் கொள்ளை கொள்ளும் அந்த முகம்தான் நெஞ்சு முழுக்க நிறைந்து கிடந்தது. “எனக்காகவா மோகன்?” அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆசையோடு கேட்டாள்.
கைகள் அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்திருக்க, “கொஞ்சம் ஓவரா வளந்திட்டுது, அதுதான்…” என்றான் அவன் சிரிப்பை அடக்கியபடி.
அவனை முறைத்தவள் எம்பி அவன் கன்னத்தை வலிக்கும்படி கடித்தாள்.
“ராது…” என்றவனின் அணைப்பு இறுகியது.
“ராதுக்கு என்ன? எனக்காக எண்டு சொல்லேலா(சொல்ல ஏலாது) என்ன? அந்தளவுக்குத் திமிர்!” என்றவள் மற்றக் கன்னத்தையும் கடித்தாள். அவன் மீசையை பிடித்து முறுக்கி விட்டாள்.
கடைசியாக அவன் கீழுதட்டைப் பிடித்து இழுத்து, “இந்த உதடு என்ன இவ்வளவு சிவப்பா இருக்கு? இந்தப் பத்துறது, குடிக்கிறது, சப்புறது எண்டு எந்த நல்ல பழக்கமும் இல்லையா உங்களுக்கு? அப்பிடி இருக்கக் கூடாதே?” என்று அவனை வம்புக்கு இழுத்தாள்.
பதில் சொல்லவில்லை மோகனன். அவன் பார்வை மாறிப்போயிருந்தது. அப்போதுதான் சற்றே அதிகமாகவே சீண்டிவிட்டோம் என்று விளங்க, பார்வையைத் தழைத்துக்கொண்டு நல்லபிள்ளையாக விலக முயன்றாள்.
அவன் விட மறுத்தான். “நானும் எவ்வளவு நேரத்துக்குத்தான் ஆசைய அடக்கிறது?” என்றவன் அவளைப் பூப்போலத் தாங்கி, அவளின் இதழ்களை முற்றுகையிட்டபோது, தன்னை மறந்து இசைந்து நின்றாள் ராதா.
நிமிடங்கள் நொடிகளாய்க் கரைந்துகொண்டிருந்தன.
அவன் விடுவித்தபோது முகத்தை அவன் கழுத்து வளைவில் புதைத்தாள் ராதா. மனத்தில் நிறைவுடன், “உங்கட அண்ணா ஓம் எண்டு சொல்லிட்டார்.” என்றான் அவளின் காதோரமாக.
“உண்மையாவா?” நொடியில் முகம் பூவாய் மலர, அவன் முகம் பார்த்துக் கேட்டவளின் விழிகளினோரம் கண்ணீர்த் துளிகள்.
நிச்சயம் அண்ணா சம்மதிப்பான் என்று தெரியும். இருந்தும் ஒருவிதப் பயம் அவளைப்போட்டு ஆட்டிக்கொண்டுதான் இருந்தது. இப்போதோ, பெருத்த நிம்மதி ஒன்று அவளின் இதயத்தை அமைதியடையச் செய்தது.
“இவ்வளவு நம்பிக்கை என்னில எப்பிடி ராது?” அவளின் கன்னத்தை ஆசையோடு வருடியபடி கேட்டான் அவன்.
அவள் புரியாமல் கேள்வியோடு அவனை ஏறிட்டாள்.
“நீங்க உங்கட அண்ணாவோட கதைக்கேக்க நானும் கேட்டுக்கொண்டுதான் இருந்தனான்.”
“ஓ…!” என்று இழுத்துவிட்டு, “உங்களை நம்பாம வேற ஆர நம்பச் சொல்லுறீங்க?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்தான் மோகனன். புருவங்களை உயர்த்தி என்ன என்று வினவினாள் அவள்.
ஒன்றுமில்லை என்பதுபோல் தலையை அசைத்துவிட்டு, அவளைத் தன் மார்போடு சேர்த்து அணைத்து, குனிந்து அவளின் இதழ்களின் மீது அழுத்தி முத்தமிட்டான். பின் முகமெங்கும்.


