மோகனனின் கார் அவர்களின் வீட்டின் முன்னே வந்து நின்றதும், “ஒரு மாதிரி பதட்டமா இருக்கு மோகன்.” என்றாள் ராதா.
“என்னத்துக்குப் பதட்டம்? நான் இருக்கிறன் தானே. வாங்க!” என்றபடி அவளோடு இறங்கினான் அவன்.
ராதாவை வரவேற்க விரைந்துவந்த செல்வராணி, ரஜீவன், யாழினி மூவருமே மோகனனைக் கண்டு அதிர்ந்து நின்றனர். மனைவியிடமிருந்து வந்த செய்தியில் விரைந்து வீடு வந்து சேர்ந்திருந்த ராஜநாயகம் கூட, மகனை இந்தக் கோலத்தில் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை.
மனத்துக்குப் பிடித்தவளோடான வாழ்க்கை தன் சின்னமகனை எந்தளவிற்கு மாற்றியிருக்கிறது என்பதை அமைதியாய் நின்று நெகிழ்ச்சியுடன் உள்வாங்கிக்கொண்டிருந்தார்.
“என்ன அண்ணா இது புதுக் கோலம்?” என்றாள் யாழினி.
பார்வை ராதாவிடம் சென்று வர, “எடுத்திட்டன்.” என்றான் அவன் தாடையைத் தடவிச் சிரித்தபடி.
அந்தப் பார்வை போதாதா காரணம் யார் என்று ஊகிக்க? “பாத்தீங்களா அம்மா, உங்கட சின்ன மருமகளை? வீட்டுக்கு வர முதலே அண்ணான்ர தாடியைப் பறிச்சிட்டாள். இனி என்ன மீசை, முடி எண்டு வரிசையா எடுக்கப்போறாளாமா? இதெல்லாம் என்ன எண்டு கேளுங்கம்மா.” என்றாள் வேண்டும் என்றே.
“இதில கேக்க என்ன கிடக்கு? அவள்தான் அவனை மனுசனாக்கி இருக்கிறாள். நான், நீ எல்லாம் எத்தனை தரம் சொல்லியிருப்பம். அண்ணா கூடச் சொன்னவன்தானே. கேட்டானா? அவள் சொன்னதும் எடுத்திட்டான் பாத்தியா? இதுக்குத்தான் சொல்லுறது மனுசி எண்டு ஒருத்தி வேணும் எண்டு.” என்று அவளிடம் சொல்லிவிட்டு,
“இப்பதான் மூக்கும் முழியுமா பாக்க வடிவா இருக்கிறாய் தம்பி. உனக்கு இப்பவே கலியாணக் களை வந்திட்டுது.” என்றவர், “நீ வா ஆச்சி! நான் கும்பிட்ட கடவுள் கைவிடேல்ல. உன்னையே எனக்குச் சின்ன மருமகளா தந்திட்டார், பாத்தியா?” என்றபடி ராதாவின் கையைப் பற்றி வீட்டுக்குள் அழைத்து வந்தார்.
அங்கிருந்த யாருமே அவளுக்குப் புதியவர்கள் அல்ல. ஆனால், அவர்களோடு அவளுக்கு உருவாகப்போகிற உறவுமுறை புதிது. அது, மெல்லிய கூச்சத்தையும் தயக்கத்தையும் உண்டாக்கிற்று. கூடவே, அவளின் தமையன். அவன் சம்மதம் சொல்லியிருந்தபோதிலும் அவன் மனநிலை என்ன என்று தெரியாததால் கலக்கத்துடன் அவனைப் பார்த்தாள் ராதா.
ரஜீவனின் நிலையும் சற்று மோசமாகத்தான் இருந்தது. அவன் சம்மதம் கொடுத்துத்தான் அவள் வந்திருக்கிறாள். ஆனாலுமே, முதன் முதலாக மோகனனும் அவளும் இணைந்து வந்ததைப் பார்த்தபோது, அதை இயல்பாக ஏற்க முடியாமல் மனம் முரண்டிற்று. இருந்தும் எதையும் காட்டிக்கொள்ளாமல், “வாம்மா!” என்று அழைத்தான்.
அதன் பிறகுதான் அவள் முகம் மலர்ந்தது. அதைக்கண்டு அவன் மனம் கனிந்து போயிற்று.
அதுவரை, கண்களில் சிரிப்பும் சீண்டலுமாக நின்ற யாழினி, ராதா அவளைப் பார்க்கவும் எங்கோ பார்த்துக்கொண்டு தொண்டையைச் செருமினாள். அவளுக்கு இருமல் வந்தது. தும்மல் வந்தது. இன்னும் என்னவெல்லாமோ வந்தது.
“அண்ணி…” என்றாள் ராதா சிரிப்புடன்.
“ரஜீவன், இங்க ஆரோ என்ர அண்ணாவைப் பாத்து எனக்கு உங்களைப் பிடிக்கேல்ல பிடிக்கேல்ல எண்டு நிலத்தில விழுந்து கிடந்து கத்தினவே எல்லா? அது ஆர் எண்டு தெரியுமா உங்களுக்கு?” என்று சந்தேகம் கேட்டாள்.
“அண்ணி…” என்ற ராதாவுக்கு மானமே போனது.
“என்ன அண்ணி? சொல்லுங்க அண்ணி? ஏதாவது வேணுமா அண்ணி? தண்ணி தரவா அண்ணி? குடிக்கிறீங்களா அண்ணி?” கொடுத்த பணத்துக்கு மேலே நடித்தாள் யாழினி.
“அண்…ணி!” ராதாவுக்கு முகத்தைக் கொண்டுபோய் எங்கேயாவது புதைக்கலாம் போலிருந்தது. பரிதாபத்துடன் மோகனனைப் பார்த்தாள். அவன், இவள் படுகிற பாட்டை ரசித்துச் சிரித்துக்கொண்டிருந்தான்.
“நீ வாம்மா. அவள் உன்னோட சும்மா விளையாடுறாள்.” என்று செல்வராணி சொல்லிக்கொண்டு இருக்கையிலேயே கௌசிகனின் கார் அவர்களின் வீட்டினுள் நுழைந்தது.
“சித்தப்பாவும் நிக்கிறார்!” அவன் காரை கண்டுவிட்டு காரிலிருந்து வேகமாக இறங்கி, வீட்டுக்குள் ஓடிவந்த மிதுனா, மோகனனைக் கண்டதும் திகைத்துப்போய் அப்படியே நின்றாள்.
அதிர்ச்சியில் அவளின் செப்பு இதழ்கள் இன்றும் மீன் குஞ்செனத் திறந்துகொண்டன.
அவளுக்கு அவனின் தாடியின் மீது எவ்வளவு பிரியம் என்று எல்லோருக்குமே தெரியும். எல்லோரும் அவளையே பார்க்க இப்போது அவளின் இதழ்கள் பிதுங்க ஆரம்பித்தன. “நோ சித்தப்பா. நோ! நோ!” என்றபடி பின்னோக்கி நடக்க ஆரம்பித்தவள் அழுகையுடன் திரும்பித் தகப்பனிடம் ஓடினாள்.
தமக்கையின் பின்னால் ஓடிவந்த மதுரன் கூட, அங்கே நின்ற புது முகத்தைக் கண்டுவிட்டு வீறிட்டபடி திரும்பி அன்னையிடம் ஓடினான்.
பிரமிளா கௌசிகன் கூட மோகனனின் இந்த மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. அவனிடம் அதைப் பற்றிக் கேட்பதை விடப் பிள்ளைகளைக் கவனிக்கவேண்டி இருந்தது.
அதுவும் மிதுனா கௌசிகனின் கால்களைக் கட்டிக்கொண்டு, “சித்தப்பா தாடியை வெட்டிட்டார் அப்பா.” என்று அழுதாள். பார்த்திருந்த எல்லோருக்குமே கவலையாய்ப் போயிற்று. அதுவும் ராதா என்னால் தானே என்கிற வருத்தத்தோடு மோகனனைப் பார்த்தாள்.
அவளைப் பார்வையாலேயே தேற்றிவிட்டு, “மிதுக்குட்டி, சித்தப்பாட்ட வாங்கோவன்! சித்தப்பா ஏன் தாடியை எடுத்தனான் எண்டு சொல்லுறன்.” என்றபடி அவளைத் தூக்க முயன்றான் மோகனன்.
அவள் வர மறுத்தாள். அவன் கைகளைப் பிடித்துத் தள்ளிவிட்டாள். “இல்ல, நான் உங்களோட கோபம். எனக்குத் தாடி வேணும்.” என்று தகப்பனின் கால்களுக்குள் முகத்தைப் புதைத்துக்கொண்டு அவன் முகம் பார்க்கவே மறுத்தாள்.
“அம்மாச்சி, என்ன இது? சித்தப்பாக்குக் கலியாணம் நடக்கப் போகுதெல்லோ. அதுதான் அவன் வெட்டி இருக்கிறான். அதுக்கு இப்பிடித்தான் அழுறதோ?” என்று அவளைத் தூக்க முயன்றான் தகப்பன்.
அதற்கும் விடாமல் அவன் கால்களைக் கட்டிக்கொண்டு அவனை நகர விடாமல் அழுதாள் அவள்.
“நாங்க திரும்ப வளப்பம், சரியா? இப்ப அழாம வங்கோ.” என்ற மோகனனின் பேச்சைக் கேட்பதாகவே இல்லை.
கடைசியில், “மிது! என்ன பழக்கம் இது? இப்பிடித்தான் அடம் பிடிச்சு அழுறதா? முதல் அப்பாவ வீட்டுக்க வர விடுங்கோ!” என்று பிரமிளா அதட்டிய பிறகுதான் தகப்பனை வீட்டுக்குள் வரவே விட்டாள்.
அப்போதும், “நான் எல்லாரோடையும் கோவம். எனக்குச் சித்தப்பான்ர தாடி வேணும்!” என்றபடி ஓடிப்போய், ‘எல்’ வடிவ சோபாவின் அந்த மூலையில் முகத்தைப் புதைத்துக்கொண்டு அழுதாள் அவள். இந்தப் பக்கம் மதுரன் அன்னையின் கையை விட்டு இறங்கவே மாட்டேன் என்று நின்றான்.


