நான்கு மாதங்கள் மின்னலாக விரைந்து போயிற்று. இடைப்பட்ட நாட்களில் சுந்தரத்திடம் வாங்கிய வீட்டை முழுமையாகத் திருத்தி, நல்ல இலாபத்தில் விற்று, பணத்தை எடுத்திருந்தான் மோகனன்.
அதன்பிறகுதான் திருமணம் என்பதில் பிடிவாதமாக இருந்தவன், தன் சொந்தச் செலவில், இதோ தன் தேவதைப் பெண்ணின் கழுத்தில் பொன்தாலியைப் பூட்டி, அவளைத் தன் திருமதியாய் மாற்றிக்கொண்டிருந்தான்.
ராஜநாயகத்துக்கும் கௌசிகனுக்கும் அது மிகப்பெரிய மனக்குறை. கௌசிகனின் திருமணம் கோலாகலமாக நடந்தது. யாழினியின் திருமணம் மிகப் பிரமாண்டமாய் நடந்தது. மோகனனோ தன்னதை மிக மிக எளிமையாய் நடத்திக்கொண்டான்.
அவர்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஒரு ரூபாய் கூடப் பெற்றுக்கொள்ளவில்லை. எவ்வளவு கேட்டும் காரணமும் சொல்லவில்லை.
ஒரு காலத்தில், இதே ஊரில் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியாக வாழ்ந்தவன் அவன். ஒரு நாள் திடீரென்று இதெல்லாம் உனக்குச் சொந்தமில்லை; நீ இங்கு வாழ்வதற்கு உரியவனும் இல்லை என்று வீட்டை விட்டோ ஊரை விட்டோ அல்ல, நாட்டை விட்டே துரத்தியடிக்கப்பட்டான்.
அன்றைக்கு அவன் செய்தவைகள் மகா தப்புகள்தான். ஆனபோதிலுமே அது மிகப்பெரிய அடியாக அவன் நெஞ்சில் விழுந்துபோயிருந்தது. மிகுந்த அவமானமாய் உணர்ந்திருந்தான். அதில், அன்றே அத்தனையின் மீதான பற்றுகளையும் விட்டொழித்திருந்தான்.
அதனாலேயே இங்கு வந்த பிறகும் மீண்டும் ராஜா வீட்டுக் கன்றுக்குட்டியாக மாறிவிடுவதில்லை என்பதில் மிகுந்த கவனமாய் இருந்தான். எதுவானாலும் நான் உழைப்பது மாத்திரம்தான் எனக்கு என்பதில் தெளிவாய் இருந்தான். கன்ஸ்ட்ரக்ஸனுக்குக் கூடக் கடனாகப் பெற்றதும் இதை மனத்தில் வைத்துத்தான்.
இதையெல்லாம் சொல்லித் தந்தையையோ தமையனையோ மனம் நோக வைக்கப் பிரியப்படாமல், “நான் உழைச்சு, என்ர காசில எனக்கு எண்டு ஒவ்வொண்டும் செய்றதுல ஒரு சந்தோசம் அண்ணா. ஒரு திருப்தி. மனதுக்கும் நிறைவா இருக்கு. அதுதான், வேற ஒண்டுமில்லை.” என்று அந்தப் பேச்சை முடித்துவிட்டிருந்தான்.
கௌசிகனுக்கும் அந்த உணர்வு உண்டே. அதனால்தானே, ‘ஹோட்டல் மிருதுளா’ இன்று பல ஊர்களில் கிளை பரப்பி நிற்கிறது. அதில், அதற்குமேல் ஒன்றும் சொல்லவில்லை அவன்.
அவனைப் பற்றியும், அவன் ராதாவின் மேல் கொண்டிருக்கும் நேசத்தைப் பற்றியும் உணர்ந்துகொள்ள இந்த நான்கு மாதங்கள் ரஜீவனுக்கு வெகுவாய் உதவிற்று. தன் முரண்களைத் தூக்கி எறிந்திருந்தான். தங்கையின் துணைவனாக மோகனனை முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டிருந்தான்.
அதில், சீதனம் என்று எதையும் பெற்றுக்கொள்ள மாட்டேன் என்று திடமாய் நின்றவனை அவனும் வற்புறுத்தவில்லை. எப்படியும் அன்னை வாழும் அந்த வீடும், ராதாவுக்கு என்று அவன் சேர்த்த நகைகளும் ராதாவுக்குத்தான் போகப்போகின்றன. பிறகு என்ன என்று எண்ணிக்கொண்டான்.
ராஜநாயகம் செல்வராணி தம்பதியருக்கு மனத்தில் மிகுந்த திருப்தி. இரண்டு குழந்தைகளுடன் நிறைவான வாழ்க்கை வாழும் மூத்த மகன், தாய்மையில் பூரித்து ஏழு மாதக் கருவைச் சுமந்திருக்கும் கடைசி மகள், என்னாகுமோ என்று பயந்த சின்ன மகனின் திருமணத்தைக் கண்ணாரக் கண்டுவிட்ட நெகிழ்ச்சி என்று ஆனந்தத்தில் நிறைந்து தளும்பும் மனத்தோடு அமர்ந்திருந்தனர்.
மொத்த வீடுமே காலில் விழாத குறையாகக் கெஞ்சிக் கேட்டும் அவனுடைய நான்கு மாதத் தாடியை எடுக்க மிதுனா சம்மதிக்கவே இல்லை. அவளுக்காகச் சித்தப்பா அந்தத் தாடியோடுதான் திருமணத்தையே செய்தார் என்பதில் அவளுக்கு ஏக பெருமை.
இப்போதெல்லாம் மதுரன் அவளுக்கும் மேலே அவனுடைய, ‘டிட்டப்பாவின்’ செல்லமாகியிருந்தான். அவனை மடியில் வைத்துக்கொண்டுதான் ராதாவின் கழுத்தில் தாலியையே கட்டியிருந்தான் மோகனன்.
கௌசிகன் தூக்கப் போனபோது கூட வரமாட்டேன் என்று திமிறி, சித்தப்பனைக் கட்டிக்கொண்டு அவன் சிணுங்கவும், “விடுங்க அண்ணா, இருக்கட்டும்.” என்றுவிட்டான் மோகனன்.
கௌசிகனுக்குத் தன் பிள்ளைகளின் மீது மிகுந்த கோபம். பிரமிளாவை நன்றாக முறைத்து வைத்தான். “எனக்கு வாற கோபத்துக்கு உனக்குச் சாத்துறதா இல்ல என்ர பிள்ளைகளுக்கு ரெண்டு போடுறதா எண்டே தெரியாம இருக்கடா. நல்லா செல்லம் குடுத்துக் கெடுத்து வச்சிருக்கிறாய்!” என்றான் முகத்தைக் கடுகடு என்று வைத்துக்கொண்டு.
“ம்க்கும்! இவர் பிள்ளைகளுக்கு அடிச்சுப்போட்டுத்தான் மற்ற வேல பாப்பார். உங்கட வீரம் எல்லாம் கட்டின மனுசிட்ட மட்டும்தான் எண்டு எங்களுக்குத் தெரியும்.” அருகில் நின்றிருந்த பிரமிளா முணுமுணுத்தாள்.
அங்கிருந்த எல்லோர் முகத்திலும் முறுவல். மோகனன் தமையனைக் கேலியாகப் பார்த்தான்.
அதில் சீண்டப்பட்டு, “இஞ்ச என்னடா பார்வை? அங்க ஐயாவைக் கவனி!” என்று அவனை அதட்டிவிட்டு, “ஒரே ஒரு நாள் தான்டி அடிச்சனான். அதுக்குக் காலம் முழுக்கச் சொல்லிக்காட்டிக்கொண்டே இருப்பியா நீ!” என்று பிரமிளாவின் காதிலும் சீறினான்.
“ஒரே ஒரு தரம் எண்டாலும் அடிச்சனீங்கதானே.” என்றுவிட்டுத் தன் வேலைகளைக் கவனித்தாள் அவள்.
அதன்பிறகான சடங்குகள் அவர்கள் தனியாகப் பேசுவதற்கான சமயத்தை அமைத்துத் தரவில்லை. பகல் உணவெல்லாம் முடிந்து, மதுரன் கையிலேயே உறங்கிவிட, அவனைக் கிடத்த அறைக்குச் சென்ற பிரமிளாவைப் பின்னாலேயே சென்று பிடித்தான் கௌசிகன்.
“உன்ன எவ்வளவுதான் சந்தோசமா வச்சிருந்தாலும் பழசை எல்லாம் மறக்கமாட்டாய் என்ன?” என்றான் மனத்தாங்கலும் மனக்குறையுமாக.
“ஷ்ஷ்!” வாயில் விரல் வைத்து உறங்கும் மகனைக் கண்ணால் காட்டினாள் அவள்.
“என்னடி? உனக்கு நான் வாயும் திறக்கக் கூடாதா?” கோபமாய்க் கேட்டாலும் அவனுடைய சத்தம் நன்றாகவே குறைந்துபோயிருந்தது.
பிரமிளாவுக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டு திரும்பி அவனைப் பார்த்தாள். அவர்களுக்குத் திருமணமாகி எத்தனை வருடங்களாகி இருந்தால் என்ன? ஒரு கண்ணில் கோபத்தையும் மறு கண்ணில் காதலையும் தேக்கிக்கொண்டு அவளையே சுற்றி சுற்றி வரும் அவளின் கௌசி மாறவே இல்லை.


