“இப்ப என்ன பிரச்சினை உங்களுக்கு?” என்றபடி அவன் முன்னால் வந்து நின்றாள்.
“நான்தான் பிள்ளைகள வளப்பன் எண்டு பெருசா சொன்ன. என்ன வளப்பு வளத்து வச்சிருக்கிறாய். குட்டி போட்ட பூனை மாதிரி அவனைத் தாலியைக் கூடக் கட்டவிடாம தோளில ஒண்டு மடில ஒண்டு எண்டு இருக்கிறாங்கள். என்ன இதெல்லாம்?”
“என்னைக் கேட்டா? தலைகீழா நிண்டு எண்டாலும் தான் நினைச்சதைச் சாதிக்கிற தகப்பனுக்குப் பிறந்த பிள்ளைகள் வேற எப்படி இருப்பினமாம்?” என்று திருப்பிக் கேட்டாள் அவள்.
அவனுக்குக் கோபம் போய்ச் சரசம் வந்திருந்தது. “அப்ப இதுக்கும் நானாடி காரணம்?” என்றான் அவளை நெருங்கி உரசியபடி.
அடுத்து என்ன நடக்கும் என்று அவளுக்குத் தெரியாதா? “அங்க எங்களைத் தேடப்போயினம். வாங்க போவம்!” என்றபடி அவனிடமிருந்து வேகமாக விலகி, கதவை நோக்கி நடந்தாள்.
அவளைவிட வேகமாக அவளின் கையைப் பற்றித் தன்னிடமே கொண்டு வந்தான் அவன். “டீச்சரம்மாக்குக் கெட்டித்தனமா நடக்கிறதா நினைப்போ?” அவளின் இடையை வளைத்தபடி கேட்டான் அவன். “நீ விலக நினைக்க முதலே சிறைப் பிடிக்கிறவன் நான். மறந்திட்டியா?” என்றான் அவளின் காதோரம்.
அவன் அண்மையில் மனம் மயங்கியபோதும், “வெளில எல்லாரையும் வச்சுக்கொண்டு நாங்க இப்பிடி நிக்கிறது சரியில்ல கௌசி!” என்று எச்சரித்தாள் பிரமிளா.
“எனக்கு என்ன வேணும் எண்டு உனக்குத் தெரியும். அதத் தந்தா நான் ஏன் உன்னப் பிடிச்சு வச்சிருக்கப்போறன்?” என்று கேட்டுவிட்டு அவளின் முகம் நோக்கிக் குனிந்தான் அவன்.
அவன் விடுவித்தபோது அவள் முகம் சிவந்து போயிருந்தது. தலை கலைந்திருந்தது. முறைப்புடன் அவள் தன்னைச் சீர் செய்யவும், ஆசையோடு மீண்டும் அழுத்தி அவள் உதட்டினில் முத்தமிட்டான் அவன்.
“உங்கள…” என்றவளுக்கு அந்தப் பிடிவாதக்காரனைத் திட்ட மனம் வரவே மாட்டேன் என்றது. மாறாக, அவன் கேசத்துக்குள் கைகளை நுழைத்துக் கோதிவிட்டபடி, “போதுமா? இப்ப சந்தோசமா? இனி நான் போகவா?” என்று வினவினாள்.
அவன் கைகளும் அவளை வாகாக அணைத்துக்கொண்டன. “இருந்த பாரமெல்லாம் இறங்கி மனதுக்கு நிறைவா, சந்தோசமா இருக்கு ரமி.” என்றான் அவளின் முகம் பார்த்து.
“எனக்கும்தான். ஆர்ல சரியோ பிழையோ அவன் ஒற்றையா நிக்கிறதுக்கு நானும் நீங்களும் கூட ஏதோ ஒரு வகையில காரணம் எண்டு இவ்வளவு நாளும் கவலையா இருந்தது. இனி அது இல்ல. அவன் நல்லாருப்பான். ராதாவும் சந்தோசமா வாழுவாள். என்ர கௌசியும் நிம்மதியா இருப்பார்!” என்றவள், எம்பி அவன் தாடையில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “வாங்கோ, போவம்.” என்று அவனோடு வெளியே நடந்தாள்.
*****
அடுத்த நாள் அதிகாலையிலேயே ராதாவோடு பைக்கில் புறப்பட்டான் மோகனன்.
“கார்ல போகலாமே தம்பி.” மணமான அடுத்த நாளே பைக் பயணத்தை விரும்பாமல் சொன்னார் செல்வராணி.
“போறது கண்டிக்கு அம்மா. கார விடப் பைக் ஈஸி. பார்க்கிங்கும் எல்லா இடமும் கிடைக்கும்.” என்றான் அவன்.
“எண்டாலும் அப்பு கார்ல போனாலே ஏழு எட்டு மணித்தியாலம் பிடிக்கும். பைக் இன்னும் நேரம் எடுக்கும் எல்லா.”
“அம்மா, ஒருமாத லீவு எடுத்துப் போறதே அங்கங்க தங்கித் தங்கிப் போகத்தான். நான் இடமெல்லாம் பாத்து புக் பண்ணிட்டன். இடையில, தேவைப்பட்டா டென்ட் அடிச்சு களைப்பாறிப்போட்டு கண்டிக்குப் போய்ச் சேருவம். நீங்க ஒண்டுக்கும் பயப்பிடாதீங்க. அப்பப்ப எங்க நிக்கிறன் எண்டு மெசேஜ் அனுப்புறன். மற்றது எல்லாம் அண்ணாக்கும் ரஜீவனுக்கும் தெரியும்.” என்றுவிட்டு, செல்வராணி, ராஜநாயகம், கௌசிகன், ரஜீவன், யாழினி என்று எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டான்.
குழந்தைகள் நின்றால் அவனைப் போகவே விடமாட்டார்கள் என்று, அவர்களைப் பிரமிளாவோடு வீடு கடத்தியிருந்தான் கௌசிகன். இனி அவர்களைச் சமாளிக்கும் பெரிய வேலை அவனுக்கு உண்டு.
மோகனன் ராதா இருவரினதும் பயணம் ஆரம்பித்தது. அவன் கைகளுக்கு நடுவில் ஒரு பெரிய டிராவலிங் பாக். அவளுக்குப் பின்னாலும் இன்னொரு பாக். அவனுடைய பைக்கின் பின் பக்கத்துச் சிவப்பு விளக்கு பார்வைக்கு மறையும் வரை மொத்தக் குடும்பமும் அங்கேயே நின்று பார்த்திருந்தது.
“எல்லாமே கனவு மாதிரி இருக்கு. பாத்தா கலியாணமே முடிஞ்சுதாம். சந்தோசமா போயிட்டு வரோணும், அப்பனே முருகா!” நல்லூரானை வேண்டியபடி வீட்டுக்குள் நடந்தார் செல்வராணி.
“அது ஒண்டும் நடக்காது அம்மா. அண்ணாக்கு முந்தியே எல்லா இடமும் தெரியும். இப்ப இன்னும் கவனமா இருப்பார். நீங்க ஒண்டுக்கும் யோசிக்காதீங்கோ.” என்று அவரைத் தேற்றிவிட்டு,
“ஆனாம்மா, வீட்டில சத்தமே இல்லாம, பாவி மாதிரி இருந்துகொண்டு சிங்கம் மாதிரி துள்ளிக்கொண்டு திரிஞ்ச ரெண்டு மகன்மாருக்கும் உங்களுக்கு விருப்பமான பெட்டையளைத்தான் மருமகளாக்கி இருக்கிறீங்க. நீங்க கில்லாடிதான்.” என்று அவரைச் சீண்டினாள் யாழினி.
அதில் இருந்த உண்மையில் கௌசிகனின் முகத்திலும் முறுவல் அரும்பிற்று. செல்வராணிக்கும் அந்த உண்மை அப்போதுதான் புரிந்தது.
அதில் முகம் பூவாய் மலர, “இப்ப அதுக்கு என்ன? உன்ர அண்ணாக்கள் ரெண்டு பேரும் என்ர சொல்லக் கேட்டுக் கெட்டே போயிட்டினம்? நல்லாத்தானே இருக்கினம்.” என்று பதில் கொடுத்தார் அவர்.
“எண்டாலும் நீங்க லேசுப்பட்ட ஆள் இல்ல. என்னப்பா? என்னவோ அப்பாக்கும் அண்ணாக்களுக்கும் பயந்த ஆள்மாதிரி நடிச்சுக்கொண்டு, உள்ளால தன்ர காரியத்தைக் கொண்டு ஓடிட்டா.” என்று தகப்பனையும் தன் பேச்சுக்குள் இழுத்து அவரைச் சீண்டுவதை அவள் தொடர, அவள் தலையிலேயே செல்லமாய்த் தட்டினான் கௌசிகன்.
“ராதா போய்ட்டாள் எண்டதும் அம்மாவைப் பிடிச்சிட்டியா நீ? அடங்காமத் திரிஞ்சாலும் நாங்க ரெண்டுபேரும் அம்மா சொன்ன பெட்டையளத்தான் கட்டினம். ஆனா நீ? பூனை மாதிரி பயந்துகொண்டு திரிஞ்சிட்டு உனக்குப் பிடிச்சவனத்தானே கட்டி இருக்கிறாய். அப்ப நீ கெட்டிக்காரியா, அம்மா கெட்டிக்காரியா?” என்று கேட்டான் அவன்.
என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் மாட்டிக்கொண்டு முழிக்க, “இப்ப பதில் சொல்லன்!” என்று சிரித்தார் செல்வராணி.
அவரை முறைத்தாள் அவள். “இனி ஏதாவது ஐடியா கேட்டுக்கொண்டு வாங்க, மாட்டிவிடுற மாதிரி பிளான் போட்டுத் தாறன்!” என்று பொய்க்கோபம் காட்டிவிட்டு அறைக்கு ஓடினாள்.
“பிள்ளையே பிறக்கப்போகுது. ஆனாலும் இந்தச் சின்ன பிள்ளை குணம் இன்னும் போகேல்ல!” என்று செல்லமாய்ச் சலித்துக்கொண்டார் அவர்.
மூன்று ஆண்களும் நடந்துமுடிந்த திருமணம் பற்றி அலசத் தொடங்க, சுகமான மனநிலையோடு அவர்களுக்கு எதையாவது உண்ணக் கொடுக்கும் நோக்கில் சமையல் கட்டுக்கு நடந்தார் செல்வராணி.


