இங்கே மோகனனின் பைக் கிளிநொச்சியைத் தொட்டு வவுனியாவை நோக்கி வேகம் எடுத்திருந்தது. மூன்று மணித்தியாலங்கள் கடந்த நிலையில் அன்று போலவே வவுனியா பூங்காவில் பைக்கை நிறுத்தினான். இருவருக்கும் பழைய நினைவில் முறுவல் அரும்பிற்று.
“என்ர நம்பர் எப்பிடிக் கிடச்சது உங்களுக்கு?” பூங்காவுக்கு நடந்தபடி அன்றைய நாளின் கேள்வியை இன்று கேட்டாள் ராதா.
அவன் உதட்டினில் முறுவல் அரும்பிற்று. நடந்தபடி அவளைத் திரும்பிப் பார்த்தான்.
பைக் பயணத்துக்கு ஏதுவாக ஜீன்ஸ் டொப்பில் இருந்தவளின் நெற்றியை நேற்றிலிருந்து அலங்கரிக்கும் குங்குமத்தையும், அது கொடுக்கும் பிரத்தியேக அழகையும் ரசித்தபடி, “யாழின்ர ஃபோன்ல இருந்து சுட்டனான்.” என்றுவிட்டுக் கண்ணைச் சிமிட்டினான் அவன்.
“உங்களை… எவ்வளவு கள்ள வேலை எல்லாம் பாத்து இருக்கிறீங்க?”
“பின்ன, கேட்டா தந்திருப்பீங்களா நீங்க? அதுக்கும் இன்னொரு பூகம்பம் வெடிச்சிருக்கும்.”
அது என்னவோ உண்மைதான். ஆனால், அன்று அப்படி அவனை அடிமனத்திலிருந்து வெறுத்தவளை இன்று உயிராய் நேசிக்க வைத்துவிட்டானே.
அதற்கு முழுமுதற் காரணமாய் அமைந்ததும் அன்றைய பயணம்தான். அந்த இதமான மனநிலையோடு சற்றுக்குப் பூங்காவைச் சுற்றி நடந்தனர். அப்படியே காலை உணவையும் முடித்துக்கொண்டு மீண்டும் புறப்பட்டனர்.
பயணத்தின்போது இருவரும் பெரிதாகப் பேசிக்கொள்ளவில்லை. தேவைப்பட்டால் இடையில் தங்கிச் செல்வதாகச் செல்வராணியிடம் சொல்லியிருந்தாலும் அந்த எண்ணம் இருவருக்குமே இல்லை.
அதில் அவன் சற்று வேகம் எடுத்திருந்தான். கெக்கிராவை என்கிற இடத்தில் பகல் உணவுக்கு நிற்க வேண்டும் என்பது அவன் இலக்காய் இருந்தது. இடையிடையில் அத்தியாவசியத் தேவைகளுக்கு நிறுத்தினாலும் அவன் எண்ணியது போலவே பகல் உணவைக் கெக்கிராவையில்தான் முடித்தனர்.
“டென்ட் கொண்டுவந்தனான். களைப்பா இருந்தா இஞ்சயே கொஞ்ச நேரம் படுத்திட்டுப் போகலாம்.” என்றான் பக்கத்தில் இருந்த மரச்சோலை ஒன்றிணைக் காட்டி.
பூக்களோ பூங்கன்றுகளோ எதுவும் இல்லாதபோதும், கம்பளம் விரித்துவிட்டது போன்று பச்சைப் பசேல் என்று மின்னிய புல்வெளியில், பெரிய பெரிய மரங்கள் ஓங்கி வளர்ந்து நின்று நிழலைப் பரப்பிக்கொண்டிருந்தன. அங்கே, பல டென்டுகளும் அடிக்கப்பட்டு ஆட்களும் இருந்தனர்.
அதைப் பார்க்க அவளுக்கும் ஆசையாகத்தான் இருந்தது. இருந்தாலும் இருட்டிவிட முதல் கண்டிக்கே சென்றுவிட எண்ணி, “இன்னும் எப்பிடியும் ஒண்டரை மணித்தியாலப் பயணம்தானே. வெளிக்கிடுவம்.” என்றாள்.
அவனுக்கும் அதேதான் எண்ணம்தான் என்பதில் அடுத்த இரண்டாவது மணித்துளியில், பைக்கை கண்டி கபான ரிசோர்ட்டில் கொண்டுவந்து நிறுத்தியிருந்தான்.
மென் ஊசியாய் உடலைத் துளைக்கும் குளிரும், கண்ணுக்கு எட்டும் தூரம் வரைக்கும் பச்சைப் பசேல் என்று படர்ந்து நின்ற மரங்களும், கண்ணுக்கே தெரியாமல் பொழிந்துகொண்டிருந்த மெல்லிய பனியும், ஈரலிப்பு நிறைந்த நிலமும், நகர்ப்புறத்தின் தொந்தரவுகள் எதுவுமற்ற அமைதியும் ராதாவைச் சில்லிட வைத்தன.
ஈரலிப்பான நிலம் என்பதில், தரையிலிருந்து ஒரு ஆளின் உயரத்துக்கு மரக்குற்றிகள் நட்டு, அதன்மேலே பலகை வீடுகள் தனித்தனியாக அமைக்கப்பட்டிருந்தன.
தரைப் பலகையின் மீது கூரையை நிறுத்தி வைத்தது போன்ற தோற்றத்தில், அளவான பால்கனியுடன் கூடிய ஒற்றைப் படுக்கையறை வீடு மனத்தை அப்படியே அள்ளியது.
வீட்டுக்குள் வந்து கதவைச் சாற்றியதுமே, பாக்குகளைத் தரையில் போட்டுவிட்டு வேகமாக அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டுவந்த மோகனன், அதே வேகத்தில் அவள் இதழ்களையும் சிறையிட்டிருந்தான்.
ராதா இதை எதிர்பார்க்கவே இல்லை. திகைத்து, விழிகளை விரித்தாள். அவளின் இதழ்களின் சுவையில் கிறங்கிப்போயிருந்தவனின் விழிகளில் தெரிந்த மயக்கத்தில், அவள் விழிகளும் மெல்ல மெல்ல மூடிக்கொண்டன.
அவன் அவளை விடுவிக்க நிறைய நேரமாயிற்று. விடுவித்தபோதோ அவள் அவள் வசத்தில் இல்லை. “அடுத்த ஒரு மாதத்துக்கு இந்த ராது எனக்கு மட்டும்தான்!” என்றான் ஆசை நிறைந்த குரலில் அவளின் காதோரம்.
காந்தமாய் அவளுக்குள் புகுந்த அந்தக் குரல் அவளை என்னவெல்லாமோ செய்தது. அவன் முகம் பார்க்க முடியாமல் மார்புக்குள் தன்னை மறைத்தாள்.
திருமண நாளுக்கான களைப்பில் நேற்று முற்றிலுமாய்ச் சோர்ந்து இருந்தவளை அவன் நெருங்கவில்லை. இன்று, அவன் தன் ஆசையைச் சொன்னபோது மறுக்கும் எண்ணம் அவளுக்கும் இல்லை.
“குளிக்கோணும்…” என்றாள் அவன் மார்புக்குள் இருந்தே.
“பிறகு?” அவள் முகத்தை நிமிர்த்த முயன்றபடி வினவினான் அவன்.
“மோகன்…” என்று சிணுங்கியவள் விட்டால் அவன் சட்டைக்குள் புகுந்து முகத்தை மறைத்துக்கொள்ளும் நிலையில் இருந்தாள்.
அவன் சந்தோசமாய் நகைத்தான். அவளின் உச்சியில் தன் உதடுகளை ஒற்றி எடுத்துவிட்டு, “நீங்க போய்க் குளிச்சிட்டு வாங்க. அதுக்கிடையில நான் நாங்க கொண்டுவந்ததை எல்லாம் எடுத்து வைக்கிறன்.” என்றான்.
அவளும் விட்டால் போதும் என்று மாற்றுடைகளை எடுத்துக்கொண்டு அவன் முகம் பாராமல் குளியலறைக்குள் புகுந்துகொண்டாள்.
சில்லென்று உடலை நனைத்த நீர் காரணமா, அல்லது, வெட்கமற்று அவளுக்குள் ஓடிய எண்ணங்கள் காரணமா அவளறியாள். அதன்பிறகு அவளால் அவன் முகத்தைப் பார்க்கவும் முடியவில்லை. தன் முகத்தின் சிவப்பை அடக்கவும் முடியவில்லை.
சிறு சிரிப்புடன் அவளை ரசித்தவனும் சேட்டை செய்யாமல் குளித்துவிட்டு வந்தான். இருவரும் சென்று மாலை உணவை அங்கிருந்த உணவகக் குடிலில் முடித்துக்கொண்டு திரும்பினர்.
அன்றுதான் முதல்நாள் என்பதில் கவனமாகப் பார்த்து, ஜன்னல், கதவு எல்லாவற்றையும் அவன் சாற்றிவிட்டு வந்தபோது, கட்டிலின் அருகில் செல்லமுடியாமல் அப்படியே நின்றாள் ராதா.
“படுக்கேல்லையா?” என்றான் அவளை நெருங்கி.
என்ன சொல்வாள்? அவன் முகம் பார்க்க முடியாமல் தடுமாறினாள். “தாடியைப் பிடிச்சு இழுத்துத் தைரியமா கிஸ் தந்த என்ர ராதுக்குப் புதுசா என்ன வெக்கம்?” என்றான் அவன் அவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தபடி.
அவள் வெட்கத்தில் உதடு கடித்தாள். அவன் பார்வை அவளின் உதட்டுக்குச் சென்றது. அவள் மீண்டும் அவன் மார்பினில் முகத்தைப் புதைக்க, சந்தோசமாய் நகைத்தபடி அவளோடு கட்டிலுக்கு நடந்தான்.


