யாழினியின் திருமண வேலைகள் சூடு பிடித்திருந்தன. முடி திருத்துவது, தலையலங்காரம் செய்து பார்ப்பது, முகத்துக்குப் பேஷியல், முக அலங்காரத்துக்கான முன்னோட்டம், உடைகளின் தேர்வு, அதை அளவு பார்த்தல், நண்பிகளின் வருகை, அவர்களோடான இனிய பொழுது என்று யாழினியைக் கையிலேயே பிடிக்க முடியவில்லை.
செல்வராணியும் பிரமிளாவும் பலகாரச்சூட்டில் மும்முரமாகி இருந்தனர். ராஜநாயகம், மனைவியோடு சென்று ஆட்களை அழைப்பதோடு சேர்த்துக் கடையையும் கவனித்துக்கொண்டார். அது திருமண சீசன் என்பதில் மற்றவர்களின் பொறுப்பில் கடையை விட்டுவிட்டு அவரால் விலக முடியவில்லை.
கௌசிகனுக்குத்தான் தலைக்குமேலே வேலை இருந்தது. ஹோட்டலைப் பார்த்து, கட்டுப்பட்டுக்கொண்டிருக்கிற வீட்டைக் கவனித்து, அப்படியே தங்கையின் திருமண வேலைகள் என்று இருபத்திநான்கு மணிநேரங்கள் காணாது என்கிற நிலையில் இருந்தான்.
இப்படி இருக்கையில் இயல்பாகவே பொறுப்புள்ள தம்பியாகத் தோள் கொடுத்தான் மோகனன். காலையும் மாலையும் வீட்டைச் சென்று கவனிப்பது, இன்னும் என்னென்ன வாங்குவது, நிலத்துக்குப் பதிப்பதாக வந்திறங்கிய டைல்ஸ் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பது, இரவில் ஹோட்டல் மூடுவதற்கு முதல் அதைச் சென்று கவனிப்பது, கூடவே திருமண வேலைகளில் பங்கெடுப்பது என்று, இந்தளவுக்கு உதவியாக இருப்பான் என்று கௌசிகன் எண்ணியே பார்க்கவில்லை.
அந்தளவுக்கு அவனுடைய வேலைகளைப் பாதியாக்கினான். கௌசிகனால் கொஞ்சமாவது வீட்டில் ஓய்வெடுக்க முடிகிறது என்றால் அதற்குக் காரணம் மோகனன் மட்டுமே!
முன்னரும் அவன் சொன்னால் செய்வான்தான். என்ன சொல்கிறவற்றை மட்டும் செய்வான். இப்போதோ அவனே எடுத்துச் செய்தான். மனத்துக்கு மிகுந்த ஆறுதலாக உணர்ந்தான் கௌசிகன்.
அவன் வந்ததில் இருந்தே தண்டனை என்கிற பெயரில் அவனை அனுப்பியது தவறோ என்று உள்ளே அரித்துக்கொண்டிருந்த பாரம், அதனால் தானே இப்படிப் பொறுப்புள்ளவனாக மாறியிருக்கிறான் என்கிற எண்ணத்தில் இறங்கியது. ஆனால் ஒன்று, அவன் நகைக்கடையின் பக்கம் போகவே இல்லை.
“ஒருக்கா போயிட்டு வாடா. அப்பாக்கும் சந்தோசமா இருக்கும்.” என்று சொல்லிப் பார்த்தான்.
“பாப்பம் அண்ணா.” என்றானே தவிரப் போகவே இல்லை.
ஏன் என்கிற கேள்வி எழுந்து நெருடினாலும், போகப்போக எல்லாம் சரியாகும் என்று எண்ணிக்கொண்டான். கூடவே, செல்லமுத்து நகைமாடத்தை ராஜநாயக்கத்தோடு சேர்ந்து பார்ப்பது ரஜீவன். அதனாலும் கௌசிகன் அழுத்தம் கொடுக்க விரும்பவில்லை.
அன்று, மாலை நேரம் தமையன் சொன்ன வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, வீட்டுக்கு வருகிற வழியில் பஞ்ச்பேக்(Punchbag) ஒன்றும் வாங்கிக்கொண்டான் மோகனன்.
தினமும் காலையில் இரண்டு மணித்தியாலங்கள் ஓடுவான்தான். ஆனாலும் தினவெடுத்த அவன் இரும்பு தேகத்துக்கு அது யானைப் பசிக்குச் சோளப்பொரி போட்டதுபோல் ஒரு உணர்வு.
இதுவானால் அவனுடைய அறையிலேயே வைத்துக்கொள்ளலாம், மற்றவர்களைத் தொந்தரவு செய்யாமல் பயிற்சியும் செய்துகொள்ளலாம் என்று எண்ணியபடி வீடு வந்து சேர்ந்தான்.
கேட்டினை நெருங்கும்போதே சின்னவர்கள் பேசிச் சிரித்து விளையாடும் சத்தத்தில் அவன் உதட்டினில் மெல்லிய முறுவல். ஒரு காலத்தில் குண்டூசி போட்டால் கூடக் கேட்கும் நிலையில் இருந்த வீடு, இப்போதெல்லாம் சலசலக்கும் அருவியாகக் கௌசிகனின் பிள்ளைகளின் சத்தத்தில் நிறைந்திருந்தது.
மதுரன் இன்னுமே இவனுடன் சேரவில்லை. என்ன, வீறிடல் நின்று இவனைக் கண்டதும் ஓடிப்போய் அன்னையின் கால்களுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் நிலைக்கு முன்னேறியிருந்தான்.
“இந்த முடி எல்லாத்தையும் வெட்டடா. அதுதான் அவன் பயப்பிடுறான்.” என்று கௌசிகன் சொன்னதற்கு, “அதெல்லாம் கூடாது. சித்தப்பாக்கு அதுதான் வடிவா இருக்கு!” என்று, மோகனனை முந்திக்கொண்டு எதிர்ப்புக்குரல் தூக்கியது கௌசிகனின் புத்திரியேதான்.
இப்போதும் தன்னைக் கண்டதும் தலைதெறிக்க மதுரன் ஓடப்போகிறான் என்கிற எண்ணம் தந்த சிரிப்புடன் வீட்டுக்குள் நுழைந்தவனின் கண்களில் பட்டவள் பிரதீபா.
அவளை எதிர்பாராத திகைப்பில் அப்படியே நின்றான் மோகனன்.
மகளை மடியில் தாங்கி, அவளுக்குப் பால் கொடுத்துக்கொண்டிருந்தாள் அவள். அங்கிருந்த ஒரு சிறுவனும் இவனைக் கண்டு, இவன் தோற்றத்தில் பயந்து அவளருகில் ஓடிப்போய் நின்றுகொண்டான்.
“பிருந்தன் அண்ணா, இவர் எங்கட சித்தப்பா. சிக்ஸ்பேக் வச்சிருக்கிறார் எண்டு சொன்னன். அவர்தான். வாங்கோ காட்டுறன்!” என்று அவனை அழைத்துக்கொண்டிருந்தாள் மிதுனா.
அதெல்லாம் அவன் செவியில் விழுந்தாலும் அவன் பார்வை தீபாவின் மடியில் இருந்த குழந்தையிடம் தாவிற்று. அப்படியே தீபன்தான். குட்டி குட்டிச் சுருள் முடிகளோடு மிக அழகாய் இருந்தாள்.
அவள் வேறு பால் அருந்துவதை விட்டுவிட்டு இவனைப் பார்த்துச் சிரித்தாள். இப்போதே கைகளில் அள்ளிக்கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
ஆனாலும் கறுத்துவிட்ட பிரதீபாவின் முகத்தையும், தன்னைக் கண்டதும் வேகமாக அவள் பார்வையைத் திருப்பிக்கொண்டதையும் கவனித்துவிட்டு அங்கிருந்து அகன்றான்.
தன் அறைக்குள் வந்து கதவடைத்த பிறகுதான் மூச்சை இழுத்துவிட்டான். அவன் எதிர்கொள்ளத் தயங்கியவர்களில் தீபாவும் ஒருத்தி. அவளுக்கு அவன் இழைத்தவை மகா தவறுகள்.
அவன் தவறானவனாகவே இருந்திருக்க இப்போதும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு நின்றிருப்பானாயிருக்கும். ஆனால் இன்றோ, தன் தவறே தன்னைச் சுடுமாம் என்பதற்கு இணங்க, ஒரு பெண்ணை எங்கு அடித்தால் எப்படி மசிவாள் என்று அறிந்து அடித்த தன் பேடித்தனத்தை உணர்ந்து வெட்கினான்.
ஆனால் ஒன்று, திடீரென்று எதிர்பாராமல் அவளைச் சந்தித்ததில் இலகுவாகக் கடந்தும் வந்திருந்தான். இல்லையோ அவளை எப்படி எதிர்கொள்வது என்று தயங்கியிருப்பான். இப்போது மனத்தை எதுவும் தாக்கவில்லை. அதுவும், ஒன்றுக்கு இரண்டு பிள்ளைகளின் அன்னையாகக் கண்டது மனத்தின் இறுக்கங்களைத் தளர்த்திற்று.
அந்த நல்ல மனநிலையோடு சென்று குளித்து, மீண்டும் வெளியே செல்லத் தயாராகி வந்தான். இப்போது ஹோலில் தீபா இல்லை. ஆனால், அவளின் மகள் தரையில் இருந்த விரிப்பிலிருந்து சிணுங்கிக்கொண்டு இருந்தாள். மிதுனாவும் பிருந்தகனும் அவளுக்கு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தனர்.
இவன் நெருங்கவும் குழந்தை கால்களையும் கைகளையும் அடித்து இவனைப் பார்த்துச் சிரித்தாள். தூக்குவோமா வேண்டாமா என்று ஒருகணம் தடுமாறினான்.
அதையும் தாண்டி, பூனைக்குட்டியின் கண்களைப் போன்று மின்னும் விழிகளும், சுருள் முடியும், அழகிய பால்வண்ண மேனியும் என்று அந்தக் குழந்தை அவனை ஈர்த்தாள். அதற்குமேல் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலாமல் அப்படியே அவளைத் தூக்கினான்.
“செல்லம்மாக்கு என்ன பெயர்? ஏன் அழுறீங்கள்? அது என்ன என்னைப் பாத்து மட்டும் சிரிக்கிறது?” என்று கொஞ்சினான்.
தூரத்தில் பார்க்கையில் சிரிப்பு மூட்டியவன் கிட்டப் பார்க்கையில் முன்னும் பின்னும் காடாக வளர்ந்திருந்த முடியோடு மிரட்டினானோ என்னவோ, நொடிநேரம் திகைத்துப் பார்த்துவிட்டு அடுத்த நொடியே அடித் தொண்டையிலிருந்து வீறிட்டாள் குழந்தை.


