பயந்துபோனான் மோகனன். “அச்சோ இல்ல செல்லம்…” எனும்போதே அடித்துப் பிடித்து ஓடிவந்தாள் தீபா. வந்தவளுக்கு அவன் குழந்தையைக் கையில் வைத்திருப்பதைப் பார்த்ததும் அதிர்ச்சி.
“என்னப் பாத்து சிரிச்சா எண்டு ஆசையில தூக்கினன். அதுபாத்தா ஆள் பயந்திட்டா போல!” என்றபடி அவளிடம் வந்து குழந்தையை நீட்டினான்.
வேகமாக இரண்டடி பின்னே நகர்ந்து, “நீங்க அங்கேயே கிடத்துங்கோ. நான் தூக்குறன்.” என்றாள் தீபா அவசரமாக.
“சொறி! இப்பிடி அழுவா எண்டு நான்…” என்றவனை மேலே பேசவிடாது அவசரமாகக் குறுக்கிட்டு, “நீங்க முதல் பிள்ளையைக் கிடத்துங்கோ!” என்றாள் எரிச்சல் மேலோங்கிய குரலில்.
ஒன்றும் விளங்காமல், குழந்தையின் அழுகை நின்றால் போதும் என்று வேகமாக அவளை மீண்டும் விரிப்பில் கிடத்தினான் அவன். அடுத்த நொடியே ஓடிவந்து தூக்கினாள் அவள்.
“இல்ல செல்லம்! இல்லம்மா இல்ல. இந்தா அம்மா வந்திட்டேன். ஒண்டுமில்லமா. ஒண்டும் இல்ல.” என்றபடி அவள் பிள்ளையோடு யாழினியின் அறைக்குள் சென்று மறைய, நடந்ததை நம்பமுடியாத அதிர்விலும் அவமானத்திலும் முகம் கன்றிப்போய் நின்றான் அவன்.
வீட்டின் வெளியே அடுப்பு மூட்டிப் பலகாரச் சூட்டில் இருந்த பெண்கள் வீட்டுக்குள் வருவது தெரிய, அடுத்த நொடியே அவனுடைய பைக் அங்கிருந்து சீறிப்பாய்ந்துகொண்டு வெளியேறியது.
எங்கென்று இல்லாமல் விரட்டினான். கண்கள் சிவந்து, தாடை இறுகி, கைத்தசைகள் முறுக்கேறி அவன் தேகம் தன் மூர்க்கத்தை எங்காவது இறக்கிவைக்க முடியாத அழுத்தத்தில் நடுங்கியது!
ஒரு குழந்தையை ஆசையாகத் தூக்கியதற்கா இதெல்லாம்?
அன்றைய அவனுடைய செய்கைகளின் விளைவுதான் இது என்று அறிவுக்கு விளங்காமல் இல்லை. அதற்காகத்தானே எட்டு வருடத் தனிமையை மென்று தின்றான்.
முகமெல்லாம் சிவந்து, உதடுகள் வறண்டு, உயிரைக் கொடுத்துக் குழந்தை வீறிட்டபோதும் அவனிடமிருந்து குழந்தையை வாங்க மறுத்தாள் என்றால், அந்தளவில் அவனை என்ன காமக்கொடூரன் என்று நினைத்தாளோ?
அல்லது, குழந்தையைக் கொடுக்கிறேன் என்கிற சாட்டில் கண்ட இடத்திலும்… ச்சேய்! மேலே நினைக்க முடியாமல் அருவருத்துப் போயிற்று.
வேகம் வேகம் வேகம்! எங்கென்று இல்லாமல் அவனுடைய வண்டி சீறிப் பாய்ந்தது. நண்பர்கள் இல்லை. மனம் திறந்து கதைக்க யாருமே இல்லை. அடக்கமுடியாத அழுத்தமும் ஆத்திரமும் உச்சிக்கு ஏறத்தொடங்கியது.
காட்டுப்பகுதி ஒன்றுக்குள் கொண்டுபோய் பைக்கை நிறுத்திவிட்டு, “ஆஆஆஆ…!” என்று அடித்தொண்டையிலிருந்து கத்தினான்.
*****
மகளை மடியில் போட்டுத் தட்டிக்கொடுத்துக்கொண்டு இருந்தாலும் தீபாவுக்கு மார்பு படபடத்துக்கொண்டே இருந்தது.
இவனைப் பார்க்கவேண்டி வரும் என்றுதான் இங்கு வருவதையே தவிர்த்துக்கொண்டிருந்தாள். அம்மாவும் அப்பாவும் தான், ‘அது முறையில்லை, போய்விட்டு வா’ என்றது. வந்த முதல் நாளே அவன் முகத்தில் விழித்து… ச்சேய்!
அவளிடம் வந்த பிரமிளாவின் முகத்தில் மிகுந்த கண்டனம். பிள்ளைகள் மூலம் நடந்ததை அறிந்துகொண்டிருப்பாள் என்று புரிந்தது. ஏனோ தமக்கையின் விழிகளை நேரே எதிர்கொள்ள முடியாமல் பார்வையைத் தழைத்தாள் பிரதீபா.
“எண்டைக்கோ ஒருநாள் அவன் செய்தது எல்லாம் பெரிய பிழைதான். உனக்குக் கிடைச்ச அனுபவம் உன்னக் கவனமா இருக்கச் சொல்லியிருக்கும். அதுவும் சரிதான். எண்டாலும் இண்டைக்கு நீ நடந்துகொண்ட முறை சரிதானா எண்டு யோசி? கவனமா இருக்கிறது வேற, ஓவரா ரியாக்ட் செய்து ஒருத்தரை அவமானப்படுத்துறது வேற. நீ என்ன செய்திருக்கிறாய் எண்டு உனக்கு விளங்கும் எண்டு நினைக்கிறன். அதேமாதிரி இது இன்னொருமுறை நடக்கவும் கூடாது!” என்று கண்டிப்பு நிறைந்த குரலில் உரைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினாள் பிரமிளா.
பிரதீபாவுக்கு விழிகள் கலங்கிப் போயிற்று. இப்போது யோசிக்கையில் அப்படி நடந்திருக்க வேண்டாமோ என்று தோன்றியது.
குழந்தையோடு அவனைக் கண்டதும் பதறிப் போனாள். அவள் கிடைக்கவில்லை என்கிற வன்மத்தில் பிள்ளைக்கு ஏதும் செய்துவிட்டானோ என்று தோன்றிய மாத்திரத்தில் அவளுக்கு ஒருநொடி உயிரே போய்விட்டது.
இதில், காட்டுமிராண்டி போன்ற அவன் தோற்றம் வேறு பயமுறுத்தியிவிட, பயத்தில் அப்படி நடந்திருந்தாள்.
இப்போது செல்வராணி அம்மாவின் முகத்தில் விழிக்க ஒருமாதிரிச் சங்கடமாக இருக்க, வெளியே செல்லாமல் அறைக்குள்ளேயே முடங்கிக்கொண்டாள்.
செல்வராணி, யாழினி இருவருக்குமே முகம் சிறுத்துப் போயிற்று. திருந்தி வந்தவனை மீண்டும் சீண்டிவிட்டது போலாகிற்றோ என்று எண்ணிக் கவலை கொண்டனர். மருமகளின் தங்கை. எதையும் பேசவோ சொல்லவோ முடியவும் இல்லை. ஆனால், பிரமிளா அவர்களை விளங்கிக்கொண்டாள்.
“தீபாவுக்குச் சொல்லி இருக்கிறன் மாமி. இனி இப்பிடி நடக்காது. நடந்ததுக்குச் சொறி.” என்று மன்னிப்பைக் கோரினாள் அவள்.
“நீ ஏனம்மா மன்னிப்புக் கேக்கிறாய்? அவன் தீபாட்ட அந்தளவுக்கு நடந்தபடியாத்தானே தீபாவும் பயந்தவள். மற்றும்படி தீபாவும் உன்னை மாதிரி அருமையான பிள்ளை. என்ன, இனி திரும்பப் பழையபடி மாறிடுவானோ எண்டுதான் பயமா இருக்கு…” என்று கலங்கினார் அவர்.
“அப்பிடியெல்லாம் நடக்காது மாமி. முந்தி அது சின்ன வயசு. அனுபவம் இல்ல. செல்வம் செல்வாக்கு எண்டு ஒரு மயக்கத்தில திரிஞ்ச காலம். இப்ப அவன் மாறிட்டான். நீங்க யோசிக்காதீங்கோ. அவன் வரட்டும், நான் கதைக்கிறன்.”
அதன்பிறகு மூவரும் அதைப் பற்றிப் பேசிக்கொள்ளவில்லை. மனத்தில் பாரத்துடனேயே மிகுதி வேலைகளைப் பார்த்தனர்.
ராஜநாயகம், கௌசிகனுக்கும் செய்தி போனது. அவன் திருந்தியிருக்கும் இந்த நேரத்தில் இது நடந்திருக்க வேண்டாம் என்பதுதான் அவர்களின் எண்ணமும். ஆனால், நடந்து முடிந்ததை மாற்ற முடியாதே. அவனோடு பேசச் சொல்லி கௌசிகனிடம் சொன்னாள் பிரமிளா.
இரவு ஒன்பது மணிபோல் வீட்டுக்கு வந்தான் மோகனன். செல்வராணி, தன் மனத்தின் கவலையை மறைத்துக்கொண்டு சாப்பிட அழைத்தார்.
“வெளில சாப்பிட்டன் மா.” என்றுவிட்டுத் தன் அறைக்குள் நுழைந்துகொண்டான் அவன்.
சற்று நேரத்தில் அவனைத் தேடி வந்தான் கௌசிகன். அவன் முகத்தில் அன்று மாலையில் நடந்த சம்பவத்தின் எதிரொலிகள் எதுவும் இல்லை. அதுவே, எல்லாவற்றையும் தனக்குள் வைத்து மறைக்கிறான் என்று உணர்த்திற்று.
அதில், “டேய், தீபா செய்தது பிழைதான். உன்ர அண்ணி பேசி இருக்கிறாள். இனி இப்பிடி நடக்கக் கூடாது எண்டு சொல்லியும் இருக்கிறாள். நீயும் அதைப் பெருசா எடுக்காத.” என்றான் தமையன் தன்மையாக.
பொருள் விளங்காச் சிரிப்பு ஒன்றை முகத்தில் தேக்கி, “எனக்கும் அவாவை விளங்குது அண்ணா. நானும் பெருசா எடுக்கேல்ல. அதால பிளீஸ், இனி ஆரும் இதைப் பற்றிக் கதைக்க வேண்டாம்!” என்றவனைக் கௌசிகனால் புரிந்துகொள்ள முடியவில்லை.
அவன் சொன்னது போல மேலே அதைப் பற்றிப் பேசவும் விரும்பவில்லை.
அதில், கட்டிக்கொண்டிருக்கிற வீடு பற்றியும் யாழினியின் திருமணம் பற்றியும் பேசினான். இருவருக்குமே அது இலகுவாய் வந்தது. அப்போதும் கூட, மோகனன் அறியாமல் அவன் முகத்தைப் படிக்க முயன்றான் கௌசிகன். தோல்வியே கிட்டியது.


