அவர்களின் அறைக்கு வந்த கௌசிகனின் முகம் ஏதோ யோசனையில் இருண்டிருந்தது. அதைக் கவனித்துவிட்டு, “என்ன கௌசி?” என்று வினவினாள் பிரமிளா.
“என்னவோ மனதுக்க இருந்து உறுத்துது ரமி. பெருசா ஒண்டுமே நடக்கேல்ல எண்டுற மாதிரி இருக்கிறான். அது உண்மை இல்ல. இது அவன் இல்ல. என்னதான் காலம் அவனைப் பக்குவப்படுத்தி இருந்தாலும், இவ்வளவு பெரிய அவமானம் நடந்தும் முகத்தில கன்றல் கூட இல்லாம…” என்றவனால் அதற்குமேல் பொறுக்க முடியவில்லை.
“நீ படு. நான் திரும்ப ஒருக்கா அவனப் பாத்துக்கொண்டு வாறன்” என்றுவிட்டு விறுவிறு என்று கீழே இறங்கிச் சென்றான்.
அதே வேகத்திலேயே மோகனனின் அறைக் கதவையும் திறந்தான். அங்கே, அறையின் நட்ட நடுவில் பஞ்ச் பேக் நிறுத்தி வைக்கப்பட்டிருக்க, அதை மிக வேகமாகக் குத்திக்கொண்டிருந்தான் அவன்.
“ஆர்ல இருக்கிற கோபத்தைக் காட்டுறதுக்கு இந்தக் குத்துக் குத்துறாய் மோகனன்?” என்று வினவினான் கௌசிகன்.
குத்துவதை நிறுத்திவிட்டு அவன் சிரித்தான். “அப்பிடி ஆரோட நான் கோவப்பட அண்ணா?” என்றபடி பாக்சிங் கையுறையைக் கழற்றி வைத்தான். வியர்வையில் நனைந்திருந்த உடலை அங்கிருந்த துவாலையை எடுத்துத் துடைத்தான்.
எப்படி அணுகினாலும் மனம் திறக்க மறுக்கிறவனை என்ன செய்து மாற்றுவது என்று யோசித்தான் தமையன்.
“இந்த நேரம் இவ்வளவு கடுமையா உடற்பயிற்சி செய்துபோட்டு எப்பிடியடா படுப்ப? நித்திரை வராதே.”
“செய்யாட்டித்தான் அண்ணா வராது. இப்ப ஒரு குளியலைப் போட்டுட்டு வந்து படுத்தன் எண்டு வைங்கோ, அடிச்சுப் போட்ட மாதிரி படுத்து எழும்புவன்.”
சாதாரணமாகப் படுத்தால் நித்திரை வராது என்கிறானா? அந்தளவில் அவன் மனத்தைப் போட்டு அழுத்துவது என்ன?
“தீபா நடந்துகொண்ட முறையில உனக்குக் கோபமா? மறைக்காமச் சொல்லு.” மீண்டும் தூண்டினான்.
“அப்பிடிப் பாத்தா, அண்ணிக்கும் தீபாக்கும் நான் செய்ததுக்கு அவே எவ்வளவு கோபப்படோணும் அண்ணா?” என்று திருப்பிக் கேட்டான் அவன்.
“கேள்விக்குப் பதில் சொல்லாம வேற கேள்வி கேட்டு விசயத்தையே திசை திருப்புறியா மோகனன்?” கௌசிகனுக்கு சிறு கோபம் அரும்பிற்று.
அதற்குப் பதில் சொல்லாமல் கையில் இருந்த டவலில் பார்வையைப் பதித்தான் அவன்.
இந்த மௌனம் ஒன்று போதாதா அவனுடைய சந்தேகத்தை உறுதிப்படுத்த.
“நான் உனக்கு அண்ணா மோகனன். நீ என்னதான் மறைச்சாலும், ஒண்டுமில்லை எண்டு சொன்னாலும் உனக்குள்ள நிறையக் கோபம் இருக்கு, நிறைய அழுத்தம் இருக்கு, நிறைய வேதனை இருக்கு எண்டு எனக்குத் தெரியும். அதேபோல, அதையெல்லாம் மறந்தும் எங்களிட்டக் காட்டிடக்கக் கூடாது எண்டுற கவனமும் இருக்கு. அது தேவையில்லை எண்டுதான் சொல்லுறன். எதுவா இருந்தாலும் உனக்கு ஒரு அண்ணா இருக்கிறான். அவனிட்ட நீ மனம் விட்டுக் கதைக்கலாம். இத எப்பவும் நினைவில வச்சிரு.” என்று, அவன் மனத்தில் பதியுமாறு அழுத்திச் சொன்னான்.
“நீங்க இத சொல்லவும் வேணுமா அண்ணா. எனக்கே தெரியும்.” என்று புன்னகைத்தான் அவன்.
“சரி, குளிச்சிட்டுப் படு!” என்றுவிட்டுப் போனான் கௌசிகன்.
அவன் போனதும் ஜன்னல் புறமாகச் சென்று நின்றான் மோகனன்.
வெளியில் படிந்துகிடந்த கருமையைப் போலவே அவன் மனமும். வெளிச்சப்புள்ளி எங்குமே தெரியமாட்டேன் என்றது.
எப்போது யாழினியின் திருமணம் முடியும், எப்போதடா இங்கிருந்து ஓடுவோம் என்கிற அளவுக்கு மூச்சடைத்தது. வந்தாயிற்று. இத்தனை நாட்களை ஓட்டியும் ஆயிற்று. இன்னும் சில நாட்கள். ஒரு நெடிய மூச்சுடன் குளியலறைக்கு நடந்தான்.
*****
இன்னும் நான்கு நாட்களில் யாழினியின் திருமணம் என்கிற அளவில் நாட்கள் நெருங்கி வந்திருந்தது. எதிர்காலக் கணவனோடு வந்து பேச்சுலர் பார்ட்டி வைக்கச் சொல்லிக் கேட்டனர் அவளின் தோழியர். அதற்கு, மாட்டவே மாட்டேன் என்று மறுத்த தாயைக் கெஞ்சிக் கூத்தாடிச் சம்மதிக்க வைத்திருந்தாள் யாழினி.
வெள்ளை நிற அனார்கலிக்கு டார்க் பிங்க் ஷோல் அணிந்து, அளவான மேக்கப்பில் தேவையாய்த் தயாராகி வந்தவளைப் பார்த்து, சிறு முறுவலுடன் புருவங்களை உயர்த்தினான் மோகனன்.
“இண்டைக்கா உனக்குக் கலியாணம்? இன்னும் மூண்டு நாள் இருக்கு எண்டெல்லோ நான் நினைச்சன்.”
“அண்ணா?” என்று சிணுங்கிச் சிரித்தாள் அவன் தங்கை.
“எப்பிடி இருக்கு இந்த அனார்கலி? வடிவா இருக்கிறனா?” என்றபடி ஒரு சுற்றுச் சுழன்று காட்டினாள்.
“சூப்பரா இருக்கிறாய் யாழி!” என்றான் அவளின் பூரித்து மலர்ந்திருந்த முகத்தை ரசித்தபடி.
“சரி வாங்க வாங்க. ரஜீவன் கூட்டிக்கொண்டு போக வாறன் எண்டவர். அதுவரைக்கும் அம்மாட்ட இருந்து என்னைக் காப்பாத்துங்கோ. இல்லாட்டி, இப்ப இது தேவையோ எண்டு திரும்பவும் என்னைப் போட்டு அரிச்சு எடுப்பா…” என்றபடி, அவனையும் இழுத்துக்கொண்டு போய்த் தென்னைகளின் கீழே இருந்த நாற்காலிகளில் அவனையும் இருத்தி தானும் அமர்ந்துகொண்டாள்.
ரஜீவன் என்கிற பெயரே அவனுக்குள் பெரும் இறுக்கத்தைப் பரப்பிவிடப் போதுமாக இருந்தது. ஆனாலும் யாழினிக்காக மறைத்துக்கொண்டான்.
“நீங்க சொல்லுங்கோ, உங்களுக்கு என்ன மாதிரிப் பொம்பிளை வேணும்? எனக்கு முடிஞ்சதும் சுடச்சுட அடுத்த கலியாணம் உங்களுக்குத்தானாம் எண்டு அம்மா சொன்னவா.”
‘இந்தப் பேச்சு வேறு போய்க்கொண்டு இருக்கிறதா’ என்று உள்ளூர ஓடினாலும், “முதல் உன்ர கலியாணம் முடியட்டும். பிறகு பாப்பம். எனக்கு என்ன அவசரம்?” என்றான் அவன்.
“என்ன அவசரமோ? இப்பவே லேட் தெரியுமா. சரி சொல்லுங்கோ என்ர சின்ன அண்ணி எப்பிடி இருந்தா உங்களுக்குப் பிடிக்கும்?”
அந்தக் கேள்விக்கான பதில் அவனிடம் இருந்தால்தானே சொல்ல? அதில், தாடியை நீவிவிட்டபடி சிரித்தான்.
“என்ன அண்ணா சிரிக்கிறீங்க? எப்பிடி இருந்தா பிடிக்கும்? சொல்லுங்கோவன்.” விடாப்பிடியாக நின்று கேட்டாள் அவள்.
அவனுக்கு அதற்கும் சிரிப்புத்தான் வந்தது. முன்னொரு காலம் தன்னைக் கண்டாலே பயந்து ஓடிய தங்கை இன்றைக்குச் செல்லம் கொஞ்சி பிடிவாதம் பிடிக்கிறாள்.
மனம் கனிந்துபோனது அவனுக்கு. அவளின் காதோரம் பறந்த முடியைப் பாசத்தோடு ஒதுக்கிவிட்டுவிட்டு, “தெரியாமா. அப்பிடியெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்ல. யோசிக்கவும் இல்ல. இப்ப நீ கேக்கத்தான் யோசிக்கிறன். என்ன நடந்தாலும் இவளை விட்டுடாதடா எண்டு மனம் சொல்லோணும். அவளுக்காக என்னவும் செய்யலாம் எண்டுற அளவுக்குத் துடிக்கோணும். அப்பிடியான ஒருத்தி உனக்கு அண்ணியா வந்தா நல்லாருக்கும் எண்டு நினைக்கிறன்.” என்றான், அது நடக்கவே நடக்காது என்கிற நம்பிக்கையோடு.
“அச்சோ அண்ணா! என்ர இதயமே உருகிடும் போல இருக்கே. அப்ப, என்ர சின்னண்ணி இதக் கேட்டா என்னாவா சொல்லுங்கோ? இப்பிடி ஒருநாள் கூட ரஜீவன் சொன்னதே இல்ல. இதுல ஏழு வருச லவ்வர்ஸ் நாங்க.”
அவன் என்னவோ வாயில் வந்ததை எடுத்துவிட அவளோ அதை உண்மையாக எடுத்துக்கொண்டு இவ்வளவு பேசுகிறாளே என்று சிரித்தான் அவன்.
அப்படியே, “சரி நீ சொல்லு, உன்ர ரஜீவன் என்ன சொன்னார்? கலியாணத்துக்குப் பிறகு என்ன பிளான் வச்சு இருக்கிறீங்க?” என்று தன்னிடமிருந்து பேச்சை மிக லாவகமாக அவள் புறம் திருப்பினான்.


