அத்தியாயம் 6
ரஜீவன் மீதான அடங்காத ஆத்திரத்தை பஞ்ச் பேக்கின் மீது காட்டிக்கொண்டிருந்தான் மோகனன். இவன் முகம் பார்ப்பதைத் தவிர்த்து, இவனின் வரவேற்பை நாசுக்காக அலட்சியப்படுத்தி, உன் தங்கை என் ஆதிக்கத்தின் கீழிருக்கிறாள் என்று காட்டி என்று, அவர்கள் சந்தித்துக்கொண்ட அந்தச் சில நிமிடங்களில் அவன் காண்பித்தது பல முகங்கள்.
எரிகிற அடுப்பில் எண்ணெயை ஊற்றியது போன்று, கடைசியாக அவன் பார்த்த எள்ளல் பார்வை இவனைச் சீண்டி விட்டுக்கொண்டே இருந்தது. இன்னும் எதையாவது செய்யச் சொல்லித் தூண்டியது. அது முடியாததால் வேகம் கொண்டு பஞ்ச் செய்தான்.
வியர்வைத் துளிகள் ஒவ்வொன்றும் உடலின் கட்டுமஸ்தான பாகங்களில் கோடிழுத்தபடி தரையை நோக்கி நகர்ந்தன. தலை முடியெல்லாம் நனைந்து முகத்தில் ஒட்டின.
அவன் கழுத்தில் கிடந்த கனம் மிகுந்த செயின்கள், அவனுடைய வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், சலங் சலங் என்று அவன் மார்பிலேயே அங்கும் இங்குமாய் மோதின. ஆயினும் அவன் வேகம் அடங்கவில்லை. உடலும் சோர்ந்துவிடவில்லை.
தோல்வி என்றைக்குமே அவனுக்குப் பிடிக்கவே பிடிக்காத ஒன்று! அவமானம் அவனால் ஏற்றுக்கொள்ள முடியாத மற்றொன்று. இரண்டையும் ஒற்றைப் பார்வையில் தந்துவிட்டுப் போனவனுக்கு, தக்க பாடம் படிப்பித்துவிட உருக்கொண்டுவிட்டவன் போன்று உறுமிக்கொண்டிருந்தான்.
எது கொடுத்த தைரியம் அவனை இப்படி நடக்க வைத்தது?
எது? எது? எது?
அவன் ஓங்கிக் குத்திய குத்தில் எதிர் திசைக்குச் சென்றுவந்த பஞ்ச் பேக்கைப் பிடித்து நிறுத்தினான். அவன் வாங்கிய மூச்சில் மார்புப் பகுதி எழுந்து தணிந்தது!
தலையைப் பின்னுக்குத் தள்ளி, வியர்வையில் நனைந்திருந்த தலைமுடிகளை உலுப்பி விட்டான். “ரஜீவா! நீ என்னைச் சீண்டி இருக்கக் கூடாது, தம்பி!” வாய்விட்டே சொன்னான்.
அப்போது, “சிட்டீ…” என்ற மதுரனின் குரல், தோட்டத்திலிருந்து இவன் காதை எட்டியது. சற்றே அவன் சிந்தனையின் போக்கை அது மாற்றியது. ‘அது ஆரடா சிட்டி?’ தன்னிச்சையாக ஜன்னலோரம் சென்று பார்த்தான்.
ஒரு பெண். “மடுக்குட்டி! சாப்பிடாம என்ன செய்டீங்க?” என்று, மதுரனுக்கு இணையான செல்லப் பேச்சோடு ஓடிவந்து அவனை அள்ளிக்கொண்டாள்.
நேர்த்தியாய்ச் சேலை அணிந்து, அன்றைய நாளுக்கான களைப்பை முகத்தில் சுமந்து, தோள் வரையான முடியை ஒற்றைப் பின்னலில் அடக்கியிருந்தாள்.
‘அண்ணி மாதிரியே இருக்கிறா…’ அவளைப் பார்த்த நொடியில் அவனுக்குள் தோன்றியது இதுதான். அந்தளவில் முதன் முதலில் கல்லூரி வாசலில் வைத்துப் பார்த்த பிரமிளாவைத்தான் அந்தப் பெண் நினைவூட்டினாள்.
“மது! குழப்படி செய்யாம சாப்பிடுங்கோ!” அந்தப் பக்கம் அவனுடைய அன்னை, தீபா, இன்னும் சில பெண்களோடு பலகாரச் சூட்டில் இருந்த பிரமிளா குரல் கொடுத்தாள்.
அதற்குச் செவி சாய்க்காமல் இவளிடம் சேட்டை விட்டுக்கொண்டிருந்தான் அவனின் பெறாமகன்.
‘என்னோட இன்னும் சேரவே இல்ல. ஆனா, இந்தச் சிட்டியோட மட்டும் இப்பிடி ஒட்டுறியேடா!’ என்று எண்ணிச் சிரித்தபடி குளிக்கச் சென்றான்.
அவன் குளித்துத் தயாராகித் தன் வேகநடையில் வெளியே வரவும், மதுரனைத் துரத்திக்கொண்டு வந்த அந்தப் பெண் இவனோடு மோதப்பார்க்கவும் சரியாக இருந்தது. ஆனாலும் கடைசி நொடியில் பிரேக்கிட்டு நின்று, “அம்மாடி!” என்று பயத்தில் கூவினாள்.
அவனும் அவள் இப்படி வருவாள் என்று எதிர்பார்க்கவில்லை. இருவருமே மிக வேகமாகச் சுதாரித்துக்கொண்டிருந்தார்கள். இல்லையோ மிக மோசமாய் மோதிக்கொண்டிருப்பார்கள்.
அவளின் இந்த அதிகப்படியான அதிர்ச்சி அவனோடு மோதப் பார்த்ததில் மாத்திரம் உண்டானதில்லை. மாறாக, அவன் தோற்றத்தைக் கண்டு பயந்ததும்தான் என்று, அதிர்வில் விரிந்து அவனிடமே நிலைத்துவிட்ட அவளின் விழிகள் சொல்லின.
தனக்குள் சிரித்துக்கொண்டு, “சொறி, நீங்க வந்ததக் கவனிக்கேல்ல.” என்றபடி அவளைத் தாண்டிக்கொண்டு நடந்தான் அவன்.
மதுரனோ இவனைக் கண்டுவிட்டு வீட்டுக்கு வெளியே தலைதெறிக்க ஓட ஆரம்பித்திருந்தான். உதட்டு முறுவல் விரிய, ஒரே எட்டில் எட்டி அவனைத் தூக்கி, “என்ன இது? என்னைக் கண்டா மட்டும் இவ்வளவு ஓட்டம்?” என்றபடி, அவனை மேலே போட்டுப் பிடித்தான்.
முதலில் உதடு பிதுக்க ஆரம்பித்த மதுரன், உடல் கூசி, கிழுக்கிச் சிரிக்க ஆரம்பித்தான். மீண்டும் ஒருமுறை மேலே போட்டுப் பிடித்த கையோடு அப்படியே சுழன்று, இன்னுமே அதிர்ச்சி விலகாமல் இவனையே பார்த்தபடி நின்றிருந்தவளின் கையில் அவனைத் திணித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான் அவன்.
அசையக்கூட மறந்துபோய் நின்றிருந்தாள் ராதா. அவளின் கையிலிருந்து நழுவிய மதுரன், மாடி ஏறுவதை உணரும் நிலையில் கூட அவள் இல்லை. யாரும் சொல்லாமலேயே அவன் யார் என்று தெரிந்தது.
பல வருடங்களாக அடி நெஞ்சிலிருந்து வெறுக்கும் ஒருவன். அவனை அவள் முன்பின் பார்த்ததில்லை. பார்க்கப் பிரியப் பட்டதும் இல்லை. ஆனால், அவன் கைகால் உடைய வேண்டும், அடிபட்டு வீதியில் கிடக்க வேண்டும், அவன் நன்றாகவே இருக்கக் கூடாது என்று கோயிலில் நேர்த்தி கூட வைத்திருக்கிறாள்.
அப்படியானவன் வந்துவிட்டான் என்பதாலேயே அடிக்கடி இங்கே வருகிறவள் யாழினியைப் பார்க்கக் கூட வரவில்லை. இன்றைக்கு யாழினியும் வீட்டில் இல்லை என்பதால் வந்திருந்து மதுரனைப் பார்க்கிறாயா என்று பிரமிளா கேட்டிருந்தாள். அதில்தான் வந்தாள்.
அவனைப் பார்த்துவிடக் கூடாது என்று அவ்வளவு கவனமாக இருந்தும் பார்த்துவிட்டாளே! அவளுக்குள் எரிச்சல் உண்டாயிற்று.
பின் பக்க முடியைக் கொண்டையாக்கி, தாடியை பேண்ட் ஒன்றில் அடக்கி, கள்ளச் சாமியார்போல் ஆயிரத்தெட்டு மாலைகளைக் கழுத்திலும் கையிலும் காவிக்கொண்டு, மலைமாமிசம் போல் இருந்தவனை நினைக்க நினைக்க வெறுப்பு மண்டியது.
“ஆளும் கோலமும்! கொடும!” வெறுப்புடன் மொழிந்தபடி மதுரனைத் தேடிக்கொண்டு போனாள்.
அதோடு அவளின் நிம்மதி கெட்டுப் போயிற்று. அன்றைய நாட்கள் அப்படியே நெஞ்சில் வந்து நின்றன. உடல் முழுக்க பிய்ந்து, காயப்பட்டு, இரத்தம் சிந்தி, உணர்வற்று, பேசக்கூட சக்தியற்று மூர்ச்சியாகிக் கிடந்த தமையனும், அவனைக் கண்டு தான் அழுது கரைந்ததும், உறக்கமற்று பயந்து பயந்தே நாட்களைக் கழித்த அன்னையும் என்று அவர்கள் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா?
குடும்பத்துக்குத் தலைவன் இல்லை. வறியவர்கள். நாளாந்த வாழ்க்கைப்பாட்டுக்கே உழைத்தால்தான் உண்டு என்கிற நிலையில் இருந்தவர்கள். இனி என்னாகுமோ என்று ஒவ்வொரு நாளையும் பயந்து பயந்து கழித்தது மறக்குமா? அல்லது, வயதுக்கு வந்த பெண்பிள்ளை அவளுக்கு என்னாகுமோ என்று நடுங்கியதுதான் மறக்குமா?
பள்ளிக்கூடம் சென்று வரும்போதெல்லாம் அவளும் பயந்து பயந்துதானே போய்வந்தாள்.
இதுவரையில் அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர்கள் மூவரும் வெளிப்படையாகப் பேசியதே இல்லை. ஒருவர் மற்றவரைக் காயப்படுத்தி விடுவோமோ என்று பயம்.
அன்றைய நாட்களில் ஆளாளுக்கு உள்ளுக்குள் நடுங்கிக்கொண்டு மற்றவர்களிடம் தாம் தைரியமாக இருப்பதாகவே காட்டிக்கொண்டனர். எத்தனை நரகம் அது?
உண்மையைச் சொல்லப்போனால் கௌசிகனைக்கூட ஆரம்ப நாட்களில் அவளுக்குப் பிடிக்காது. நாளாக நாளாகப் பிரமிளா மீதான அன்பும் மரியாதையும் அவன் மீதும் படிந்து போயிற்று.
ஆனால் இவன்? காட்டுமிராண்டி! கேடுகெட்ட பொறுக்கி! தீபாவுக்கு என்னவெல்லாம் செய்தான்? பிரமிளாவின் புகைப்படத்தைப் பேப்பரில் போட்டுக் கேவலப் படுத்திய கேவலமானவன்.
கோபத்தில் சிவந்த முகம் அருவருப்பில் சுளித்தது. அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. மதுரனோடு விறுவிறு என்று வெளியே சென்று தோட்டத்தில் நின்றுகொண்டாள். மனம் மட்டும் உலைக்களமெனக் கொதித்துக்கொண்டிருந்தது.
அத்தனை கேவலங்களையும் செய்த அவன், நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு திரிகிறான். அவர்களால் அவனுக்கு என்ன செய்துவிட முடிந்தது? எதுவும் இல்லையே!
தமையன் யாழினியை விரும்புகிறான் என்று தெரிந்தபோது அவளுக்கு மிகுந்த அதிர்ச்சிதான். போயும் போயும் அந்த வீட்டுப் பெண்ணா என்று தமையன் மீது மெல்லிய வெறுப்பும் உண்டாயிற்று.
அன்னை கூட மாட்டவே மாட்டேன் என்று ஒரேடியாக மறுத்திருந்தார். நாளடைவில் யாழினியைச் சந்தித்து, பிரமிளா பேசி, கௌசிகன் நம்பிக்கை தந்த பிறகுதான் அன்னை இறங்கிவந்தார்.
இவளும் படித்து, பக்குவப்பட்டு வந்த பிறகு, அவரவர் வாழ்க்கை அவரவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று தெளிந்துகொண்டாளே தவிர, இந்த வீட்டோடு மனமொத்த ஓட்டுதல் உண்டா என்று கேட்டால் நிச்சயம் இல்லை.
வருவாள், பழகுவாள், வீட்டுப் பெண்ணைப் போல வேலைகளும் செய்வாள். இருந்தாலும் அவளின் எல்லை என்ன என்பதை அவள் வகுத்தே வைத்திருந்தாள்.


