செல்வராணிக்குத் தன்னிலை மீள்வதற்குச் சற்று நேரம் பிடித்தது. கண்முன்னே சிதறிக் கிடந்த அவனின் கைப்பேசி வேறு கண்களைக் கலங்க வைத்தது. பதட்டத்தில், பிரச்சனைகள் எதுவும் வந்துவிடக் கூடாது என்கிற பயத்தில் அவசரப்பட்டு விட்ட வார்த்தைகளை எண்ணித் தன்னையே நொந்துகொண்டார்.
இப்போது எங்கே போகிறான்? திரும்பி வருவானா என்று பலதையும் எண்ணிக் கலங்கினார்.
இதற்குள் கௌசிகன் மோகனனைத் தேடுவது கண்ணில் பட்டது. தன்னைச் சமாளித்துக்கொண்டு அவனிடம் ஒன்றையும் சொல்லாமல் மண்டபத்துக்கு நடந்தார்.
அங்கே, மேடையில் நின்ற யாழினியும் மற்றவர்களின் கவனத்தைக் கவராமல், ‘சின்னண்ணா எங்கயம்மா?’ என்று அவரிடம் கண்ணால் விசாரித்தாள்.
என்ன சொல்லுவார்? ‘வெளில…’ என்று சைகையால் காட்டிச் சமாளித்தார்.
தன் நண்பரின் மகளொருத்திக்கு மோகனனை மாப்பிள்ளையாக்கிவிடும் முயற்சியில் ஈடுபட்டிருந்த ராஜநாயகம் வேறு, அந்த மண்டபத்தினுள் விழிகளைச் சுழற்றி அவனைத் தேடுவதைக் காணவும் அவரைப் பதற்றம் தொற்றிக்கொண்டது.
கைப்பேசியை வேறு நொறுக்கிவிட்டானே. அவனாக வந்தால் மட்டுமே உண்டு. வந்துவிட வேண்டும் என்று வேண்டியபடி, தவிப்புடன் மண்டபத்தின் வாசலையே பார்த்துக்கொண்டிருந்தார்.
இப்படி, அங்கிருந்த எல்லோரையும் ஏதோ ஒருவகையில் தேட விட்டுவிட்டு, நேராக வீடு வந்த மோகனன், அடுத்த இரண்டு மணி நேரத்தில், மாலையில் நடக்கப்போகிற ரிசப்ஷனுக்கு ஏற்ற வகையில் குளித்து, மீண்டும் புத்துணர்ச்சியோடு ஒரு ஷர்வானியில் தயாராகியிருந்தான்.
உடலின் உக்கிரம் அடங்கியிருந்தது. மனthதின் ஆவேசம் தணிந்திருந்தது. என்ன, அவனுடைய பஞ்ச்பேக் அடிப்பாகத்தோடு பொருந்தும் இடத்தில் வெடித்து, விரிசல் கண்டிருந்தது.
*****
ஒரு வழியாகக் கண்ணில் பட்டுவிட்ட மகனைக் கண்டதும், ஒரு நிம்மதிப் பெருமூச்சை இழுத்துவிட்டார் செல்வராணி.
யாரிடமும் நான் எதையும் சொல்லவில்லை, நீயும் சொல்லிவிடாதே என்று எச்சரிக்க எண்ணி அவனை நோக்கி விரைந்தார். அதற்குள் கௌசிகனும் அவனைக் கண்டிருந்தான். வேகமாக வந்து, “எங்கயடா உன்ர ஃபோன்? எத்தின தரம் உனக்கு எடுக்கிறது? முதல் எங்க போயிட்டு வாறாய்?” என்று மெல்லிய கோபத்துடன் அதட்டினான்.
“சொறி அண்ணா. தேடினீங்களா? அது என்ர ஃபோன் கீழ விழுந்து உடஞ்சிட்டுது. அதுதான், புதுசு வாங்கிக்கொண்டு அப்பிடியே வெக்கை அடங்கக் குளிச்சு, உடுப்பையும் மாத்திக்கொண்டு வாறன்.” பதில் சொன்னபடி கௌசிகனோடு மண்டபத்துக்குள் நடந்தான் அவன்.
அவனுடைய உடையும் கையிலிருந்த புதுக் கைபேசியும் அவன் சொல்வது உண்மைதான் என்று சொன்னது.
“சரியடா, அப்பிடிப் போறதா இருந்தாலும் ஒரு வார்த்தை சொல்லிப்போட்டு எல்லோ போகோணும். என்ன எண்டு நான் யோசிக்கச் சொல்லு?” என்ற கௌசிகன், “சரி வா! அங்க மேடையை ரிசப்ஷனுக்கு ஏற்ற மாதிரி மாத்துறாங்கள். மாப்பிளை பொம்பிளை மேடைக்கு வாறதுக்கிடையில நாங்க டிஃபனை கவனிப்பம். எல்லாரும் முக்கியமான ஆக்கள். நாங்களும் கூட நிண்டு கவனிச்சாத்தான் மரியாதை.” என்று அவனுக்கு விளக்கியபடி அழைத்துக்கொண்டு போனான்.
“கவலைய விடுங்க அண்ணா. அதெல்லாம் சிம்பிளா செய்யலாம்.” என்றான் மோகனன் சிரித்துக்கொண்டு.
செல்வராணிக்கு நடப்பதை நம்ப முடியவில்லை. சற்று முன்னர் அந்தளவு ரவுத்திரத்தோடு அங்கிருந்து வெளியேறியவன், இப்போது குளிர்ந்த நீரைப் போல முகம் முழுவதும் புன்னகையைத் தேக்கி, இவ்வளவு இலகுவாகக் கதைக்கிறானே. இந்த இரண்டு முகங்களில் எந்த முகம் உண்மையானது?
அவன் குடும்பத்தினர் அவனை அவ்வளவு நேரமாகத் தேடிக்கொண்டிருந்ததை ராதாவும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள்.
‘செய்வதை எல்லாம் செய்துபோட்டு எங்க போய்த் தொலைந்தானோ’ என்று உள்ளே ஓடினாலும், எதையும் காட்டிக்கொள்ளாமல் பேசாமல் இருந்துகொண்டாள்.
இப்போது பார்த்தால் கௌசிகனோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்தான். பட்டுச் சட்டையில் நின்றபோதுதான் அவனுடைய உடம்பின் ஒவ்வொரு பாகமும் திமிறிக்கொண்டு நின்றது என்று பார்த்தால், இப்போது அணிந்திருக்கும் ஷர்வானிக்குள் இருந்தும் குதிக்கிறேன் என்றுதான் திமிறியது.
‘ஆளும் மண்டையும் உடம்பும்!’ வெறுப்புடன் முகத்தைச் சுளித்துக்கொண்டு பார்வையை அகற்றிக்கொண்டாள் ராதா. ஏனோ அவளுக்கு இப்படி உடம்பை வளர்த்து வைத்திருப்பவர்களைப் பார்த்தாலே பிடிப்பதில்லை.
அதன்பிறகான நிகழ்வுகள் எல்லாம் எந்தக் குறையும் இல்லாமல் மிக அருமையாகவே நடந்து முடிந்தன. புகைப்படத்துக்கு நின்றுவிட்டு விலகும்போது, யாழினியைத் தோளோடு அணைத்து, அவளின் தலையை வருடிவிட்ட மோகனன், “ஹேப்பி மேரீட் லைஃப், ரஜீவன்.” என்று சிரித்தமுகமாக மனதார வாழ்த்தவும் தவறவில்லை.
அந்நியனாகப் போனவன் அம்பியாகத் திரும்பி வந்திருப்பதன் பின்னணி அறியாதபோதும், அவனுடைய மிரட்டலைப் போலவே இந்த வாழ்த்தையும் ரஜீவனால் ரசிக்க முடியவில்லை. தானும் பெயருக்குப் புன்னகைத்து நன்றி சொல்லி விலகிக்கொண்டான்.
யாழ்ப்பாணத்தில் இருந்த உயர்தர ஹோட்டல் ஒன்றில் அவர்கள் இருவரும் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தான் மோகனன். அங்கே அவர்களை விட்டுவிட்டு, மண்டப வேலைகளை எல்லாம் முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தபோது, எல்லோருமே களைத்துச் சோர்ந்து போயிருந்தனர்.
“மிச்சத்தை நாளைக்குப் பாப்பமடா! நீ போய்ப் படு. நானும் கொஞ்சம் சரிஞ்சு எழும்பப் போறன்.” பிரமிளா மதுரனோடு மேலே ஏறிவிட, காரிலேயே உறங்கிவிட்ட மிதுனாவை உறக்கம் கலையாமல் கவனமாகத் தூக்கித் தோளில் சாய்த்துக்கொண்டு வந்த கௌசிகன் சொன்னான்.
அந்தக் காட்சியைப் பார்க்கவே வெகு அழகாய் இருந்தது. ஆண் சிங்கமெனக் கர்ஜித்துக்கொண்டிருந்த அவனின் அண்ணா, இன்றைக்குப் பாசமான தந்தை; பொறுப்புள்ள கணவன்.
மனம் நெகிழ அவனை நெருங்கி, “ஆளுக்கு இண்டைக்கு ஒரே கொண்டாட்டம்தான் என்ன அண்ணா?” என்றான், மிதுனாவின் தலையைத் தடவிவிட்டபடி.
கௌசிகனுக்கும் மகளை எண்ணிச் சிரிப்பு வந்தது. “அதுவும் நீ வந்ததில இருந்து சேட்டை கூடிப் போச்சடா. அங்க பள்ளிக்கூடத்திலயும் ஒரே உன்ர புகழ்தானாம் எண்டு ரமி சொன்னாள். எங்கட சித்தப்பாக்கு சிக்ஸ் பேக் இருக்கு, தாடி நெஞ்சளவுக்கு இருக்கு, முடி இருக்கு எண்டு பெருமையாமடா. இவவின்ர வகுப்பு டீச்சர்ஸ்ஸே ரமிய வந்து விசாரிச்சிருக்க்கினம். அண்டைக்குச் சொல்லுறா, என்னையும் உன்ன மாதிரி முடி வளக்கட்டாம், அப்பதான் நானும் வடிவா இருப்பேனாம். பொல்லாத சேட்டைக்காரி.” என்று சொன்னபோது, அன்றைய நாளின் களைப்பையும் மீறி அவன் முகம் தந்தையாகக் கனிந்துபோயிருந்தது.
அந்த முகத்தை ஒருகணம் விழியெடுக்காது உள்வாங்கினான் மோகனன். பின் சிரிப்புடன், “இவவுக்கு நேர் எதிர்மாறு உங்கட மகன். இன்னும் என்னைக் கண்டா ஊர விட்டு ஓடுறத விடேல்ல.” என்று சிரித்தான்.


