கௌசிகனின் முறுவல் விரிந்தது. “கொஞ்ச நாள் போகச் சேர்ந்திடுவான். விட்டுப்பிடி.” என்றுவிட்டு, “சரி, நீ போய்ப் படு! நீதான் என்னைவிட வேலை பாத்துக் களைச்சுப்போனாய்.” என்றபடி மாடியேறினான்.
அவன் மனத்துக்குள், ‘இவனுக்கும் ஒரு கலியாணத்தை முடிச்சு வச்சிடோணும். விடக் கூடாது!’ என்று ஓடியது.
தன் அறைக்குள் சென்று, உடல் கழுவி, உடை மாற்றிக்கொண்ட மோகனனுக்கு உறக்கம் வருவேனா என்றது. மகளோடு நின்ற அண்ணனே கண்ணுக்குள் நின்றான். காரிலிருந்து கணவனும் மனைவியும் இறங்கி, குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு வந்த காட்சியை அவனால் கடந்து வரவே முடியவில்லை.
அவனுடைய அண்ணா மட்டுமல்ல அவர்களின் வயதை ஒத்த உறவினர்கள், அறிந்தவர்கள், தெரிந்தவர்கள், நண்பர்கள் என்று எல்லோருமே மனைவி, குழந்தை, குடும்பம் என்று வாழ்க்கையின் அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்திருந்தார்கள்.
அவன் மட்டும் நின்ற இடத்திலேயே நின்றுவிட்டது போலொரு மாயை. இத்தனை நாட்களாக இதைப் பற்றி யோசித்ததும் இல்லை, இந்த விடயம் அவனைப் பாதித்ததும் இல்லை. ஆனால் இன்று, தங்கையின் திருமணத்தில் குடும்பமாய் எல்லோரையும் அப்படிப் பார்த்தபிறகு, என்னவோ ஒன்று அவனைப் போட்டு அழுத்தியது.
வீடே உறக்கத்தின் பிடியில் இருந்தது. சத்தமில்லாமல் அறையை விட்டு வெளியே வந்து, தோட்டத்துக்கு நடந்தான்.
காலங்கள் ஓடிப்போயிற்று. எல்லாமே மாறியும் போயிருந்தன. அவனறிந்த, அவன் பார்த்த எல்லோருமே நல்ல நிலையில் இருந்தார்கள். அவன் மட்டும் குட்டையாகத் தேங்கிப்போனான்.
இதோ, சற்றுமுன் மகளோடு மாடியேறியவன் முன்னொரு காலத்தில் அவன் பார்த்த தமையன் அல்லன். கம்பீரம், அழுத்தம், ஆளுமை எல்லாம் அப்படியே இருந்தபோதும், அதனோடு கூடவே கனிவும், அன்பும், புரிந்துணர்வும் அவனை இன்னுமே பட்டை தீட்டியிருந்தன.
மிகவும் திறம்பட இயங்கும் ஒரு கல்லூரியின் நிர்வாகியாக, ‘ஹோட்டல் மிருதுளா’ வின் நிறுவனனாக, இன்னுமின்னும் பெயரையும் புகழையும் பெற்று, தன் மரியாதையையும் செல்வாக்கையும் பலமடங்காக உயர்த்திக்கொண்டிருந்தான் அவன்.
அவன் மட்டுமல்ல அண்ணி பிரமிளா தொடங்கி, டியூஷன் செண்டர் ஒன்றைத் தனியாக ஆரம்பித்திருந்த பிரதீபனில் இருந்து, தனியாகத் தொழில் நடத்தும் ரஜீவன், பல்கலையின் பேராசிரியையாக வளர்ந்து நிற்கும் யாழினி என்று எல்லோருமே தமக்கான அடையாளங்களைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
அவனுடைய நண்பர்கள் கூட அப்படித்தான். வந்த புதிதில் அவர்களைச் சென்று சந்தித்திருந்தான். கண்டதும், “டேய் மச்சான்! எப்பயடா வந்தனீ?” என்று ஆரவாரித்தார்கள்தான். ஆனால், ஆரம்பித்த வேகத்திலேயே அது அடங்கியும் போயிற்று.
முன்னர் போன்று அவனோடு நட்பு பாராட்ட அவர்களுக்கு நேரமும் இல்லை, மனத்தில் விருப்பமும் இல்லை என்று அடுத்து வந்த நாட்களிலேயே கண்டுகொண்டு, தானே ஒதுங்கிக்கொண்டிருந்தான்.
அவர்களிடம் கூட எதிர்காலத் திட்டங்களும், அதற்கான நடவடிக்கைகளும் நிறைந்திருந்தன.
அவன்? அங்கேதான் சிக்குப்பட்டு நின்றான்.
அவனிடம் என்ன இருக்கிறது? அன்று, ரஜீவன் குத்தலாய்ச் சொன்னதுபோலத் தொழில் இல்லை, வாழ்க்கை மொட்டை மரம் போன்று பட்டுப்போய்க் கிடக்கிறது, பெயர் கெட்டுப்போயிற்று. எந்தப் பக்கம் திரும்பினாலும் வெறுப்பும் ஒதுக்கமும் மாத்திரம்தானே கிட்டிக்கொண்டிருக்கிறது.
நினைக்க நினைக்க எல்லாமே மூச்சு முட்டியது.
இதில், அவன் அவனை எண்ணியே பயந்தான். எட்டு வருடங்கள் தனியாக வாழ்ந்துவிட்டு வந்தாலும், மற்றவர்களின் தன் மீதான பார்வை மாறியிருக்கும் என்று அவனும் எண்ணியிருக்கவில்லைதான்.
ஆனால், அவர்கள் அப்படிப் பார்த்தாலும் என்னால் முடியும், நான் சமாளிப்பேன், அமைதியாக அனைத்தையும் கடந்து வருவேன் என்று நம்பித்தான் இங்கு வந்தான்.
ஆரம்ப நாட்களில் அது கைகூடியதுதான். பிறகு பிறகு ரஜீவனின் அலட்சியத்தில் ஆரம்பித்த அவனுடைய கோபம் இப்போதெல்லாம் மூர்க்கத்தனமாக மாறிக்கொண்டிருப்பதை அவனாலேயே உணர முடிந்தது.
அந்தக் கோபம் யாழினியின் வாழ்க்கையைப் பிரட்டிப் போட்டுவிடுமோ என்று மிகவுமே அஞ்சினான்.
அண்ணாவின் வாழ்வில் அவனால் உண்டானவையே போதும். இதில் யாழினியின் வாழ்வோடும் விளையாட அவன் தயாராயில்லை. இதற்கு ஒரேயொரு வழி இங்கிருந்து புறப்பட்டுவிடுவதுதான்.
தனிமை என்றாலும் சவூதியில் ஏதோ ஒரு நிம்மதி இருந்தது. நாளாந்த வாழ்வு பெரும் சலசலப்பு இல்லாமல் விடிந்து இருண்டு என்று அமைதியாகக் கடந்துகொண்டிருந்தது. இதற்கு அது எவ்வளவோ மேல்.
நாளையிலிருந்து ரஜீவனும் இங்கு நிரந்தரமாய் இருக்க வந்துவிடுவான். தினமும் ஒருவரை ஒருவர் பார்க்க வேண்டும். நிச்சயமாய் அது நல்ல முறையில் அமையப் போவதில்லை.
இன்று மண்டபத்தில் வாழ்த்தியபோதும் அதை அவன் நல்லமுறையில் ஏற்கவில்லை. நிச்சயம் அவனுக்குக் கோபம் இருக்கும். அதில் ஏதாவது செய்வான். இவனால் பொறுத்துப்போக முடியாது. இதெல்லாம் தெரிந்தும் ஏன் இங்கிருந்து பிரச்சனைகளை உருவாக்குவான்?
முடிந்தால் நாளைக்கே எதையாவது சொல்லிவிட்டு இங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டு வீட்டுக்குள் செல்லத் திரும்பினான்.
அப்போது வீட்டுக்குள் இருந்து வந்துகொண்டிருந்தாள் ராதா.
இவள் எங்கே இங்கே? அவளின் வீட்டுக்குப் போகவில்லையா? சாதாரண உடை ஒன்றில், கைப்பேசியில் கவனம் வைத்துக்கொண்டு வந்தவளின் முகம், அந்தக் கைப்பேசி வெளிச்சத்தில் மின்னியது.
தன்னை மறந்து அவளையே பார்த்தான் மோகனன். ‘ஒளியிலே தெரிவது தேவதையா?’ என்றுதான் அவனுக்குள் ஓடியது.
அவள் இவனைக் கவனிக்கவில்லை. இவனையும் கடந்துபோய் அங்கிருந்த பெஞ்ச் ஒன்றில் அமர்ந்துகொண்டாள். யாருக்கோ மிக வேகமாகக் குறுஞ்செய்தி அனுப்புகிறாள் என்று உடல்மொழி சொல்லிற்று.
இங்கிருந்து போ, அவளும் இங்கு நிற்கையில் இந்த நேரத்தில் நீயும் நிற்காதே என்று அறிவு எடுத்துச் சொன்னபோதும் அசைய முடியவில்லை.
கடவுளே… என்ன இது? ஏன் இந்த வித்தியாசமான தடுமாற்றம்? அவனுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. வேகமாக அறைக்குள் வந்து கட்டிலில் விழுந்தான். மெதுவாக வியர்க்க ஆரம்பித்தது.
அவனை மனிதனாக அல்ல குறைந்தபட்ச உயிரினமாகக் கூட அவள் மதிக்கத் தயாராக இல்லை என்று அவனுக்கே தெரியும். அப்படியானவளிடம் தன்னை மறந்து கட்டுண்டு நின்றிருக்கிறான் அவன்.
இது எதுவுமே நல்ல சகுனங்களாகப் படவே இல்லை. எடுத்த முடிவுதான் சரி. விடிந்ததும் ஓடிவிட வேண்டும். உறுதியாய் எண்ணியபடி விழிகளை இறுக்கி மூடிக்கொண்டான்.


