மன்னார் முசலிப்பிரிவுக்கு உட்பட்ட அரிப்பு கிராமத்தின் கடலோரப்பகுதியில் அமைந்திருந்தது அல்லிராணி கோட்டை. அங்கு தன் ஸ்கூட்டியை விட்டாள் கமலி. மன்னாரிலேயே அவளுக்கு மிக மிகப் பிடித்த இடங்களில் இதுவும் ஒன்று. பெரிதாக ஆளரவமற்ற தனித்த கடற்பகுதி. அலைகளின் சத்தம், அமைதியான காற்று என்று அல்லிராணி கோட்டையின் சிறப்பம்சம் வேறெங்கும் கிடைக்காது என்றுதான் அவள் சொல்லுவாள்.

கடல் அலைகளின் தாக்கத்தால் கோட்டையின் பகுதிகள் சில கடலில் மூழ்கிப் போய்விட மிகுதிப் பாதியும் சுனாமியின் தாக்கதால் சிதிலமடைந்த நிலையில் காணப்பட்டாலும் கூட, அதன் அழகு எந்த விதத்திலும் கெட்டுப் போகவேயில்லை.

இன்றைக்கு அவள்தான் முதலில் வந்திருந்தாள். அது சின்னக் கோட்டை என்பதில் ஒற்றைப் பார்வையிலேயே அவனுடைய பைக்கைக் காணவில்லை என்பதைக் கண்டுகொண்டாள். வரமாட்டானோ?

ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்த கல்லில் கால்களை நீட்டி அமர்ந்துகொண்டாள். அவனை வரச்சொல்லிவிட்டு மேலே பேசாமல் அவள் அழைப்பைத் துண்டித்ததும், “பிளீஸ்! இந்தச் சந்திப்பு வேண்டாம்!” என்று புலனத்தின் வாயிலாக குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான் அவன். 

தன் முகம் கூடப் பார்க்காமல் புறப்பட்டுப் போனவனின் மேலிருந்த கோபத்தில் கமலி பதில் போடவில்லை.

சற்றுப் பொறுத்துப் பார்த்துவிட்டு, “என்னால வரேலாது.” என்று மீண்டும் அனுப்பியிருந்தான். அதற்கும் அவள் பதில் அளிக்கவில்லை. மாறாக இதோ வந்து அவனுக்காகக் காத்திருக்கிறாள்.

சற்று நேரத்தில் அவனும் வந்தான். வந்தவனின் முகத்தைத்தான் ஆராய்ந்தாள் கமலி. அவளின் வார்த்தைகள் உண்டாக்கிய வாட்டம் இன்னுமே மிச்சமிருந்தது. இருந்தாலும் தயங்கி நிற்காமல் வந்தவன் தானே பேச்சை ஆரம்பித்தான்.

“அண்டைக்கு நான் உங்களிட்ட அப்பிடிக் கேட்டதே பிழை..” என்று அவன் ஆரம்பிக்கும்போதே சினம் பொங்கிவிட, “உங்கட மரியாதை எனக்குத் தேவையில்லை. ஒழுங்கா கதைங்க!” என்று அதட்டினாள் அவள்.

“இல்ல. அது சரிவராது.” என்றவனை மேலே பேசவிடாது, “ப்ச்! நான் சும்மாதான் சொன்னனான். அத தூக்கிப் பிடிச்சுக்கொண்டு நிப்பீங்களா?” என்றாள் மனக்குறையோடு.

“நான் தூக்கிப் பிடிக்க இல்ல. ஆனா, நீங்க கேட்டது உண்மை தானே.” அதற்குமேல் அவன் பேச்சைக் கேட்கப் பொறுமையற்றுப் படக்கென்று எழுந்துகொண்டாள் கமலி. 

“இப்ப நீங்க ஒழுங்கா கதைக்காட்டி நான் இப்பிடியே போயிடுவன், சொல்லிப்போட்டன்!” என்று மிரட்டினாள். 

இப்படி எல்லாவற்றுக்கும் அடம் பிடிக்கிறவளை என்ன செய்ய? இயலாமையுடன் பார்த்தான் அவன்.

அவள் பிடிவாதத்துடன் நிற்க, “சரி இரு!” என்று அவன் தான் இறங்கிவந்தான். 

“என்னை அறியாம கேட்டதுக்கே என்னால உன்ர குடும்பத்து ஆக்களின்ர முகம் பாக்க முடியேல்ல. இப்ப, தெரிஞ்சே அரவிந்தனுக்குச் சொல்லாம இப்பிடி உன்னச் சந்திக்க வாறது குத்துது. என்னால நீயும் பிழை செய்ய வேண்டாம். இதோட இந்த விசயத்த முடிப்பம். தயவுசெய்து நான் கேட்டதை மறந்திடு!” என்று தான் சொல்ல வந்ததை ஒருவழியாகச் சொல்லி முடித்தான் அவன். 

என்ன, பாரம் இறங்குவதற்குப் பதிலாக மனதில் அந்தக் கோட்டையின் ஒரு கல்லையே தூக்கி வைத்ததுபோல் மூச்சுக்குழாயை எதுவோ அடைத்தது.

எப்போதும் படபடக்கும் கமலி இப்போது சட்டென்று எதையும் பேசவில்லை. அவன் முகத்தையே ஆராய்வதுபோல் பார்த்துக்கொண்டு இருந்தாள். 

அவர்களுக்குள் அமிழ்ந்து கிடந்த அந்த அமைதியை அவன் வெறுக்கையிலேயே, “அப்ப நீங்க கேட்டதுக்கு எந்தப் பொருளும் இல்லையா?” என்று, நிதானமாக வினவினாள் அவள்.

அவனுடைய அத்தனை நடிப்புகளும் நொடியில் நொறுங்கிப்போனது. தவிப்புடன் அவளின் முகத்தில் படிந்த விழிகளை மிக வேகமாகத் திருப்பிக்கொண்டான். அவ்வளவு நேரமும் தன் இயல்பை விடுத்துப் பேசியவன் இப்போது வார்த்தைகளற்று நின்றான்.

“சொல்லுங்கோ கிருபன். அதுக்கு அர்த்தமே இல்லை எண்டு சொல்லுங்கோ. நீங்க சொன்ன மாதிரியே இத இதோட விட்டுடலாம். இல்லையா, எனக்கு என்னைப்பற்றி உங்களிட்ட சொல்லவேணும்.” என்றாள் அவள்.

அவளைப்பற்றி என்ன சொல்லப்போகிறாள்? மற்றவையெல்லாம் மறக்க கேள்வியுடன் பார்த்தான் அவன். அவளும் தன் விழிகளை அவனிடமிருந்து அகற்றிக்கொள்ளவில்லை. அவ்வளவு நேரமாக நின்றிருந்தவன் அவளின் முன்னே இருந்த கல்லில் வந்து அமர்ந்தான்.

சற்று நேரம் அவள் ஒன்றும் சொல்லவில்லை. முதன் முதலாக அவளின் பார்வை விலகி கடலின் பக்கம் போயிற்று. 

“சொல்ல கஷ்டமா இருந்தா சொல்ல வேண்டாம்!” என்றான் அவன் கனிந்த குரலில்.

“இல்ல.. அப்பிடி ஒண்டும் இப்ப இல்ல.” என்றவள் அவன் முகம் பார்த்தே சொல்ல ஆரம்பித்தாள். “எனக்கு ரெண்டு வருசத்துக்கு முதல் வீட்டில கலியாணம் பேசினவே. பொருத்தம் பாத்து, சீதனம் பேசி எண்டு எல்லாமே நல்லபடியாத்தான் நடந்தது. வெளிப்படையா சொல்லப்போனா அவனை எனக்குப் பிடிச்சிருந்தது. நானும் விரும்பினான். எதிர்காலத் துணையா கற்பனையும் செய்திருக்கிறன்.” என்றவளின் விழிகள் அவனிடம் தான் இருந்தது. 

ஏதாவது ஏமாற்றம், கோபம், வெறுப்பு இப்படி ஏதும் அவன் முகத்தில் படிகிறதா என்று ஊன்றிக் கவனித்தாள். எதையுமே கண்டு பிடிக்க முடியவில்லை. வழக்கமற்ற வழக்கமாக அவளையே பார்த்து இருந்தான். 

“கலியாணத்துக்குக் கார்ட் எல்லாம் அடிக்கக் குடுத்த பிறகு அவன் சீதனம் கூடக் கேட்டவன். அதுவும், எனக்கு அவனை நல்லாவே பிடிச்சிருக்கு எண்டு தெரிஞ்சு, அவன் எனக்கு வேணுமெண்டால் இன்னும் சீதனம் வாங்கிக்கொண்டு வா எண்டு என்னட்டயே சொன்னவன். அந்த நிமிசமே, ‘நீ எனக்குத் தேவையில்லை, போடா’ எண்டு சொல்லிப்போட்டு வந்து அம்மா அப்பாட்டையும் சொல்லி கலியாணத்தை நிப்பாட்டிப்போட்டன். ‘உனக்கு அவனைப் பிடிச்சிருக்கு தானேம்மா. சீதனமும் நாங்க உனக்குத்தான் தரப்போறம். அதால அதைப்பற்றி யோசிக்காத.’ எண்டு அப்பா சொன்னவர். நான் தான் வேண்டவே வேண்டாம் எண்டு நிண்டு நிப்பாட்டினான். அதுக்குப் பிறகு அம்மா அப்பாக்குக் காட்டிக்கொள்ள இல்லையே தவிர நிறைய அழுதிருக்கிறன். ஆரம்பம் அவனை மறக்கேலாம கஷ்டப்பட்டு இருக்கிறன். அவனை மறக்கத்தான் இந்தக் கேக் செய்றது, சமையல் செய்றது எண்டு வெளிக்கிட்டனான். பிறகு பிறகு எல்லாம் மாறிட்டுது. இப்பயெல்லாம், நான் எடுத்தது நல்ல முடிவு எண்டு நிறையத்தரம் நினைச்சிருக்கிறன்.”

அவன் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். பெரும்பாலும் தன் விழிகளைச் சந்திக்காமல் தவிர்க்கிறவனின் இந்த விடாத பார்வை கமலியின் மனதை என்னவோ செய்தது. அதில், “என்ன யோசிக்கிறீங்க? ஏன்டா இவளிட்ட வாயை விட்டோம் எண்டா?” என்று வினவினாள்.

அவன் மறுத்துத் தலையை அசைத்தான். “எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. உனக்கும் என்னைப் பிடிச்சிருந்தா சொல்லு. நான் அரவிந்தனிட்ட கதைக்கிறன். மற்றும்படி இனி இப்பிடி நாங்க தனியா சந்திக்க வேண்டாம். இருட்டுது வா போவம்.” என்றுவிட்டு எழுந்துகொண்டான் அவன். 

கருத்திட