வீடு நோக்கிப் பறந்துகொண்டிருந்த கமலிக்குள் புதுவித சந்தோசம். அத்தனை நாட்களாக மனதை அலைய விட்டுவிடக் கூடாது என்று இருந்தவள் இன்று சற்றே தன் இறுக்கம் தளர்த்தினாள். அவளுக்கு அவளைப்பற்றிச் சொல்வதில் தயக்கமில்லை. பெற்றவர்கள் ஒருவனை நிச்சயித்தார்கள். பிடித்தது, ஏற்றுக்கொண்டாள். அவன் நல்லவன் இல்லை என்று புரிந்தபோது தயங்காது அவன் வேண்டாம் என்கிற முடிவையும் எடுத்தாள்.
இதில் அவளின் தவறு எங்கு இருக்கிறது? அதேபோல நடந்துவிட்ட இந்தப் பிசகினால் எதிர்காலம் மீதோ எதிர்காலத் துணை மீதோ திருமணம் மீதோ வெறுப்பு எழுந்தது இல்லை. தவறிழைத்தது எவனோ ஒருவனாக இருக்கையில் நான் ஏன் என் வாழ்வின் மீதான பற்றுதலை இழக்க வேண்டும் என்பது அவள் வாதம்.
ஆனால், அவளின் எதிர்காலத் துணையாக வரப்போகிற அந்த இன்னொருவன், அவளைப்போலவே இதை நல்லமுறையில் எடுப்பானா என்கிற கேள்வியும் கலக்கமும் அவளுக்குள் இருந்ததும் மெய்.
அவளுக்கு ஒன்றுமில்லாமல் படுகிற ஒரு விடயம் இன்னொருவருக்குப் பெரும் பூதமாகப் படலாம் இல்லையா! இருந்தபோதிலும் எதையும் மறைக்காமல் சொல்லி, அதை அவன் நல்லமுறையில் ஏற்றால் மாத்திரமே அடுத்த கட்டத்தைப்பற்றி யோசிப்பது என்பதில் மட்டும் மிகுந்த தெளிவாக இருந்தாள்.
அதில்தான், முதலில் தன்னைப்பற்றி அவனிடம் சொன்னாள். அதுவரை தன் முகம் பார்ப்பதைத் தவிர்ப்பவன், விலகி நிற்பவன் உரிமையாகப் பார்த்ததும், அழுத்தமாக, ‘எனக்கு உன்ன பிடிச்சிருக்கு. உனக்கும் என்ன பிடிச்சிருந்தா சொல்லு.’ என்று சொன்னதும் மிகுந்த நிறைவை மனதுக்குள் உண்டாயிற்று.
அவள் தேடிய துணை அவன்தான்! இனி, அவன்தான் அவளின் எதிர்காலம். ஒருவித உற்சாகம். மீண்டும் புதிதாகப் பிறந்ததுபோலொரு சந்தோசம். வீட்டுக்கு வந்தவள் என்றுமில்லாத வழக்கமாகத் தனிமையை நாடிக்கொண்டாள்.
அடுத்த நாளே அழைத்து அவனிடம் சம்மதம் சொல்லிவிடலாமா என்று மனம் பரபரத்தது. ஆனால், அவன் கண்களை பார்த்துக்கொண்டே, அவனின் சந்தோசத்தை அனுபவித்துக்கொண்டே சொல்லவேண்டும். எப்படி?
வீட்டுக்கு வரமாட்டான். அவன் வீட்டுக்குப் போவது அழகல்ல. தனியாகச் சந்திக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டான். என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கையில் அன்று ஞாயிற்றுக்கிழமை தியேட்டருக்குப் புறப்பட்டுக்கொண்டிருந்தான் அரவிந்தன்.
நொடியில் திட்டமிட்டு தமையனின் முன்னே சென்று நின்று, “என்னையும் கூட்டிக்கொண்டு போ.” என்றாள்.
“கிருபன் வாறான் கமலி. அதால அடுத்த வீக்கெண்ட் உன்ன கூட்டிக்கொண்டு போறன்.” நேரமாகிவிட்டதில் வேகமாகத் தயாராகியபடி சொன்னான், அரவிந்தன்.
அது தெரிந்துதானே ஆரம்பித்தாள். உள்ளக்குள் சிரிப்பு வந்தாலும் காட்டிக்கொள்ளாமல், “அவனை வரவேண்டாம் எண்டுபோட்டு என்னை கூட்டிக்கொண்டு போ.” என்றாள் அடமாக.
செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டுத் திரும்பித் தங்கையை முறைத்தான் அரவிந்தன்.
“என்ன முறைப்பு? கூட்டிக்கொண்டு போக மாட்டியோ? அந்தளவுக்கு என்னைவிட அவன் முக்கியமா போய்ட்டான் போல.” என்று சண்டைக்கு நின்றாள்.
“ப்ச் கமலி! கோபத்தை கிளப்பாத. நாங்க முதலே பிளான் பண்ணிட்டம். இனி மாத்தேலாது. அவன் அங்க தியேட்டருக்கு வந்திருப்பான். உனக்கு விருப்பம் இருந்தா முதலே சொல்லியிருக்க வேணும்!” பொறுமையை இழுத்துப்பிடித்துக்கொண்டு விளக்கினான் அவன்.
கோபத்துடன் அவன் முன்னால் வந்து நின்று அவன் தலையைக் கலைத்துவிட்டாள் கமலி. “நீ என்ன பெரிய மினிஸ்டரா? முதலே சொல்லி அப்பொய்ன்மெண்ட் வாங்கி படத்துக்கு போக? இவ்வளவு நாளும் நான் கேக்கிற நேரமெல்லாம் கூட்டிக்கொண்டு போனனீ தானே. இப்ப மட்டும் என்ன அவன் வாறான் எண்டு கதை? உனக்கு நான் முக்கியமா அவன் முக்கியமா?”
“அவன் தான் முக்கியம்!” அசராமல் சொல்லிவிட்டுப் போனான் அரவிந்தன்.
ஆத்திரம் தாங்காமல், “அம்மாஆஆஆ!” என்று அவள் கத்திய கத்தில் என்னவோ ஏதோ என்று ஓடிவந்தார், சுகுணா.
“என்ன பிள்ளை? என்னத்துக்கு இப்பிடி கத்தினனி?”
“நான் தியேட்டருக்கு போகவேணும். கூட்டிக்கொண்டு போக சொல்லுங்க. இல்லாட்டி தனியா போவன்!”
சுகுணாவுக்குப் பெரும் கோபம் உண்டாயிற்று. “எனக்கு வாற ஆத்திரத்துக்கு படார் எண்டு முதுகிலையே ரெண்டு போட்டு விட்டுடுவன். என்னவோ ஏதோ எண்டு பதறியடிச்சுக்கொண்டு ஓடி வாறன். நீ என்னடா எண்டா படக்கதை கதைக்கிறாய். பொம்பிளை பிள்ளை கொஞ்சம் அமைதியா கதைச்சுப் பழகு எண்டு எத்தனை தரம் சொல்லுறது உனக்கு?” என்று அதட்டினார் அவர்.
“அதென்ன பொம்பிளை பிள்ளை? அப்ப ஆம்பிளை பிள்ளை தெருவுக்கு கேக்கிற மாதிரி கத்தலாம். அப்பிடியா? அவனை பெத்த மாதிரித்தானே என்னையும் பெத்தீங்க? பிறகு என்ன ஆம்பிளை பொம்பிளை எண்டு பிரிச்சு கதைக்கிறது? அவனை மாதிரி நானும் படிச்சிருக்கிறன். அவனை மாதிரி நானும் உழைக்கிறன். அவனை விட உங்களுக்கு உதவியா இருக்கிறது நான் தான். பிறகு என்ன பொம்பிளைப் பிள்ளை எண்டு சொல்லுறது?” அவரிடமும் பாய்ந்தாள் அவள்.
“கடவுளே! ஒரு வார்த்த சொன்னதுக்கு என்ன பாடு படுத்திறாய் என்னைப்போட்டு. உன்ன பெத்ததுக்கு பதிலா இன்னும் பத்து தென்னையை வச்சிருக்கலாம்!” என்று தலையில் அடித்துக்கொண்டார் அவர்.
“ஓமோம்! தென்னைதான் உங்களுக்கு சமைச்சுத் தரும். கேக் அடிச்சுத் தரும். பிள்ளை தேத்தண்ணி கொண்டுவாம்மா எண்டதும் கொண்டு வந்து தரும். எல்லாம் செய்யும். போங்கோ! இப்பவும் ஒண்டும் கெட்டுப் போகேல்ல. வச்ச தென்னையிட்டயே போய் கேளுங்கோ. எல்லாம் செய்யும்!” என்றவளின் பேச்சில் போதும் போதும் என்றாயிற்று அவருக்கு.
அன்னையைப் பார்த்த அரவிந்தனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. “ஏய் லூசு. சும்மா என்னத்துக்கு அம்மாவை சண்டைக்கு இழுக்கிறாய்? அவன் வாறதால தானே அடுத்த கிழமை கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொன்னனான். இல்லாட்டி இப்பவே கூட்டிக்கொண்டு போவன் தானே.” என்றான் சமாதானமாக.
“அவன் வந்தா என்ன? அவன் என்ன என்னை பிடிச்சா தின்னப் போறான். அவன் ஒரு பக்கம் இருக்கட்டும் நான் ஒரு பக்கம் இருந்து பாக்கிறன்.” என்ற மகளை இன்னுமே முறைத்தார் சுகுணா.
“அவங்கள் பெடியள் பாக்க போறாங்கள். அதுக்க பெட்டை உனக்கு என்ன அலுவல்? அதுதான் அண்ணா வாற கிழமை கூட்டிக்கொண்டு போறன் எண்டு சொல்லுறான் தானே. பிறகு என்ன?”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது! எனக்கு இப்ப போக வேணும். அவ்வளவுதான். அவன் கூட்டிக்கொண்டு போகாட்டி நீங்க வாங்க. நாங்க ரெண்டுபேரும் போவம். இல்லையோ நான் தனியா போவன். எனக்கு இண்டைக்கு படம் பாத்தே ஆகவேணும்!”
“இந்த அடம் பிடிக்கிற பழக்கத்துக்கு அடிவாங்க போறாய் கமலி!” என்று விரல் நீட்டி எச்சரித்தார், சுகுணா.
“என்ன அடம் பிடிக்கிறன். அவன் தான் கூட்டிக்கொண்டு போகமாட்டன் எண்டு அடம் பிடிக்கிறான். தனியா விடமாட்டீங்க. நீங்களும் வரமாட்டீங்க. அப்ப அப்பாக்கு ஃபோனை போட்டு வரச்சொல்லுங்கோ. அவரோட போறன்!”
அவருக்குத் தலையை வலிப்பது போலிருந்தது. கணவருக்கு இப்போதுபோய் அழைத்தால் நிச்சயம் பேச்சுத்தான் விழும். அது முடியாது என்பதில், “நீயும் போறாய் தானே. கூட்டிக்கொண்டு போ தம்பி. அந்தப் பெடியும் சோலி இல்லாதவன் தானே.” என்று, வேறு வழியில்லாமல் சுகுணாதான் இறங்கி வரவேண்டி இருந்தது.
அவள் ஆடிய நாடகத்தில் அன்னையும் அண்ணனும் வெறும் பாத்திரங்கள் தானே. நல்லபிள்ளையாகப் புறப்பட்டுப் போனாள் கமலி.
எதிர்பாராமல் இவளைக் கண்டதில் அரவிந்தனைக் கேள்வியாகப் பார்த்தான் கிருபன்.
“என்ன உன்ர நண்பர் ஒரு மாதிரியா பாக்கிறார். நான் வந்தது பிடிக்கேல்லையாமோ? அப்ப, அவரை வீட்டை போகச் சொல்லு!” அவனை முறைத்துக்கொண்டு அரவிந்தனிடம் சொன்னாள் கமலி.
அவளை முறைத்துவிட்டு, “சொறி மச்சான், இந்த அடங்காபிடாரி தானும் வருவன் எண்டு நிண்டு வந்திருக்கிறாளடா. குறை நினைக்காத.” என்றான் அரவிந்தன்.
“இல்ல இல்ல. பிரச்சினை இல்ல. நீ கூட்டிக்கொண்டு உள்ளுக்கு போ! நான் இன்னொரு டிக்கெட் எடுத்துக்கொண்டு வாறன்.” என்றுவிட்டு, டிக்கட் கவுண்டருக்குப் போனவனுக்கு ஏன் வந்திருக்கிறாள் என்கிற யோசனைதான்.
அவர்கள் பேசி ஒரு வாரமாயிற்று. இனி முடிவு சொல்ல வேண்டியவள் அவள்தான். பதிலே இல்லையே என்று எண்ணியிருக்க இப்படி வந்து நிற்கிறாள். எது எப்படியானாலும் அவளை பார்த்ததில் மனது தனக்குள் ரகசியமாக சந்தோசப்பட்டுக் கொண்டது.
அவள், அரவிந்தன், கிருபன் என்கிற வரிசையில் அமர்ந்துகொண்டனர். படமும் தொடங்கியது. சற்று நேரத்திலேயே தமையனின் கையைச் சுரண்டினாள் கமலி.
“பக்கத்தில இருக்கிறவன் ஒழுங்கா இருக்கிறான் இல்ல.”
“என்ன செய்தவன்.” சட்டென்று மூர்க்கமாகி கேட்ட அரவிந்தன், முன்னே வந்து எட்டிப்பார்த்து அவளுக்குப் பக்கத்தில் இருந்தவனை முறைத்தான்.
“ஒண்டும் செய்ய இல்ல. ஆனா, எனக்கு ஒருமாதிரி இருக்கு. அந்தப்பக்கம் வரட்டா?”
“அங்கால அவன் எல்லாடி!” சத்தமில்லாமல் பல்லைக் கடித்தான் அரவிந்தன்.
“அவனும் என்ன இவனை மாதிரி சொறிவான் எண்டுறியோ?”
“சேச்சே. அவன் அப்பிடியான ஆள் இல்ல.”
“பின்ன என்ன, எனக்கு இங்க ஒரு மாதிரி இருக்கு அண்ணா.”
அரவிந்தனுக்கு இடம்மாறி இருக்க பிடிக்கவில்லை. ஆனால், யாரோ தெரியாத அந்த அவனுக்கு நண்பன் எவ்வளவோ பரவாயில்லை என்று நினைத்தான். பின்னுக்கு இருப்பவர்களை தொந்தரவு செய்யாத வகையில் இருவரும் வேகமாக இடத்தை மாற்றிக்கொண்டனர்.
கிருபனுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. இருந்தும், அவள் அருகில் இருக்கிறாள் என்கிற நினைப்பே அவனைப் படம் பார்க்க விடாமல் செய்யப் போதுமாக இருந்தது. இப்போதோ அவனுக்கு அருகிலேயே வந்து அமர்ந்திருக்கிறாள். அவளின் வாசனை வேறு மென்மையாய் அவன் நாசியை தீண்டிற்று.
ஒரு சில நிமிடங்கள் கடந்தன. இருளின் மறைவில் அவளின் விரல்கள் அவன் விரல்களை தேடித் பிடித்துக் கோர்த்துக்கொண்டது. அவன் அதிர்ந்து அவளைத் திரும்பிப் பார்த்தான். அவளின் விழிகள் திரையில் தான் இருந்தது.
இது சரி இல்லையே. அவன் தன் கையை விடுவிக்க முயன்றான். அவள் விடவில்லை. கையில் மெல்லிய அழுத்தம் கொடுத்து விடச்சொல்லி உணர்த்தினான். அவளோ இன்னும் இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
முதலில் விறைப்புடன் அவளின் விரல்களுக்குள் அகப்பட்டிருந்த அவனுடைய விரல்கள் மெல்ல மெல்ல இலகுவாகின. மெல்லிய நடுக்கத்துடன் அவன் விரல்களும் அவளின் விரல்களோடு கோர்த்துக்கொண்டன. மெலிதாக விழிகளினோரம் பூப்பூத்தது. திரை கலங்கித் தெரிந்தது. அவளின் விரல்களின் மென்மையில் கிறங்கிக்கிடந்தான் கிருபன்.
அன்னையின் விரல்களுக்குப் பிறகு அவன் பற்றிய முதல் பெண்ணின் விரல்கள் அவளுடையவை. மனதில் ஒரு நெகிழ்ச்சி. அவளின் மடியில் சாய்ந்துகொள்ள வேண்டும் போலாயிற்று. அவனை மீறி அவனின் விரல்கள் அழுத்தமாகப் பற்றிவிட, அவனை உணர்ந்தவளாய் மெல்ல அழுத்திக்கொடுத்தாள் கமலி.
இடைவேளை வந்தது. விருப்பமே இல்லாமல் தன் கையை விடுவித்துக் கொண்டான் கிருபன். நண்பனின் முகம் பார்க்க முடியவில்லை. அவ்வளவு நேரமாக மயக்கத்தில் மூழ்கி இருந்த மனது விழித்துக்கொண்டது. தப்புச் செய்கிற உணர்வு. அவள் தான் சின்னப்பிள்ளை என்றால் அவனும் இசைவது முறை இல்லையே. இது தொடரக்கூடாது. அவளிடம் கேட்டுவிட்டு அரவிந்தனிடம் பேசிவிட வேண்டும் என்று முடிவு எடுத்துக்கொண்டான்.
“அண்ணா எனக்கு கோக் வேணும்.” என்றாள் அவள். அரவிந்தனோடு அவனும் புறப்பட, அவனை ஒரு பார்வை பார்த்தாள் கமலி.
போகாதே என்கிறாள். எப்படிப் போகாமல் இருப்பது? தயங்கினாலும் அவளிடம் விழிகளால் இறைஞ்சியபடி நண்பனோடு நடந்தான். சற்றுத் தூரம் சென்று திரும்பிப் பார்த்தான். அவளும் அவனையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதற்குமேல் அடுத்த அடியை எடுத்துவைக்க முடியவில்லை.
“டேய், பர்ஸ் சீட்ல விழுந்திட்டு போல. நீ போ நான் வாறன். இல்லாட்டி கண்டீன்ல ஆக்கள் கூடிடும்.” என்று அரவிந்தனை அனுப்பிவிட்டு அவளிடம் வந்தான்.
“சும்மா இருந்தவளை கல்யாணம் கட்டுறியா எண்டு கேட்டு மனதை கெடுத்துப்போட்டு இப்ப எங்க ஒளிச்சு ஓடுறீங்க.” என்றாள் அவள் அதட்டலாக.
இது என்ன மீண்டும் ஆரம்பிக்கிறாள். அவன் திகைத்து விழித்தான். “அது பிழை எண்டுதான்..” இப்போது அதைச் சொல்லவும் முடியவில்லை அவனால்.
“அப்ப, என்னை பிடிக்கேல்ல உங்களுக்கு?”
அவளைப் பிடிக்காதா? இது என்ன கேள்வி? இந்த உலகின் அத்தனை சொந்தமாகவும் அவள் வேண்டும் என்று மனம் ஆர்ப்பரித்துக்கொண்டு இருக்கையில் அப்படி எப்படிச் சொல்லுவான்?
“சொல்லுங்க! என்னை பிடிக்குமா பிடிக்காதா?”
அவன் பதில் சொல்லத் தயங்கினான். அவளுக்கு கோபம் வந்தது.
“நான் வேணுமா வேணாமா?”
“வேணும்.” என்றான் அவளைப் பாராமல்.
“இது எத்தனை நாளா?”
அவனுக்கே தெரியாதே. துளித்துளியாக வீட்டுக்குள் நுழைகிற மழைத்துளி ஏதோ ஒரு நொடியில் வீட்டையே நனைத்துவிடுவதில்லையா. அப்படித்தான் அவள் அவனை ஆக்கிரமித்திருந்தாள். முதல் துளி எப்போது விழுந்தது என்று கேட்டால் என்ன பதில் சொல்வது?
அவன் தடுமாறுவது அழகாயிருந்தது. “ஒரு கிஸ் தாங்களன்.” என்றாள் கமலி.
திகைத்துத் திரும்பியவன் அவளை முறைக்க முயன்றான்.
“ஓ..! சிம்ரனுக்கு கோவம் எல்லாம் வரும் போல இருக்கே. பெரிய ஆள்தான்.” என்றாள் அவள்.
இப்போது அவன் விரல்கள் தைரியமாக நீண்டுவந்து அவளின் விரல்களைப் பற்றியது. மெல்ல வருடிக்கொடுத்தது.
“தொரைக்கும் காதல் வந்திட்டு போல இருக்கே..” என்றாள் குறும்புடன்.
உதட்டோரம் அரும்பிய சிரிப்புடன் பார்வையை அகற்றிக்கொண்டான் அவன். இருக்கையில் சாய்ந்து அமர்ந்தான். அந்தப் பொழுதினை மனம் துளித்துளியாய் அனுபவித்தது. இப்படி ஒரு துள்ளலான மனநிலையை அவன் அனுபவித்ததே இல்லை. அதைத் தந்தவளை பெரும் நேசத்தோடு நோக்கினான்.
“என்ன?” விழியுயர்த்தி கேட்டாள் அவள்.
ஒன்றும் இல்லை என்று தலையசைத்தான் கிருபன்.
“சந்தோசமா இருக்கா?” அவனை உணர்ந்து கேட்டாள் கமலி.
தலையை மெல்ல ஆட்டினான் அவன்.
“இனி நீங்க சந்தோசமாத்தான் இருப்பீங்க. நான் உங்களை அப்படி வச்சிருப்பன். சரியா?”
அவனுக்கு விழிகள் பனித்துவிடும் போலாயிற்று. ஒற்றை உறவுக்காய் அவன் உயிர் துடிக்கிற துடிப்பை உணர்ந்து பேசியவளின்பால் அவன் நேசம் பல்கிப் பெருகியது. இருந்தும் மனதில் ஏதோ ஒன்று நெருட, “இது ஒண்டும் பரிதாபத்தால வந்தது இல்லையே?” என்று, ஆம் என்று சொல்லிவிடாதே என்கிற பரிதவிப்புடன் கேட்டான் அவன்.
நன்றாக அவனை முறைத்தாள் கமலி. “பரிதாபம் வந்தா சோத்தப்போட்டு வயித்த நிரப்பலாமே தவிர வாழ்க்கை தரேலாது!” என்றாள் பட்டென்று.
அவனுக்கு அவளின் கோபம் வலிக்கவே இல்லை. அடி நெஞ்சுவரை இனித்தது.
கமலிக்கும் அவன் மனநிலை விளங்காமல் இல்லை. அதில், “அண்ணாட்ட கதைக்கிறீங்களா?” என்று வினவினாள்.
அதற்கும் தலையை ஆட்டினான் அவன். “ஆனா, என்ர அப்பா பற்றி..” சாதி என்கிற சொல்லைக்கூட சொல்லமுடியாமல் அவன் தடுமாறினான்.
“அப்பா அதெல்லாம் பாப்பார் தான். ஆனா, எனக்கு உங்களை பிடிச்சிருக்கு எண்டு சொன்னா அதையும் தாண்டி சாதிய கட்டிப்பிடிச்சுக்கொண்டு தொங்கிற அளவுக்கு அவர் மூடர் இல்ல.” என்று தைரியம் தந்தாள் அவள்.
அவன் ஒன்றும் பேசவில்லை. பேசும் நிலையில் இல்லை. ஆசையோடு அவளையே பார்த்திருந்தான்.
“சரி போங்க. அண்ணா தேடப்போறான். பொப்கோர்ன் வாங்கிக்கொண்டு வாங்கோ. ‘நீங்க’ ‘எனக்கு’ வாங்கிக்கொண்டு வரோணும். ஓகே?”
தலையை ஆட்டிவிட்டு எழுந்தான் அவன்.
“இனி ஒவ்வொரு நாளும் வீட்டை வாறீங்க. நான் ஊத்தித்தாற தேத்தண்ணியை குடிச்சிட்டு, பலகாரத்தை சாப்பிட்டு போகவேணும். இல்லையோ நான் உங்கட வீட்டை வந்து நிப்பன்.” என்று மிரட்டிவிட்டு, “இப்ப போங்க.” என்று அதன்பிறகுதான் அனுப்பிவைத்தாள்.
கருத்திட



