கிருபனின் கமலி 12

 

நண்பன் என்ன சொல்லுவானோ என்கிற தயக்கம் இருந்தாலும் சொல்லத் தயங்கவில்லை கிருபன். அடுத்தநாளே தன் மனதை, அதன் விருப்பை, கூடவே தன் குடும்பப் பின்னணியை என்று எதையும் மறைக்காமல் சொன்னான்.

ஏதோ ஒரு வகையில் அரவிந்தனின் உள்ளுணர்வு இதை எதிர்பார்த்துதான் இருந்தது. அதில் அவன் பெரிதாக அதிரவில்லை. அவன் மூலம் அவன் வீட்டுக்குச் செய்தி போனது. அவனும் அவன் வீட்டினரும் கமலிக்குக் கிருபனைப் பிடித்திருக்கிறதா என்பதை மாத்திரமே பிரதானமாய்க் கவனித்தனர்.

பரந்தாமன் கிருபனை அழைத்துப்பேசினார். அவர் கிராமசேவையாளர் என்பதில் அவனின் பிறந்த ஊரான யாழ்ப்பாணத்தில் அவன் குடும்பத்தைப்பற்றி இலகுவாகவே விசாரித்துத் தெரிந்துகொண்டார். சோமசுந்தரத்தைப் பற்றியும் விசாரித்தவருக்குத் திருப்திதான்.

அதில், கிருபன் கமலி திருமணம் பற்றிச் சோமசுந்தரத்தோடும் கலந்துபேச விரும்பினார் பரந்தாமன்.

கமலி வீட்டினரிடம் கூடத் தன் விருப்பத்தைச் சொல்லமுடிந்த கிருபனுக்குச் சொந்த மாமாவிடம் பேசுவது இலகுவாய் இருக்கவில்லை. என்ன சொல்லுவாரோ? அவனுக்காகக் கதைக்க வருவாரா? மனம் நோக எதையாவது பேசிவிடுவாரோ என்று மிகவுமே தயங்கினான்.

முதலில், ‘எனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது’ என்பதை எப்படி அவரிடம் சொல்வது என்று வார்த்தைகளைத் தேடினான்.

கமலியிடம் பேசவேண்டும் போலிருக்க அவளுக்கு அழைத்தான்.

“என்ன சிம்ரன் இது ஆச்சரியம்? நீங்களா தேடி கூப்பிடுறீங்க?” வீட்டினர் தம் திருமணத்துக்குச் சம்மதித்துவிட்ட சந்தோசம் அவள் பேச்சினில் அப்படியே தெறித்தது.

“அது சும்மாதான். உன்னோட கதைக்கோணும் மாதிரி இருந்தது.”

அவன் இழுத்துப் பேசியதிலேயே அவனை ஏதோ ஒரு விடயம் அலைக்கழிக்கிறது என்பதைக் கண்டுகொண்டாள் கமலி.

“கிருபன்..”

“ம்?”

“என்ன?” இதமான குரலில் விசாரித்தாள்.

“இண்டைக்கு மன்னாருக்கு போகோணும்.”

“ஓ…!” என்றவளுக்கு இப்போது அவன் மனநிலை நன்றாகவே விளங்கிற்று. அதில் அவனுக்குத் தெம்பூட்டும் விதமாகப் பேச ஆரம்பித்தாள். “ஒண்டுக்கும் யோசிக்காதீங்கோ கிருபன். ஒட்டாம பழகுறது அவரின்ர குணமா இருக்கலாம். ஆனாலும், உங்களை வளத்து ஆளாக்கிவிட்டது அவர்தானே. அத நாங்க மறக்கக்கூடாது தானே. அதைவிட, நீங்க எந்த உதவியும் அவரிட்ட கேக்கப் போக இல்ல. சொந்தம் எண்டு வந்து நில்லுங்க எண்டுதானே கேக்கப் போறீங்க. அவர் வருவார், சரியா? இப்பிடி எல்லாத்தையும் நீங்க தனியா பாக்கிறது இந்தக் கலியாணம் நடக்கிற வரைக்கும் தான். அதுக்குப் பிறகு நான் இருப்பன். என்ர கிருபானோட எப்பவும் எல்லாத்திலையும். அதுக்காகத்தான் இதெல்லாம் எண்டு நினைச்சுக்கொண்டு போங்கோ.”

அவளின் பேச்சைக் கேட்டு கிருபனுக்கு நொடியில் மனம் நெகிழ்ந்து போனது. தனித்துப்போய் நிற்கிறோம் என்கிற உணர்வே அகன்று போயிற்று. அவன் அவளின் கிருபன். அவனுக்கென்று அவள் இருக்கிறாள். அந்த உணர்வின் கிளர்வில் பட்டென்று முத்தம் ஒன்றை அனுப்பிவைத்தான்.

“கிருபன்!” அதை எதிர்பாராமல் அதிர்ந்து அதட்டியவளின் குரலில் வெட்கச்சிரிப்பு.

அப்போதுதான் என்ன செய்தோம் என்பதே அவன் மண்டைக்குள் உறைத்தது. சிறு சிரிப்பு அவன் உதட்டிலும் மலர்ந்தது. தன் ஆழ்ந்த குரலில், “பிடிக்கேல்லையா?” என்றான்.

“பிடிக்கேல்லை எண்டு சொன்னா என்ன செய்வீங்க?”

“திருப்பித் தரச்சொல்லி கேப்பன்.” சன்னச் சிரிப்புடன் சொன்னான் அவன்.

அவனின் கெட்டித்தனத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது. “ஆக, அமுக்கினி மாதிரி இருந்தாலும் பொல்லாத கள்ளன் நீங்க, என்ன?” என்றாள்.

அவன் மனதினில் உல்லாசம். முகம் மலர்ந்து விகசித்தது. “ஆரம்பத்தில இருந்தே நீ எண்டு வந்திட்டா நான் நானா இருக்கிறேல்ல கமலி. நீ என்னை என்னவெல்லாமோ செய்ய வைக்கிறாய்.” என்றான் நேசம் மிகுந்த குரல

அவளுக்கு மனம் நிறைந்தது. “எப்பவும் என்னட்ட அப்பிடியே இருங்க கிருபன். எனக்கும் அதுதான் பிடிச்சிருக்கு. இப்ப நீங்க உங்கட மாமாவோட கதைக்கப்போறதும் எங்கட சந்தோசமான எதிர்கால வாழ்க்கைக்காக. அதால எதைப்பற்றியும் யோசிக்காம போயிட்டு வாங்கோ.” என்று தேற்றி அழைப்பைத் துண்டித்தாள்.

இருந்தாலும் மனம் கேட்க மறுத்தது. அவன் புறப்படுவதற்கு முதல் அவனைப் பார்த்துவிட எண்ணி அவன் வீட்டுக்கே சென்றாள்.

தனியே வந்து நின்றவளைக் கண்டு அதிர்ந்து நின்றான் கிருபன்.

“அரவிந்தனையும் கூட்டிக்கொண்டு வந்திருக்கலாமே?” அவளின் வீட்டினர் சம்மதித்திருந்தாலுமே இப்படி அவன் வீட்டுக்கே அவள் தனியாக வருவது அழகில்லையே என்று எண்ணிக் கேட்டான் அவன்.

அவனை முறைத்தாள் கமலி. “ஏன் தனியா வந்தா என்ன?” என்றபடி அவனை நோக்கி நடந்தாள்.

கிருபனுக்குள் பதட்டம் தொற்றிக்கொண்டது. அவன் திறந்து வைத்த வீட்டுக்கதவைக்கூட அடித்துச் சாத்தியிருந்தாள் அவள். அவன் கால்கள் அவையாகவே பின்னோக்கி நகரத்துவங்கின.

“உன்ர அம்மா அப்பா குறையா ஒரு சொல்லு சொல்லுற மாதிரி நாங்க நடக்கக் கூடாது தானே?” என்று, தன்மையாய் அவளுக்கு எடுத்துரைக்க முனைந்தான்.

“அப்பிடி அவே குறை சொல்லுற மாதிரி இப்ப இங்க என்ன நடந்தது?” சுவரில் மோதி நின்றவனின் முன்னே மிக நெருக்கத்தில் வந்து நின்று கேள்வி கேட்டாள் 

கிருபனுக்குப் பேச்சு நின்றுபோனது. நெருக்கத்தில் நின்ற அவளும் அவளின் கேள்வியும் அவன் வாயை அடைத்தது.

“என்ன சிம்ரன்? பேச்சக் காணேல்ல? போன்ல கிஸ் எல்லாம் வந்துது. அத இப்ப தரவேண்டியதுதானே!” சவாலாய் கேட்டாள் அவள்.

அவன் உதட்டினில் மெல்லிய முறுவல் அரும்பிற்று. விழிகள் வேறு அவன் கட்டுப்பாட்டை மீறி அவளின் இதழ்களுக்குச் சென்றது. அதன் ஈரலிப்பில் அவன் மனம் தடுமாற வேகமாகப் பார்வையை அகற்றிக்கொண்டான்.

அவன் தாடையைப் பற்றித் தன்னைப் பார்க்க வைத்தாள் கமலி. “என்ன? பார்வை எல்லாம் பலமா இருக்கு?” என்று அதட்டினாள்.

‘கடவுளே…’ அவளின் ஒவ்வொரு அதிரடியான செயலிலும் கிருபன் அதிர்ந்து நின்றான். மனம் வேறு தன் கட்டுக்களை உடைக்க முயன்றது. நெருக்கத்தில் தெரிந்த அந்த அழகிய முகத்தின்மீது அவன் விழிகள் படிந்தது. மனம் எதற்கெல்லாமோ ஆசைகொண்டது. அது தவறு என்று மூளை அறிவுறுத்த, “பிளீஸ் மா. வீட்டுக்கு போ!” என்றான் கெஞ்சலாய்.

“ஏன்? அப்பிடி என்ன நடந்திடும் எண்டு பயப்பிடுறீங்க? இப்பிடி கட்டிப் பிடிச்சிடுவன் எண்டா?” என்றவள் அவனை இறுக்கி அணைத்தாள். அவன் அதிர்ந்து நிற்கையிலேயே, “இல்ல, நீங்க போன்ல தந்தத நான் நேர்லையே தந்திடுவன் எண்டா?” என்றவள் எம்பி அவன் கன்னத்தில் இதழ்களைப் பதித்து எடுக்க கிருபன் நிலைகுலைந்தே போனான்.

அவளைக் கட்டி அணைத்துக்கொள்ள அவன் கைகளும் பரபரத்தது. அதற்குமேலும் முன்னேற அவன் மனம் உந்தியது. அது தவறாயிற்றே. அவன் ஒரு அடி எடுத்துவைத்தால் அவள் பத்து அடிகள் தாவுவாளே.

இந்த ராட்சசியிடம் திருமணம் ஆகிறவரைக்கும் அவன் மிகுந்த கவனமாய்த்தான் இருக்க வேண்டும். தடுமாறிய மனதை அடக்கியபடி தன் மார்பில் தலை சாய்த்திருந்தவளை குனிந்து பார்த்தான்.

“என்ன சிம்ரன் வெக்கப் படுறீங்களா? சத்தத்தையே காணேல்ல.” என்று கேட்டாள் அவள். 

எந்தச் சேதாரமும் நிகழாமல் அவளை எப்படி வீட்டுக்கு அனுப்புவது என்று அவன் யோசிக்க அவள் என்ன கேட்கிறாள்? அவன் உதட்டினில் சிரிப்பு அரும்பியது. “இந்தச் சிம்ரனை விடவே மாட்டியா?” என்றவனின் கை ஒன்று உயர்ந்து வந்து ஆசையோடு அவள் தலையை வருடிக்கொடுக்க ஆரம்பித்தது.

அவள் மாட்டேன் என்று மறுத்துத் தலையை அசைத்தாள். கூடவே, இதழ்களை அவன் மார்பினில் அழுத்தமாய் ஒற்றி எடுத்தாள்.

வருடிக்கொண்டிருந்த கிருபாவின் கை அப்படியே நின்றது. “கமலி!” அவன் கட்டுப்பாடுகள் உடைய ஆரம்பித்தன.

“கமலிக்கு என்ன?” அவளின் உதடுகள் இன்னுமொருமுறை அவன் மார்பினில் பதிந்து மீண்டது. 

“பிளீஸ் மா, இதெல்லாம் இப்ப வேண்டாமே. வீட்டுக்கு போ.” என்றான் மீண்டும் கெஞ்சலாய். 

“எனக்கு வேணுமே!” என்றவளின் உதடுகள் அவன் மார்புக்கு முத்தமிடுவதை நிறுத்தவே இலை. 

அதற்குமேல் அவனால் முடியவில்லை. “நானும் கட்டிப் பிடிக்கவா?” அவளின் காதோரமாய் ரகசியக் குரலில் கேட்டான்.

“சுண்டுவிரல் நகம் கூட படக்கூடாது. பட்டுதோ அடி வெளுப்பன்!” என்றாள் அவன் மார்புக்குள் இருந்து. 

அவன் உதட்டு முறுவல் விரிந்தது. அவள் அணைப்பாளாம்; முத்தமிடுவாளாம். என்ன வேண்டுமானாலும் செய்வாளாம். ஆனால் அவன் தொடக்கூடாதாம். எல்லாவற்றிலும் அடாவடித்தனம். அவள் வைத்ததுதான் சட்டம். இவளைச் சந்தித்திராவிட்டால் அவன் என்ன ஆகியிருப்பான்? அவன் வாழ்க்கை உப்புச் சப்பில்லாமல் போயிராதா? நினைத்துப் பார்க்கவே பயமாய் இருந்தது. அவனுக்கே அவனுக்கென்று அவள் கிடைத்துவிடுவாளா? அவன் மனம் காரணமற்றுக் கலங்கியது.

“எங்கட கலியாணம் நடக்கும் தானே?” என்று அவளிடமே கேட்டான்.

தன் அணைப்பை விலக்காது அவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் கமலி. “நீங்க என்ர கழுத்தில தாலி கட்டாட்டி நான் உங்கட கழுத்தில கட்டுவன். சோ கலியாணம் கட்டாயம் நடக்கும். இங்க கேள்வி கலியாணம் நடக்குமா எண்டுறது இல்ல. ஆர் ஆரின்ர கழுத்தில கட்டுறது எண்டுறது!”

அவளின் பதிலில் அவன் முகம் மலர்ந்து சிரித்தது. ஒரு உறவைத்தான் தேடினான். அவனின் மொத்த உலகமாவும் வந்திருக்கிறாள் அவள். அவளின் பொய்யான கட்டளையை மீறி அவளை இறுக்கி அணைத்து அவளின் நெற்றியில் தன் உதடுகளை அழுத்தி எடுத்தான் அவன். “தேங்க்ஸ் என்ர வாழ்க்கையில வந்ததுக்கு. என்ன விரும்பினதுக்கு. இந்தளவுக்கு என்னை நம்புறதுக்கு. இனி என்னோட வாழப்போற வாழ்க்கைக்கு. எல்லாத்துக்கும்..” என்றவனின் குரல் கடைசியில் கரகரத்துப்போனது. 

கருத்திட

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock