சோமசுந்தரத்தின் முன்னே அமர்ந்து இருந்தான் கிருபன். ஜெயந்தி, பிள்ளைகள் என்று எல்லோரும் அங்குதான் இருந்தனர். கமலி தந்த தைரியத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு வந்திருந்தாலும், காலம் காலமாய் மாமாவின் முன் ஒதுங்கி நின்றே பழகியவனுக்கு வார்த்தைகள் வருவேனா என்று நின்றது.

“என்ன கதைக்கோணுமாம்? எனக்கு வேல இருக்கு!” என்றார் சோமசுந்தரம் ஜெயந்தியிடம்.

அவர் அவனைப் பார்த்தார்.

பேசும் நேரம் வந்துவிட்டதைக் கிருபன் உணர்ந்தான். அதில், “அது மாமா… எனக்கு ஒரு பிள்ளையைப் பிடிச்சிருக்கு. அவவுக்கும் விருப்பம் தான். அவவின்ர வீட்டில உங்கள கூட்டிக்கொண்டு வர சொன்னவே..” என்று தட்டுத்தடுமாறி ஆரம்பித்து, கமலி வீட்டினரைப் பற்றிய விபரங்களைப் பகிர்ந்துகொண்டான்.

“எனக்குச் சொந்தம் எண்டு இருக்கிறது நீங்க மட்டும் தான் மாமா. வந்து கதைக்கிறீங்களா?” என்று நயமாய் வினவினான்.

அதைக் கேட்டவரின் முகத்தில் மெல்லிய கருமை படிந்தது. மற்றும்படி என்ன நினைக்கிறார், அவருக்குள் என்ன ஓடுகிறது என்று கணிக்க முடியாத முகபாவத்தோடு தரையைப் பார்த்தபடி அமர்ந்து இருந்தார்.

அவரின் பதிலுக்காகக் கனத்த மனதோடு அவரையே பார்த்திருந்தான் கிருபன். கழிந்த நொடிகள் ஒவ்வொன்றும், அவன் திருமணத்தை அவனே ஒப்பேற்றிக்கொள்வதற்கான கனம் மிகுந்தத நொடிகளாகக் கடந்தது. வேறு வழியில்லை. யாருமற்று நிற்கிறவன் இதையெல்லாம் கடந்துதான் ஆகவேண்டும். பொறுமையாகக் காத்திருந்தான்.

ஒரு கட்டத்தில், “இங்க பார் ஜெயந்தி.” என்று ஆரம்பித்தார் அவர். அது தனக்கானது என்று உணர்ந்து அவரைக் கவனித்தான் கிருபன். “வாற மாசம் துளசின்ர கலியாணம் இருக்கு. எனக்கு அதைப் பாக்கவே நேரம் இல்ல. இதுல சும்மா சும்மா அங்கேயும் இங்கயும் அலையேலாது. வளத்துவிட்ட கடமைக்கு மாமா எண்டு வருவனே தவிர வேற எதுவும் என்னட்ட எதிர்பாக்க வேண்டாம் எண்டு சொல்லு. அதே மாதிரி இந்தக் கலியாணத்தால வாற எந்த நல்லது கெட்டதுக்கும் நான் பொறுப்பு இல்ல. என்னட்ட வந்து நிக்கவும் கூடாது!” என்றார் எந்த முகதாட்சண்யமும் இன்றி.

கிருபனின் முகம் கருத்துப் போனது. தொண்டைக்குள் எதுவோ அடைத்துக்கொண்டு வந்தது. பெரும் பாடுபட்டு அதை விழுங்கிக்கொண்டு, “இல்ல மாமா. வேற எதுக்கும் வந்து நிக்க மாட்டன். கலியாணத்தைக் கூடப் பெருசா செய்ற ஐடியா இல்ல. என்னட்ட இருக்கிறதை வச்சு சிம்பிலாத்தான் நடத்தப்போறன். இப்ப ஒருக்கா வந்து கதைங்க. பிறகு கலியாணத்துக்கு என்ர அம்மா அப்பா ஸ்தானத்தில் வந்து நில்லுங்க. அந்தளவும் போதும்.” என்றான் கனத்த மனதோடு.

அடுத்துவந்த ஒரு நாளில் கமலி வீட்டுக்கு சோமசுந்தரத்தையும் ஜெயந்தியையும் அழைத்துக்கொண்டு வந்தான் கிருபன். பரந்தாமன் இன்முகமாக வரவேற்று உபசரித்தார். கமலி தேநீரோடு பலகாரங்களைப் பரிமாறினாள். பரந்தாமனின் பெரியம்மா உட்படச் சுகுணா, அரவிந்தன் என்று எல்லோருமே அங்குதான் இருந்தனர்.

எதையும் நானாக முன்னெடுக்க மாட்டேன் என்று இறுக்கத்துடன் அமர்ந்திருந்த சோமசுந்தரம், அவரைத் தாண்டி சுண்டுவிரலைக்கூட அசைக்க விரும்பாத ஜெயந்தி, அவர்களின் அருகில் அமைதியாய் அமர்ந்து இருந்தாலும் இந்தச் சந்திப்பு எப்படி முடியுமோ என்கிற அழுத்தத்தைத் தனக்குள்ளேயே அடக்கியபடி இருந்த கிருபன் என்று எல்லோரையும் தன் அனுபவக் கண்களினால் எடைபோட்டுக்கொண்டார் பரந்தாமன்.

வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் அவர்களின் குடும்பம், பிள்ளைகள் பற்றி விசாரித்து, அப்படியே தன் வீடு, தொழில் என்று பகிர்ந்து, ஒரு திருமணப் பேச்சாக அல்லாமல் இரண்டு குடும்பங்கள் சந்தித்து உரையாடுவது போன்று, அந்தச் சந்திப்பை மிக லாவகமாகக் கையாண்டார்.

அவரின் அந்த இணக்கமான செய்கை கிருபனை மிகவுமே ஆசுவாசப்படுத்தியது. சற்றே தளர்ந்து அமர்ந்தான். அதன்பிறகுதான் அவன் பார்வை கமலியின் புறமும் சென்றது. விழிகளை மூடித்திறந்து அவளும் அவனை ஆற்றுப்படுத்தினாள்.

பொதுவாக நகர்ந்த பேச்சினிடையே கமலியின் நின்றுபோன முந்தைய திருமணத்தைப் பற்றியும் பகிர்ந்துகொண்டுவிட்டு, “எங்களுக்குப் பிள்ளைகளின்ர சந்தோசம் தான் முக்கியம். கமலிக்குக் கிருபனை பிடிச்சிருக்காம். கிருபனும் நீங்க வளர்த்த அருமையான பிள்ளை. அதால மறுக்கிறதுக்கு எங்களுக்கு எந்தக் காரணமும் இல்லை.” என்று தங்களின் சம்மதத்தைத் தெரிவித்தார் பரந்தாமன்.

சோமசுந்தரம் அவரைப்போல் எல்லாம் எந்த நாசுக்கும் பார்க்கவில்லை. “என்ர சொல்லுக் கேக்காம எவனோ ஒருத்தனை கட்டிப்போன இவன்ர தாய ஒதுக்கித்தான் வச்சனான். அப்பிடி ஒரு சகோதரமே எனக்கு இல்லை எண்டுதான் இருந்தனான். ஆனாலும், கட்டினவன பறிகொடுத்திட்டு வந்து நிண்டவள எப்பிடியோ போ எண்டு விட இல்ல. அவள் போன பிறகும், தாய் தகப்பன் இல்லாம நிண்ட இவனை ரோட்டில விடாம கூடவே வச்சிருந்து வளத்து, படிப்பிச்சு, ஆளாக்கி விட்டிருக்கிறன். இந்தக் காலத்தில அது எவ்வளவு பெரிய விசயம் எண்டு உங்களுக்கும் விளங்கும். அதுக்காக நாளைக்கு நடக்கிற எந்த நல்லது கெட்டதுக்கும் நீங்க என்னட்ட வந்து நிக்கக் கூடாது. தப்பித்தவறி இவன் வழிதவறிப் போய்ட்டான் எண்டா என்னட்ட வந்து கேக்கக் கூடாது. இனி, அவனுக்கு அவன் மட்டும் தான் பொறுப்பு. உங்களுக்கும் உங்கட மகளுக்கு இது ரெண்டாவது கலியாணம் மாதிரி. அவனுக்கு உங்கட மகள் கிடைக்கிறதே பெரிய விசயம். அதால உங்க ரெண்டுபேருக்கும் இது நல்ல முடிவா இருக்கலாம். மற்றும்படி.. கலியாணம் நடந்தா என்ர கடமைக்கு வந்து மாமன் எண்டு நிப்பன். அதுக்குமேல வேற எதுவும் எதிர்பார்த்திடாதீங்க.” என்றவரின் பேச்சில் பரந்தாமனே ஆடிப்போய்விட்டார் என்றால் கிருபனின் நிலை?

கிருபன் தனக்குள் நொறுங்கிப்போனான். ‘சொத்து சேர்த்து வைக்க அப்பா இல்ல. நல்லது கெட்டது சொல்லித்தந்து வளக்க அம்மாவும் இல்லாம போகப்போறன். நீ நல்லவனா கெட்டவனா எண்டுறதை நீ நடந்துகொள்ளுற முறையும் உன்ர நிலமையும் மட்டும் தான் சொல்லும். அதால நீ மற்ற பிள்ளைகளை விடவும் பத்து மடங்கு கவனமா இருக்கோணும் ஐயா.’ என்று, அன்று கடைசி நாட்களில் அன்னை சொன்ன வார்த்தைகளின் பொருளை முழுமையாக இன்றைக்கு உணர்ந்தான். தன் வலியைத் தனக்குள்ளேயே அடக்கிக்கொண்டு நிமிர்ந்தவனின் விழிகளில் பட்டாள் கமலி.

அவளுக்கும் இது அதிர்ச்சிதான் போலும். எப்போதும் மலர்ந்தே இருக்கும் முகம் சிவந்து போயிருந்தது. விழிகள் சொல்லமுடியாத ஏதோ ஒரு துக்கத்தைச் சுமந்து அவனையே நோக்கிற்று.

அதைப் பார்க்க முடியாமல், “மாமா, கமலிக்குக் கலியாணம் நிச்சயமானதே தவிர நடக்க இல்ல. இப்பிடி யோசிக்காம வார்த்தைகளை விடாதீங்கோ.” என்றான் வேகமாக.

“எல்லாம் ஒண்டுதான். கார்ட் அடிக்கிற வரைக்கும் போன கலியாணத்தில மாப்பிள்ளையும் பொம்பிளையும் கதைக்காமையா இருந்திருக்கப் போயினம்.” என்றுவிட்டு எழுந்துகொண்டார் அவர்.

அவர்கள் வந்தபோது வாசலுக்கே வந்து இன்முகமாய் வரவேற்ற பரந்தாமன் அவர்கள் புறப்பட்டபோது இருந்த இடத்தைவிட்டு அசையவே இல்லை. அழைத்துவந்த குற்றத்துக்காக கிருபன் மாத்திரமே சென்று ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டான். ஆட்டோ புறப்படுகிற அந்த நொடியில், “நீங்க அவளைப்பாத்து அப்பிடி கதைச்சிருக்கக் கூடாது மாமா!” என்றான் தன்னை அடக்க முடியாமல். 

இரண்டு பெண் பிள்ளைகளைப் பெற்றவர் இன்னொரு பெண் பிள்ளையைப் பார்த்து அப்படிச் சொல்லலாமா? ஏதோ ஒரு வகையில் தன் கோபத்தை அவரிடம் காட்டிய பிறகே அவன் மனம் சற்றேனும் அமைதியாயிற்று.

“பாத்தியா? ஊமைக்கோட்டான் மாதிரி இருந்துபோட்டு ஒரு பொம்பிளையைக் கண்டதும் என்னையே எதிர்த்துக் கதைக்கிறான். தாய்க்காரியும் இப்பிடித்தான் சொல்ல சொல்ல கேக்காம அவனைக் கட்டினாள். கடைசில என்ன பாடெல்லாம் பட்டவள் எண்டு பாத்தனி தானே? இவனும் துள்ளுறான். பொறு பாப்பம் இது எங்கேபோய் நிக்குது எண்டு.” போய்க்கொண்டிருந்த ஆட்டோவில் மனைவியிடம் சீறினார் சோமசுந்தரம்.

ஜெயந்திக்கும் கணவர் பேசியதில் உடன்பாடு இல்லை. அதை அவரை எதிர்த்துக்கொண்டு சொல்லிப் பழக்கமும் இல்லை என்பதில் வாயை மூடிக்கொண்டு அமர்ந்து இருந்தார்.

இங்கே கிருபனுக்குக் கமலியின் வீட்டினரை எதிர்கொள்ளவே முடியவில்லை. மாமா பேசிய பேச்சுக்களுக்கு என்ன விளக்கம் சொல்லப்போகிறான்? கலக்கத்துடன் மீண்டும் அவர்களின் முன்னே சென்று நின்றான்.

பெருத்த அமைதி. எல்லோர் மனமும் கனத்துப் போயிருந்தது. அனைவரின் பார்வையும் பரந்தாமன் மீதே. விழிகளை மூடி நெற்றியைத் தேய்த்துவிட்டபடி அமர்ந்து இருந்தார் அவர்.

என்ன வரப்போகிறதோ என்கிற கலக்கத்துடன் கிருபன் காத்திருக்க, “உங்களுக்கும் இந்த எண்ணம் தானோ தம்பி?” என்றார் கிருபனை நோக்கி. 

“அங்கிள் பிளீஸ்..” என்று அவன் வேகமாகச் சொல்லும்போதே, “அவரின்ர மாமா கதைச்சதுக்கு நீங்க ஏனப்பா கிருபனை இப்பிடி கேக்கிறீங்க? அவர் ஒண்டும் அவரின்ர மாமா இல்லை.” என்றாள் கமலி.

அதுவரை கிருபனை ஆட்டிப்படைத்த அத்தனை சஞ்சலங்களும் வடிந்து போயிற்று. அவனை அறிந்து வைத்திருக்கிறாள் அவனுடைய கமலி. இது போதும்! வார்த்தைகளால் வடித்துவிட முடியாத நேசத்தோடு அவளைப் பார்த்தான். முதன் முதலாய் அவளை இழுத்து தன் மார்புக்கூட்டோடு இறுக்கி அணைத்துக்கொள்ள வேண்டும் போலொரு வேகம் எழுந்தது. ஆனால், அதற்கு இதுவல்லவே நேரம். 

பரந்தாமனின் முன்னே வந்து நின்றான். “மாமா இப்பிடி கதைப்பார் எண்டு நான் நினைக்க இல்ல அங்கிள். அதேமாதிரி நானும் கமலிய அப்பிடி நினைக்க இல்ல. நினைக்கிறதுக்கு அதுல உண்மை இருக்க வேணுமே? இவ்வளவு காலமும் மாமான்ர குடும்பத்தோடதான் இருந்தனான். ஆனாலும், தனிமையை மட்டும் தான் உணர்ந்து இருக்கிறன். இப்ப ஒரு வீட்டில தனியாத்தான் இருக்கிறன். ஆனா, தனிமையை உணர்ந்தது இல்ல. கமலி என்னை உணர விடேல்ல அங்கிள். அவளுக்கு நான் எப்பிடி எண்டு எனக்குத் தெரியாது. ஆனா, எனக்கு அவள் கிடைக்கிறது வரம். அந்த வரத்தை நீங்க எனக்குத் தரவேணும் அங்கிள்.” என்றான் இறைஞ்சுதலாய்.

பரந்தாமன் நியாயவாதி. அதோடு, அவரவரை அவரவரின் குணநலன்களை வைத்தே கணிப்பவர். அந்த வகையில் சோமசுந்தரத்தின் பேச்சுக்கும் கிருபனுக்கும் சம்மந்தம் இல்லை என்பதை அறிவார். இருந்தபோதிலும் சோமசுந்தரத்தின் பேச்சை சாதாரணமாக ஒதுக்கிவிடவும் விரும்பவில்லை அவர். 

அதில், “எனக்கு என்ர பிள்ளைகள் சந்தோசமா இருக்கவேணும் தம்பி. அதாலதான் நீங்க எப்பிடி எண்டு மட்டும் தான் பாத்தனான். என்ர மகளுக்கு உங்களைப் பிடிச்சு இருக்கு எண்டுறதுக்காக உங்கட மாமாவா இருந்தாலும் அவளைப்பற்றி ஒரு வார்த்த பிழையா கதைக்கிறது எனக்குப் பிடிக்காது.” என்றார் தெளிவாக.

“நானும் எதிர்காலத்தில அதுக்கு அனுமதிக்க மாட்டன் அங்கிள். மாமா கதைச்சது எனக்கும் பிடிக்கேல்ல தான். ஆனாலும், அவர் சொன்ன மாதிரி என்னை வளத்து, படிப்பிச்சு, ஆளாக்கினது அவர் தான். அவர் இல்லாம என்ர கலியாணத்தை என்னால நடத்த ஏலாது அங்கிள். அதாலதான் சமாளிச்சு போகவேண்டி இருக்கு. ஆனா, எதிர்காலத்தில அவர் ஒரு சொல்லு சொல்லுற இடத்தில கமலிய நான் நிப்பாட்ட மாட்டன். என்னை நம்புங்க. நான் எப்பிடி இருக்க வேணும், எவ்வளவு கவனமா நடக்க வேணும் எண்டு எனக்கு அம்மா அப்பவே சொல்லித் தந்திட்டா. இனியும் எவ்வளவு கவனமா இருக்கவேணும் எண்டுறதை இண்டைக்கு என்ர மாமா எனக்குச் சொல்லிட்டார். நிச்சயமா அதுல இருந்து தவறிப்போக மாட்டன். மாமா கதைச்சதுக்கு நான் உங்களிட்ட மன்னிப்புக் கேக்கிறேன். அதை மறந்திடுங்கோ பிளீஸ்.” என்றான் கெஞ்சலாக.

தன் வாழ்க்கைக்காக தானே போராடும் அவன் நிலையைப் பார்க்க முடியாமல், “துணைக்கு ஆரும் இல்லாம நிக்கிற பிள்ளையை நீயும் வதைச்சுப் போடாத பரந்தாமா.” என்றார் அவரின் பெரியம்மா.

“அவன் நல்லவனப்பா. அந்த ஆள் முந்தியும் இப்பிடித்தான் எண்டு இவன் சொல்லி இருக்கிறான்.” என்றான் அரவிந்தனும்.

“இல்லாட்டியும் உங்கட மகளை இந்தக் கிருபனால ஒண்டும் செய்யேலாது அப்பா. சேட்டை விட்டார் எண்டா நானே தூக்கிப்போட்டு மிதிச்சிடுவன். “என்ற கமலியின் பேச்சில் அந்த வீடே தன் இறுக்கம் தளர்ந்து மென் புன்னகையைப் பூசிக்கொண்டது.

பொய்யாகவேனும் முறைக்கும் வலுவற்றுத் தன்னவளை நேசத்துடன் பார்த்தான் கிருபன்.