கிருபனின் கமலி – 15(2)

துளசியின் மணாளன் அவள் கழுத்தில் தாலியை பூட்டி முடித்தான். அர்ச்சதை தூவி எல்லோரும் ஆசிர்வதித்த பின்னர் புகைப்படத்துக்கு நிற்க ஆரம்பித்தனர். ஒரு வயதான அம்மா சிரமப்படவும் அருகில் நின்ற கமலி விரைந்து சென்று கையைப்பிடித்து அவரை மேடையேற்றிவிட்டாள்.

புகைப்படம் எடுத்ததும், அவரை இறக்கி விட்டுட்டே போவோம் என்று அவள் அங்கேயே சற்றுத் தள்ளி நிற்க, “அப்பா, கிருபன் அண்ணாவையும் கூப்பிடுங்கோவன், ஒரு போட்டோ எடுப்பம். வந்ததில இருந்து எல்லா வேலையும் அவர்தான் பாக்கிறார். பாவம் எல்லா. அவர் கட்டப்போற அந்த அக்காவும் வந்திருக்கிறா.” என்று மெல்லிய குரலில் சொன்னாள், துளசி.

இது கமலியின் காதிலும் விழுந்தது. என்ன சொல்லப்போகிறார் என்று அவளும் காத்திருந்தாள்.

வேகமாக மருமகனை ஒரு பார்வை பார்த்துவிட்டு மேடையிலேயே துளசியைச் சற்றுத் தனியாகக் கொண்டுவந்தார் சோமசுந்தரம். “நீ இனியும் சின்னப்பிள்ளை இல்ல. உனக்கு எண்டு ஒரு குடும்பம் வந்திட்டுது. உன்ர குடும்ப மானம், மரியாதை, கௌரவம் எல்லாத்தையும் நீதான் காப்பாத்த வேணும். சும்மா யோசிக்காம கண்டதையும் கதைக்கிறேல்ல. சொந்த பந்தம் என்னைப் பாத்து கைநீட்டி கேள்வி கேட்டுடக் கூடாது எண்டுதான் அவனை வீட்டில வச்சு வளத்து விட்டிருக்கே தவிர, அவன் எங்களுக்குச் சொந்தமும் இல்ல பந்தமும் இல்ல. அவன்ர இனமே வேற. எங்கட எந்த நல்லது கெட்டதுக்கும் அவனைக் கூப்பிட கூடாது. இத நல்லா ஞாபக்கம் வச்சுக்கொள்! பொறுப்பா நட. போ, அங்க உன்ர மனுசன் எங்களையே பாக்கிறார். போய் ஒழுங்கா நில்லு!” என்று அதட்டி அவளை அனுப்பிவைத்தார்.

இதையெல்லாம் கேட்டுத் துடித்துப்போனாள் கமலி. அவர்களைத் தன் சொந்தம் என்று அவன் நினைக்க, இந்த மனிதரானால் அவனை எந்த இடத்தில் வைத்திருக்கிறார்? ஆத்திரமும் அழுகையும் சேர்ந்து வந்தது. விழிகள் கலங்கிவிடாமல் இருக்கப் பெரும் பாடுபட்டுப் போனாள். இமைகளைச் சிமிட்டி, மூக்கை உறிஞ்சிவிட்டு பார்வையைச் சுழற்ற, அங்கே மேளகாரர்களைப் பொறுப்பாக நின்று வழியனுப்பிக்கொண்டு நின்றான் கிருபன்.

அவன் மீது ஒருவிதக் கோபம்தான் முகிழ்த்தது அவளுக்கு. விறுவிறு என்று சென்று அவன் கையைப் பற்றி இழுத்துக்கொண்டு மாடியேறினாள்.

“கமலி என்ன? அங்க நிறைய வேல கிடக்கு. நீ எங்க இழுத்துக்கொண்டு போறாய்? முதல் கைய விடு, நான் வாறன்.”

அவனுடைய எந்தக் கேள்விக்கும் அவள் பதில் சொல்லவில்லை. மாடியில் இருந்த ஒரு அறைக்குள் புகுந்து கதவை அடைத்தாள்.

கிருபனுக்குத் திகைப்பு. எல்லோரும் பார்க்க அவள் இழுத்துக்கொண்டு வந்ததே சரியில்லை. இதில், இதை யாரும் பார்த்தால் என்ன நினைப்பார்கள். வேகமாகக் கதவைத் திறக்கப் போனான்.

“கதவில் கையை வச்சீங்க எண்டா எனக்கு விசர் வந்திடும் சொல்லிப்போட்டன்!” இருந்த கோபத்துக்கு அவள் குரல் உயர்ந்து ஒலித்தது.

நடை நிற்க திரும்பி அவளைப் பார்த்த கிருபனுக்கு அவள் கோபமாய் இருக்கிறாள் என்று அப்போதுதான் புரிந்தது.

“என்னம்மா? ஆரும் ஏதும் சொன்னவையா?” அவளின் தகப்பன் அஞ்சியதுபோல் ஏதும் நடந்துவிட்டதோ என்று கலங்கிப்போனான் அவன். வேகமாய் அவளை நெருங்கி அவளின் முகம் பார்த்தான்.

அவளை அழுத்திய கோபத்தில் எதையும் யோசிக்காமல் அழைத்து வந்துவிட்டாள். இப்போது நடந்ததைச் சொல்லவும் பிடிக்கவில்லை. வேகமாக யோசித்து, “சாறி பிளிட்ஸ் ஒழுங்கா நிக்குது இல்ல. அதுதான்.. பிடிச்சுவிடுங்க.” என்றாள் குரலை சாதாரணமாகக் காட்டி.

‘இவள..’ என்று மனம் அலுத்துக்கொண்டாலும் அவனை மீறி அவன் உதட்டினில் இளஞ்சிரிப்பு அரும்பிற்று. “இதுக்குத்தான் அப்பிடி இழுத்துக்கொண்டு வந்தியா?”

“அதென்ன இதுக்குத்தானா எண்டு கேவலமா கேக்கிறீங்க? சாறி பிளிட்ஸ் ஒழுங்கா நிக்காட்டி எவ்வளவு விசர் வரும் தெரியுமா? ஒழுங்கா பிடிச்சு விடுங்க.” என்று முறைத்தாள் அவள்.

“வேட்டியே கட்டத் தெரியாது. இதுல சாறி பிளிட்ஸ் பிடிக்கத் தெரியுமா எனக்கு?” என்று கேட்டாலும் அவளின் முன்னே முழங்கால்(முட்டிக்கால்) இட்டபடி, “என்ன செய்யோணும்?” என்று கேட்டான்.

வேட்டி சட்டையில், நெற்றியில் திருநீறு சந்தனம் தீட்டியிருக்க, அன்றைய நாளுக்கான களைப்பைச் சுமந்திருந்த போதிலும், களை இழக்காதா கம்பீர முகத்தோடு தன் முன் மண்டியிட்ருந்தவனின் தோற்றம் அவளை வசீகரித்தது.

அவன் கன்னம் இரண்டையும் பிடித்துக் கிள்ளி தன் உதட்டினில் ஒற்றிவிட்டு, “வடிவா இருக்கிறீங்க கிருபன்.” என்றாள் கமலி.

அவன் கண்களில் சட்டென்று ஒரு தடுமாற்றம். வேகமாகச் சமாளித்துக்கொண்டு ஒரு பளீர் புன்னகையை அவளுக்குக் கொடுத்துவிட்டு, “நீயும்தான்.” என்றவன் தனக்குத் தெரிந்த வகையில் அவளின் பிளிட்ஸ்களை நேராக்கிவிட்டான்.

“ஓகேயா? இனி போவமா?” என்றபடி எழுந்தான்.

“போவம். அதுக்கு முதல் பொட்டு நேரா வச்சிருக்கிறனா பாருங்க? சைட்டுக்கு போன மாதிரி இருக்கு.”

“இல்லையே. நேராத்தானே இருக்கு.”

“அப்ப சரி. தலை குழம்பி இருக்கா?”

அவளுக்கு அவனை அங்கே பிடித்துவைக்க வேண்டும். அவனுக்கோ அவள் இப்படி நடப்பதற்கான காரணம் விளங்கவே இல்லை. “இல்லம்மா. வடிவாத்தான் இருக்கிறாய். ஏன் இப்பிடி திடீர் எண்டு தனியா கூட்டிக்கொண்டு வந்து கேக்கிறாய்?” என்றவனுக்கு அந்தத் தனிமையும் அவளும் தடுமாற்றத்தை தர ஆரம்பித்து இருந்தது. அதில், “வெளில போவமா? எங்களை ஆரும் இப்பிடி தனியா பாத்தா நல்லாருக்காது.” என்றான் மீண்டும்.

“போகலாம் போகலாம். என்ன அவசரம்? வாங்க ஒரு செல்பி எடுப்பம்.” என்றவள் நன்றாகவே அவனோடு நெருங்கி நின்று செல்பியைக் கிளுக்கினாள்.

ஒருமுறை அல்ல பலமுறை. அவன் தோளோடு தோள் உரசியபடி, அவனை அணைத்தபடி, அவன் மார்பில் சாய்ந்தபடி, அவன் கன்னத்தில் எம்பி உதடுகளை ஒற்றியபடி, அவன் கையை எடுத்துத் தன் தோளைச் சுற்றி போட்டபடி என்று அவளின் ஒவ்வொரு போஸ்களிலும் கிருபன் மிகவுமே தடுமாறிப்போனான்.

என்னை விட்டுவிடேன் என்கிற கெஞ்சலோடு அவளைப் பார்த்தான். அவள் விடவில்லை. பால்கனிக்கும் அவனை இழுத்துச் சென்று எடுத்தாள். அது ஒரு சின்னத் தடுப்புச் சுவர். சேலையில் நின்றதில் அவள் தடுமாற, “ஏய் பாத்து!” என்றவனின் கரம் அவளை ஒரே தூக்காகத் தூக்கி அறைக்குள் விட்டது.

அவளுக்கோ அவன் பற்றித் தூயோக்கிய இடுப்பு வலித்தது.

“கையா இல்ல வேற எதுவுமா? இப்பிடி நோகுது!” என்று அதற்கும் முறைத்தாள்.

அவன் கையோ தன்னவளின் இடையின் மென்மையை அறிந்து குறுகுறுத்தது. இனியும் இங்கே நின்றால் ஆபத்தில் தான் முடியும் என்பதை நான்கே உணர்ந்தவன், “வா போவம், நேரமாகுது.” என்றபடி வேகமாக நடந்தான்.

ஓடிவந்து அவன் முன்னே நின்றாள் கமலி.

“என்ர இடுப்பை நோகடிச்சிப்போட்டு எங்க போறீங்க? தடவி விடுங்க!”

கிருபனுக்குத் திகைப்பும் தடுமாற்றமும். “என்ன பிரச்சனை உனக்கு?” என்றவன் அவளை வளைத்துத் தன்னிடம் கொண்டுவந்தான். “விலகி நிப்பம் எண்டு நினைச்சா விடமாட்டியா?” என்றவனின் ஒரு கரம் அவளின் இடையில் அழுத்தத்தோடு பதிந்தது. பார்வையும் மாறிப்போயிற்று.

அவள் விலகவும் இல்லை, அவனுக்குத் தடை போடவும் இல்லை. அவனோடு நன்றாகச் சாய்ந்துகொண்டு, “தடவிவிடத்தான் சொன்னனான்.” என்றாள்.

கரும்பு தின்ன கூலியா? வலிக்காத இடங்களையும் அவன் கை வருடிக்கொடுக்க முயன்றது. அவள் தன் மேனியை இன்னுமே அவனில் சாய்த்தாள்.

“உங்கட கை என்ன செய்யுது?”

“என்ன செய்யுது?” கிறக்கத்துடன் திருப்பிக் கேட்டான் அவன்.

“சொல்லாததையும் செய்யுது.”

“ம்ஹூம்! அது தனக்குப் பிடிச்சதை செய்யுது. உனக்குப் பிடிக்கேல்லையா?” தன் முகத்தை அவள் முகத்துடன் உரசியபடி சன்னச் சிரிப்புடன் கேட்டான் அவன்.

விழிகளில் அவனுக்கான மயக்கத்தைக் காட்டியபடி இல்லை என்றாள் அவள்.

“பிடிக்கேல்லையா? விடு பிடிக்கிறமாதிரி செய்றன்.”

அதன் பிறகான நொடிகள் காதலர்களுக்கே உரித்தானது. மிகுந்த நெருக்கமானது. இருவரையும் மயக்கத்தில் ஆழ்த்திற்று. அவள் தன் முகத்தை அவன் மார்புக்குள் மறைத்துக்கொள்ள அவன் கைகள் அவளை தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டது. மனதினில் வார்த்தைகளில் சொல்லிவிட முடியாத நிறைவு.

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock