கிருபனின் கமலி 7

 

நாட்கள் அதன்பாட்டில் நகர்ந்தன. அன்று, மூன்று பக்கங்களும் தடுப்பினால் மறைக்கப்பட்டிருந்த அவனுக்கே அவனுக்கான குட்டிக் கேபினுக்குள் மடிக்கணணியோடு மல்லுக்கட்டிக்கொண்டு இருந்தான், கிருபன். சத்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கைபேசி தெரியாத இலக்கம் ஒன்றைச் சுமந்தபடி கிறுகிறுத்தது. கைகள் தன் வேலையை நிறுத்த யார் என்று புருவம் சுருக்கி யோசித்துவிட்டு எடுத்துக் காதுக்குக் கொடுத்தான்.

“நான் கமலி.” என்றது அந்தப் பக்கம். 

ஒரு நொடி திகைத்தாலும், “ஏதாவது பிரச்சினையா?” என்றான் வேகமாக. நடந்த விடயத்துக்காக என்றால் எப்போதோ அழைத்துத் திட்டியிருப்பாளே. கூடவே, இவளுக்கு எப்படி என் நம்பர் கிடைத்தது என்கிற யோசனையும் உள்ளூர ஓடிற்று.

“ஏன், நீங்க எனக்குத் தந்த தலைவலி காணாதோ?” பட்டென்று வந்த பதிலில் அவன் அமைதியாகிப்போனான். புருவத்தைச் சுரண்டிவிட்டு, “சொறி!” என்றான் தயக்கம் நிறைந்த குரலில்.

“உங்கட சொறி எனக்குத் தேவையில்ல. இண்டைக்குப் பின்னேரம் நாலுமணி போலச் சங்குப்பிட்டி பாலத்தடிக்கு வாங்கோ. கதைக்கவேணும்!” என்று சொல்லிவிட்டு, பதிலை எதிர்பாராமல் அழைப்பைத் துண்டித்து இருந்தாள் அவள். 

தலையைப் பற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டான் கிருபன். அதன் பிறகு வேலையில் கவனம் செலுத்த இயலவில்லை. என்னடா என்ற அரவிந்தனிடமும் மழுப்பினான். அவனிடம் மறைத்துவிட்டு அவனுடைய தங்கையைச் சந்திக்கப் போகிறோமே என்று அது வேறு குத்தியது.

வேறு வழியில்லை. இந்தச் சந்திப்பைக் கடந்தே ஆகவேண்டும்! 

—————————–

யாழ்ப்பாணத்தைப் பிற மாவட்டங்களுடன் இணைக்கும் இரண்டாவது தரைவழிப்பாதையாக இருக்கும் ஏ-32(A-32) நெடுஞ்சாலையில், யாழ்ப்பாணக் கடல் நீரேரியின் மீது அமைந்திருந்தது சங்குப்பிட்டிப் பாலம்.

இரண்டு பக்கமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரையிலும் நீலவர்ணத்தைப் போர்த்தியபடி கடல் சூழ்ந்திருந்தது. குட்டிக் குட்டி போட்டுக்கள் ஆங்காங்கே கடல் காற்றில் ஆடியசைந்தன. ஒருசிலர் தூண்டிலை வீசிவிட்டு இடுப்பளவு ஆழத்தில் காத்திருந்தனர். நாரைகளும் கொக்குகளும் பறப்பதும் இருப்பதுமாகச் சுதந்திரமாக விளையாடின. நெடுஞ்சாலையின் இருபக்கமும் தூண்களைப்போலே உயர்ந்து நின்ற சூரியகலம் பொருத்தப்பட்ட மின்விளக்குகள் அவ்விடத்தை இன்னுமே அழகூட்டின. உன்னையும் சேர்த்துத் தூக்கிக்கொண்டு போய்விடுவேன் என்று கடல்காற்று மிரட்டிக்கொண்டிருந்தது. பாலம் தொடங்கும் வாயிலில் சுற்றுலாப் பயணிகள் நின்று நிதானித்துப் பாலத்தின் அழகை ரசித்துவிட்டுச் செல்லும் வகையில் கடலுக்குள் அரைவட்ட வடிவில் மண் நிரப்பி ஆங்காங்கே வாங்கில்களையும் போட்டிருந்தனர்.

தன் பைக்கினைக் கொண்டுவந்து ஒரு கரையாக நிறுத்திவிட்டு, வந்துவிட்டாளா என்று விழிகளைச் சுழற்றினான் கிருபன். அவளைக் காணவில்லை. வரும்வரைக்கும் பைக்கிலேயே அமர்ந்திருந்தான். 

நீ தவறு செய்கிறாய் என்று மனது குத்திக்கொண்டே இருந்தது. அடிக்கடி சந்தித்ததில்லை என்றாலும், பார்க்கிற பொழுதுகளில், “சுகமா இருக்கிறீரோ? நீர் நல்ல கெட்டிக்காரனாம் எண்டு தம்பி சொல்லுவான். இன்னுமின்னும் மேல போகவேணும். சரியோ!” என்று தட்டிக்கொடுக்கும் பரந்தாமன், அவர்களின் வீட்டில் இறைச்சிக்கறி சமைத்தால் அவனுக்கென்று ஒரு பங்கினை மறக்காமல் கொடுத்துவிடும் சுகுணா, இவன் ஒதுங்கியே போனாலும் விடாமல் நட்புப் பாராட்டும் அரவிந்தன் இவர்களுக்கெல்லாம் அவன் செய்கிற பிரதியுபகாரம் என்ன? இதுவா?

யாருமே இல்லாமல் இருக்கிறவன் உறவுபோல் கிடைத்த இந்த நல்லுள்ளங்களுக்குச் செய்வது சரியா?

யோசிக்காமல் புரிந்துவிட்ட பிசகு பேசாமல் தீராது என்று தெரிந்ததால் தான் வந்திருந்தான். இன்றோடு இதை பேசி முடித்துவிட்டு முற்றிலுமாக ஒதுங்கிவிட வேண்டும் என்கிற முடிவோடு அவளுக்காகக் காத்திருந்தான். 

சற்று நேரத்திலேயே அவளின் ஸ்கூட்டியும் வந்து இவனருகில் கரை ஒதுங்கிற்று. இதயத்தின் தடதடப்பு சற்றே அதிகரித்தது. ஹெல்மெட்டை கழற்றி வைத்துவிட்டு அங்கிருந்த வாங்கிலில் சென்று அமர்ந்துகொண்டாள் கமலி. அவனால் அதே வாங்கிலில் அடுத்த முனையில் கூட அமர முடியவில்லை. ஹெல்மெட்டை கையிலேயே தொங்கவிட்டபடி, அவளோடு பேசுவதற்கு ஏதுவாக நின்றான்.

இடைவெளி விட்டு இருவர் அமர்வதால் தவறாகப் படச் சாத்தியமில்லாத நீண்ட வாங்கு. இருந்தும் அமராமல் நிற்கிறான். சினம் துளிர்க்க, “பக்கத்தில இருந்தா உங்கட கற்பு கரைஞ்சு போயிடும் எண்டு பயமா?” என்று சிடுசிடுத்தாள் கமலி. 

பதட்டம் போய்ச் சிரிப்பு வந்துவிடும் போலாயிற்று கிருபனுக்கு. அவளின் வாய்த்துடுக்கு அவன் அறியாததா என்ன? சிரிப்பை வேகமாக மறைத்துக்கொண்டு அதைவிட வேகமாக மற்ற முனையில் அமர்ந்துகொண்டான்.

“கவனம்! காத்து அடிச்சுக்கொண்டு போயிடும்!” என்றாள் கடுப்புடன். 

அவன் பேசாமல் பார்க்க, “பக்கத்தில இருக்கிறதுக்கே இவ்வளவு யோசிக்கிற நீங்க அண்டைக்கு ஏன் அப்பிடிக் கேட்டீங்க?” என்று, எந்த முன்னுரையும் இல்லாமல் ஆரம்பித்தாள் கமலி.

அவன் முகம் சுருங்கிப் போயிற்று. ‘நீ வேணும் எண்டு நினைச்சன். அதால கேட்டன்!’ என்பதைச் சொல்ல முடியவில்லை. இப்போதெல்லாம் இரவுகள் எல்லாம் உன் நினைவுகளோடே கழிகிறது என்பானா? இல்லை, உன்னைத் தாண்டிய உலகம் ஒன்று என்னிடம் இல்லை என்பானா? விழிகள் தவிப்புடன் அவளில் படிந்து மீண்டது.

மனத்தைத் திறக்கிற சாவி எல்லோரிடமும் இருந்துவிடுவதில்லையே. 

“சொல்லுங்கோ! என்ன பிரச்சினை உங்களுக்கு? இந்தச் சொறி எனக்குச் சொல்ல வேண்டாம். நீங்க பாக்கிற, சந்திக்கிற எல்லாப் பெட்டைகளிட்டயும் போய் என்ன கலியாணம் கட்டுறியா எண்டு கேக்க மாட்டீங்க. ஓம் தானே? பிறகு ஏன் என்னட்ட மட்டும் அப்பிடி கேட்டீங்க? உங்கள சலன படுத்திற மாதிரியோ இல்ல அப்பிடி யோசிக்கத் தூண்டுற மாதிரியோ நான் நடந்தேனா?”

அவளின் கேள்வியில் அவன் பதறிப்போனான். “என்ன இது? நீ அப்பிடியான பிள்ளை இல்ல. நான் ஏதோ யோசிக்காம பாத்த வேலைக்கு…” அவளை ஒருமையில் அழைக்கிறோம் என்பதைக்கூட உணராமல் அவசரமாகச் சொன்னான் அவன். 

அவள் அவனை முழுமையாகப் பேசிமுடிக்க விடவில்லை. நடுவில் இடையிட்டு, “இல்ல! நீங்க யோசிக்காம கதைக்க இல்ல!” என்று அடித்துச் சொன்னாள். “அண்டைக்கு நீங்க உடனேயே சொன்ன சொறிய வச்சு இவ்வளவு நாளும் நானும் அப்பிடித்தான் நினைச்சனான். ஆனா, அப்பிடி இல்லை எண்டு உங்கட வீட்டை வந்து உங்களைப் பாத்த பிறகுதான் தெரிஞ்சது. எங்கட வீட்டை வாறேல்ல. அண்ணாவோட முந்தி மாதிரி பழகிறேல்ல. அதுக்காவது நீங்க என்னட்ட அப்பிடி கேட்டது காரணம் எண்டு சொல்லலாம். என்னவோ வாழ்க்கையே இடிஞ்சு போன ஆள் மாதிரி உங்கட இந்த மெலிவுக்கு என்ன காரணம்? நானே அதைப் பெருசா எடுக்கேல்ல. நீங்க மட்டும் ஏன் இவ்வளவு சீரியஸா எடுத்து இப்பிடி மாறிப்போய் இருக்கிறீங்க?”

அவளின் கேள்விகளில் இருந்த உண்மையில் நெஞ்சமெங்கும் மிகப்பெரிய அந்தரிப்பு(தவிப்பு). பதிலைச் சொல்ல முடியாமல் பார்வையைக் கடலின் மீது அலையவிட்டான். அங்கே ஆடிக்கொண்டிருந்த போட்டினைப்போலவே அவன் மனமும் நிலைகுலைந்து தள்ளாடிக்கொண்டிருந்தது. “நான் எப்பவுமே மெலிவுதான்..” என்று சமாளிக்கப் பார்க்க, “டேய் சிம்ரன்! எனக்கு உன்ன கிட்டத்தட்ட ஆறுமாதமா தெரியுமடா!” என்றாள் அவள் பல்லைக் கடித்துக்கொண்டு.

அதிர்ந்துபோய்த் திரும்பிப் பார்த்தவனுக்குச் சிரிப்பு வந்துவிடும் போலிருந்தது. அவசரமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். அவளின் கோபம் அவன் இதயத்தின் மெல்லிசையை மீட்டிவிட்டதில் இனம்புரியாத இனிமை ஒன்று அவனைச் சூழ்ந்தது.

“யோசிக்காம கதைக்கிற அளவுக்கு நீங்க சின்னப்பிள்ளை கிடையாது. அதைவிட நீங்க காதலை சொல்ல இல்ல. என்னைக் கலியாணம் கட்டுறியா எண்டுதான் கேட்டீங்க. ஏன் அப்பிடி கேட்டீங்க. எனக்கு அதுக்கான முறையான விளக்கம் வேணும்.” உண்மையைச் சொல்லாமல் விடமாட்டாள் என்று புரிந்துவிட ஹெல்மெட்டை வாங்கிலிலேயே வைத்துவிட்டு வேகமாக எழுந்து நடந்தான் கிருபன். 

நெஞ்சுக்குள் பெரும் புழுக்கம். அந்த அரைவட்ட நிலப்பரப்பின் அடுத்த முனைக்குச் சென்று அவளுக்கு முதுகு காட்டிக்கொண்டு நின்றான். தன் வெளிச்சத்தைக் கடலுக்குள் பாய்ச்சியபடி சூரியன் கரையொதுங்கிக்கொண்டிருந்தது.

ஆழிப்பேரலைக்குள் அகப்பட்டுவிட்ட படகினைப்போன்று கிருபனின் மனம் அமைதியிழந்து அலைபாய்ந்தது. அவள் கேட்கிற கேள்விக்கு உண்மையைச் சொல்வது என்றால் அவன் தன் மனதைச் சொல்ல வேண்டும். அங்கே அவள் தன் அன்னையின் இடத்தைப் பிடித்திருப்பத்தைச் சொல்ல வேண்டும். என்ன செய்யப் போகிறான்? 

அரவிந்தன் கண் முன்னே வந்து போனான். சுகுணாவும் பரந்தாமனும் கனிவுடன் அவனை நோக்கிப் புன்னகைத்தனர். விழிகளை இறுக்கி மூடித்திறந்தான். மன்னிப்பைக் கேட்டு மனதை மறைத்துவிடுவோம் என்று எண்ணியிருந்தானே. அவள் தொடக்கத்திலேயே உன் மன்னிப்பு எனக்குத் தேவையில்லை என்று கத்தரித்துவிட்டாளே!

அவளும் அவனருகில் வந்து நிற்பது தெரிந்தது. “நிறைய நேரம் என்னால இங்க மெனக்கேடேலாது.” என்றாள் அறிவிப்புப் போன்று. 

அப்போதுதான், மெல்லிய இருள் கவியத் தொடங்குவதைக் கவனித்தான். கையோடு அவனுடைய ஹெல்மெட்டையும் அவள் கொண்டு வந்திருப்பது தெரிய, கையை நீட்டி அதை வாங்கிக் கொண்டான்.

“ஏன் அப்பிடிக் கேட்டனான் எண்டு உண்மையா எனக்கும் தெரிய இல்ல. ஆனா நான் கேட்டதுக்கு எந்த விதத்திலையும் நீ காரணமே இல்ல!” என்று அதை முதலில் தெளிவுபடுத்தினான் அவன். தொடர்ந்து, “நிம்மதியா இருந்த உன்ன நான்தான் குழப்பி விட்டுட்டன்.” என்று, மிகுந்த வருத்தத்தோடு சொன்னான்.

அதற்கு ஏதும் அவள் சொல்வாளோ என்று பார்க்க, முழுவதையும் சொல்லி முடி என்பதுபோல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் அவள். 

“அண்டைக்கு உன்ர வாய் என்னைக் கோபமா திட்டினாலும் கை பாசத்தோட என்ர காயத்தைக் கவனிச்சது. அந்த நிமிசம் நீ எனக்கு என்ர அம்மா மாதிரி தெரிஞ்சனி(தெரிந்தாய்). அவாதான் என்னை விட்டுட்டு போய்ட்டா. நீயாவது பக்கத்திலையே வேணும் எண்டு நினைச்சதும் யோசிக்காம வாய விட்டுட்டன்.” 

அவளைப் பாராமல் கடலின் மீது பார்வையைப் பதித்தபடி சொன்னவனைத் திகைப்புடன் பார்த்தாள் கமலி. நேசம், பாசம், ஈர்ப்பு, காதல் என்று எதையாவது சொல்லுவான் என்று யோசித்தவள் அவளை அவன் தன் அன்னையோடு ஒப்பிட்டுப் பார்த்திருப்பான் என்று நினைத்தும் பார்க்கவில்லை.

“நீ திட்டவும் தான் உச்சி மண்டையில ஓங்கி அடிச்ச மாதிரி நிதர்சனம் விளங்கினது. உண்மையா நான் அப்பிடிக் கேட்டிருக்கக் கூடாது. கேட்டுட்டன். அதை மாத்தேலாது. சொறி வேணாம் எண்டு சொல்லிப்போட்டாய். வேற என்ன நான் சொல்லுறது?” என்று அவளின் முகம் பார்த்தான். “என்னை மன்னிச்சு நடந்ததை மறக்க மாட்டியா?” அவனின் யாசிப்பில் கமலிக்கு நெஞ்சுக்குள் என்னவோ செய்தது.

ஒரு வழியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு, “நான் மன்னிக்கிறது மறக்கிறது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். அந்தக் கேள்விக்கான உங்கட நிலைப்பாடு இப்ப என்ன?” என்றாள் அவனின் முகம் பார்த்து. 

ஒருகணம் மிகவுமே தடுமாறிப்போனான் அவன். வேகமாக மீண்டும் பார்வையைத் திருப்பிக்கொண்டான்.

“அதுதான் யோசிக்காம கேட்டான் எண்டு சொன்னனே. மன்னிப்பு ம் கேட்டேனே…” அவன் சமாளிக்க முற்பட, “சிம்ரன்!” என்று எச்சரித்தாள் அவள். அதில் பொய் பேசாதே என்கிற தொணி அழுத்தமாய் இருந்தது.

அதை உணர்ந்ததுபோல் காட்டிக்கொள்ளாமல், “என்ர பெயர் கிருபன்!” என்றான் வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுக்க முயன்றபடி.

“அப்பிடியா சிம்ரன்? அப்பிடியே நான் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்லுங்கோ பாப்பம்.”

“அதுதான் சொன்னேனே. அந்த நேரம் யோசிக்காம கேட்டுட்டேன் எண்டு.” 

“அண்டைக்கு நீங்க என்ன சிட்டுவேஷன்ல கேட்டீங்க எண்டு நான் கேக்கேல்லை. இப்ப உங்கட நிலைப்பாடு என்ன எண்டு கேக்கிறன். விளங்குதா?” இனியும் அவன் மழுப்ப முடியாத அளவுக்குத் தெளிவாகக் கேட்டாள் அவள்.

சற்று நேரம் அவனிடம் மௌனம் மட்டுமே நிரம்பியிருந்தது. கடல் மீதே பார்வை இருக்க, “உனக்கு நான் பொருத்தமில்லை.” என்றான் மெல்லிய குரலில்.

“காரணம்?” அடுத்த நொடியே பறந்து வந்தது கேள்வி. 

அவனுக்கு எதுவோ தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது. சிலவற்றை இலகுவாகப் பேசிவிடவே முடியாது. ஆனால், பேசியே ஆகவேண்டிய நிலை. அதில், “என்ர அப்பா சாதி குறைவு.” என்றான் வறண்ட குரலில்.

“ஓ..!” என்றவள் கையைத் திருப்பி நேரம் பார்த்துவிட்டு, “நேரமாயிட்டுது. நான் போயிட்டு வாறன்!” என்று புறப்பட்டாள்.

தவித்துப்போனான் கிருபன். உன் நிலைப்பாடு என்ன என்று கேட்டு அவன் நெஞ்சுக்குள் இருந்தவற்றை எல்லாம் பிடுங்கியவள் தான் என்ன நினைக்கிறாள் என்று சொல்லாமல் புறப்படுகிறாளே. ஒன்றும் சொல்லாமல் போகிறவளையே அவன் விழிகள் தொடர்ந்தது. அவளிடம் தந்தையைப் பற்றிச் சொன்னபிறகு அவளும் பேசாமல் போனதில் சுளீர் என்று ஒரு வலி அவன் இதயத்தைத் தாக்கிற்று.

கமலியின் ஸ்கூட்டி அருகே ஒருவர் உடன் மீன், இறால் வகைகளை விற்றுக்கொண்டிருந்தார். அதைப் பார்த்துவிட்டு வீட்டுக்குக் கொஞ்சம் வாங்கினாள் கமலி.

ஸ்கூட்டி சீட்டினை உயர்த்தி அவள் பர்ஸ் எடுப்பதற்குள், “நான் குடுக்கிறன்.” என்றபடி விரைந்து வந்தான் கிருபன்.

“நீங்க ஏன் குடுக்கோணும்?” புருவம் சுருக்கிக் கேட்டாள் அவள். 

இதற்கு என்ன பதிலைச் சொல்வது? “எத்தனை நாள் எனக்கு வயிறு நிரம்பச் சாப்பாடு தந்து இருப்பீங்க? ஆன்ட்டி இப்பவும் இறைச்சிக்கறி சமைச்சா குடுத்துவிடுவா. நானே குடுக்கிறன்.” என்று பின் பொக்கெட்டில் இருந்த பர்ஸை எடுத்துப் பணத்தை அவரிடம் நீட்டினான், அவன்.

“அண்ணா! மீன் வாங்கினது நான். காசும் நீங்க என்னட்ட தான் வாங்க வேணும். இல்லையோ மீனை திருப்பித் தந்திட்டு போயிடுவன்.” என்று அவரிடம் தானே பணத்தைக் கொடுத்தாள் கமலி.

“கலியாணத்துக்குக் கேப்பாராம், உனக்கு நான் பொருத்தமில்லை எண்டு சொல்லுவாராம். பிறகு, மீனுக்குக் காசு குடுப்பாராம். என்ன பாத்தா எப்பிடி தெரியுது உங்களுக்கு? வாற ஆத்திரத்துக்கு ஊதி விட்டுட்டு போயிடுவன். நடுக் கடலுக்க போய்க் கிடப்பீங்க!” என்றுவிட்டுப் போனவளை முகம் முழுக்க நிறைந்த சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தான், கிருபன்.

அவள் பார்வைக்கு மறைந்ததும், ‘அந்தளவுக்கா மெலிஞ்சு போயிருக்கிறன்.’ என்று தன்னையே குனிந்து பார்த்தான். அவளுடைய, ‘சிம்ரன்’ வேறு நினைவில் வந்து அவன் உதட்டுச் சிரிப்பை பெரிதாக்கிவிட்டது.

கருத்திட 

error: Alert: Content selection is disabled!!
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.

Powered By
Best Wordpress Adblock Detecting Plugin | CHP Adblock