அன்று பரந்தாமனுக்கு ஐம்பத்திஐந்தாவது பிறந்தநாள். வீடே கோலாகலமாக தயாராகிக்கொண்டு இருந்தது. அவருக்கு இதிலெல்லாம் பெரிய நாட்டமில்லை என்றாலும் கமலிக்கு இந்தக் கொண்டாட்டங்களில் எல்லாம் பெரும் விருப்பம் என்று தெரியுமாதலால் மறுப்பதில்லை.
கூடவே, வேலை காரணமாக அவர் வீட்டில் தங்குவதில்லை. எப்போதுமே ஊர் ஊராக அலைந்துகொண்டிருப்பார். உறவினர்களின் விசேசங்களுக்குக் கூடப் போவதற்கு நேரம் அமைவது குறைவு. மனைவி பிள்ளைகளை மாத்திரமே அனுப்பிவைப்பார். ஆதலால், இந்த நாளில் உறவினர் நண்பர்கள் எல்லோரையும் வீட்டுக்கு வரச்சொல்லி, பேசிச் சிரித்து, அளவளாவி என்று இந்த நாளை அவருமே பயன்படுத்திக்கொள்ளுவார்.
கேக் செய்வது, பலகாரங்கள் செய்வது, சமைப்பது எல்லாம் கமலிக்குப் பிடித்தமான காரியங்கள் என்பதில் வீட்டில் யாருக்குப் பிறந்தநாள் வந்தாலும் முதலாவது ஆளாக அவளே திட்டம் போட்டு அனைத்தையும் செய்துவிடுவாள். அதேதான் இந்த முறையும் நடந்திருந்தது.
பயற்றம் பணியாரம், அரியதரம், வெட்டுப் பலகாரம் என்று இனிப்புக்கும், உறைப்புக்குப் பருத்தித்துறை வடை, கடலை வடை, ரோல்ஸ் என்று அனைத்தையும் அவளே செய்திருந்தாள். இரவு உணவைக்கூட, அன்னை, சித்தி என்று எல்லோரையும் சேர்த்துக்கொண்டு இடியப்பக் கொத்து ஏற்பாடாகி இருந்தது.
அதற்கு, ஆட்டிறைச்சிக் கறியும், அது உண்ணாதவர்களுக்குக் கோழி இறைச்சிக் கறி என்றும் முடிவாகியிருந்தது. அப்படியே இரவு உணவு முடிந்து சற்றே உண்டகளை ஆறியபிறகு உண்பதற்கு வட்டிலாப்பமும் செய்து வைத்திருந்தாள்.
“ஏன் பிள்ளை இவ்வளவு?” என்று சுகுணாவே கேட்கும் அளவில் இருந்தது அவளின் தயாரிப்புகள்.
“நெடுகவா(எப்பவுமே) செய்றம் அம்மா? எப்பயாவது தானே. எனக்குப் பிடிச்சிருக்கு நான் செய்றன். உங்களுக்கு உதவி செய்ய விருப்பம் இல்லை எண்டா போங்க அந்தப் பக்கம்!” என்று அவரைத்தான் துரத்தினாள் அவள்.
“பாத்தியா மாலி, பாவம் பிள்ளை எண்டு சொன்னா எனக்கு வேல செய்ய விருப்பம் இல்லையாம். இவள் பிறக்க முதல் இந்த வீட்டுல எல்லா வேலையையும் ஆர் செய்ததாம்?” என்றார் சுகுணா தன் தங்கை மாலினியிடம்.
மாலினிக்கு பத்து மற்றும் பன்னிரண்டு வயதில் இரண்டு ஆண் பிள்ளைகள். பெண்பிள்ளை இல்லை. அதில், அக்காவின் மகள் என்பதை விடவும் கமலி மீது பிரத்தியேகமான பாசம் உண்டு. “அவளுக்கு விருப்பம், செய்யிறாள். விடுங்கோவன் அக்கா. இப்பத்திய(இன்றைய) பொம்பிளை பிள்ளைகள் எல்லாம் சமையல் தெரியாம இருக்கிறதுக்குப் பெயர்தான் சுதந்திரம் எண்டு சொல்லிக்கொண்டு அலையேக்க எங்கட பிள்ளை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கிறாள் எல்லா. அதுக்கு நாங்க பெருமை படவேணும்.” என்றார் அவளை விட்டுக் கொடுக்க மனம் வராமல்.
மாலினி தன் பக்கம் தான் நிற்பார் என்று கமலிக்குத் தெரியும். எனவே, “இன்னும் நல்லா விளங்கிற மாதிரி சொல்லுங்கோ சித்தி. இந்த வீட்டில என்ர அருமை ஒருத்தருக்கும் தெரியிறேல்ல.” என்றாள் வேண்டுமென்றே.
சுகுணாவுக்குச் சிரிப்பும் கோபமும் சேர்ந்தே வந்தது. “ஓமோம்! தெரியாமத்தான் பெத்து, வளத்து வச்சிருக்கிறம். போடி விசரி! அம்மா காலுக்க நோகுது, கையுக்க நோகுது, இடுப்பு வலிக்குது எண்டுகொண்டு நாளைக்கு வா. விறகுக் கட்டையாலேயே ரெண்டு போடுறன்!” என்று விட்டுப் போனார் அவர்.
“எனக்கு என்ர அப்பா இருக்கிறார். அவர் தடவிவிடுவார். இல்ல சித்திட்ட போய்த் தடவி விடச் சொல்லுவன். நீங்க தேவையில்லை போங்க போங்க! போய் வேலையைப் பாருங்க.” என்று அதற்கும் பதில் கொடுத்துவிட்டுத்தான் இருந்தாள் அவள்.
மாலை நான்கு மணியாயிற்று. தன் நண்பர்கள் குழாமை சேர்த்துக்கொண்டு பம்பரமாகச் சுழன்றுகொண்டிருந்தாள் கமலி. பரந்தாமன் ஆண்களுடன் ஹாலில் ஐக்கியமாகி இருந்தார். வீட்டின் பின்பக்கம் கல் அடுப்பைத் தயார் செய்து, அதில் விறகு மூட்டி, பெரிய சட்டிகளில் தயாராகிக்கொண்டிருந்த இறைச்சிக் கறிகளைக் கவனிப்பது மட்டுமே பெண்களின் வேலை. அதில், பெண்கள் கூட்டம் அடுப்பைச் சுற்றிக் கதிரைகளைப்(நாற்காலிகள்) போட்டுக்கொண்டு அவர்களின் சமாவை ஆரம்பித்திருந்தனர்.
அது கொரோனாவைத் தொட்டு, கொரோனா ஊசியின் நம்பகத் தன்மையை ஆராய்ந்து, போட்டவர்களுக்கு நடந்தவற்றைப் பேசி, சீரியல்களைச் சுற்றி, சூப்பர் சிங்கரில் தங்கி, கடைசியாக வெளிவந்த நீயா நானாவில் தேங்கி, அதில் பெண்கள் அணிந்து வந்திருந்த சேலை, நகைகளில் நிலைத்து, அடுத்த வீதியில் வசிக்கும் பரிமளா அக்காவின் மகன் ஏஜென்சி மூலம் வெளிநாட்டுக்குப் போனபோது நடந்த துன்பங்களைப் பேசி என்று பல புள்ளிகளைத் தொட்டுக்கொண்டிருந்தது.
பலகாரங்கள் தயார். உணவு தயார். பாத்திரங்களும் தயார். மேசை, அதற்கான விரிப்பு, கடைசி நேரத்தில் காணாமல் போகும் மெழுகுதிரி, கேக் வெட்ட கத்தி, அதைச் சுற்றும் ரிப்பன் என்று எல்லாமே தயார். அவள் குளித்துத் தயாராகினாள் சரி. நேரம் போவதை உணர்ந்து அவசரமாக அரவிந்தனை அழைத்தாள்.
“அண்ணா, நான் டக்கெண்டு குளிச்சிட்டு உடுப்பை போட்டுக்கொண்டு ஓடி வாறன். அதுக்கிடையில பலகாரமும் ஜூசும் எல்லாருக்கும் குடு, சரியோ. ஒவ்வொரு பேப்பர் தட்டிலையும் எல்லாப் பலகாரமும் ஒவ்வொண்டு வச்சாக் காணும். போகேக்க குடுக்கிறதுக்குத் தனியா பேக்ல போட்டு வச்சிருக்கிறன்.” என்றுவிட்டு, “சுதன், கரண் ரெண்டுபேரும் இங்க வாங்கோ!” என்று மாலினியின் பிள்ளைகளையும் அழைத்தாள்.
“எல்லாம் சரி. ஆனா நீ டக்கெண்டு வருவியா? அத சொல்லு முதல்!” அரியதரம் ஒன்று வாயில் அரைபட, கண்ணில் சிரிப்புடன் அவளைச் சீண்டினான் அரவிந்தன்.
அவனை மேலும் கீழுமாக அளந்துவிட்டு, “என்னை என்ன உன்ன மாதிரி ஒன்பது மணிக்கு போற இடத்துக்குப் பத்து மணிக்கு ரெடியாகிற ஆள் எண்டு நினைச்சியா?” என்று திருப்பிக்கொடுத்தாள் அவள்.
என்னக்கா என்று வந்த சின்னவர்களிடம், “அங்க பாருங்கோ ரெண்டுபேரும். ரெண்டு பெரிய ட்ரே வச்சிருக்கிறன். அண்ணா தாற பலகார தட்டை எல்லாம் அதுல வச்சு கொட்டாம எல்லாருக்கும் கொண்டுபோய்க் குடுக்க வேணும். சரியா?” என்றாள் விளக்கமாக.
“நான் செய்வன். ஆனா நீங்க எனக்கு நிறைய அரியதரம் தரவேணும். ஒண்டு காணாது!” என்றான் கரண் முகத்தைச் சுருக்கிக்கொண்டு.
அவனைப் பார்த்தாலே சாப்பாட்டுப் பிரியன் என்று சொல்லிவிடலாம். அந்தளவுக்குக் கொழுக் மொழுக் என்று இருந்தவனின் தலையில் கொட்டிவிட்டு, “அலையாதையடா குண்டோதரா!” என்று சிரித்தாள் கமலி.
“அப்பிடியெல்லாம் தரேலாது. ஆளுக்கு ஒண்டு எண்டு கணக்குப்பாத்துத்தான் எல்லாம் செய்திருக்கு.” என்றான் அரவிந்தன் மெய் போன்ற குரலில்.
நொடியும் யோசிக்காது, “அப்ப உங்கட ரெண்டு பேரின்ரயும் பெரியப்பான்ரயும் பெரியம்மான்ரயும் எனக்குத்தான் தரவேணும். நீங்க சாப்பிடக் கூடாது!” என்று நின்றான் அவன்.
அதற்குள் சட்டிகளுக்குள் தலையை விட்டுப் பார்த்துவிட்டு வந்த சுதன், “டேய்! அண்ணா பொய் சொல்லுறாரடா. அக்கா சட்டி நிறையச் செய்து வச்சிருக்கிறா.” என்றான் கண்கள் ஆசையில் மின்ன.
“அப்ப எனக்கு நிறையத் தருவீங்க தானே அக்கா?” என்று அவன் அதிலேயே நின்றான்.
“டேய் சாப்பாட்டு ராமா, வீட்டை போகேக்க இன்னும் நிறையக் கட்டித் தருவன் அக்கா. இப்ப கொட்டாம சிந்தாம குடுக்கவேணும் சரியோ. சாப்பிட்ட தட்டு எல்லாத்தையும் வாங்கி அங்க பாருங்கோ அந்தக் குப்பைவாளிக்கப் போடுறதும் உங்கட வேலைதான். வீட்டை குப்பையாக்கினா உங்க ரெண்டுபேருக்கும் தான் அடி விழும்!” என்று மிரட்டிவிட்டு, டின்பால், ஏலக்காய், கசகசா எல்லாம் போட்டுத் தயாரித்திருந்த மில்க் ஷேக்கை காட்டி, “ஐஸ் கட்டியை தட்டிப் போட்டுட்டுக் கப்புகளுக்க கவனமா வார்த்து குடு அண்ணா! நான் வெளிக்கிட்டுக்கொண்டு ஓடிவாறன் ” என்றுவிட்டு விரைந்தவள் நின்றாள்.
“உன்ர நண்பர் இண்டைக்கும் வரமாட்டாரோ?” என்று வெகு சாதாரணமான குரலில் விசாரித்தாள்.
“நாலரை போல வா எண்டுதான் சொன்னனான். இன்னும் நேரம் இருக்குதானே. எண்டாலும் வருவான் எண்டுர நம்பிக்கை இல்ல. வரவர அவனுக்கு என்ன பிடிச்சிருக்கு எண்டே தெரிய இல்ல.” சலிப்புற்ற குரலில் சொன்னான் அரவிந்தன். இப்போதெல்லாம் எதைக் கேட்டாலும் மழுப்புகிறவனை என்ன செய்வது என்றே புரிவதில்லை அவனுக்கு.
“விடு அண்ணா. அவன் வராட்டி எங்கட வீட்டு பங்க்ஷன் நடக்காதா என்ன? அவன் எல்லாம் ஒரு ஆள் எண்டு!” என்றுவிட்டு அறைக்குள் போனவள் முதல் வேலையாக அவனுக்குத்தான் அழைத்தாள்.
கமலி என்கிற பெயரைப் பார்த்ததுமே கிருபனுக்குள் அவன் கட்டுப்பாட்டை மீறிய ஒருவிதப் பரபரப்புத் தொற்றிற்று. எதற்கு அழைக்கிறாள் என்றும் கணிக்கமுடிந்தது. அவர்கள் சந்தித்துப் பேசி மூன்ற வாரங்கள் கடந்திருந்தது. ‘அன்று கேட்ட கேள்விக்கான இன்றைய உன் நிலைப்பாடு என்ன’ என்று கேட்டு அவனின் வாயைப் பிடுங்கியவள், அவள் என்ன நினைக்கிறாள் என்று சொல்லாமலேயே சென்று, இன்றுவரை அவனுடைய இரவுகளின் உறக்கங்களைப் பறித்துக்கொண்டிருந்தாள்.
அந்தச் சந்திப்பு நிகழாமல் இருந்திருந்தால் கூட, நடந்த நிகழ்விலிருந்து கடந்துவர முயன்று இருப்பானாக இருக்கும். இப்போதோ அவள் விட்டுவிட்டுப் போன இடத்திலேயே அவன் தேங்கி நின்றுகொண்டிருந்தான். அவர்களுக்குள் நடந்த சம்பாசணையைப் பலமுறை மீள் ஒளிபரப்பு நிகழ்த்திப் பார்த்துவிட்டான். அவள் எந்தப் பிடிமானத்தையும் அவனுக்குத் தந்தாய் தென்படவேயில்லை. முதல் இதையெல்லாம் ஏன் கூப்பிட்டுக் கேட்டால் என்றுகூடப் புரிபட மறுத்தது.
எல்லாவற்றையும் விட, மாமா குடும்பம் எதற்காக அவனை ஒதுக்கியதோ அதற்காகவே அவளும் ஒதுக்கிவிட்டாளா என்று நினைத்து நினைத்து மருகிக்கொண்டிருந்தான். இத்தனையும் அவனுக்குள் ஓடினாலும் அவளின் அழைப்பை அலட்சியம் செய்கிற அளவுக்குத் தைரியமற்று, “ஹலோ” என்றான்.
“உங்களுக்கு என்ன வெத்திலை பாக்கு வச்சு அழைச்சாத்தான் வருவீங்களோ? அப்பாக்கு பிறந்தநாள் எண்டு அண்ணா சொன்னவனா இல்லையா? வாறதுக்கு என்ன? உங்கட செருக்கை கொண்டுபோய் வேற எங்கயும் காட்டவேணும் விளங்கிச்சோ! இன்னும் பத்து நிமிசத்தில ஒழுங்கா வெளிக்கிட்டுக்கொண்டு வந்து இங்க நிக்கிறீங்க. இல்ல, என்ன நடக்கும் எண்டு எனக்கே தெரியாது. வையடா ஃபோன!” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தவளுக்கு அவ்வளவு ஆத்திரம்.
‘கேக்கிறதை எல்லாம் கேக்கிறது. பிறகு என்னவோ அப்பாவி மாதிரி பம்முறது. ராஸ்கல்! இண்டைக்கு மட்டும் வராம இருக்கட்டும். இருக்கு அவனுக்கு!’ அவனைத் திட்டித் திட்டியே குளித்துமுடித்தாள் அவள்.
இங்கே கிருபனோ அத்தனை மனச்சிணுக்கங்களும் எங்கேயோ மாயமாகியிருக்கச் சிரித்துக்கொண்டிருந்தான். உண்மையிலேயே போகும் எண்ணமில்லை. பெரியவர்களின் முகம் பார்க்க அவ்வளவு சங்கடம். ஆனால், போகாமல் இருப்பது சரியில்லையே என்று யோசித்துக்கொண்டு இருக்கையில்தான் அவள் அழைத்திருந்தாள். இப்போது அவளைப் பார்க்கும் ஆவலும் வந்திருந்தது.
மருந்துக்கும் மரியாதை தராதவளின் செய்கை என்னவோ மனதுக்குள் பனிச் சாரல்களை வீசியது போல் இருப்பது என்ன விந்தை என்று அவனுக்குப் பிடிபடவேயில்லை.
பிந்தினால் அதற்கும் பேச்சு விழும் என்று பயந்து மின்னலே என்று குளியலறைக்குள் புகுந்து வந்து, அவள் சொன்னதுபோலவே புது ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் தயாராகினான். கண்ணாடியில் பார்த்தபோது அந்த மெலிவு மட்டும் கண்ணை உறுத்தியது. அவனுடைய அப்பாவைப்போல நல்ல உயரம். அந்த உயரம் இன்னுமே அவனை ஒல்லியாகக் காட்டிற்று. அவனும் நன்றாகச் சாப்பிட்டு உடம்பைத் தேற்றத்தான் நினைக்கிறான். எங்கே பசித்தால் தானே?
கருத்திட