அரவிந்தனின் வீட்டின் முன்னே கொண்டுவந்து தன் பைக்கை நிறுத்தினான் கிருபன். இறங்கி, உள்ளே செல்ல காலே வரமாட்டேன் என்றது.
இத்தனை நாட்களாகப் போகாமல் இருந்துவிட்டு இப்போது மட்டும் எப்படிப் போவது? சுகுணாவும் பரந்தாமனும் ஏன் என்று கேட்டால் என்ன சொல்லுவது? அந்த வாயாடி.. அவளின் நினைவு வந்ததுமே அவன் உதடுகள் அழகியல் முறுவலில் விரிந்தன. இன்றைக்கு அவனை என்ன செய்யப்போகிறாளோ?
வேறு வழியே இல்லை. எல்லோரையும் சமாளித்தே ஆகவேண்டும். அவளைப் பார்க்கும் ஆவலும் சேர்ந்துகொண்டது. தயக்கத்தை வெளியில் காட்டாமல் உள்ளே நடந்தான்.
வீட்டின் வாசலுக்கு வந்து செருப்பைக் கழட்டும்போதே, இவனைக் கவனித்துவிட்டு, “வாரும் வாரும்! என்ன கன(நிறைய) நாளா காணேல்ல? வேல கூடவோ?” என்று வரவேற்றார், பரந்தாமன்.
அவர் சொன்னதையே வேகமாகப் பிடித்துக்கொண்டு, “ஓம் அங்கிள். கொஞ்சம் வேல.” என்று மெல்லிய சிரிப்போடு சமாளித்தான்.
“அரவிந்தன்ர பிரென்ட்.” என்று அவனை அங்கிருந்தவர்களுக்குச் சுருக்கமாக அறிமுகம் செய்து வைத்தார் அவர்.
அவர்களைப் பார்த்து ஒரு முறுவலைப் பரிசளித்துவிட்டு, “சுகமா இருக்கிறீங்களா அங்கிள்? மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று முறையாகக் கை கொடுத்து வாழ்த்தினான்.
அவர் சிரித்தார். “பிறந்தநாள் கொண்டாடுற வயசா தம்பி எனக்கு? எல்லாம் பிள்ளைகளின்ர சந்தோசத்துக்குத்தான். அரவிந்தன் உள்ளுக்கதான் நிக்கிறான். போங்கோ!” என்று அவனை அனுப்பிவைத்தார்.
இதற்குள் இவன் குரலைக் கேட்டதும், “என்னடா அதிசயம்? வரமாட்டியாக்கும் எண்டு நினைச்சன். வந்து நிக்கிறாய். எந்தச் சாமியார் வந்து பேயோட்டினது?” என்றபடி வந்தான், அரவிந்தன்.
‘உன்ர தங்கச்சிதான்’ என்று சொல்லவா முடியும்? “வந்தாலும் பேசுறாய் வராட்டியும் பேசுறாய். போடா, நீதான் இப்ப வர வர சரியில்ல.” என்று கதையையே மாற்றியபடி அவனோடு வேலையில் பங்கெடுத்துக்கொண்டான் கிருபன்.
விழிகள் மாத்திரம் மற்றவர்கள் அறியாமல் அவளைத் தேடியது.
“டேய் அண்ணா, பலகாரம் எல்லாம் குடுத்திட்டியா?” என்றபடி விரைந்து வந்தவள் அங்கே நின்றவனைக் கண்டுவிட்டுப் புருவங்களை உச்சி மேட்டுக்கு உயர்த்தினாள். “என்ன அண்ணா வராதவர் எல்லாம் வந்திருக்கிறார். என்ன விசேசமாம்?” என்றாள் வேண்டுமென்றே.
அவளுக்குப் பதில் சொல்லும் நிலையில் கிருபன் இல்லை. அவளோடு கூடவே வந்த வாசம் மனதை மயக்கிற்று. இன்னும் உலராததில் வாரப்படாத ஈரக்கூந்தலை இருபக்கமும் காதோரமாக ஒதுக்கி விட்டிருந்தாள். முகத்துக்கான மேக்கப் முடிந்திருந்தது. பலவர்ணப் பூக்கள் தூவிய தரையைத் தொடும் நீண்ட பாவாடை. அதற்கு வெள்ளையில் கையில்லாத குட்டி மேல் சட்டை. யாரும் கவனிக்கப் போகிறார்கள் என்று கண்களை வேகமாக அவளிடமிருந்து அகற்றிக்கொண்டாலும், அவளும் அங்கேயேதான் நிற்கிறாள் என்கிற உணர்வே அவனை என்னென்னவோ செய்தது.
“சாப்பாட்டுப் பாத்திரங்களைத் திறந்து வைக்காத எண்டு எத்தினை தரம் சொன்னாலும் கேக்காத அண்ணா! ஒரு நாளைக்குப் பார் நாய் வாய் வச்சதை உனக்குப் போடுறனா இல்லையா எண்டு.” என்று தமையனைத் திட்டிக்கொண்டிருந்தாள் அவள்.
“நான் எல்லாம் இயற்கையோட ஒன்றி வாழுற மனுசன். கரப்பொத்தான் பூச்சிய(கரப்பான் பூச்சி) கூடக் கருவாட்டு பொரியல் மாதிரி சாப்பிட்டு வளந்த உடம்பு!” என்றபடி இல்லாத தன் தசைக்கோளங்களை முறுக்கிக் காட்டினான் அரவிந்தன்.
அடுத்த நொடியே அவனை நோக்கிப் பறந்து வந்தது சில்வர் மூடி.
“அம்மாடி! என்ர உயிருக்கு உலை வைக்கிறாளே!” என்று பதறியபடி வேகமாக விலகினான் அவன். டொங் என்று தரையில் விழுந்து சலசலத்தது அது. வேகமாக அதை எடுத்து வைத்த கிருபனுக்கு அண்ணன் தங்கையின் கூத்தில் சிரிப்பை அடக்குவது சிரமமாக இருந்தது. சிரித்தால் அவனுக்கு என்ன பறந்து வருமோ என்கிற பயத்தில் அடக்கிக்கொண்டு நின்றான்.
“என்ன பிள்ளை சத்தம்?” என்றபடி வந்து எட்டிப்பார்த்த சுகுணா நடந்ததை அறிந்து அவளைத் திட்டிக்கொண்டு போனார்.
சிரிப்புடன் அவன் பார்க்க, “இங்க என்ன பார்வை? வேலைய பாருங்க!” என்று அன்னை மீதிருந்த கோபத்தை கிருபனிடம் காட்டினாள் அவள்.
அரவிந்தன் திறந்து வைத்திருந்த பலகாரச் சட்டிகளை வேகவேகமாக மூடினான் கிருபன். அளவான சமையல் அறைதான். என்றாலுமே அன்றைய விசேசம் காரணமாகப் பாத்திரங்கள், பெரிய பெரிய சட்டிகள் நிறைந்திருந்து அந்த இடமே குட்டியாகிற்று. அவளும் அங்குமிங்கும் நடமாடி, அவனைக் கடந்து, அவனருகில் இருக்கும் ஏதோ ஒன்றை எடுத்து என்று அவனைச் சோதித்துக்கொண்டிருந்தாள்.
“இத பிடிங்க!” திடீரென்று கேட்ட அவளின் குரலில் திரும்பிப் பார்த்தான்.
பெரிய சட்டியில் கரைத்து வைத்திருந்த மில்க்க்ஷேக் எல்லோருக்கும் கொடுத்தும் எஞ்சிவிட, அதை சின்னப் பாத்திரம் ஒன்றிற்குள் மாற்ற முயன்றாள் அவள்.
அந்த சின்னப் பாத்திரம் அடியில் வளைந்து இருந்தபடியால் ஊற்றும்போது ஆடியசைந்து வெளியில் சிந்திவிடும் என்றுதான் பிடிக்கச் சொல்கிறாள் என்று புரிந்தது. ஆனால், பெரிய சட்டியை அவளைத் தூக்க விடுவதா? “நீங்க விடுங்க. நான் ஊத்துறன்!” என்றான் கிருபன் அவசரமாக.
“இல்ல சிம்ரன். உங்கட உடம்பு இந்தச் சட்டிய தூக்கிற அளவுக்கு எல்லாம் தாங்காது! நானே ஊத்துறன்.”
அவளின் பதிலில் அவன் முகம் அப்படியே சிவந்து போயிற்று. கேவலப்படுத்துவதற்கு அளவே இல்லையா? கெக்கபிக்கே என்று சிரிக்கத் தொடங்கியிருந்தான் அரவிந்தன். அவளை முறைக்க சக்தியற்று நண்பனை முறைத்தான் கிருபன்.
“என்னை ஏன்டா முறைக்கிறாய்? அவள் சொன்னதில என்ன பிழை? என்னவோ பஞ்சத்தில அடிபட்ட பரதேசி மாதிரித்தான் இருக்கிறாய்.” அரவிந்தனுக்கு அப்படிச் சொல்லிவிட கிருபனுக்கு அவளின் முகமே பார்க்க முடியவில்லை.
ஒருவழியாக, எல்லோரும் பிறந்தநாள் வாழ்த்துப் பாட, “என்னடாப்பா இதெல்லாம்?” என்கிற பெரிய சிரிப்புடன், ‘பெர்த்டே பேபி’ கேக் வெட்டினார்.
ஒரு வட்டக் கேக். அதிலே, மேல் பக்கம் பிறை வடிவில், ‘Happy Birthday Appa’ என்று எழுதி, கீழ் வட்டத்தில் கருத்தடர்ந்த பெரிய மீசையை கறுப்பு வர்ண ஐஸிங்கால் உருவாக்கியிருந்தாள் கமலி. தந்தை மீதான அவளின் பாசத்தை அந்த மீசையே சொல்லிற்று. தன்னை மறந்து ஒரு நொடி அவளையே பார்த்தான் கிருபன்.
கேக்கை அவளுக்கும் அரவிந்தனுக்கும் கொடுத்துவிட்டு மனைவிக்குக் கொடுக்கக் கொண்டுபோன பரந்தாமனின் கையைப் பற்றி இழுத்து தன் வாய்க்குள் திணித்துவிட்டுச் சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். கரண், சுதனுக்குக் கூட ஒழுங்காகக் கொடுக்க விடவேயில்லை. அவனுடைய உதடுகள் அவனே அறியாமல் சிரிப்பில் விரிந்தே இருந்தது. விழிகள் பெரும் கனவைச் சுமந்தபடி அவளிடமே நிலைத்திருந்தது. இதயம் நழுவும் ஓசை அவனுக்கே கேட்டது.
கை கொடுத்து, கட்டியணைத்து என்று அவரவருக்கு ஏற்ப எல்லோரும் வாழ்த்த பெரிய சிரிப்புடன் அவர்களின் வாழ்த்தை ஏற்றுக்கொண்டார் பரந்தாமன். கேக்கை அதிலேயே வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி எல்லோருக்கும் பகிர்ந்தளித்தாள் கமலி.
“காச்சட்டையோட திரிஞ்ச பெடி கேட்டா அவனுக்கு அம்பத்தியஞ்சு வயசாம்!” என்றார் பரந்தாமனுக்கே பெரியம்மா முறையில் இருந்த ஒரு பெண்மணி.
“அப்பாக்கு வயசுதான் அம்மம்மா அம்பத்தி அஞ்சு. ஆள் இன்னும் பதினெட்டுத்தான். என்னப்பா நான் சொல்லுறது சரி தானே?” என்று அதற்கும் வரிந்து கட்டிக்கொண்டு வந்தாள் கமலி.
“ஓமடியப்பா, உன்ர அப்பாக்கு பதினெட்டு. நீ இன்னும் பிறக்கவே இல்ல. இப்ப சந்தோசம் தானே. போ போய்ப் பாக்கிற வேலைய பார். வந்திடுவா எல்லாத்துக்கும் வரிஞ்சு கட்டிக்கொண்டு.” என்று துரத்தினார் அவர்.
“என்ர அப்பாக்காக நான் வராம வேற ஆர் வருவினமாம். கிழவிக்குப் பொறாமை!” என்று பார்வையால் அவரை வெட்டிவிட்டுப் போனாள் அவள்.
“இவளுக்கு முதல் ஒரு கலியாணத்தைப் பார் பரந்தாமா! அப்பதான் இந்த வாய் அடங்கும்!” அவளுக்கு எதை ஆரம்பித்தாள் பிடிக்காதோ அதை ஆரம்பித்தார் அவர்.
“ஓமோம்! அப்பிடியே அவவுக்கும் பாருங்கோ அப்பா! அப்பதான் நாங்க நிம்மதியா இருக்கலாம்!” உள்ளிருந்து சத்தம் உடனேயே வந்தது. அதற்குமேல் முடியாமல் தலையில் அடித்துக்கொண்டார் அவர். எல்லோர் முகத்திலும் சிரிப்பு.
“அங்கிளிட்ட குடுத்தா வாங்கமாட்டார் மச்சான். நீ பிறகு நான் தந்தனாம் எண்டு சொல்லிக் குடுத்துவிடு.” அரவிந்தனைத் தனியாகப் பிடித்துக்கொண்டு வந்து கையோடு கொண்டுவந்த பரிசை நீட்டினான் கிருபன்.
“விசராடா உனக்கு? எங்கட வீட்டுச் சில்வண்டுக்கு இந்தக் கொண்டாட்டம் எல்லாம் விருப்பம் எண்டுதான் அப்பா ஓம் எண்டுறவர். அதுக்குப்போய் நீ கிப்ட் கொண்டு வருவியா?” என்று அவன் கேட்டு முடிக்க முதலே, “வீட்டுக்கு வாற லச்சுமிய வேண்டாம் எண்டு சொல்லாம வாங்கு, அண்ணா.” என்றவள் தானே அவனிடமிருந்து பறித்து, பரபரவென்று சுற்றியிருந்த பேப்பரைப் பிரித்தாள்.
“அது அங்கிளுக்கு வாங்கினது.” உதட்டில் பூத்திருந்த மெல்லிய சிரிப்புடன் சொன்னான் கிருபன்.
“அதுக்கு?” என்றுவிட்டு அவள் பார்த்த பார்வையில் அவனுக்குப் பதிலே வரவில்லை. மையிட்டிருந்த விழிகளைக் கண்டு மனம் மயங்கியது.
“அப்பாக்கு வந்தாலும் அண்ணாக்கு வந்தாலும் நான் தான் பிரிப்பன்.”
“பாத்தியாடா? இதுதான் இந்த வீட்டு நிலமை. நாங்க எல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கள். வெளில இருந்து பாக்கிற ஆட்களுக்கு இதெல்லாம் தெரியவே தெரியாது.” என்றான் அரவிந்தன் சோகமாக.
“ஓமோம்! உள்ளுக்குப் போடுற ‘சட்டில’ இருந்து வெளில போடுற ஷேர்ட் பட்டன் வரைக்கும் நான் எடுத்து தரவேணும். பரிசு மட்டும் உனக்கு வேணுமோ?” என்றவளின் வாயைப் பாய்ந்து பொத்தியிருந்தான் அரவிந்தன். “லூசு! மானத்த வாங்காத! ஆருக்கும் கேக்கப் போகுது!”
கிருபனுக்கும் முகம் இரத்தமெனச் சிவந்துவிட வேகமாக முகத்தைத் திருப்பிக்கொண்டான். ‘வெக்கம் கெட்டவள்! ரெண்டு ஆம்பிளை பிள்ளைகளுக்கு முன்னால என்ன கதைக்கிறாள்!’ என்று மனம் திட்டிக்கொண்டது.
அவள் அசையவே இல்லை. தமையனின் கையைத் தள்ளி விட்டுவிட்டு, “அத நீ கதைக்க முதல் யோசிக்கவேணும். விளங்கிச்சோடா அண்ணா! மணிக்கூடு நல்லாருக்கு. நானே அப்பாட்ட குடுக்கிறன்.” என்றுவிட்டுப் போனாள் அவள்.
“சரியான ராட்சசியடா. நிமிசத்தில எப்பிடி மானத்த வாங்கினாள் பாத்தியா? வெளில இருக்கிற கிழவின்ர காதுல இது விழுந்ததோ, காச்சட்டை போடாம திரிஞ்சவனையே நான் பாத்திட்டானாம் எண்டுகொண்டு வந்திருக்கும்.” என்று பல்லைக் கடித்தான் அரவிந்தன்.
பெரிய முறுவல் ஒன்று முகம் முழுக்கப் படர, “அனுபவி மச்சான். இதெல்லாம் வரம்!” என்றான் கிருபன் உள்ளார்ந்த குரலில்.
நொடியில் நண்பனைக் கணித்தான் அரவிந்தன். “அவளை விட்டுட்டு நீ வா. நாங்க டிவி பாப்பம்.” என்று பேச்சை மாற்றினான்.
பலகாரங்கள் சாப்பிட்டு, மில்க்ஷேக் அருந்தி, இப்போது கேக்கும் சாப்பிட்டதில் இரவு உணவுக்குச் சற்று நேரமாகட்டும் என்று சொல்லிவிட்டுப் பெரியவர்கள் எல்லோரும் முற்றத்தை ஆக்கிரமித்துக்கொண்டனர். வீடு இவள் மற்றும் இவளின் நண்பர்கள் பட்டாளத்தின் சேட்டையில் அதிர்ந்தது.
சற்று நேரம் வீட்டுக்குள்ளேயே ஒளித்துப் பிடித்து விளையாடினார்கள். இனி ஒளிந்துகொள்வதற்கு இடமில்லை என்றானதும் கார்ட்ஸ் விளையாடினார்கள். எல்லோரும் களவு செய்யக் கிச்சு கிச்சு மூட்டி விளையாடினார்கள். கண்களில் கண்ணீர் வழிய வழிய சிரித்துப் பிரண்டவளையே கிருபனின் விழிகள் வட்டமடித்தது. அவனுக்கும் அவள் ஒரு வரம் தரலாம். பிடியே கொடுக்கிறாள் இல்லையே! தொலைக்காட்சியில் கவனம் பதிக்கவே முடியவில்லை.
விலகிவிடு, அருமையான குடும்பத்தை இழந்துவிடாதே என்று அறிவு அறிவுறுத்துகிறது. அவள் தான் வேண்டும் என்று மனம் கிடந்து சிணுங்குகிறது. அவளும், தன் பேச்சாலும் செய்கையாலும் உன்னை விடமாட்டேன் என்று தன்புறமாய் அவனை இழுத்துக்கொண்டு இருக்கிறாள். அவன் மனமும் அவளின் பின்னாலேயே நாய்க்குட்டியாகச் சுற்றுகிறது. எதிர்காலம் இன்னுமொரு ஏமாற்றத்தை தந்துவிடப்போகிறதோ என்று மனம் மருண்டு மிரண்டது கிருபனுக்கு.
நேரம் எட்டுமணி தாண்டியதும் மெல்லிய பசியின் அடையாளங்கள் தென்பட ஆரம்பித்தது. உடையை மாற்றிக்கொண்டு வந்து இடியப்பக் கொத்துக்கான வேலையை ஆரம்பித்தாள் கமலி. அரவிந்தனும் கிருபனும் சேர்ந்துகொண்டனர். உதவிக்கு சுகுணாவும் மாலினியும் வரவும், “இங்க ஒருத்தரும் வரத்தேவையில்லை. எங்களுக்கு எங்கட வேல பாக்கத் தெரியும். நடவுங்கோ!” என்று துரத்திவிட்டாள் கமலி.
இடியப்பத்தைப் உதிர்த்துத் தரச்சொல்லி கிருபனைப் பணித்தாள். பழக்கமில்லாத செயல் என்பதில் கையால் இப்போதைக்குச் செய்து முடிக்க முடியாது என்று புரிபட்டுவிட, கத்தியால் வெட்டத் தொடங்கினான் அவன்.
இரண்டு அடுப்புகளில் தாச்சி போன்ற பெரிய பானை(pan) வைத்து, இரண்டிலும் கொத்துக்கான வேலைகளை ஆரம்பித்து ஒரு பானை அரவிந்தனைக் கவனிக்கச் சொன்னாள்.
இவள் ஏதும் சொல்லிவிடுவாளோ என்கிற பயத்தில் கிருபன் பார்த்துப் பார்த்துக் கவனமாக இடியப்பத்தை வெட்டவும், “குளுக்கோஸ் வேணுமா?” என்றாள் முறைப்புடன்.
முதலில் புரியாமல் விழித்தாலும் விடயம் பிடிபட்டுவிட அவளை முறைக்க முயன்றும் முடியாமல் சிரிப்பு வந்துவிட, “கொஞ்சம் பழக்கமில்லை. அதுதான்..” என்கிற முணுமுணுப்போடு வேகமாக வெட்டத் தொடங்கினான் அவன்.
“என்ன பழக்கம் இல்ல? இடியப்பத்தைப் பிக்கிறதுக்கு எல்லாம் டியூஷனுக்கா அனுப்பேலும்? சமையல் தெரியாத நீங்க எல்லாம் என்ன ஆம்பிளைகள்? நாளைக்கு உங்கள எல்லாம் நம்பி ஒரு பொம்பிளை எப்பிடி வருவாள்?”
இதற்கு என்ன பதிலைச் சொல்வது என்று கிருபனுக்குச் சத்தியமாகப் புரியவே இல்லை. அவன் விழிப்பதைப் பார்த்து, “உயிரே..! உயிரே..! எப்பிடியாவது தப்பிச்சு ஓடிவிடு!” என்று பாடினான் அரவிந்தன்.
“காணும்! நீர் மூடும்! மூடிக்கொண்டு வேலையைப் பாரும்!” என்றவளின் பதிலில் கிருபனுக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.
குனிந்த தலை நிமிராது இடியப்பத்தைக் கண்டதுண்டமாக்கினான். அரவிந்தனின் அடுப்பில் கோழிக்கொத்துத் தயாராகிக்கொண்டிருக்க இவள் ஆட்டிறைச்சிக் கொத்தை கையில் எடுத்திருந்தாள். அடுப்பு வெக்கையின் முன் நின்று, நெற்றியில் வியர்வைப் பூக்கள் அரும்ப அரும்ப லாவகமாக அவள் சமைத்தபோது, அந்தப் பிறை நெற்றியைத் துடைத்துவிட அவன் கைகள் துடித்துப் போயிற்று.
“உப்பு உறைப்புக் காணுமா பாருங்க?” என்று சட்டியில் இருந்து கொஞ்சமாகக் கரண்டியில் எடுத்து அவனிடம் நீட்டினாள் அவள்.
கையில் வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்தான் கிருபன். எண்ணைத் தன்மை இல்லாமல், காரசாரமாக, குமையாமல் பசியைத் தூண்டிவிட்டது கொத்து. “அருமையா இருக்கு.” என்றான் முகமெல்லாம் மலர.
அவளின் கைப்பக்குவம் அவன் அறிந்ததுதான். என்றாலும் கண்முன்னே அவள் செய்ததைச் சுவைத்தது சொல்லத் தெரியாத சந்தோசத்தை உண்டாக்கிற்று.
“நம்பலாமா?” தலையைச் சரித்து சந்தேகத்துடன் அவனை அளவிட்டபடி கேட்டாள் அவள்.
அவளின் செய்கையில் அரும்பிய முறுவலோடு, “நீங்களே சாப்பிட்டு பாருங்கோவன். உண்மையா நல்லாருக்கு.” என்றான் அவன்.
“நான் சமைச்சா நல்லாத்தான் இருக்கும் எண்டு எனக்குத் தெரியும். எண்டாலும் சும்மா கேட்டுப் பாத்தனான்.” எடுப்புடன் சொல்லிவிட்டு அடுப்பை அணைத்தாள் கமலி.
“இத நாளைக்கு நாங்க அங்க போயிட்டு வந்து சொல்லவேணும்.” வாயை வைத்துக்கொண்டு இருக்க மாட்டாமல் சொன்னான், அரவிந்தன்.
“வராட்டி சொல்லு வந்து பெரிய ஓட்டையா போட்டுவிடுறன்.” என்றவளின் பதிலில் வேகமாகக் கிச்சனை விட்டு வெளியே ஓடி வந்திருந்தான் கிருபன்.
இந்தமுறை அவனால் சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. என்ன பெண் இவள். வார்த்தைகளை வாய்க்குள்ளேயே வைத்துக்கொண்டு இருப்பாள் போலும்.
ஒரு வழியாகத் தன்னைச் சமாளித்துக்கொண்டு அவன் வந்தபோது பானில் இருந்ததை அவள் பாத்திரத்துக்கு மாற்ற முயன்றுகொண்டிருந்தாள். அது பாரம் என்பதில், “விடுங்க, நான் மாத்திறன்.” என்று அவளிடமிருந்து வாங்கி அவனே மாற்றினான்.
“சிம்ரன், இடுப்பு ஒடிஞ்சிடாம கவனம்.” என்றாள் அப்போதும்.
அவன் கையில் சட்டி ஒருமுறை தடுமாறி அடங்கியது.
“பிளீஸ்! இப்பிடி கூப்பிடாதீங்க.” என்றான் கெஞ்சலாய்.
“வேற எப்பிடி கூப்பிட? ஒல்லிக்குச்சி உடம்பழகா எண்டா?”
“என்ர பெயர் கிருபன்.”
“இருக்கட்டும். இருந்திட்டு போகட்டும்!” என்றாள் அவள் அப்போதும்.
இதற்கும் மேலே எதை எப்படி என்று அவளிடம் சொல்வது? பேசாமல் வேலையைப் பார்த்தான் கிருபன்.
அங்கே முன்பக்கம், மாலினியும் சுகுணாவும் எல்லோருக்கும் பரிமாறத் தயாராக, கொத்து இருந்த பெரிய பாத்திரத்தை அவர்களிடம் கொடுக்கப் போனான் அரவிந்தன்.
அந்த இடைவெளிக்குள், “அதென்ன மரியாதை? அண்ணா நிக்கிறான் எண்டா. அப்ப இடத்துக்கு ஏற்ற மாதிரி நடிப்பீங்களா நீங்க?” என்றவளின் கேள்வியில் அடிபட்டுப் போனான் கிருபன். அதுவரை இருந்த உற்சாகம் அப்படியே மறைந்துவிட அவன் முகம் நொடியில் செத்துச் சுண்ணாம்பாகிற்று. விழிகளில் அடி வாங்கிய வலி. வேதனையோடு அவளைப் பார்த்தான்.
கமலி திகைத்துப்போனாள். அவள் சாதாரணமாகத்தான் சீண்டினாள். “அது.. நான்..” எனும்போதே அரவிந்தன் வருவது தெரிய, அங்கிருந்து வேகமாக நகர்ந்துவிட்டான் கிருபன். சமையலறையில் அவன் வேலையும் முடிந்திருந்ததில் வாசலில் பரிமாறுவதற்கு உதவியாக நின்றுகொண்டான்.
அவள் கேட்டதில் பொய் இல்லையே. அரவிந்தனின் முன்னிலையில் ஒரு மாதிரியும் அவன் இல்லாதபோது இன்னொரு மாதிரியும் தானே அவளிடம் பழகுகிறான். அதற்குமேல் அவனால் அங்கே ஒன்றி இருக்க முடியாமல் போயிற்று.
பெயருக்கு உண்டுவிட்டு சுகுணா, பரந்தாமன், அரவிந்தனிடம் விடைபெற்றுக்கொண்டான். புறப்பட்டபோதுகூட அவன் அவளின் முகம் பார்க்கவில்லை.
ஆத்திரத்தில் எதையாவது போட்டு உடைக்க வேண்டும் போலிருந்தது கமலிக்கு. அவள் என்னவோ சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னாள். அதில் உண்மை இருந்ததில் அவனுக்கு நன்றாகவே சுட்டுவிட்டது புரிந்தது. இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தவள் முடியாமல் மீண்டும் அவனுக்கு அழைத்து, “அல்லிராணி கோட்டைக்கு நாளைக்குப் பின்னேரம் வாறீங்க!” என்றுவிட்டு வைத்தாள்.
கருத்திட