வெளிக்கிட்டாச்சு! ரஞ்சனி பயணம் வெளிக்கிட்டாச்சு.

“மனுசனையும் பிள்ளைகளையும் விட்டுட்டுப் போறது கவலையாத்தான் கிடக்கு. ஆனா காசுக்கு எங்க போறது?” தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவளுக்கு மனதில் சின்னதாகக் கவலை இருந்தாலும் சந்தோசத்துக்குக் குறைவில்லை.

பின்னே! வந்து பதின்மூன்று வருடங்களுக்குப் பிறகு ஊருக்குப் பயணம். மூன்று பெண் பிள்ளைகள், ஒரு தம்பி. இது அவளின் குடும்பம். அத்தனைபேருக்கும் மூத்தவள் ரஞ்சனிதான்.

காங்கேசன்துறையில் பிறந்து வளந்த ரஞ்சனிக்கு படிப்பு என்றால் உயிர். அவள் எல்லாம் படிப்பை இடையில் நிறுத்துவாள் என்றோ, வெளிநாடு வருவாள் என்றோ கனவிலும் எண்ணியதில்லை. நன்றாகப் படிக்கவேண்டும். சிவபாலன் மிஸ் மாதிரி சமூகக்கல்வி ஆசிரியையாக வரவேண்டும் என்பதுதான் பெரிய இலட்சியமாக இருந்தது. மிஸ் வரலாறு எடுத்தால், அந்தக் காலகட்டத்துக்கே போய்விடுவாள் ரஞ்சனி.

ஆனால், இரண்டு தங்கைகளுக்கும் தம்பிக்கும் மூத்தவளாகப் பிறந்துவிட்டாளே. அப்பா விறகு வியாபாரி. சனம் எல்லாம் காஸ் அடுப்புக்கு இடம் பெயர்ந்ததில் அப்பாவின் வியாபாரம் விழுந்து, படுத்துப்போனது.

வேறு எந்த முதலீடும் இல்லாது போனதில் ரஞ்சனிதான் அவர்களின் முதலீடாக மாறிப்போனாள். அதற்கு வலுச் சேர்த்தது பதினெட்டு வயதும், பொன்மஞ்சள் நிறமும், வாளிப்பான அழகும்! வெளிநாட்டு மாப்பிள்ளைக்குக் காட்டியதும் பிடித்துவிட்டது. சிவபாலன் மிஸ் போல் டீச்சராக மாறி வரலாறு படிப்பிக்க முடியவில்லையே என்கிற கவலை அரித்தாலும், வெளிநாட்டுக்குப் போகப் போகிறாள் என்கிற எண்ணம் அந்தப் பதினெட்டு வயதில் பெருமையாகத்தான் இருந்தது.

“அங்க போயும் படிக்கலாம் தானே!” என்கிற அம்மாவின் வார்த்தையும் மனதில் பதிந்து போயிற்று!

மாப்பிள்ளை குணசீலனும் குறை சொல்வதற்கு இல்லை. தொலைபேசியில் முழுக் காதலையும் கொட்டினான். அவள் வந்ததும் எப்படி எப்படியெல்லாம் வைத்திருப்பான் என்று கதை கதையாகச் சொன்னான். அவனைத் தாண்டிய அத்தனை விசயங்களுமே அவளிடமிருந்து அகன்றிருக்க, அவனே முற்றிலுமாக அவளின் நினைவுகள் கனவுகள் அனைத்திலும் இடம் பிடித்திருந்தான்.

அவளின் மாமியார் வீடு வந்து பார்த்துப் போனார்கள் தான். முறை எல்லாம் முறையாக நடந்தது. அவ்வளவுதான். மற்றும்படி பெரிதாக ஒன்றையும் காணோம். அவனுடைய இரண்டு தங்கைகளும் இவர்களின் வயதை ஒத்திருந்தாலும் ஒட்டுதல் காட்ட மறுத்தனர். தயங்கித் தயங்கி குணசீலனிடம் அவள் அதைத் தெரிவித்தபோது, “விடு! அது புது மருமகளை ஏற்க கொஞ்ச நாளாகும்.” என்றுவிட்டான்.

இப்போதுபோல் பத்து வருடங்களுக்கு முதல் மொழி படிக்கவேண்டிய அவசியம் இல்லாததால் ‘குணசீலனின் நண்பி’ என்கிற முத்திரையின் கீழ் அவள் வெளிநாட்டுக்குத் தயாரானாள். அடிக்கடி கொழும்புப் பயணம், குணசீலன் அனுப்பிய காசில் புது உடுப்புச் செருப்பு, அடிக்கடி கடைகளுக்கு விஜயம் என்று, தட்டியதும் எரியும் மின்விளக்கைப் போல் அவர்களின் வாழ்க்கையே மாறிப் போயிற்று!

முதன் முதலில் குடும்பமாக அந்தக் காலத்திலேயே வான் பிடித்துக்கொண்டு கொழும்பு வெளிக்கிட்டபோது, அவர்கள் வீட்டினர் எல்லோருக்கும் என்னவோ சொந்த விமானத்தில் புறப்படும் பெருமை. பின்னே, ஒரேயொரு சைக்கிளை வைத்து நான்கு பிள்ளைகளும் ஓடியவர்கள், வாடகைக்கு வான் பிடிப்பது என்றால் சும்மாவா? அப்பாவின் துள்ளலான நடை, ‘எல்லாம் எடுத்து வச்சாச்சா? மறந்திடாத. திரும்பி வரேலாது’ என்றபடி அங்குமிங்கும் பரபரத்து ஓடிக்கொண்டிருந்த அம்மாவின் முகத்தில் கவலையையும் மீறித் தெரிந்த பூரிப்பு, தங்கைகளின் முகமெங்கும் தெரிந்த சிரிப்பு, வாகனத்தைச் சுற்றியே ஓடிக்கொண்டிருந்த சின்னத் தம்பி என்று இவர்களையும் பார்த்தபோது மெல்லிய சிரிப்புக் குமிழியிட்டது.

இவர்களையெல்லாம் விட்டுவிட்டுப் போகப்போகிறோம் என்கிற கவலை ஒருபுறம் என்றால், இனி இவர்கள் முகத்தில் இந்தச் சந்தோசத்தை நிலைக்க வைத்தே ஆகவேண்டும் என்கிற வைராக்கியமும் தோன்றியது.

கட்டுநாயக்கா விமானநிலையத்தைக் கண்டதும் தங்கைகளும் தம்பியும் வாயைப் பிளந்தபோது, அவளுக்கு இன்னுமே பெருமையாக இருந்தது. அவளால் தானே அவர்கள் இதையாவது பார்க்கிறார்கள்.

“அக்கா, அத்தானிட்ட போனதும் எங்களை மறந்திடுவாய் என்ன? இப்பவே சிலநேரம் உன்னக் கூப்பிட்டாலும் கேக்காதவள் மாதிரி இருப்பாய்..” என்று செல்லமாக ஊடல் கொண்டாடினாள் பெரிய தங்கை.

அவளுக்கு வெட்கமாகப் போய்விட்டது. குணசீலனின் நினைவில் ஆழ்ந்திருக்கும் வேளைகளில் இப்படி நடந்துவிடுவது உண்டுதான். அதற்காக தம்பி தங்கைகளை மறப்பாளா என்ன?

“விசரா உனக்கு? நல்லா படிக்கவேணும். நான் மாதம் மாதம் காசு அனுப்புவன். அம்மா, மூண்டுபேரையும் நீங்கதான் படிப்பிக்க வேணும். அப்பா, வேலைக்கு இனிப் போகவேணாம். நான் பாத்துக்கொள்ளுவன். தம்பி தங்கச்சிமாரை கவனமா பாருங்கோ, என்ன..” என்று கண்கள் கலங்க எல்லோருக்கும் முத்தமிட்டு, கட்டித் தழுவி, கண்ணீர் வழியப் புறப்பட்டவள் இன்றுதான் திரும்பிப் போகப்போகிறாள்.

அதுவும், கடைசித் தங்கையின் திருமணத்திற்கு!

ஜேர்மன் வந்து இறங்கியபோது, டிசம்பர் மாதக் குளிரில் நடுங்கி விறைத்தே போனாள் ரஞ்சனி. “ஜக்கெட் போட்டுக்கொண்டு வா. உள்ளுக்கு புல்லோவர் போடு. தொப்பி, ஹாண்ட் ஷு எல்லாம் கொண்டுவா. இல்லாட்டிக் குளிரும், ” என்று குணசீலன் சொன்னான்தான். அவளும் வாங்கிப் போட்டுப் பார்த்தாள் தான். தம்பி தங்கைகள் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.

“என்னக்கா இது? சந்திரமண்டலத்துக்குப் போறியா? இல்ல அத்தானிட்ட போறியா?” என்று கேட்க, அவளுக்கும் வெட்கமாகப் போனதில் எல்லாவற்றையும் கழற்றி வைத்துவிட்டு, முழுக்கை ஆடை ஒன்றை அணிந்துகொண்டாள். அப்படி என்ன பெரிதாகக் குளிர்ந்துவிடப் போகிறது என்கிற எண்ணம். புதிதாக அணிந்த ஜீன்ஸ் வேறு இதோ கழன்றுவிடுவேன் என்று மிரட்டிக் கொண்டிருந்தது.

இங்கு வந்து பார்த்தபிறகுதானே, அவன் சொன்னது எந்தளவு குளிரை என்று தெரிந்தது.

கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டு அவள் குளிரில் நடுங்க, அவன் சிரித்துக்கொண்டு அணைத்தபோது வெட்கம் ஒருபக்கம் சந்தோசம் ஒருபக்கமாகத் தடுமாறிப் போனாள். யாரும் பார்க்கிறார்களோ என்கிற எண்ணமே இல்லாமல் தன் ஜக்கட்டுக்குள் அவன் அவளை ஒளித்துக்கொண்டபோது, காதலனின் முதல் தொடுகையில் மயங்கியே போனாள்.

குணசீலன் சொந்தமாய்க் கார் வைத்திருந்தது வேறு மிகுந்த சந்தோசத்தைக் கொடுத்தது. அவள் கொண்டுவந்த பெட்டிகளைப் பின்னால் ஏற்றிவிட்டு, முன்கதவைத் திறந்து அவளை ஏறச் சொன்னபோது சந்தோசம் சந்தோசம் சந்தோசம் மட்டுமே.

இதில் அவனே குனிந்து பெல்ட்டை மாட்டியபோது அவன் கண்கள் சிந்திய காதலில் இவள் கரைந்துதான் போனாள். இருவரது தேகமும் உரசிக்கொள்ளும் ஒவ்வொரு கணத்திலும் மின்சாரம் தடையில்லாமல் பாய்ந்துகொண்டே இருந்தது. காரில் ஏறியதும் அவன் தந்த வேகமுத்தத்தில் சித்தம் பிசகாமல் இருந்தது ஆச்சரியம் தான்.

மேக் டோனல்ட்க்கு அவன் கூட்டிக்கொண்டு போனதும், அவள் தொலைக்காட்சிகளில் கூடக் கண்டிராத உணவுகளை வாங்கியதும், ஒருவருக்கு மற்றவர் ஊட்டியதும் என்று சினிமா என்ன சினிமா.. அவள் வானத்தில் பறந்துகொண்டிருந்தாள்.

வீட்டைப் பார்த்ததும் அவள் விழிகள் விரிந்து வெளியே வந்துவிடும் போலாயிற்று

கறுப்பு நிறத்தில் பளபளக்கும் சோபா, அதற்கு முன்னே அவளின் அரைவாசி வருமளவுக்குப் பெரிய தொலைகாட்சி. சமையலறை செட், அதற்குள் நிரப்பப்பட்டிருந்த சமையல் பாத்திரங்களைப் பார்த்துவிட்டு ‘இவற்றிலா சமைக்கப் போகிறோம்’ என்று மலைத்தே போனாள். பெட்ரூம் செட், பாத்ரூம் செட் என்று எல்லாமே செட் செட் தான். பெருமை பிடிபடவில்லை அவளுக்கு. இருந்த சந்தோசத்தில் பெற்றவர்களுக்குத் தன் சுகமான வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டும் வகையில் கடிதம் எழுதி அனுப்பினாள்.

அன்றே அவர்களின் வாழ்க்கையும் தொடங்கியது.

நண்பனும் நண்பியாக ஆரம்பித்த வாழ்க்கை ஒரு மாதத்தில் சட்டப்படியும் சமயப்படியும் கணவன் மனைவியாக மாறியது. அப்போதுதான் மெல்ல மெல்ல யதார்த்தம் புரியத் தொடங்கியது அவளுக்கு.

கார் வைத்திருப்பது ஊரில் சைக்கிள் வைத்திருப்பதற்கு சமம் என்பதும், ஊரில் எப்படி பாய் தலையணை இருக்குமோ அப்படித்தான் இங்கே கட்டில் மெத்தை என்றும், இந்த ‘செட்’ டாக பொருட்கள் இருப்பது எல்லாம் சாதாரணம் என்றும் உணரத் தொடங்கினாள். அதனால் என்ன, கணவனின் காதலோடு முதல் குழந்தையைக் கருவில் தாங்கியபோதும் சந்தோசத்துக்குக் குறைவில்லை.

குணசீலனுக்கு ஒவ்வொரு எட்டாம் திகதியும் சம்பளம் வரும். பத்தாம் திகதிக்குள் அவனின் வீட்டினருக்குக் காசு அனுப்பவேண்டும். பத்தாம் திகதி அனுப்பப் பிந்தினால் பன்னிரண்டாம் திகதி ‘நகை அடவு வச்சாச்சு’ என்று தகவல் வரும். பிறகு வட்டிக்கும் சேர்த்து காசு அனுப்பவேண்டும். இதை வந்த முதல் மாதமே அறிந்துகொண்டாள் ரஞ்சனி.

அவள் வந்த சந்தோசத்தில் அவன் அனுப்ப மறந்துபோய், பிறகு வட்டிக்கும் சேர்த்து அனுப்பினான். இவளுக்குக் கோபம் வந்துவிட்டது. “என்னப்பா இது? ரெண்டு நாள் சமாளிக்க முடியாதா? அதுக்கிடைல அடவு வைக்கிறதே? அடவு வச்சதைச் சொல்ல எடுத்த மனுசர் அதுக்கு முதலே காசு இல்லை எண்டு சொல்லியிருக்க வட்டிக்காசு மிச்சம் எல்லோ!”

அவனோ அவளிடமும் கோபப்படவில்லை, அவர்களிடமும் கோபப்படவில்லை. “விடு! இனி மறக்காம அனுப்பிவச்சா சரி!” என்றுவிட்டான்.

அவனுக்கு அவள் மட்டுமே உயிர். மொத்த சந்தோசமும் அவள்தான். வீட்டினரிடம் கிடைக்காத பாசத்தைத் தன்னிடம் தேடுகிறானோ என்று பலமுறை நினைத்திருக்கிறாள். அவளுக்கும் வேறென்ன வேண்டும்? அவன் அவளுக்கும் உயிராகிப் போனான்.

அவன் வாங்கிப்போட்டிருந்த டீவிக்கும், சோபாவுக்கும் மாதாந்த தவணை கட்டச்சொல்லி வந்தபோது இன்னும் கொஞ்சம் ‘வெளிநாட்டு வாழ்க்கை’ பற்றி விளங்கியது.

“கட்டுக்காசுக்கு ஏன் வாங்கினீங்கள்?”

“நீ வரேக்க சும்மா இருக்கிறதே. விடு! அதெல்லாம் சமாளிக்கலாம்!” என்று அவன் சொன்னபோது கவலையாய் போயிற்று.

புது மனைவியாக வருகிறவளிடம் நன்றாக இருப்பதாகக் காட்ட ஆசைப்பட்டிருக்கிறான். தன்னைச் சந்தோசமாக வைத்திருக்க நினைத்திருக்கிறான். எப்படிக் கோபப்படுவது? கவலைதான் பட்டாள்.

இதில் அவளின் பெரிய தங்கை வேறு கடிதம் எழுதியிருந்தாள். சந்தோசமாகப் பிரிக்க, “சின்னவளுக்குச் சைக்கிள் வாங்கித் தாறன் எண்டு சொல்லிப்போட்டுப் போனீங்களாம், ‘அக்கா இன்னும் காசு அனுப்பேல்லையா’ எண்டு கேட்டு ஒரே அழுகை.” என்று எழுதியிருந்தாள்.

கணவனின் நிலவரம் தெரியாமல் வாக்குறுதிகளை அள்ளி வழங்கிவிட்ட தன்னையும் நோகத்தான் முடிந்தது அவளுக்கு. அவர்களும் பாவம் இங்கிருக்கும் நிலைமை தெரியாது தானே.

மெல்லக் கணவனிடம் தயங்கித் தயங்கிக் கேட்டபோது, அவளையும் கூட்டிக்கொண்டுபோய் அந்த மாதச் சம்பளத்திலேயே இரண்டு குடும்பத்துக்கும் தனித்தனியாக அனுப்பிவைத்தான். உடனேயே அடுத்த கடிதம், சைக்கிளை வைத்துக்கொண்டு சின்னவள் செய்யும் அலட்டல்களை எல்லாம் சுமந்து வந்தது. நிறைவாக உணர்ந்தாள்.

ஆனால், வழமையான வீட்டு வாடகை, கரண்ட் பில், ஹீட்டருக்கான பில், குப்பைக் காசு இதைவிட வாங்கிய பொருட்களுக்குக் கட்டவேண்டிய மாதத்தவணை, காருக்கு இன்சூரன்ஸ், பெட்ரோல் என்று எல்லாவற்றோடும் அவளின் வீட்டுக்கு அனுப்பிய தொகை மேலதிகச் செலவாக வந்து நின்றது. மாதக் கடைசியில் கணவன் வீட்டை விட்டு நகராமல் இருப்பதை வைத்தே அவன் கை கடிக்கிறதா இல்லையா என்று இந்த மூன்று மாதத்திலேயே உணர்வாள் அவள். அப்படியிருக்க இந்த மாதம்? பாதியிலேயே கடிக்கப் போகிறது.

“என்னப்பா செய்யலாம்?” சற்றே தெரியத் தொடங்கிய வயிற்றோடு வந்து அவனருகில் அமர்ந்து கேட்டவளை பாசமாக நோக்கிப் புன்னகைத்தான் குணசீலன்.

“இந்த நேரத்தில கண்டதையும் நினச்சு நீ கவலைப்படாத! அதெல்லாம் சமாளிக்கலாம்!” என்றான் அவன்.

‘சமாளிக்கலாம்’ இந்த ஒற்றை வார்த்தையை வைத்தே அவன் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது. அவள் மிகுந்த வேதனையுற்றாள். என்ன செய்யலாம்?

தனக்காகக் கணவன் வாங்கிவரும் ஐஸ்கிறீம், சாக்லேட்களை நிறுத்தினாள்.

ஏன் என்று அவன் கேட்டபோது, “உடம்பு வைக்குதப்பா!” என்று அவளும் ‘சமாளித்தாள்’.

மூன்று கறியும் சோறும் இரண்டு கறி சோறானது. ஒரு பருக்கையும் கொட்டாமல் கவனித்துக்கொண்டாள். குளிர்காலத்தில் ஐஸ் கட்டிபோல் மாறிவிடும் முதல்நாள் உணவைக்கூட கொட்டுவதை விட்டுவிட்டு, சுடவைத்துச் சாப்பிட்டார்கள். இறைச்சிக் கறிக்குள் உருளைக்கிழங்கு கொஞ்சம் கூடுதலாகவே இடம் பிடிக்கத் துவங்கியது.

மாதத்தின் தொடக்கத்தில், “வா நடந்துவிட்டு வருவோம்.” என்று அவன் அழைத்தபோதும் தவிர்த்துவிட்டாள். அது வெறும் நடை மட்டுமாக அமைவதில்லை. ஐஸ்கிறீம் வாங்கிக் கொடுப்பான். வரும்போது அவர்கள் வீட்டுச் சந்தியில் இருக்கும் பொம்மஸ் கடையில் சாஸேஜ் உடன் உருளைக்கிழங்குப் பொரியலும் அவளுக்கு மிகவும் பிடிக்கும் என்று தெரிந்து வாங்கித் தராமல் வரமாட்டான். எதற்கு வீண் செலவு. தவிர்த்துவிட்டாள்.

மனைவியின் மனம் குணசீலனுக்கு விளங்காமல் இருக்குமா? அவளை அணைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்துவிடுவான்! அன்பை மட்டுமே அவனால் கணக்குப் பாராமல் அள்ளியள்ளி வழங்க முடிந்தது. அவளுக்கும் அது ஒன்றே போதுமாயிருந்தது.

அடுத்த மாதமும் கடிதம் வந்தது, சின்னத் தம்பிக்குப் பத்தாவது பிறந்தநாள் என்று.

தனக்குப் புது உடை இரண்டு செட் கேட்டவனாம். பிறந்தநாளும் இந்தமுறை கொண்டாட வேண்டும் என்றானாம். அதோடு, அவனுக்குத் தெரியாமல் பரிசு கொடுக்கவும் தங்கைகள் ஆசைப்படுவதாகவும் சொல்லி இருந்தார்கள். கீழே அம்மாவின் கையெழுத்திலும் நான்கு வரிகள். “பிள்ளை, கேக்கிறன் எண்டு குறை நினையாத. அப்பாவையும் வேலைக்குப் போகவேண்டாம் எண்டு சொல்லிப்போட்டாய். நீ தந்திட்டுப் போன காசு எல்லாம் முடிஞ்சிது. செலவுக்கும் சேர்த்து அனுப்பிவிடம்மா.” என்றிருந்தது.

கடவுளே.. எவ்வளவு பெரிய முட்டாள் வேலை பார்த்துவிட்டாள்.

மாலை வேலை முடிந்து வந்தவன் வாடியிருந்த அவள் முகத்தைக் கவனித்துவிட்டு, மேசையில் இருந்த கடிதத்தை எடுத்துப் படித்தான். “சமாளிக்கலாம் விடு!” என்றுவிட்டு குளிக்கப் போய்விட்டான் அவன். கண்களில் தழும்பிப்போன கண்ணீரோடு அப்படியே அமர்ந்திருந்தாள் அவள்.

எப்படிச் சமாளிப்பான்? குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வரைக்கும் பணம் செலுத்தும் நாட்டில் எப்படிச் சமாளிப்பது?

நாணயமான குணசீலனுக்கு வட்டிக்குப் பணம் கிடைத்தது.

இனி வட்டிக்காசும் கட்டவேண்டும். குணசீலன் பின்னேரத்தில் பிச்சரியா ஒன்றிலும் சேர்ந்துகொண்டான். அதற்குப் பிறகெல்லாம் அவனைக் காண்பதே ஆழ்ந்து உறங்கும் வேளையில் தான் என்றாகிப் போயிற்று. குழந்தையோடு இருக்கிறவளுக்குப் பழைய மாதிரி கணவனோடு ஒரு நடைக்கும், அந்தச் சந்தியில் இருக்கும் சாஸேஜ் சாப்பிடவும் ஆசை எழுந்தது. அவனோடு ஒன்றாக அமர்ந்து ஒரு படம் பார்ப்பதே குதிரைக்கொம்பாக மாறிப் போயிற்று.

இப்போதெல்லாம் பக்கத்துவீட்டுக் கமலி அக்காதான் அவளுக்குத் தஞ்சம். சமையலை முடித்துவிட்டு அவரோடு போயிருந்து கதைக்கும்போதுதான் ஊர் கதைகள் எல்லாம் வரும். யார் யாரெல்லாம் எங்கெங்கு வேலைக்குப் போகிறார்கள் என்றெல்லாம் சொல்வார். கமலி அக்காவும் ஒவ்வொரு நாளும் இரவு எட்டு மணிக்கு ஒரு சைனாக்காரன் ரெஸ்டாரண்டுக்கு நிலம் ‘ மொப்’ பண்ணப் போவது தெரிந்தபோதுதான் ‘நாமும் வேலைக்குப் போனால் என்ன?’ என்று அவளுக்குத் தோன்றியது,

ஒரு பழக் கம்பனி வேறு அருகே இருக்கிறது என்றும் அங்கே பல தமிழ் பெண்கள் பழங்கள் பழுது பார்க்கப் போகிறார்கள் என்றும் தெரிந்து, “தமிழ் ஆக்கள் இருக்கீனம் தானே, மொழி தெரியாட்டியும் உதவி செய்வீனம், எனக்கு ஒண்டு எண்டாலும் பாப்பீனம். நீங்க வேலை வேலை எண்டு ஓட நான் சும்மா தானே இருக்கிறன்.” என்று கணவனிடம் கெஞ்சி சம்மதிக்க வைத்து முதல்நாள் வேலைக்குப் போனபோது அவளுக்கு அவ்வளவு பயம்.

புது மனிதர்கள், தெரியாத இடம், புதிதான வேலை என்று பெரும் சிரமத்துக்குள்ளானாள். அதைவிட, எவ்வளவு மேன்மையான ஆசிரியையாக வர ஆசைப்பட்டவள் பழம் பழுதுபார்க்க வந்து நிற்கிறாளே! உடலும் உள்ளமும் நொந்து போயிற்று! அடுத்தநாள் கால்கள் இரண்டும் கொதிக்கத் தொடங்கியது.

‘அம்மாடி! நம்மால் முடியாது! பிள்ளை பிறந்தபிறகு பாப்போம்.’

கணவனிடம் சொல்லிவிட்டு நிற்போம் என்று நினைத்துக்கொண்டிருக்கக் கடிதம் வந்தது. கடைசித் தங்கை பெரியவளாகி விட்டாளாம். சோர்ந்த கால்கள் ஓடத் துவங்கின. அதன்பிறகு நிற்கவேயில்லை. இன்றுவரை!

மூன்று குழந்தைகளோடு அவளுடையதும் அழகான குடும்பம் தான். இன்றுவரை அவள் மீதும் பிள்ளைகள் மீதும் உயிரையே வைத்திருக்கும் கணவன் தான். அவன் இன்னும் இரண்டு வேலைகள் செய்துகொண்டே இருக்கிறான். கமலி அக்காவுக்குப் பக்கவாதம் வந்துவிட்டதால் அவரின் வேலையோடு சேர்த்து அவளும் இன்னும் இரண்டு வேலைகளுக்குப் போகிறாள்.

ஆனால் என்ன? வருமானம் எவ்வளவு கூடினாலும் செலவு குறையவே இல்லை. அவனுடைய இரண்டு தங்கைகளுக்கும் சீதனம் கொடுத்துத் திருமணம் செய்து வைத்து, அவளுடைய தம்பி தங்கைகளைப் படிக்க வைத்து, பெரிய தங்கைக்கும் திருமணம் செய்து வைத்து, இதோ இப்போது சின்னவளுக்கு என்று வந்தபோது திருமணச் செலவுக்காக அவளின் நகைகள் எல்லாம் அடவு கடைக்குப் போயிருந்தது.

வட்டிக்கு வாங்கித் தவறாமல் வட்டி செலுத்தி, அவ்வப்போது முதலும் கொடுத்து என்று ஊருக்குள் குணசீலன் நாணயமானவன் என்று பெயர் வாங்கியிருந்தான்! அந்தப்பெயர் சின்னவள் சீதனத்துக்குக் கைகொடுத்தது.

கலியாணவீட்டுக்கு அணிய என்று கவரிங் நகைகள் வாங்கி வைத்துக்கொண்டு புறப்பட்டாள் ரஞ்சனி.

பெட்டிக்குள் அவளின் கல்யாணப் புடவையைத் தவிர்த்து மிகுதி அனைத்துமே தம்பி கேட்ட பொருட்கள், தங்கை கேட்ட பொருட்கள், பெரியவளின் பிள்ளைக்கு வாங்கியவைகள், சொக்லேட்ஸ், அம்மா கொண்டுவரச் சொன்னவைகள், அப்பாவுக்கு மருந்துகள், இரும்புச் சத்து நிறைந்த பாணிகள் என்று நிரம்பி வழிய வழியப் பெட்டி கட்டினாள்.

முழுக்க முழுக்கக் கடன்தான். ஆனால், மனதில் ஒரு நிறைவு! அவன் வீட்டு மனிதர்களுக்கும் செய்தாயிற்று! இதோடு அவளின் வீட்டுக் கடமைகளும் முடிகிறதே! கடன்களைக் குடுத்து முடித்தபிறகு இனி அவர்களுக்குத் தானே!

கணவனிடமும் அதைச் சந்தோசமாகப் பகிர்ந்துகொண்டாள்.

“கடன் முடிஞ்சதும், எங்கட மூத்தவளுக்கும் கொஞ்சம் நகை சேர்க்கவேணும். பன்னிரண்டு வயசாகப் போகுது. சாமத்தியவீடு நல்ல வடிவாச் செய்ய வேணுமப்பா!” நினைக்கும்போதே மனதில் அவ்வளவு சுகம்.

“பிறகு தம்பியாக்களுக்கும் நகைகள் செய்யவேணும். என்ர ஆம்பிளைப் பிள்ளைகளுக்குப் போடுறதுக்கு ஒரு சங்கிலி இல்ல. நீங்க ஒரு வேலை செய்தாக் காணும் சரியோ.” பிள்ளைகளை உறங்கவைத்த பிறகு அவன் மார்பில் சாய்ந்திருந்து சொல்லிக்கொண்டிருந்தாள் அவள். அவன் அவளை வருடிக் கொடுத்தபடி கேட்டிருந்தான்.

அன்றைய நாட்களுக்கே போய்விட்டது போலிருந்தது. அவள் இலங்கைக்குப் போனபிறகு பிள்ளைகளைக் கவனிக்க என்று அவனும் விடுமுறை எடுத்திருந்தான். எந்த அவசரமும் இல்லாமல் நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த சுகத்தை அனுபவித்தபடி இருக்க, அவனின் வருடலின் அழுத்தம் சற்றே கூட முகம் சிவந்து போயிற்று அவளுக்கு. எவ்வளவு நாட்களாயிற்று? அவர்களுக்கு என்றும் ஒரு வாழ்க்கை இருப்பதை மறந்தே போயிருந்தனர்.

அவன் அணைக்கவும், “ஏற்கனவே மூண்டப்பா!” என்றாள் வெட்கச் சிரிப்புடன்.

இனி எல்லாம் நிறைவாக இருக்கும் என்கிற மலர்வோடு விமானம் ஏறினாள் ரஞ்சனி. கணவனிடம் வருவதற்கு என்று முதன் முதலாக விமானமேறிய நினைவு வந்து அவள் முகத்தை இன்னும் மலரச் செய்தது.

குடும்பமே வந்து வரவேற்றார்கள். பெரிய தங்கைக்கு ஒரு குழந்தை. கணவனோடு வந்திருந்தாள். அவன் வங்கியிலும் இவள் கச்சேரியிலும் நல்ல பதவியில் இருந்தார்கள்.

இரண்டாவது தங்கை, வரித்திணைக்களத்தில் பொறுப்பான பதவி. அவளுக்குத்தான் டொக்டர் மாப்பிள்ளையோடு திருமணம் நடக்கப் போகிறது. தம்பியும் கம்பஸ் முடிந்து பெரிய தமக்கையின் கணவனின் உதவியோடு வங்கியில் வேலை பெற்றிருந்தான்.

எல்லோரையும் பார்த்தபோது மனதுக்குப் பெரும் நிறைவாக உணர்ந்தாள் ரஞ்சனி. இத்தனையையும் செய்தது அவளல்லவா! அவள் போகும்போது எப்படி இருந்த குடும்பம்? இன்று எப்படி இருக்கிறது? பட்ட கஷ்டம் எல்லாம் ஒன்றுமில்லை போலிருந்தது.

எல்லோர் கழுத்தும் கையும் நகைகளில் அழகாய் மின்னின. அம்மா கூட மொத்தத் தாலிக்கொடி போட்டிருந்ததைக் கண்டபோது, அவளது கழுத்துக் கூசியது. கவரிங் கடிக்குமில்லையா?

சிரித்துச் ‘சமாளித்தாள்’.

வீட்டைப் பார்த்தவள் மலைத்துப்போனாள். தம்பிக்கு மோட்டார்வண்டி. தங்கைகளுக்கு ஆளுக்கொரு ஸ்கூட்டி. சோபா, டீவி, அலங்காரப் பொருட்கள் என்று வெளிநாடு தோற்றுவிடும்! அவள் வரும்போது கணவன் வாங்கிவைத்த அதே பொருட்களோடு இன்னுமே காட்சியளிக்கும் வீடு கண்ணுக்குள் வந்துபோனது.

மூன்று குழந்தைகளாகியும், பெரிய வீடாக மாறினால் வாடகை அதிகம் என்று அதே வீட்டில் சமாளிக்கும் நினைவுகள் வந்து போயிற்று!

‘சரி.. இனிப்போய்ப் பெரிய வீடா மாறுவம். இனி ஒரு கடமையும் இல்லைதானே!’ தனக்குள் எண்ணிக்கொண்டாள்.

ஆசையில் சின்னவள் ஸ்கூட்டியை எடுத்து ஓட்டிப்பார்த்தவள், வீதியில் லைட் போஸ்ட்டோடு மோதிவிட்டாள். பெரிய காயமில்லைதான். ஆனாலும், “அறிவில்லையாக்கா உனக்கு? கையக்கால வச்சுக்கொண்டு சும்மா இருக்க மாட்டியா? என்னவோ எல்லாம் தெரிஞ்சவள் மாதிரி எடுத்து.. ப்ச்! தள்ளு!” என்று, இவளைத் தள்ளி விழுத்தாத குறையாகத் தள்ளிவிட்டு ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டு நடந்தாள் அவள்.

அவமானத்தில் கண்கள் கலங்கி முகம் சிறுத்துப் போயிற்று ரஞ்சனிக்கு! ‘சமாளித்துக்கொண்டாள்’. அவளுக்கா சமாளிக்கத் தெரியாது?

‘கார் வாங்காட்டியும் பரவாயில்ல, டிரைவிங்காவது போய்ப் பழகவேணும்!’ மனதுக்குள் எண்ணிக்கொண்டாள்.

முதல்நாள் உணவைக் கண்டுவிட்டு, “முந்திமாதிரி பழஞ்சோறு குழைங்க அம்மா!” தாயின் கையால் சாப்பிடும் ஆசையில் அவள் சொல்ல, “பிறகு நாய்க்கு என்னத்த வைக்கிறது?” என்றபடி அதை நாய்க்கு வைத்தார் அன்னை.

விக்கித்து நின்றுவிட்டாள் ரஞ்சனி!

திருமணமும் நல்லபடியாக முடிந்தது. நாளை புறப்படப் போகிறாள். கையில் கொஞ்சமும் காசில்லை. ஆனாலும் சந்தோசத்துக்குக் குறைவேயில்லை. எல்லோரையும் கரை சேர்த்துவிட்டாள். பெற்றவர்களை இனிச் சகோதரர்கள் பார்த்துக் கொள்வார்கள். அவள் இனிக் கடனைக் கொடுத்துவிட்டு, நகைகளை அடைவிலிருந்து எடுத்ததும் காசு மிஞ்சும்.

‘சின்னவளின்ர மனுசன் போட்டிருக்கிற மாதிரி என்ர மனுசனுக்கும் ஒரு சங்கிலி வாங்கிப் புலிப்பல்லு பெண்டன் கொழுவ வேணும். அவருக்கு எடுப்பா இருக்கும்.’ அன்றுபோலவே தன் ஆசைகளையெல்லாம் கணவனின் மார்பில் சாய்ந்தபடி கதை கதையாகச் சொல்ல ஆவல் எழுந்தது. நாளைக்குப் போய்விடுவாளே!

இனிய நினைவுகளோடு குளித்துவிட்டு அவள் வந்தபோது, என்னவோ அம்மாவும் தம்பியும் குசுகுசுத்துக் கொண்டிருந்தார்கள்.

“என்னம்மா?” சிரிப்புடன் கேட்டாள் ரஞ்சனி.

தாய்க்கும் பெரிதாக சிரிப்பு வந்துவிட்டது. “ஒண்டுமில்லையம்மா. அவன்.. உன்ர தம்பி தன்னையும் வெளிநாட்டுக்கு எடுத்துவிடட்டாம். அதுதான் ‘அக்காட்ட கேளடா மாட்டன் எண்டே சொல்லப்போறாள்!’ எண்டு சொல்லிக்கொண்டு இருக்க நீ வாறாய்.” என்றார் அன்னை.

அப்படியே நின்றுவிட்டாள் ரஞ்சனி! மனதில் எப்படிச் ‘சமாளிக்கலாம்’ என்று கணக்கு ஓடத்தொடங்கி இருந்தது.