தனிமைத்துயர் தீராதோ 53 – 5

“அது அப்படியில்லை மித்து.” என்றான் கீர்த்தனன் அவசரமாக.

 

“உன் மீது எவ்வளவுதான் கோபம் இருந்தாலும் வயிற்றில் குழந்தையோடு இருக்கிறவள் எப்படியோ போகட்டும் என்று விடுகிற அளவுக்கு கல்நெஞ்சன் இல்லை நான். அப்போது தம்பி பிறப்பதற்கு இன்னும் இரண்டு வாரம் இருந்தது தானே. அதோடு, அன்று உன் பிறந்தநாள் வேறு. அவ்வளவு நடந்தபிறகும் சும்மாவே எனக்கு அன்று உன்னைப் பார்க்கவேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டே இருந்தது. இதில் உன் குரலைக் கேட்டேன் என்று வை.. மொத்தமாக உடைந்து போவேன் என்று பயந்து கோழை போல் காலையிலேயே இங்கிருந்து புறப்பட்டு கவிதா வீட்டுக்கு ஓடிவிட்டேன். நீ அழைக்கவும், உன் பிறந்தநாளுக்காகத்தான் அழைக்கிறாய் என்றெண்ணி அதற்குமேல் முடியாமல் போனை அணைத்தும் வைத்துவிட்டேன். நானில்லாவிட்டால் என்ன நீ ஆம்புலன்சுக்கு அழைத்திருக்க வேண்டியது தானே. சத்யனும் இருந்தானே.” என்றான் அவன் அன்று நடந்தவைகளை அறியாதவனாக.

 

உடனேயே பதில் சொல்லவில்லை மித்ரா. சற்றுப் பொறுத்தவள், எங்கோ பார்வையை பதித்து, “ஆம்புலன்சுக்கு அழைத்திருக்கலாம் தான்.. சத்திக்கு சொல்லியிருக்க அவன் உடனேயே வந்திருப்பான் தான்.. ஆனால், நான் பலதடவைகள் அழைத்தும் நீங்கள் வரவில்லை என்றதும் என் மீதே எனக்கு ஆத்திரம். கண்ணுக்குள் பொத்திவைத்துக் காத்த கணவனின் வெறுப்பை சம்பாதித்தது நான் செய்த தவறுதானே.. அதற்கு தண்டனையாக இருக்கட்டும் என்றெண்ணி, நடப்பது நடக்கட்டும் என்று வயிற்று வலியோடு என் காரிலேயேதான் ஹாஸ்பிடல் போனேன்.” என்றவள், அன்று தான் பட்ட பாட்டைச் சொன்னபோது, துடிதுடித்தே போனான் கீர்த்தனன்.

 

வேகமாய்ச் சென்று அவளை இழுத்து அணைத்தவன், “என்ன மித்து இது? தப்பித்தவறி உனக்கோ தம்பிக்கோ ஏதாவது நடந்திருந்தால்? போகிற வழியில் ஏதாவது ஆகியிருந்தால்?” என்று கேட்கக் கேட்க நெஞ்சு பதறியது அவனுக்கு.

 

என்னவோ இன்றுதான் அவளுக்கு அது நடப்பதுபோல் நெஞ்சம் துடிக்க, அதிலிருந்து அந்த வேதனையிலிருந்து அவளைக் காப்பவன் போல் அவளை தனக்குள் இறுக்கிக்கொண்டான் கீர்த்தனன். அவன் தேகம் நடுங்கியது.

 

அவனது துடிப்பு அன்று அவள் அனுபவித்த துன்பத்துக்கு மருந்தாக அமைய, அவனை நிமிர்ந்து பார்த்து, “இன்று இப்படித் துடிக்கிறவர் அன்று நம் மகனை தண்டித்துவிட்டீர்களே. அவன் என்ன பாவம் செய்தான் கீதன், என் வயிற்றில் பிறந்ததை தவிர? நம் சந்தோசமான வாழ்க்கைக்கு பரிசாக வந்தவன். அவனைப்போய் உங்கள் பிள்ளை இல்லை என்று சொன்னீர்களே? இன்றுவரை இங்கே வலிக்கிறது கீர்த்தனன்.” என்று தன் இதயத்தை தொட்டுக்காட்டிச் சொன்னவளின் கேள்வி அவனைக் கொன்று தின்றது!

 

உள்ளத்தில் உதிரம் வடிய உறைந்துபோய் அவன் நிற்க, அவனிடமிருந்து விலகிப்போய் நின்றுகொண்டு, வானத்தை வெறித்தாள் மித்ரா. “எவ்வளவு பெரிய சிலுவையை சுமக்கவும் நான் தயாராகத்தான் இருந்தேன். அது எனக்குப் பழக்கமும் தானே. ஆனால், என் பாவம் என் மகனை சூழ்ந்ததைத்தான் என்னால் தாங்க முடியவில்லை. என்னைப்போலன்றி என் குழந்தை அம்மா அப்பா என்கிற பாசக் கூட்டுக்குள் பாதுகாப்பாக சந்தோசமாக வளரவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் நடந்தது என்ன? தன் தந்தையின் வெறுப்பை சுமந்தபடிதானே இந்தப் பூமியில் அவன் ஜனித்தான்! எனக்கு மகன் பிறந்துவிட்டான் என்று அவனைத் தூக்கிக் கொண்டாட பெற்ற தந்தை இல்லாமல் தானே அவன் வளர்ந்தான். கடைசிவரைக்கும் தந்தையின் பாசம் என்னைப்போல அவனுக்கும் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்றுதான் நீங்கள் என்னை இன்னும் வெறுப்பீர்கள் என்று தெரிந்தும் அவன் உங்கள் பிள்ளைதான் என்று சட்ட ரீதியாக நிரூபித்தேன். ஆனால், அப்படி நிரூபித்துத்தான் அவனை உங்கள் பிள்ளை என்று உலகுக்கு காட்டும் நிலையில் அவனை வைத்துவிட்டீர்களே கீதன்?” என்று கேட்டவள் அதற்குமேலும் முடியாமல் அழுகையில் நடுங்கிய கீழுதட்டை பற்களால் பற்ற, ஒருகணம் உறைந்துபோய் நின்றுவிட்டான் கீர்த்தனன்.

 

அடுத்த கணமே ஒரெயெட்டில் அவளை நெருங்கி, அவளை இழுத்துத் தன் மார்போடு சாத்திக்கொண்டான்.

 

அதற்காகவே காத்திருந்தவள் போன்று உடைந்து அழுதாள் மித்ரா. விம்மி விம்மி அழுதாள்! அவன் எவ்வளவோ தேற்றியும், ஆறுதல் சொல்லியும், தன் செயலுக்காய் வருந்தியும் அந்த அழுகை நிற்கவேயில்லை. மனதில் இருந்த பாரத்தையெல்லாம் அவனிடம் கொட்டியதாலோ என்னவோ கட்டுப்பாட்டை இழந்து கண்ணீரை விட்டுக்கொண்டே இருந்தாள்.

 

செய்த எதையும் அவள் தெரிந்து செய்யவில்லை. ஆனால், அந்தச் செயல்களினால் அதுநாள் வரை அவளை ஆட்டிப்படைத்த வேதனை, வருத்தம், துக்கம், குன்றல், குறுகல், குற்றவுணர்ச்சி என்று அனைத்தையும் அவன் மார்பில் சாய்ந்து வடித்த கண்ணீரில் கழுவிக்கொண்டிருந்தாள். அவன் காலடியில் தன்னை புனிதப் படுத்திக் கொண்டிருந்தாள். கணவுடைய அன்பு.. அந்த ஆதரவு அவளின் தனிமை துயரிலிருந்து அவளை மீட்டுக்கொண்டிருந்தது.

 

கீர்த்தனனோ, அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல், அவளை தன்னிடமிருந்து பிரித்து, “மித்து! போதும் நிறுத்து!” என்றான் அழுத்தமாக.

 

“நான் உனக்கு செய்தது எல்லாம் பெரும் தப்புத்தான். அறியாத வயதில் தெரியாமல் நீ செய்ததை எல்லாம் பெரிதாக எடுத்து, உண்மை தெரியாமல் முழு முட்டாளாக உன்னை வருத்திவிட்டேன் தான். உனக்கு எவ்வளவோ கஷ்டங்களை கொடுத்துவிட்டேன் தான். பெரும் மூடனாக நடந்துகொண்டேன் தான். ஆனால் இப்போது இருக்கிற கீர்த்தனன் பட்டுத் தெளிந்தவன், உன்னை முற்றிலுமாக புரிந்துகொண்டவன், உன் பேரில் எந்தத் தப்புமே இல்லை என்று அறிந்தவன், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் நீ மட்டும் தான் என் மனைவியாக வரவேண்டும் என்று கடவுளை வேண்டுகிறவன். அவன் என்றைக்கும் உன்னை இழக்கமாட்டான்! என்னை நம்பு! இல்லை இன்னும் என் மீது உனக்குக் கோபம் இருந்தால் ஏதாவது தண்டனையை எனக்குத் தா. அதை விட்டுவிட்டு அழுது என்னைக் கொல்லாதே மித்துமா.. ப்ளீஸ்!” என்றான் அவன் கெஞ்சலும் அதட்டலுமாக.

 

error: Alert: Content selection is disabled!!