மூன்று மாடிகள் கொண்ட ஒரு வீட்டின் முன்னால் காரை கொண்டுவந்து நிறுத்திவிட்டு, தங்கையைத் திரும்பிப் பார்த்தான் சத்யன்.
தமையனின் பார்வையின் பொருள் புரிந்தபோதும், “நீ போயேன் அண்ணா!” என்றாள் வித்யா எரிச்சலுடன்.
“என்னால் முடிந்தால் நான் ஏன் உன்னைப் போகச் சொல்லப் போகிறேன்.” என்றவனின் முகம் இறுகியது. ஒருகாலத்தில் அந்த வீட்டிலேயே தான் அவர்கள் இருவருமே விழுந்து கிடப்பார்கள். எப்போதடா வார இறுதி வரும், இங்கே வந்து கொட்டமடிக்கலாம் என்று காத்திருப்பார்கள். அது மட்டுமில்லையே! அந்த வீட்டில் இருக்கும் அந்த நபர் என்றால் அவர்கள் இருவருக்கும் உயிர் அல்லவா!
ஆனால் இப்போது…? எல்லாம் தலைகீழ் மாற்றம்! மனதில் பாரம் ஏறத்தொடங்க அதையெல்லாம் நினைக்கக் கூடாது என்று தன்னையே அடக்கிக்கொண்டு, “இறங்கு வித்தி!” என்றான் சற்றே கண்டிப்பாக.
தமையனை முறைத்துவிட்டு இறங்கி, கார் கதவை அறைந்து சாத்திவிட்டுச் சென்று, அந்த வீட்டின் அழைப்புமணியை அழுத்தினாள்.
அந்தப்பக்கம் திறப்பவர் யாராக இருந்தாலும் அவரைப் பார்க்கப் பிரியமற்றவளாக, கைகளைக் கட்டிக்கொண்டு முகத்தைப் பக்கவாட்டில் திருப்பியபடி அவள் காத்திருக்க, கதவைத் திறந்தவனின் விழிகள் இவளைக் கண்டதும் ஆச்சரியத்தில் விரிந்தது. முகம் சட்டென மலர்ந்தது.
“ஹேய் வித்தி! வாவா! உள்ளே வா!” என்று உற்சாகமாக அழைத்தான் அவன், கீர்த்தனன்!
அவனது வரவேற்பை அலட்சியம் செய்து முறைத்தாள் இவள். “சந்துவை கூட்டி வாருங்கள்!” என்றாள் அதட்டலாக.
அவன் முகத்திலோ முறுவல் அரும்பியது. “கொஞ்சம் பொறு. அம்மா அவனுக்கு டைப்பர் மாற்றுகிறார்.” என்றுவிட்டு, “எப்படி இருக்கிறாய் நீ? உன்னைப் பார்த்து எத்தனை நாட்களாகிவிட்டது. நன்றாக மெலிந்து விட்டாயேம்மா.” என்றான் கனிவோடு.
அந்த விசாரிப்பை காதிலேயே விழுத்தாமல், “ஐந்து மணிக்கு வருவோம் என்று தெரியும் தானே! அப்படியிருந்தும் இப்போதுதான் டைப்பர் மாற்றுகிறார் என்றால் என்ன அர்த்தம்? வேண்டும் என்றே எங்களைக் காக்கவைத்து, கோபத்தைக் கிளறவேண்டும் என்று திட்டம் போட்டுச் செய்கிறீர்களா?” என்று சிடுசிடுத்தாள் அவள்.
அவனுக்கும் அதே சந்தேகம் தாயிடத்தில் இருந்தபோதிலும் அதைக் காட்டாது, “டைப்பர் மாற்ற என்ன நிறைய நேரமா பிடிக்கப்போகிறது? இதோ முடிந்துவிடும்.” என்றான்.
“உன் படிப்பு எல்லாம் எப்படிப் போகிறது? சத்தி எப்படி இருக்கிறான்? வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டானா?” அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளத் துடித்த மனதின் ஆவலை அடக்கமுடியாமல் கேட்டான்.
கோபம் கொப்பளிக்கும் விழிகளால் அவனை முறைத்தவளின் இதழோரம் ஏளனமாக வளைந்தது.
“அதையெல்லாம் அறிந்து என்ன செய்யப் போகிறீர்கள்? முதலில், நீங்கள் ஏன் எங்களைப் பற்றி விசாரிக்கிறீர்கள்? உங்களுக்கும் எங்களுக்கும் என்ன தொடர்பு? அந்நியரிடம் எல்லாம் எங்களைப் பற்றிச் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஏன், உங்கள் முகத்தைப் பார்க்கக்கூடப் பிடிக்கவில்லை. வேறு வழியில்லாமல் தான் இங்கே வந்திருக்கிறேன். மற்றும்படி இந்த வீட்டு வாசலை மிதிக்கக்கூடப் பிடிக்கவில்லை!” வெறுப்போடு மொழிந்தவளை வேதனையோடு பார்த்தான் அவன்.
அவளின் படபடப்பு அவனுக்குப் புதியது அல்ல! ஆனால் இந்தக் கோபம்? இந்த வெறுப்பு? ஆயினும் அவன் முகத்தில் இருந்த கனிவு மட்டும் மாறவே இல்லை. கோபமோ துளியுமில்லை!
“ஏன் இப்படியெல்லாம் பேசுகிறாய் வித்தி? நான் உனக்கு அந்நியமா?” என்று கேட்டான் வறண்ட குரலில்.
“பின்னே உறவா? என்ன உறவு? எங்கே சொல்லுங்கள் பார்க்கலாம்?” அவனிடம் சவால் விட்டாள் வித்யா.
உறவை சொல்லும் வகையற்று வாயடைத்துப்போய் நின்றான் அவன். அவள் இதழ்கடையோரம் மீண்டும் ஏளனப் புன்னகை! “உங்கள் வேஷம் எப்போதோ கலைந்துவிட்டது. அதனால் இனியும் நடிக்காமல் எங்கள் வீட்டுப் பிள்ளையைத் தந்தீர்கள் என்றால் நான் போய்விடுவேன்.”
“அவன் இந்த வீட்டுப் பிள்ளையும் தான்.”
“ஓ…!” என்று, உச்சபட்ச வியப்பை முகத்தில் காட்டினாள் அவள்.
“எப்போதிலிருந்து? அவன் உங்கள் மகன்தான் என்று நிரூபித்த பிறகுதானே? அதைச் செய்யாமல் இருந்திருந்தால், இதே வார்த்தைகளை உங்கள் வாயால் சொல்லியிருப்பீர்களா?” என்று அவள் கேட்டபோது, மீண்டும் வாயடைத்து நின்றான் அவன்.
அப்போது, அவன் தாய் பாக்கியலட்சுமி சந்தோஷ் உடன் வர, கைநீட்டி மகனை வாங்கிக்கொண்டான். இனி சனிக்கிழமைதான் அவனைப் பார்க்கமுடியும் என்கிற வேதனையில் கரங்கள் மகனை இறுகத் தழுவிக்கொண்டன! மார்போடு அணைத்துக்கொண்டவனின் விழிகள் தாமாக மூடிக்கொண்டன!
தந்தையின் மனப்புழுக்கத்தை அறியாத குழந்தையோ, “பப்பா…” என்றபடி அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு செம்பவள வாய் திறந்து சிரித்தது. செல்ல மகனின் அன்புச் செயலில் விழிகள் பனிக்க, அவன் நெற்றியில் தன் இதழ்களை ஒற்றிவிட்டு, மனமேயில்லாமல் வித்தியிடம் கொடுத்தான்.
“சி…த்தி…” என்றபடி அவளிடம் தாவியவனை, “சந்துக்குட்டி…” என்றபடி, கிட்டத்தட்ட அதன் தந்தையிடமிருந்து பறித்துக்கொண்டு விறுவிறுவென்று அங்கிருந்து வெளியேறினாள் அவள்.
நெஞ்சம் கனக்க அவளைப் பார்த்துக்கொண்டு நின்றான் அவன். அப்போதுதான் நினைவு வந்தவனாய் அறைக்குள் வேகமாகச் சென்று, சிறு பெட்டி போன்று இருந்த ஒன்றை எடுத்துக்கொண்டு அவளிடம் விரைந்தான். “வித்தி..!”
அவள் திரும்பிப் பார்க்கவும், “கொஞ்சம் பொறு!” என்றபடி அவளை நெருங்கிக் கையிலிருந்ததை அவள் புறமாக நீட்டி, “இந்தா… நீ லைசென்ஸ் எடுத்ததற்கு என் பரிசு.” என்றான் புன்னகையுடன்.
அதைக் கேட்டவளுக்கு ஆத்திரமும் அழுகையும் ஒருங்கே உருவாயிற்று! ஒரு காலத்தில் ‘நான் லைசென்ஸ் எடுத்தால் எனக்கு என்ன வாங்கித் தருவீர்கள்’ என்று உரிமையோடு அவனைப்போட்டு அவள் படுத்திய பாடுகள் எல்லாம் நினைவலைகளில் வந்து முட்டி மோதவும், விழிகள் கட்டுப்படுத்த மாட்டாமல் கலங்கியது. கலங்கிய விழிகளால் அவனை முறைத்துவிட்டு நடக்கத் தொடங்கியவளின் கையைப் பற்றி நிறுத்தி, அவள் தோளில் தொங்கிய கைப்பையில் அதை வைத்தான்.
கைகளில் சந்தோஷ் இருந்ததில் அவனைத் தடுக்க முடியாமல் போன ஆத்திரத்தில், “எனக்கு எதுவும் வேண்டாம். மரியாதையாக அதை எடுங்கள்!” என்றாள் கோபத்தில் குரல் நடுங்க.
கனிவோடு அவளை நோக்கி, “அன்போடு தருவதை வேண்டாம் என்று சொல்லக்கூடாதும்மா..” என்றான் அவன்.
அவள் இதழ்கள் அடக்கப்பட்ட அழுகையில் துடிப்பதைப் கண்டவனின் முகத்திலும் வேதனை. காற்றில் பறந்து அவள் கண்களை மறைத்த கேசத்தைக் காதோரம் ஒதுக்கி விட்டபடி, “என் செயல்கள் ஏதாவது உன்னை நோகடித்திருந்தால் இந்த அத்தானை மன்னித்துவிடு வித்திம்மா.” என்றான் வருத்தம் தோய்ந்த குரலில்.
என்ன முயன்றும் கட்டுப்படுத்த மாட்டாமல் கண்ணீர் கன்னங்களில் வழியத் தொடங்கவும், அதை அவனுக்குக் காட்டப் பிடிக்காது வெடுக்கென்று முகத்தைத் திருப்பிக்கொண்டு, அங்கிருந்து கிட்டத்தட்ட ஓடினாள் வித்யா.
நடந்ததை எல்லாம் வீட்டு வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார் பாக்கியலட்சுமி. வீட்டுக்குள் வந்தவனிடம், “பார்த்தாயா தனா அவளை! முளைத்து மூன்று இல்லை விடவில்லை. அதற்குள் எவ்வளவு திமிர்! இவளே இப்படி என்றால் இவளின் அக்கா எப்படி இருப்பாள்? அப்பப்பா…! ஏதோ நம் குடும்பத்தைப் பிடித்த பீடை தொலைந்துவிட்டது என்று பார்த்தால் இந்தக் குழந்தை வேறு!” என்றார் வெறுப்போடு.
முகம் இறுக, “வித்தியை பற்றித் தேவையில்லாமல் பேசாதீர்கள் அம்மா. அவள் குழந்தை. அதோடு, அவளின் கோபத்திலும் நியாயம் இருக்கிறது!” என்றான் அழுத்தமான குரலில்.


