“என்னடா நியாயம்? அவளின் அக்கா ஊ…” என்றவரை, “அம்மா!!” என்ற கடுமையான குரல் அடக்கியது.
அனைத்தையும் மறைக்காது அன்னையிடம் சொன்னது தப்போ என்று எப்போதும்போல் அப்போதும் நினைத்தவன், “தேவையில்லாமல் கதைக்காமல் போய் வேலையைப் பாருங்கள்!” என்றான்.
“சரிடா! நான் கண்டவளைப் பற்றியும் பேசவில்லை. ஆனால், உன் திருமணத்தைப் பற்றிப் பேசலாம் தானே. அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது தானே!” என்றார் அவரும்.
அந்தப் பேச்சுப் பிடிக்காததில் முகத்தைத் திருப்பிக்கொண்டு நின்றவனின் முன்னால் வந்து நின்றார்.
“சொல்லுடா. யமுனாவை எப்போது திருமணம் செய்யப் போகிறாய்?”
பதில் சொல்லாமல் இறுகிப்போய் நின்றவனுக்கு அந்தக் கேள்வியே சலிப்பை உண்டாக்கியது. அவன் வீட்டுக்கு அவர் வந்த நாளில் இருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் மகனைப் பற்றிக் குறையாகப் பேசுவதும், யமுனாவைக் கட்டிக்கொள் என்பதும் தான் அவரின் பேச்சாக இருந்தது.
“அவளை வேறு யாரையாவது கட்டிக்கொள்ளச் சொல்லுங்கள்.”
“அது அவளுக்குத் தெரியாதா? அல்லது ஆறு வருடமாக அவள் உனக்காகக் காத்திருக்கிறாள் என்று உனக்குத்தான் தெரியாதா?” என்றார் சூடான குரலில்.
அந்த உண்மை அவனைக் குத்தியது. பதினெட்டு வயது பெண்ணின் மனதில் அன்று அவன் விதைத்துவிட்ட ஆசை இன்றுவரை வளர்ந்து, அவளை வேறு வாழ்க்கை வாழவிடாமல் செய்துவிட்டது. வேண்டுமென்றே அவன் அதைச் செய்யாதபோதும், அன்னை நடத்திய நாடகத்தில் அவனை அறியாமலேயே பங்கேற்றிருக்கிறான் என்று தெரிந்தபோதிலும் நடந்தது நடந்தது தானே!
அந்தக் குற்ற உணர்ச்சி வாட்டியதில், “அவளைக் கட்டமுடியாது என்று நானும் ஐந்து வருடங்களுக்கு முதலே சொல்லிவிட்டேன்.” என்றான் இறங்கிப்போன குரலில்.
“அப்போது இருந்த நிலை வேறு தனா. இப்போது இருக்கும் நிலை வேறு! நீ குடும்பம் குட்டி என்று வாழவேண்டும். நம் குடும்பத்துக்கு ஒரு வாரிசு வேண்டும். அதற்கு நீ யமுனாவைக் கட்டிக்கொண்டால் தான் உண்டு.” என்றார் தாய்.
“சந்து என் மகன் அம்மா. உங்களின் பேரன். நம் குடும்பத்தின் முதல் வாரிசு. பிறகும் எதற்கு வாரிசு வேண்டும் என்கிறீர்கள்?” என்றான் சினக்குரலில்.
“யாரோ ஒருத்தி, எப்படியோ பெற்ற குழந்தையை எல்லாம் நம் வாரிசாக, என் பேரனாக என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை!” என்றார் வெறுப்போடு.
அதிர்ச்சியோடு அன்னையைப் பார்த்தான் கீர்த்தனன். அவன் பெற்ற மகனை, பச்சிளம் குழந்தையைப் பிடிக்கவில்லை என்கிறாரே. அப்போ, மனதில் வெறுப்பை வைத்துக்கொண்டா இந்த மூன்று வாரங்களாக அவனைப் பார்த்துக்கொண்டார்? அது தெரியாமல் அந்தப் பிஞ்சும் இவரின் காலைக் கட்டிக்கொண்டு திரிந்ததே..
நெஞ்சுக்குள் வலித்தது.
“நீங்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அவன் என் பிள்ளைதான்!” என்று கடினப்பட்ட குரலில் சொல்லிவிட்டு, அவன் உள்ளே செல்ல எத்தனிக்க, எப்போதும்போல் அப்போதும் அவனிடம் பேசி வெல்ல முடியாமல் போன ஆத்திரத்தில், “நில்லுடா!” என்று சத்தம் போட்டார் அன்னை.
“என்னம்மா?” பொறுமையற்ற குரலில் கேட்டவனிடம், “என்னை எப்போது சுவிசில் கொண்டுபோய் விடப்போகிறாய்?” என்று கேட்டார்.
மீண்டும் திகைப்போடு அவரைப் பார்த்தான் தனா. மூன்று மாத விசாவில் சுவிசில் இருக்கும் தங்கை கவிதாவின் வீட்டுக்கு வந்தவரை, ஒன்றரை மாதம் ஜெர்மனியில் அவனோடு வந்து இருக்க வருகிறீர்களா என்று கேட்டு, அவரின் சம்மதத்தோடுதான் அழைத்து வந்திருந்தான். இப்போது இப்படிக் கேட்டால் என்ன அர்த்தம்?
“நீங்கள் இங்கே வந்து இப்போதுதானே மூன்று வாரம் ஆகியிருக்கிறது. இன்னும் மூன்று வாரம் கழித்து அழைத்துப் போகிறேன்.” என்றான் முயன்று வருவித்த சாதாரணக் குரலில்.
“அதெல்லாம் சரியாக வராது! நான் உடனேயே அங்கே போகவேண்டும். இல்லையென்றால் மாப்பிள்ளை என்ன நினைப்பார்? அவர் தன் பிள்ளையைப் பார்த்துக்கொள்ளத்தான் காசை தண்ணீராகச் செலவழித்து என்னைச் சுவிசுக்கு கூப்பிட்டார். நான் இங்கே வந்து, யாரோ ஒரு குழந்தையைப் பார்த்துக்கொண்டு இருந்தால் அவர் கவியோடு சண்டைக்குப் போகமாட்டாரா?”
யமுனாவுடனான திருமணத்துக்கு அவன் தெளிவான பதில் சொல்லாத கோபத்தில் பேசுகிறார் என்று விளங்கினாலும், யாரோ ஒரு குழந்தை என்று அவன் பெற்ற மகனை சொல்லலாமா?
அதோடு, சேகரனின்- கவிதாவின் கணவனின் அழைப்பின் பெயரில் சுவிசுக்கு அவர் வருவதற்குத் தேவையான அனைத்துப் பணச்செலவையும் ஏற்றுக்கொண்டவன் அவன். அது அவருக்கும் தெரியும். அப்படியிருந்தும் இப்படிச் சொல்கிறாரே.
அதைச் சொன்னால், தங்கைக்குச் செய்ததைச் சொல்லிக் காட்டுகிறாயா என்று அவனிடம் இன்னொரு பிழையைக் கண்டுபிடிப்பார். எனவே, அதை விடுத்து, “சேகர் அப்படியானவர் இல்லை அம்மா.” என்று மட்டும் உரைத்தான்.
“அவர் அப்படி இல்லை என்று உனக்கு எப்படித் தெரியும்? மனதில் நினைப்பதை முகத்தில் அடிப்பதுபோல் சொல்லவா முடியும்? இல்லை நம்மிடம் தான் சொல்வாரா? நாம்தான் விளங்கி நடந்துகொள்ள வேண்டும்.” என்றவர், அவன் என்னவோ பதிலுக்குச் சொல்ல வரவும், கை நீட்டித் தடுத்தார்.
“நீ என்ன சொன்னாலும் இனி நான் இங்கே இருக்கமாட்டேன் தானா. என்னை அங்கே கொண்டுபோய் விடு!” என்றார் உறுதியான குரலில்.
பதில் சொல்லும் வகையற்று அன்னையை வெறித்தான் தனா. வாரத்தில் ஒருநாள் மட்டுமே மகன் அவனுடன் இருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஒரு பெண் வீட்டில் இருந்தால் இரண்டு நாட்கள் அனுமதிக்க முடியும் என்று சொல்லவும் தான், மகனோடு இன்னொருநாள் கூடுதலாக இருக்கலாம் என்கிற ஆசையில், அன்னையை இங்கே வரவழைத்து இருந்தான். அதை அறிந்திருந்தும் அடம் பிடிக்கிறாரே!
பெற்ற அன்னையே அவன் மனதை விளங்கிக் கொள்ளவில்லை என்றால் வேறு யார்தான் புரிந்து கொள்வார்கள் என்று விரக்தியோடு எண்ணுகையிலேயே ‘நானில்லையா?’ என்று கேட்டபடி ஒரு பூமுகம் மனக்கண்ணில் மின்னியது.
தலையை உலுக்கி அந்தத் தாக்கத்திலிருந்து வெளியே வந்தான்.
“என்னம்மா இப்படிச் சொல்கிறீர்கள்? நீங்கள் இருப்பதால் தான் சந்து இரண்டு நாட்கள் என்னோடு இருக்கிறான். இன்னும் மூன்று வாரம் தானே. இங்கேயே இருங்கள். நான் சேகரிடம் பேசுகிறேன்.” என்றான் கெஞ்சலாக.
அப்படி நான் இங்கிருந்தால் மகன் என்று அவன் மேல் நீ பாசத்தை வளர்க்க, அவனைப் பெற்றவள் மீண்டும் வந்து உன்னோடு ஒட்டிக்கொள்ளவா என்று மனதில் நினைத்தவர், “முடியாது!” என்றார் நிர்தாட்சண்யமாக.
மீண்டும் அன்னையை வெறிக்க மட்டுமே முடிந்தது அவனால். ஒன்றுக்கு மூன்றாகப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்த அவரால், பெற்ற மகனின் பிள்ளைப் பாசத்தை, அவனோடு பொழுதைக் கழிக்கத் துடிக்கும் தன் உள்ளத் துடிப்பை விளங்கிக்கொள்ளவே முடியவில்லையா? என்று எண்ணியவனுக்கு, என்றைக்குத்தான் அவர் அவனைப்பற்றிக் கவலைப் பட்டிருக்கிறார் என்பது விரக்தியோடு நினைவில் வந்தது.
அவரைப் பொறுத்தவரையில் பணம் காய்க்கும் மரம்தானே அவன்!
எப்போதும்போலத் தன் துயரத்தை நெஞ்சுக்குள் போட்டுப் புதைத்துவிட்டு, “சரி.. கூட்டிக்கொண்டு போகிறேன்..” என்றுவிட்டு, அவரின் முகத்தைக் கூடப் பார்க்கப் பிடிக்காமல் அறைக்குள் நுழைந்துகொண்டான்.
இனி மகனை வாரத்தில் ஒருநாள் தான் பார்க்க முடியுமா என்று மனம் இப்போதே தவிக்கத் தொடங்கியது. அன்று காலையில் இருந்து அவன் கையில் விளையாடிய, பால்மணம் மாறா அந்தச் சிசுவை கணமும் தவறாது நெஞ்சில் சுமக்க துடித்தபோதும் அதற்கு வழியில்லையே!
ஏன்?
கருவாய் இருந்தவனைக் கவனிக்கத் தவறினானே, அதற்கான தண்டனையா?
இந்தப் பூவுலகில் அவன் பாதம் பதித்த நொடியில் அள்ளியணைக்கத் தவறினானே, அதற்கான தண்டனையா?
எதற்காக என்றாலும் தண்டனை அவனுக்கு மட்டும் தானே கிடைக்கவேண்டும்! அவனுக்கு மகனாகப் பிறந்த அந்தக் குழந்தை என்ன பாவம் செய்தது? வாரத்தில் ஒருநாள் மட்டுமே தந்தையைக் காணும் கொடுமை எதனால்?
அவனைப் பெற்றவளால் அல்லவோ இதெல்லாம் நடந்தது!
அது தெரிந்தும் மனதிலிருந்து அவளை முற்றுமுழுதாக வெளியேற்ற முடியவில்லையே!
கரையைச் சேரும் அலைகள் கடலுக்கே திரும்பி விடுவதுபோல, அவன் வெளியேற்ற நினைக்கும் அவள் நினைவுகள் அத்தனையும் திரும்பத் திரும்ப அவனது ஆழ்மனதில் முட்டி மோதுகிறதே!
சற்றுமுன் கூட அவள் முகம்தானே நெஞ்சில் மின்னி மறைந்தது.
மனதின் புழுக்கம் தாங்காமல் மேலே போட்டிருந்த சட்டையைக் கழட்டி எறிந்துவிட்டுக் கட்டிலில் விழுந்தவனுக்கு எல்லாமே வெறுத்துப் போனது போலிருந்தது.


