இரண்டு வருடங்கள் கழித்து வந்த தமக்கை இரண்டு வாரங்கள் அன்பையும் அக்கறையையும் பொழிந்துவிட்டு மின்னல் மாதிரி மறைந்துவிட்டதில் வித்யாதான் மிகவும் சிரமப்பட்டுப் போனாள்.
“அம்மா, பார்க்குக்கு விளையாட்டுப் போகவா?”
“வேண்டாம்!”
“இது எனக்கு விளங்கவே இல்லை. சொல்லித் தருகிறீர்களா?”
“நான் சமைக்கோணும். அண்ணாவைக் கேள்!”
இப்படித் தன்னை எதிலும் கவனித்துக்கொள்ளாத அன்னையின் செயல்களைப் பொறுக்க முடியாது தமையனிடம் வந்து நின்றாள் வித்யா.
“எனக்கு அக்கா வேண்டும் அண்ணா. அக்கா இல்லாமல் இங்கே ஒன்றுமே பிடிக்கவில்லை.” கண்ணீருடன் சொன்னவளை அணைத்துக் கொண்டவனுக்கும் கூட அக்காவின் அருகாமையும் அவள் காட்டும் பாசமும் பரிவும் வேண்டும் என்றுதான் இருந்தது.
அதை அவனால் யாரிடம் சொல்லமுடியும்?
“கிறிஸ்மஸ்க்கு வருவாள்தானே.” என்று தேற்றினான்.
“அதுக்கு இன்னும் நிறைய நாட்கள் இருக்கே அண்ணா.”
அவனுக்கும் அதே ஏக்கம் தானே! “அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்? எனக்கும் தான் அக்கா வேண்டும் என்று இருக்கிறது. அதை நான் யாரிடம் போய்க் கேட்க?” என்று சிடுசிடுத்தான்.
தமையனின் கோபத்தில், “போ..! இனி உன்னோடு கதைக்கமாட்டேன்.” என்று அழுகையில் உதடு பிதுங்க சொல்லிவிட்டு ஒரு மூலையில் போய் முடங்கிக்கொண்டாள் வித்யா.
அடுத்து வந்த நாட்களிலும் சத்யனோடு முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டிருந்த வித்யாவுக்கு, நாட்கள் செல்லச் செல்ல அக்கா வேண்டும் என்கிற பிடிவாதம் மெல்ல மெல்ல வலுத்தது. ஏழு வயதேயான பிஞ்சு இல்லையா. தாயைப்போல் வேளா வேளைக்கு உணவு தந்து, படிப்பு சொல்லிக்கொடுத்து, அவளோடு கூடச் சேர்ந்து விளையாடி, கிச்சுக்கிச்சு மூட்டிச் சிரித்து, குளிக்க உதவிசெய்து, இரவில் உறங்குகையில் கதைகள் சொல்லி அவர்கள் இருவரையும் இருபுறமும் அணைத்துக்கொண்டு உறங்கும் தமக்கையின் அருகாமைக்கும், அரவணைப்புக்கும் ஏங்கி ஏங்கியே அவளுக்குக் காய்ச்சல் பிடித்தது.
அந்தக் காய்ச்சலின் வேகத்தில், “அக்கா… அக்கா வேண்டும்.” என்று அவள் புலம்ப, இது என்ன புதுப் பிரச்சனை என்று பயந்துபோனார் ஈஸ்வரி. பின்னே, மகள் தமக்கைக்காக ஏங்குவது தெரிந்தால் அதுக்கும் ஒரு விழா எடுத்துவிடுவாறே அவரின் அருமைக் கணவர்!
கணவரின் காதுக்கு இந்த விஷயம் எட்ட முதலில் வித்தியை சமாளிக்க எண்ணி, “அக்காவுக்கு இப்போது பள்ளியில் பரீட்சை நடக்கிறதாம். அதனால் இன்னும் ஒரு மாதத்தில் உன்னைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருக்கிறாள். ” என்று, எதையெதையோ பொய்யாகச் சொல்லி, அவளைத் தேற்றி காய்ச்சலை மாற்றுவதற்குள் படாத பாடுபட்டுப் போனார் ஈஸ்வரி.
ஆனால் தேறிவந்த வித்யாவோ, “கிறிஸ்மஸ்க்கு வரும் அக்கா என்னோடேயே இருக்கவேண்டும். இல்லையென்றால் நீங்கள் வீட்டில் இருங்கள்.” என்று ஒரே பிடியாக நிற்கத் தொடங்கினாள்.
சத்யனும் அதையே சொல்ல திகைத்துப் போனார் ஈஸ்வரி. “அப்படி அவள் இங்கேயே இருக்க முடியாது வித்தி. அப்பாவுக்குப் பிடிக்காது.”
“அப்பாவுக்கு ஏன் அக்காவை பிடிக்காது? அவள் பாவம். அவளுக்கும் இங்கே இருக்கத்தான் விருப்பம்.” என்றான் சத்யன் பிடிவாதமாக.
அதிலே கோபம் கொண்டவரோ, “உங்கள் இருவருக்கும் ஒரு தடவை சொன்னால் புரியாதா? அவள் இங்கே வர முடியாது. அப்படி வந்தால் அப்பா திரும்பவும் குடித்துவிட்டு வந்து சண்டை பிடிப்பார். பிறகு போலிஸ் வரும். அப்பாவை வீட்டில் இருந்து துரத்திவிடும்.” என்று அவர்களை மிரட்டினார்.
“அப்போ நீங்கள் வேலைக்குப் போகாமல் வீட்டில் இருங்கள். நீங்களும் இல்லாமல் அக்காவும் இல்லாமல் இருக்க முடியாது. அண்ணா ஒரே என்னோடு சண்டை பிடிக்கிறான்.” என்று அழுதாள் மித்ரா.
“இனி நீ அடிதான் வாங்கப் போகிறாய்.” என்று அவர் சொல்லி முடிக்க முதலே, “நீங்கள் அடித்தால் நான் போலீசிடம் சொல்லிக்கொடுப்பேன்.” என்றுவிட்டாள் வித்யா.
அதிர்ந்துபோனார் ஈஸ்வரி. ஏற்கனவே ஒருமகள் செய்த காரியத்திலேயே படாதபாடு பட்டாயிற்று! இதில் அடுத்தவளுமா? அவளுக்கு நன்றாக நான்கு வைத்தால் என்ன என்றுதான் ஆத்திரம் வந்தது. பிறகு சொன்னதுபோல் செய்துவிட்டாள் என்றால்?
அதுதான் ஒருத்தி ஏற்கனவே செய்து காட்டிவிட்டாளே! எல்லாம் அவளால் என்று அவள்மேல் கோபமும் எழுந்தது. இனியும் தன்னால் சமாளிக்க முடியாது என்று பயந்தவர் அன்றிரவே நடந்ததைக் கணவரின் காதுக்குக் கொண்டுசென்றார்.
அவரும், “பார்த்தாயா அவள் செய்த வேலையை? இரண்டு வருடங்கள் நிம்மதியாக இருந்தேன். அதைக் கெடுக்க என்றே வந்துவிட்டு போயிருக்கிறாள். என் பிள்ளைகளின் மனதையும் கலைத்து விட்டாளே. இதற்குத்தான் அவள் இங்கே வரவேண்டாம் என்று சொன்னேன். நீ கேட்டாயா?” என்று தன் பங்குக்குப் பாய்ந்தார்.
எல்லாப் பக்கமும் அடிவிழும் தன் தலைவிதியை நொந்தாலும், “சரிப்பா. நடந்தது நடந்துபோச்சு. இப்போ வித்யாவின் பிரச்சினைக்கு ஒரு வழி சொல்லுங்கள். வேண்டுமானால் நான் வேலையிலிருந்து நிற்கவா?” என்று கேட்டார்.
மித்ராவை வீட்டுக்கு அழைக்கக் கணவர் கடைசிவரையிலும் சம்மதிக்க மாட்டார் என்று எண்ணித்தான் கேட்டார். அருமைக் கணவரோ முறைத்தார். “எப்போதடா சந்தர்ப்பம் கிடைக்கும், வேலையை விட்டு நிற்கலாம் என்று காத்துக் கிடந்தாய் போல.”
“ஐயோ அப்படி எல்லாம் இல்லையப்பா. நான் வேலையால் நிற்காவிட்டால் மித்ராவை வீட்டுக்கு கூப்பிட வேண்டும். அது உங்களுக்குப் பிடிக்காதே என்றுதான் சொன்னேன்.”
“இரண்டுமே முடியாது என்று உன் பிள்ளைகளிடம் சொல்லு.”
“பிறகு… பிறகு அவர்களும் போலிசுக்கு சொல்லிவிட்டால் என்ன செய்வது?” பயந்துகொண்டே அவர் சொல்ல,
“விட்டால் நீயே சொல்லிவிடுவாய் போலவே..” என்று பாய்ந்தார் அவர்.
“இல்லை.. இல்லையப்பா.” என்று, என்ன சொல்வதென்று தெரியாமல் தடுமாறியவரிடம்,
“தொனதொனக்காமல் அந்தப் பக்கம் போ! நான் யோசித்துவிட்டு சொல்கிறேன்.” என்று எரிந்து விழுந்தார் சண்முகலிங்கம்.
முகம் கன்றிச் சுருங்க அறையை விட்டு வெளியேறினார் ஈஸ்வரி.
ஓய்வாகக் கட்டிலில் படுத்துக்கொண்ட சண்முகலிங்கத்துக்கோ மித்ரா மேல் அடக்க முடியா ஆத்திரமும் கோபமும் எழுந்தது. என்னை வீட்டை விட்டு வெளியேற்றி மானம் மரியாதையை வாங்கியவளை வீட்டுக்குள் நான் விடுவதா? கூடாது! ஈஸ்வரியை வேலையிலிருந்து நிறுத்தவும் முடியாது.

