அவள் வீட்டில் நின்றால், சம்பளம் நின்றுவிடும். தன் செலவுகளைச் சுருக்கவேண்டி வரும். பணமில்லாமல் கை கடிக்கத் தொடங்கும். இப்போதானால் இலங்கைக்குக் காசும் அனுப்பிக்கொண்டு புகை, தண்ணிக்குப் பஞ்சமின்றித் தனக்குப் பிடித்த வாழ்க்கையும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அது கெட்டுவிடுமே! மாதா மாதம் கணக்குப் பார்த்துப் பார்த்து செலவழிக்கும் நிலை வருமே.
அதோடு மித்ராவை திரும்ப வீட்டுக்கு கூப்பிடும் வழிகளைப் பார்க்கவில்லையா என்று ஊரின் கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாமல்தான் அதுநாள் வரை தவித்துக் கொண்டிருக்கிறார்.
அவள் வந்தால் சத்யனையும் வித்தியையும் வேறு பார்த்துக்கொள்வாள். வேண்டுமானால் மனைவியை இன்னும் இரண்டு மணித்தியாலங்கள் கூடுதலாக வேலை செய்யவும் சொல்லலாம். எல்லாமே அவர் பக்கத்தில் லாபக் கணக்குகளாகவே தென்பட்டன.
எனவே மனைவியிடம் சம்மதம் தெரிவித்தார்.
அவர் சொன்னதை நம்ப முடியாமல் அதிர்ச்சியில் விழிகள் விரிய பார்த்த மனைவியிடம், “எல்லாம் உனக்காகவும் உன் பிள்ளைகளுக்காகவும் தான். ஆனால், அவள் வந்து எனக்கு எரிச்சல் மூட்டும் விதமாக நடந்துகொண்டால் என்று வை. இந்த வீட்டை விட்டு நான் வெளியேறிவிடுவேன்.” என்று உறுமினார்.
“அப்படி நடக்காமல் நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் எப்போதும்போல இருக்கலாம். இதை அவளிடமும் சொல்லிவிடுகிறேன்.” என்று, அதுவரை பெரும் பிரச்சனையாக இருந்த ஒன்று தீர்வுக்கு வந்த நிம்மதியில் அவசரமாகச் சொன்னார் ஈஸ்வரி,
“நீங்களும் வருகிறீர்களா அந்த லீசாவிடம் போய் இதைப்பற்றிக் கதைப்பதற்கு.” என்று தன்மையாகக் கேட்டார். முதலில் மறுத்துவிட்டு இப்போது போய் மகளை வீட்டுக்கு விடுங்கள் என்று கேட்க தயக்கமாக இருந்தது அவருக்கு.
“அவளுக்காக ஒரு துரும்பையும் நான் கிள்ளிப் போடமாட்டேன். உன் பிள்ளைகள் தானே அவள் வேண்டும் என்று அடம் பிடித்தார்கள். அவர்களையே கூட்டிக்கொண்டு போ.” என்றார் அவர்.
வேறு வழியின்றி, ஒரு துணைக்காக என்று சத்யனையும் கையோடு கூட்டிக்கொண்டு சென்று திருமதி லீசாவை சந்தித்தார் ஈஸ்வரி.
மித்ராவை வீட்டுக்கு அனுப்பச்சொல்லி அவர் கேட்க, தாய்மை உள்ளம் கொண்ட அந்தப் பெண்மணி கோபத்தில், “அன்று அவளாக வீட்டுக்கு வருகிறேன் என்று கேட்டும் மறுத்த உங்களுக்கு இப்போது மட்டும் என்ன திடீர் பாசம்? இப்போது மட்டும் அவளால் பிரச்சனைகள் வராதா?” என்று கேட்டார்.
அதுநாள் வரை அப்பாவுக்குத்தான் அக்காவை பிடிக்காது என்று நினைத்திருந்த சத்யன் அதிர்ச்சியோடு தாயைப் பார்த்தான்.
அவன் விழிகளில் தெரிந்த வெறுப்பில், கோபத்தில், “அது.. அப்பாக்கு பிடிக்காது என்றுதான்டா..” என்று தமிழில் அவனிடம் முணுமுணுத்து விட்டு, “அவள் வந்துவிட்டுப் போனதில் இருந்து அவளுக்காக மனம் ஏங்குகிறது. தயவுசெய்து அவளை எங்களோடு அனுப்பி வையுங்கள்.” என்றார் டொச்சில்.
வாய் கூசாது தாய் பொய் சொல்வதை உணர்ந்த சத்யனுக்குத் தாயை வெறுத்தே போனது! அக்காவின் இந்த நிலைக்கு அவரும் ஒரு காரணம் என்று அறிந்தவனின் மனதில் அவர் மீதான கறுப்புப் புள்ளி மிக அழுத்தமாக விழுந்தது. அதுநாள் வரை தந்தையோடு மட்டுமே ஒட்டுதல் இல்லாமல் இருந்தவன் அந்த நிமிடத்தில் இருந்து தாயிடம் இருந்தும் விலகத் தொடங்கினான்.
திருமதி லீசாவிடம் திரும்பி, “எங்களுக்கு எங்கள் அக்கா வேண்டும். அவள் இல்லாமல் இருக்க முடியவில்லை. அவளை நானும் என் தங்கையுமே நன்றாகப் பார்த்துக் கொள்வோம். அவளை எங்களோடு அனுப்பி வையுங்கள்.” என்றவன் தாயை பார்த்து முறைத்துவிட்டு, “இனியும் ஏதாவது பிரச்சனை வரும் என்றால் நாங்களே உங்களுக்குத் தெரிவிப்போம்.” என்றான் பணிவும் கெஞ்சலுமாக.
“உங்களுக்காக எதையும் செய்யப் பிடிக்காவிட்டாலும் உங்களின் பிள்ளைகளுக்காக, அவர்கள் ஒருவர் மேல் மற்றவர்கள் வைத்திருக்கும் பாசத்துக்காக இதைச் செய்கிறேன்.” என்றவர், சட்டப்படி செய்ய வேண்டியவைகளைச் செய்து கிறிஸ்மஸ் லீவோடு அவளைப் பள்ளிக்கூடமும் மாற்றி அவர்களின் வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்.
அதோடு, இனி குழந்தைகளின் மீது கைவைக்கக் கூடாது என்றும், தாங்கள் எப்போது என்றில்லாமல் வீட்டுக்கு வந்து பார்ப்போம் என்றும் பெற்றவர்களிடம் கண்டிப்போடு சொன்னவர், அப்படி எதுவும் நடந்தால் எதற்கும் பயப்படாமல் தங்களிடம் சொல்லவேண்டும் என்று பிள்ளைகளிடமும் சொல்லிவிட்டுச் சென்றார்.
போன முறையைப் போன்ற குதூகலம் மனதில் இல்லாதபோதும் மகிழ்ச்சியாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்தாள் மித்ரா. அவள் அறைக்குள் வந்ததுமே மகிழ்ச்சியோடு அவளைக் கட்டிக்கொண்ட சத்யனும் வித்யாவும் நடந்தவைகளைச் சொல்ல, தான் அந்த வீட்டுக்கு எதற்காக வரவழைக்கப் பட்டிருக்கிறோம் என்பது மிக நன்றாகவே விளங்கியது அவளுக்கு.
தாய்க்கு தன்மேல் அன்பில்லை என்பதைப் போனமுறையே அறிந்துகொண்டாள் தான். ஆனாலும் அது திரும்பவும் நிரூபிக்கப் பட்டதில் அவளது குழந்தை நெஞ்சத்தில் தான் பெரிய அடி விழுந்தது.
ஆனாலும், தம்பி தங்கையின் சந்தோசத்துக்காக, ஒற்றைக் காலில் நின்று அவளை வரவழைத்தவர்களுக்காகத் தன் வேதனைகளை மறைத்துக் கொண்டவள், “அப்படிப் போலிசுக்கு சொல்வேன் என்று இனிமேல் சொல்லக்கூடாது வித்தி. அக்காவைப்போல் தனியாக இருப்பது ஆகக் கொடுமை. அதை நீ அனுபவிக்க வேண்டாம்.” என்றாள் சற்றே கண்டிப்பாக.
அவள் அனுபவித்த தனிமையை, துயரை, இரவில் கூடத் தனியறையில் தனியாகப் படுக்கப் பயந்து நடுங்கியதை எல்லாம் தங்கை எந்தக் காலத்திலும் அனுபவித்து விடக்கூடாது என்று பதறியது அவள் உள்ளம்.
“அதுதான் நீ வந்துவிட்டாயே. பிறகு ஏன் நான் அப்படிச் சொல்லப் போகிறேன்.” என்றாள் வித்யா.
“நான் இல்லாவிட்டாலும் நீ சொல்லக்கூடாது!” என்று ஒன்றுக்கு இரண்டு தடவையாகச் சொல்லி அவள் மனதில் பதியவைத்தாள் மித்ரா.
ஆனால், அவளே அந்தத் தவறை மீண்டும் செய்து வாழ்வின் மாறாத் துயரை பின்னாளில் அனுபவிக்கப் போகிறாள் என்பதை அன்று அவள் அறிந்திருக்கவில்லை!
புதுவருடம் தொடங்கி, மித்ரா அதே ஊரில் இருக்கும் பள்ளிக்கு செல்லத் தொடங்கினாள்.
அவள் வந்த அன்று, “அப்பா நிற்கும்போது அவர் முன்னால் வராதே.” என்றும், “திரும்பவும் ஏதாவது பிரச்சனைகளைக் கிளப்பி என் நிம்மதியை கெடுத்துவிடாதே.” என்றும் அன்னை சொன்னது மனதை தைத்தாலும், சண்முகலிங்கம் வீட்டில் இல்லாத வேளைகளில் கூட, தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களைத் தவிர்த்து அவளுக்கும் வித்திக்கும் பொதுவான அறையை விட்டு வெளியே வருவதே இல்லை மித்ரா.
ஆனால், அந்தப் பதின்நான்கு வயதிலேயே தாயாக மாறி தாய்ப்பாசத்தைச் சத்யனுக்கும் வித்யாவுக்கும் வழங்கத் தொடங்கினாள்.
இருவரையும் பாட்மிண்டன் சேர்த்துவிட்டாள். அவளே கூட்டிக்கொண்டுபோய்க் கூட்டிவந்தாள். பின்னேரங்களில் பார்க்குக்குப் போய்வந்தார்கள். ஸ்விம்மன் பழகினார்கள். கூடச் சேர்ந்து விளையாடினார்கள். ஒன்றாக இருத்தி படிப்பித்தாள். உணவை ஊட்டிவிட்டாள். நல்லது கெட்டது சொல்லிக்கொடுத்தாள்.

