என்னவெல்லாம் தான் அனுபவிக்க ஆசைப்பட்டாளோ.. என்னவெல்லாம் அவளுக்கு மறுக்கப்பட்டதோ அத்தனையையும்.. ஏன் அதற்கும் மேலாகவே அவர்களுக்குக் கொடுத்தாள். அவள்தான் அவர்களுக்குத் தாய். அப்படித்தான் இருவருமே உணர்ந்தார்கள்.
இப்படியே நாட்கள் நகர, அவள் கையிலிருந்த பணமும் பென்சில், பேனை, புத்தகம், கொப்பிகளுக்கு என்று மெல்ல மெல்லக் கரைய, இனிவரும் தேவைகளுக்கு என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினாள்.
அம்மாவிடம் கேட்டால் அப்பா கத்துவாரோ? ஒவ்வொரு குழந்தைகளுக்கும், பதினெட்டு வயதுவரை அவர்களின் செலவுகளுக்காக என்று தனியாக ஜேர்மன் நாட்டு அரசாங்கம் மாதா மாதம் பணம் கொடுக்கும். அப்படி அவளுக்கான பணம் வரும் தானே. அதில் இருந்து கேட்டுப் பார்ப்போம் என்று நினைத்துத் தாயிடம் கேட்க, அவர் அப்பாவிடம் கேட்டுச் சொல்கிறேன் என்றார்.
அன்றிரவு, பிள்ளைகள் எல்லோரும் உறங்கிவிட்டார்கள் என்றெண்ணி கணவரிடம் பேச்செடுத்தார் ஈஸ்வரி.
அதைக்கேட்டு அப்படியே பொங்கிவிட்டார் சண்முகலிங்கம். “என்ன? கணக்குக் கேட்கிறாளா உன் மகள்? அப்போ இந்த வீட்டில் மூன்று நேரமும் வயிறு நிறையக் கொட்டிக்கொள்கிறாளே, அதற்கு யார் பணம் தருவதாம்? என் வீட்டில் இருக்கிறாளே, அதற்கு யார் பணம் கொடுப்பார்களாம்? கண்ட கழுதைக்கெல்லாம் உழைத்துப்போட நான் என்ன விசரனா? அவள் தேவையை அவளையே பார்த்துக்கொள்ளச் சொல்! ஒரு நயா பைசா கூடக் கொடுக்கமாட்டேன் நான். எனக்குத் தெரியாமல் நீ கொடுத்தாய் என்று வை. நான் மனிதனாகவே இருக்கமாட்டேன்.” என்று உரத்த குரலில் அவர் கத்த, உறக்கமின்றிப் புரண்டு கொண்டிருந்த மித்ராவின் காதில் அது நன்றாகவே விழுந்தது.
திருமதி லீசாவிடம் இதைச் சொன்னால் அவளால் மிக இலகுவாக அவளின் பணத்தைப் பெற்றுவிட முடியும் தான். ஆனாலும் வேண்டாம். அவர்களுக்குச் சுமையாக அவள் இருக்கவேண்டாம். அவர் சொன்னதுபோல அவளது சாப்பாட்டுக்கும், அங்கே தங்குவதற்கும் அதை வைத்துக் கொள்ளட்டும்.
அப்போ கைச் செலவுக்கு? ஏதாவது செய்யவேண்டும். என்ன செய்யலாம் என்று அதே யோசனையிலேயே உறங்கிப்போனாள் மித்ரா.
அடுத்தநாள் பள்ளிக்கூடம் முடிந்து வந்துகொண்டு இருந்தவளின் பார்வையில், ஒரு தள்ளு வண்டிலில் பேப்பர்களை வைத்துத் தள்ளிக்கொண்டு வந்த முதியவர், ஒவ்வொரு வீட்டினதும் போஸ்ட் பெட்டிக்குள்ளும் பேப்பர் போடுவதைக் கண்டவளுக்கு அந்த யோசனை உதித்தது.
தினசரி பேப்பர்களையும், ஒவ்வொரு கடைகளினதும் விளம்பரப் பேப்பர்களையும் அச்சடிக்கும் நிறுவனங்கள் அந்த முதியவரை போன்ற பென்ஷன் எடுத்தவர்களுக்கும், அவளைப் போன்ற பள்ளி மாணவர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் அந்த வேலைகளை முதலுரிமை கொடுத்து வழங்கும்.
பெரிய வருமானம் என்றும் இல்லாமல் கைச்செலவுக்கும் கடிக்காமல் இருப்பதற்காக இருக்கும் சின்னச் சின்ன வேலைகளில் இந்தப் பேப்பர் போடும் வேலையும் ஒன்று.
அதை அவளும் செய்யலாமே. இந்த எண்ணம் உதித்ததுமே உற்சாகத்தோடு வீட்டுக்கு வந்தவள், அவளுடைய பதின்நான்காவது பிறந்தநாளுக்கு நீக்கோ பரிசளித்த கைபேசியில் அவனுக்கு அழைத்தாள்.
“ஹேய் ஏஞ்சல்! என்னையெல்லாம் உனக்கு நினைவில் இருக்கிறதா?” என்கிற உற்சாகக் குரல் அந்தப் பக்கம் கேட்கவும், அதுவரை கலக்கத்தோடு இருந்தவள் தன்னை மறந்து சிரித்தாள்.
“நான் இங்குவந்து ஒரு மாதம் ஆகிறது. இதுவரை நீயும் என்னைத் தேடி அழைக்கவில்லை. அதை மறந்துவிடாதே.”
அதைக்கேட்டுச் சத்தமாகச் சிரித்தான் நீக்கோ.
“ஹேய் வாயாடி! தினமும் உன்னோடு கதைக்க ஆசையாக இருக்கும். அனாலும், உன் குடும்பத்தோடு இப்போதுதான் சேர்ந்து இருக்கிறாய். அந்தச் சந்தோசத்துக்கு இடைஞ்சல் தரவேண்டாமே என்றுதான் நான் கூப்பிடவில்லை.”
சந்தோசமாக இருக்கிறேனா? ஒரு பெருமூச்சை வெளியேற்றிவிட்டு, “பொய்யாகச் சாக்கு சொல்லாதே கள்ளா!” என்று அவனை மேலும் வம்பிழுத்தாள் மித்ரா.
“ப்ச்! போ ஏஞ்சல்! நான் என்ன பொய் சொன்னலும் நீ கண்டு பிடித்துவிடுகிறாயே.” என்று பொய்யாக அலுத்துச் சிரித்தான் அவன்.
“சரி சொல்லு. நீ எப்படி இருக்கிறாய்? உன் தம்பி தங்கைகள் நலமா?” என்று கனிவோடு விசாரித்தான்.
அதற்குப் பதில் சொன்ன மித்ரா, அவனையும் மரியாவையும் பற்றி விசாரித்துவிட்டு, “நீ சொல்லு, லூசி எப்படி இருக்கிறாள்? அவள் உன் தோழி ஆகிவிட்டாளா?” என்று குறும்போடு கேட்டாள்.
அதைக்கேட்டு உரக்க நகைத்தான் நீக்கோ. பின்னே, ‘லூசியை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவளை எப்படியாவது என் நெருங்கிய நண்பியாக மாற்ற வேண்டும்.’ என்று, அவனின் வகுப்புக்கு புதிய மாணவியாக வந்து சேர்ந்த லூசியைக் கண்ட நாளில் இருந்து மித்ராவிடம் தானே புலம்பித் தள்ளினான் அவன்.
“அவள் இப்போது என் தோழி மட்டுமல்ல, அதற்கும் மேலே…” என்று சொல்லிச் சிரித்தான் அவன்.
“காதலியா?”
“ச்சே ச்சே அந்தளவுக்கு இல்லை. அதற்குக் கீழே, நெருங்கிய நண்பி.”
“அப்போ… நீ நினைத்ததை நடத்திவிட்டாய் என்று சொல்.”
“ஆமாம். உனக்கு ஒன்று தெரியுமா? அவளுக்கும் என்னைப் பார்த்ததும் பிடித்துவிட்டதாம். என்னோடு கொஞ்ச நாட்கள் பழகிவிட்டுச் சொல்லலாம் என்று நினைத்து இருந்தாளாம்.” என்று பெருமையோடு அறிவித்தான் அவன்.
“இப்போது நீ சொல். உனக்கு யாராவது புது நண்பர்கள் கிடைத்தார்களா? எனக்கு லூசி மாதிரி…” வேண்டும் என்றே அவன் கேட்க,
“கிட்டே இருந்தாய் என்றால் உன் தலையில்தான் கொட்டுவேன்.” என்றவள் கலகலத்துச் சிரித்தாள்.
அந்தச் சிரிப்பில் அவனும் இணைந்துகொள்ள, “உன்னிடம் முக்கியமான ஒரு விஷயம் பேச எடுத்தேன் நீக்கோ. பார் உன்னோடு அலட்டியத்தில் மறந்துவிட்டேன்.” என்றவள் சற்றுத் தயங்கிவிட்டு, “அது.. எனக்கு.. இங்கே பள்ளிக்கூடம் முடிந்தபிறகு வீட்டில் இருக்க அலுப்பாக இருக்கிறது…” என்று இழுத்தாள்.
“அதற்கு?” என்று கேட்டவனின் குரலில் இப்போது கூர்மை ஏறியிருந்தது.
அவன் கோபப்படப் போகிறான் என்று தெரிந்தாலும், வேறு யாரிடம் இதைப்பற்றிக் கேட்பது என்றும் தெரியவில்லை அவளுக்கு.
எப்படியாவது அவனைச் சமாளிப்போம் என்று எண்ணியபடி, “அதனால் மாலையில் பேப்பர் போடும் வேலை செய்யலாம் என்று நினைக்கிறேன். அதற்கு யாரிடம்.. எங்கே கேட்பது என்று தெரியவில்லை நீக்கோ.” என்று தயக்கத்தோடு சொன்னாள் மித்ரா.
“உன் வீட்டில் செலவுக்குப் பணம் தரவில்லையா?” சட்டென விஷயத்தை ஊகித்துக் கேட்டான் அவன்.
அவனது புத்தி கூர்மையை எண்ணி வியந்தாலும், “இல்லையில்லை. அப்படி இல்லை. நானாகத்தான்… அதுதான் சொன்னேனே பொழுது போகவில்லை என்று.” என்று தடுமாறினாள் மித்ரா.
“என்னிடம் பொய் சொல்லக்கூட உன்னால் முடியுமா ஏஞ்சல்?”
அந்தக் கேள்வியில் தொண்டை அடைத்தது அவளுக்கு.
“ப்ளீஸ் நீக்கோ. கோபிக்காதே. யாருக்கும் என்னால் எந்தச் சிரமமும் வரக்கூடாது என்று நினைக்கிறேன். அதனால்தான். தயவுசெய்து என்னைப் புரிந்துகொள்.” என்று தழுதழுத்தாள்.
“இதற்கு நீ இங்கேயே இருந்திருக்கலாம்.” என்றான் அவன் பொறுக்க முடியாமல்.
அதற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் அமைதியாக இருக்க, “அந்த வேலை செய்தால் அதற்கே நேரம் ஓடிவிடும். பிறகு எப்படிப் படிப்பாய்?” என்று கேட்டான் அவன்.
“தினமும் இல்லை தானே. வாரத்தில் ஒருநாள் அல்லது இரண்டு நாள் மட்டும் செய்யலாம் என்று நினைக்கிறேன். மற்ற நாட்களில் படித்துக்கொள்வேன்.”
“வாரத்தில் இரண்டு நாட்கள் என்றால் நூறு நூற்றியம்பது யூரோக்கள் தான் வரும். அவ்வளவுதான் உன் தேவை என்றால் அதை நானே உனக்கு அனுப்புகிறேன். நீ நன்றாகப் படிக்கும் வேலையை மட்டும் பார்.”

