அந்த ‘நீயும்’ மித்ராவை யோசிக்க வைக்க, அதுநாள் வரை அவரோடு பேசாதவள், அவர் முன்னாலேயே வராதவள், “அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என்று நேராக அவரிடமே கேட்டாள்.
“ஈஸ்வரி வேலைக்குத் தொடர்ந்து போகவேண்டும் என்று அர்த்தம்!” என்றார் அவர் நக்கலாக.
“அப்போ என் பணத்தைத் திருப்பித் தாருங்கள். அம்மா வீட்டில் இருக்கவேண்டும் என்றுதான் அதை நான் தந்தேன்.”
“தரமுடியாது! இனி உன் பணம் முழுவதும் என்னிடம் தான் வரவேண்டும்! இங்கே யாரும் சும்மா இருந்து உண்ண முடியாது!”
“அதற்குத்தான் எனக்கு அரசாங்கம் தரும் பணம் இருக்கிறதே.”
“ஏன் பத்து வயதில் தின்ற அதேயளவுதான் இப்போதும் நீ சாப்பிடுகிறாயா? நீ திண்பதற்கே அந்தப் பணம் பத்தவில்லை! இதில் நீ இங்கே தங்குவதற்கு யார் பணம் தருவார்கள்?”
வேதனையோடு அவரைப் பார்த்தாள் மித்ரா. பணத்தாசை பிடித்த மிருகமாகவே அவள் கண்ணுக்குத் தெரிந்தார் சண்முகலிங்கம். அதோடு அவள் என்ன அண்டா அண்டாவாகவா உண்கிறாள்?
சம்பளத்தைக் கொடுப்பதில் அவளுக்கு ஒன்றுமில்லைதான். அம்மாவின் நிம்மதிக்கு முன்னால், அவரின் உடல்நலத்துக்கு முன்னால் பணமெல்லாம் அவளுக்கு ஒன்றுமேயில்லை. ஏன் தன் செலவுகளை நிறுத்தக்கூட அவள் தயார்தான். ஆனால், சத்யன் கால்பந்து பழகிக்கொண்டு இருக்கிறான். அதற்குக் காசு வேண்டும். வித்யா ஜேர்மன் நாட்டு பாரப்பரிய நடனம் பழகிக்கொண்டு இருக்கிறாள். அதற்கும் வேண்டும்.
“நான் மேலே அதற்குப் படிக்கப் போகிறேன், இதற்குப் படிக்கப்போகிறேன்” என்று கனவுகளோடு இருக்கும் அவர்களுக்கு என்ன செய்வாள்?
அவரிடம் கொடுக்கத் தொடங்கிவிட்டால் அனைத்துமே நின்றுவிடும். அது நன்றாகவே தெரியும் அவளுக்கு
“தரமுடியாது என்றால்?”
“நீ இந்த வீட்டில் இருக்க முடியாது!”
அழுகை வரும் போலிருந்தது அவளுக்கு. இந்த அப்பாவுக்கு அவள் மீது அப்படி என்னதான் கோபம்? அவள் செய்த பிழைதான் என்ன? எதற்கு எடுத்தாலும் அவளைத் துரத்துவதிலேயே குறியாக இருக்கிறாரே.
“ஏன் அப்.. இப்படிச் சொல்கிறீர்கள்? இவ்வளவு நாட்களும் இருந்தது போல் இந்த வீட்டில் ஒரு மூலையில் நான் இருந்துகொள்கிறேனே. வேண்டுமானால் மாதா மாதம் கொஞ்சம் பணம் தருகிறேன்.” என்றாள் கலங்கிய குரலில்.
அவள் கலங்கிவிட்டதைக் கண்டுகொண்டவரின் முகத்தில் வெற்றிக்குறி!
“முடியாது! உன் முழுச் சம்பளமும் என் கைக்கு வரவேண்டும். இல்லையோ நீ வெளியே போகலாம்!” என்றார் கொடூரனாக.
கலங்கிய விழிகளோடு திகைத்துப்போய் அவள் பார்க்க, “என்ன பார்க்கிறாய்? உனக்குப் பதினெட்டு வயதாகிவிட்டது. இப்போது இந்த வீட்டில் இருந்து உன்னை வெளியேற்ற எனக்குச் சகல உரிமையும் இருக்கிறது.” என்றார் எக்களித்த குரலில்.
சண்முகலிங்கத்தின் பேச்சில் வெளியேறுவதற்குப் பயந்து அவரின் பேராசைக்கு அவள் சம்மதிப்பாள் என்கிற நிச்சயம் இருந்தது.
ஆனால், அம்மாவின் உழைப்பையும் விழுங்கி, அவளின் உழைப்பையும் அவரே வாங்கிக்கொண்டால் தம்பி தங்கைகளை யார் பார்ப்பது?
அதோடு அவள் படிக்க நினைக்கும் படிப்புக்குப் பணம் வேண்டும். போக்கு வரத்துக்குக் கார் வேண்டும். அதெல்லாம் இருந்தால் தான் அவளால் வாழ்க்கையில் உயர முடியும்.
தனிமைக்குப் பயந்து இதற்குச் சம்மதித்தால் அவளின் எதிர்காலம் மட்டுமல்ல சத்தி, வித்தியின் எதிர்காலம் கூடப் பாதிக்கும். அவர்கள் விரும்பும் படிப்பை அவளால் படிக்கவைக்க முடியாது.
யாருக்காக இல்லாவிட்டாலும் சத்திக்கும் வித்திக்குமாகவாவது அவள் வாழ்க்கையில் போராடியாக வேண்டும்! தனிமை அவளுக்குப் புதிதா என்ன? அதைத்தான் பிறக்கும்போதே வரமாக வாங்கி வந்துவிட்டாளே!
கடைசி நம்பிக்கையாகத் தாயை பார்த்தாள் மித்ரா. அவளுக்கு ஆதரவாக ஏதாவது சொல்வாரா என்று.. அப்போதும் அமைதியாக நின்று அவளைக் கைவிட்டார் அவர்! அடிபட்டுப் போனது அவள் உள்ளம்!
என்ன ஆனாலும் அவரின் அதிகாரத்துக்குப் பணியக் கூடாது என்று எண்ணி, “நான் தனியாகவே போகிறேன்.” என்று அவரை நேராகப் பார்த்துச் சொல்லிவிட்டு பள்ளிக்கூடத்துக்குச் சென்றாள் மித்ரா.
அடுத்து வந்த நாட்களில், அவளின் நண்பர்களின் துணையோடு ஒற்றை அறையோடு கூடிய சின்னச் சமையலறை, குளியலறை கொண்ட ஒரு வீட்டுக்கு இடம் மாறினாள்.
கண்கள் கலங்கிய சத்யனிடமும் வித்யாவிடமும், “உங்கள் பள்ளிக்கூடத்துக்கு அருகில் தானே அக்கா இருக்கிறேன். பள்ளிக்கூடம் முடிந்ததும் நேராக அங்கே வாருங்கள். படுக்க மட்டும் இங்கே வாருங்கள்.” என்று சமாளித்தாள்.
மீண்டும் தனிமை வாழ்க்கை! சின்ன வயதிலேயே பழகிவிட்ட ஒன்று என்பதால், பெரிதாகப் பாதிக்கவில்லை. தம்பி தங்கையர் இன்றி இரவில் தனியாகப் படுக்க முடியாமல் துயர் தொண்டையை அடைத்தது. விழுங்கிக்கொண்டாள்.
பகுதிநேர வேலை, படிப்பு என்று அவளுடைய நாட்கள் நகர்ந்தது.
ஒருநாள் ரெஸ்டாரன்ட்டில் வேலை முடிந்து வெளியே வந்தவள், களைப்போடு காரை நோக்கி நடக்கையில், “ஹேய் ஏஞ்சல்!” என்றபடி ஓடிவந்து அவளைக் கட்டிக்கொண்டான் நீக்கோ!
நீண்ட நாட்களுக்குப் பிறகு, அதுவும் எதிர்பாராமல் அவனைச் சந்தித்த மகிழ்ச்சியில், “நீ எங்கேடா இங்கே ?” என்று கேட்டபடி தானும் அவனைக் கட்டிக்கொண்டாள் மித்ரா.

