கீதனின் கையில் கார் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது. சற்று முன் மித்ராவின் அறையில் பார்த்த அந்தப் போட்டோ கண்ணுக்குள்ளேயே நின்று அவனை ஆட்டிப் படைத்தது. எவ்வளவு அற்புதமான உயிரோட்டமான காட்சி! அதன் உயிரையே பறித்துவிட்டாளே!
வீட்டுக்கு வந்து ஒரு வேகத்தோடு அறைக்குள் நுழைந்தவன், அலமாரிக்குள் அவன் கண்ணில் படாமல் ஒழித்து வைத்திருந்த ஆல்பத்தைத் தேடி எடுத்தான்.
அங்கு மித்ரா வீட்டிலிருந்த அதே போட்டோவை அதிலிருந்து தனியாக எடுத்துக்கொண்டு கட்டிலில் பொத்தென்று விழுந்தவனுக்கு, நெஞ்சுக்குள் அடைத்தது.
அவனிடம் இருந்த போட்டோவில் அவனும் அவளும் மட்டும்தான் இருந்தனர். அதில், காதலும் ஆனந்தமும் சொட்டும் விழிகளோடு, அவன் கை அணைப்புக்குள் வாகாகப் பொருந்தியிருந்தாள் அவள்.
‘ஏன்டி.. ஏன் என் வாழ்க்கையில் வந்தாய்? வந்து இப்படி என்னை ஏன் உயிரோடு கொல்கிறாய்? உன்னை மறந்து வாழவும் முடியாமல் உன்னோடு சேரவும் முடியாமல் என்னை இப்படித் தவிக்க விட்டுட்டியேடி!’ என்று மனதால் கத்தியவனுக்கு, அந்தக் கோபத்துக்கு வடிகாலாகவும் அவள்தான் தேவைப்பட்டாள்.
நோயைக் கொடுத்தவளையே மருந்தாக எண்ணி அந்தப் போட்டோவை, அதில் இருந்த மித்ராவை தன் நெஞ்சோடு இறுக்கி அணைத்துக்கொண்டவனுக்கு, அப்போதும் மனதின் புழுக்கம் அடங்க மறுத்தது.
அவள்.. அவளின் அருகாமை மட்டுமே வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தது நெஞ்சம்.
அவன் அணிந்திருந்த சட்டை, வலியோடு துடித்துக்கொண்டிருந்த இதயத்துக்கும், புகைப்படத்தில் நிழலாய் இருந்தவளுக்கும் இடையில் பெரும் தடையாக நிற்க, அதைத் தாங்க முடியாமல் ஷர்ட்டின் மேலிரண்டு பட்டங்களை வேகமாகக் கழட்டிவிட்டு தன் இதயத்தின் மேலே அந்தப் போட்டோவை வைத்து அழுத்தினான். அப்போதுதான் மனம் சற்றே அமைதி அடைவது போலிருந்தது அவனுக்கு.
இதேபோல், உணர்வுகளின் தாக்கத்தில் அவளிடம் மயங்கி, மோகம் கொடுத்த முறுக்கோடு அவளைத் தன் மார்போடு அவன் அணைத்துக்கொள்ளும் போதெல்லாம், “மூச்சு முட்டுகிறது கீதன்..” என்று முகம் சிவக்கச் சிணுங்கியவளின் நினைவுகள் படையெடுத்துவந்து நிராயுதபாணியாய் நிற்கும் அவனைக் கொல்லாமல் கொன்றன!
ராட்சசி..! என்னோடு அப்படியெல்லாம் வாழ்ந்த உன்னால் எப்படியடி அப்படி ஒரு துரோகத்தைச் செய்ய முடிந்தது? உன்னை மறந்து இன்னொருத்தியை மணக்க என்னால் முடியவில்லையே!
எவ்வளவு பெரிய பாக்கியத்தை இழந்துவிட்டான். குடும்பஸ்தனாக மனைவி மகன் என்று அனுபவித்து வாழவேண்டிய ஒவ்வொரு நொடிப் பொழுதுகளை, மகனோடு கழிக்கவேண்டிய ஒவ்வொரு தருணங்களை என்று எத்தனை அவன் இழந்தவைகள்?
இவ்வளவையும் அவள் செய்த போதிலும் அவனால் அவளை முற்றிலுமாகத் தூக்கி எறிய முடியவில்லையே! அவளைக் காண்கையில் தடுமாறித்தானே போகிறான். அந்தத் தடுமாற்றமும் அதனால் தன் மீதே தோன்றும் வெறுப்பும் அல்லவோ கோபமாக உருவெடுத்து அவளை நோக்கிப் பாய்கிறது!
இதோ.. இன்றுகூட மகன் முழுநாளும் அவனோடுதான் இருக்கவேண்டும். அப்படியிருந்தும் அவன் உணவுக்காகப் பணத்தைக் கொடுத்தபோது, அறை வாங்கிய குழந்தையாய் நின்றவளின் நிலையைக் காணச் சகியாது தானே, மகனோடு இருக்க நெஞ்சம் ஏங்கினாலும் அவளிடம் அவனைக் கொடுத்துவிட்டு வந்தான்.
காலையில் மகனோடு இருக்கமுடியாமல் வேலை தடுத்தது என்றால் மாலையில் மித்ரா தடுத்துவிட்டாள். இதுவே தொடர்ந்தால் அவனுக்குப் பைத்தியமே பிடித்துவிடும். இதற்கு ஏதாவது வழி செய்தே ஆகவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தவனின் கைபேசி அழைக்க, எடுத்துப் பார்த்தால் அவன் அம்மா.
ப்ச்..! இவர் எதுக்கு இப்போது அழைக்கிறார் என்று தோன்றினாலும், “சொல்லுங்கம்மா.” என்றான் சுரத்தின்றி.
அவனது மரத்த குரலில் கோபம் எழுந்தது பாக்கியலக்ஷ்மிக்கு. “ஒரு சந்தோசமான விஷயத்தை உன்னிடம் சொல்லலாம் என்று அழைத்தால், நீ ஏனோ தானோ என்று கதைக்கிறாய்.” என்று கடித்துவிட்டு, “யமுனா ஜெர்மனிக்கு வந்துவிட்டாளாம்.” என்றார் சந்தோசமாக.
அவரின் மகிழ்ச்சி எதற்கு என்று அவனுக்குத் தெரியாதா? சின்னம்தான் பொங்கிற்று!
அதை அவரிடம் காட்டிக்கொள்ளாமல், “ஓ..! எப்படி வந்தாளாம் அம்மா? கல்யாணம் ஏதும் பேசி மாப்பிள்ளை கூப்பிட்டானா?” என்று கேட்டான்.
“உன் வாயை கழுவு! அவள் உன்னைத் தேடி வந்திருக்கிறாள் என்கிற சந்தோசத்தில் நான் சொல்கிறேன். நீயானால் கல்யாணம் அது இது என்று உளறுகிறாய். அவளின் அண்ணாக்கள் இருவருமே ஜெர்மனியில் தானே இருக்கிறார்கள். அவர்கள் தான் கூப்பிட்டார்களாம். அதுவும் அவளின் எல்லாச் செலவுகளையும் அவர்களே பார்ப்பதாக உத்தரவாதம் கொடுத்துக் கூப்பிட்டு இருக்கிறார்களாம். தங்கை கேட்டால் என்று அவளை வெளிநாட்டுக்கே கூப்பிட்டவர்கள் அவளுக்குக் கல்யாணம் என்றால் எவ்வளவு சீதனத்தைக் கொடுப்பார்கள் என்று யோசி. நாம் கேட்பதை அப்படியே தருவார்கள். அதையெல்லாம் வேண்டாம் என்றுவிட்டு லூசன் மாதிரி இருக்கும் நீ பிழைக்கத் தெரியாதவன்!” என்று பொரிந்தார்.
பின்னே, அவர் திரும்பவும் கட்டிக்கொண்டிருக்கும் மனக்கோட்டையை உடைக்கப் பார்க்கிறானே என்கிற கோபம் அவருக்கு!
அவனோ அதையெல்லாம் உணராது, “சொந்தப் பணத்தில் கூப்பிட்டார்களாமா? எப்படி என்று கேட்டீர்களா??” என்று விசாரிக்க அவருக்குப் பத்திக்கொண்டு வந்தது.
“என்னடா நீ. நான் உன் கல்யாணத்தைப் பற்றி, அதன்மூலம் வரக்கூடிய சீரைப் பற்றிச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீயானால் உப்புச் சப்பில்லாத விஷயத்தைத் தேடிப்பிடித்துப் பேசுகிறாயே..!” என்று எரிந்துவிழுந்தார்.
அவரின் சிந்தனை இப்படிப் போகாவிட்டால் தானே அதிசயம்!
“எப்படி யமுனாவை கூப்பிட்டார்கள் என்று தெரிந்தால் நானும் பவியைக் கூப்பிடலாமே என்றுதான் கேட்டேன். இங்கே எனக்குத் திடீர் திடீர் என்று வேலைகள் வந்தால் சந்துவை பார்த்துக்கொள்ள ஆட்கள் இல்லை. முன்னராவது அவன் சின்னப் பிள்ளை. சீட்டில் இருத்திக்கொண்டு அலுவலகத்துக்கே கூட்டிக்கொண்டு போனேன். இப்போது ஒரு இடத்திலேயே இருக்க மாட்டானாம். பவி இருந்தால் அவளோடு விட்டுவிட்டு நான் வேலைக்குப் போய்விட்டு வருவேனே..” என்று தன் எண்ணத்தைப் பகிர்ந்தான்.
சந்தோஷை பார்க்கத்தான் பவியைக் கூப்பிட நினைக்கிறானா என்று எரிச்சல் பட்டவருக்கு, யமுனாவோடு அவனைக் கதைக்கவைக்க இது நல்ல சந்தர்ப்பமாகவே தோன்றியது. அதோடு அவரின் சின்ன மகள் பவித்ராவும் வெளிநாட்டுக்கு வந்து சேர்ந்து விடுவாளே!
“எனக்கு என்னடா தெரியும். யமுனா என்னவோ சொன்னால் தான் எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை. நீ அவளுக்கே அழைத்துக் கேளேன், விபரமாகச் சொல்வாள்.” என்றார் சாதுர்யமாக.
“சரி.” என்றுவிட்டு வைத்தான் அவன். அவரிடமே யமுனாவின் நம்பரையும் வாங்கிக்கொண்டான். மகன் விசயமாயிற்றே.
பாக்யலக்ஷ்மிக்கோ பெரும் சந்தோசம். கடைசி மகளும் வரப்போகிறாள். அதோடு யமுனாவோடு மகனையும் கோர்த்து விட்டாயிற்றே!
அந்த மகிழ்ச்சியோடு, “கவி தன் மகளுக்கு முதலாவது பிறந்தநாள் கொண்டாடப் போகிறாளாம் தனா. அதற்காக இன்னும் ஒரு மாதத்துக்கு என்னுடைய விசாவை நீட்டிக்க முடியுமா என்று கேட்கப் போவதாகச் சேகரன் சொன்னார். பிறந்தநாளுக்கு நீயும் வரவேண்டி வரும். உனக்குக் கவியே அழைத்துச் சொல்கிறேன் என்றாள். அதோடு என்னவோ முக்கியமான விசயமும் கதைக்கவேண்டுமாம்.” என்று புதிர்போட்டார்.
“அப்படி என்னம்மா முக்கியமான விஷயம்?” அவருக்குத் தெரியாமல் இருக்காது என்பதால் கேட்டான்.
அவரோ, “எனக்கு என்னடா தெரியும்?” என்றார்.
அவரோடு கலந்து பேசாது எந்தக் காரியத்தையும் கவி செய்யமாட்டாள் என்பதை அறிந்திருந்தவனுக்கு, புத்திசாலித்தனமாகப் பேசுவதாக எண்ணி அவர் போடும் நாடகத்தில் வெறுப்புத்தான் எழுந்தது.
அந்த வெறுப்பில், “சரி, கவி எடுக்கட்டும் நான் கதைக்கிறேன். ” என்றுவிட்டு கைபேசிய அணைத்தான்.
அப்படியே மீண்டும் கட்டிலில் விழுந்தவனின் மனதில் நிறைந்து கிடந்தது வெறுமையும் தனிமையும் வெறுப்பும் மட்டுமே!
ஒரு காலத்தில் பாக்யலக்ஷ்மிக்கு அவன் என்றால் உயிர். தலைச்சம் பிள்ளையாய் வந்த ஆண்பிள்ளை என்பதால் அதன்பிறகு பிறந்த இரு மகள்களிடம் கூட அவனை விட்டுக்கொடுக்க மாட்டார்.

