அவன் வெளிநாடு வருவதற்கு ஆயத்தமானதும், தந்தை அதற்கான வேலைகளைப் பார்க்கத் தொடங்கியதும் அவர் அழுத அழுகை என்ன, என் மகனை எங்குப் போகவும் விடமாட்டேன் என்று செய்த ஆர்ப்பாட்டம் என்ன?
உங்கள் பெயரில் ஒரு காணி வாங்கி, வீடு கட்டித் தருவேன் என்று அவன் ஆசை காட்டியபோதிலும், தங்கைகளை நன்றாகப் படிப்பித்து நல்ல இடத்தில் கட்டிக்கொடுக்கலாம் என்று நம்பிக்கை கொடுத்த போதிலும், என் பிள்ளையைப் பிரிந்து என்னால் கணமும் இருக்கமுடியாது என்று மறுத்தவர் தான் இந்தப் பாக்கியலக்ஷ்மி.
ஐந்தே ஐந்து வருடங்கள்.. கண் மூடி முழிக்கமுதல் அது ஓடிவிடும். பிறகு உங்களிடமே திரும்பி வந்துவிடுவேன் என்று எவ்வளவோ சமாதானம் சொல்லியபோதும், அரை மனதாகத்தானே ஒத்துக்கொண்டார்.
இனி எப்போது பார்ப்போமோ என்கிற ஏக்கமும் கண்ணீருமாக அவனை வழியனுப்பி வைத்தவர், முதன் முதலில் ஜெர்மனியில் இருந்து அவன் அழைத்தபோது, “என் ராசா.. சுகமாக இருக்கிறாயா ஐயா..” என்று கதறியேவிட்டார்.
அதன் பிறகான நாட்களில் அவன் பிரிவுக்கு மெல்ல மெல்லப் பழகி, முதன் முதலில் அவன் அனுப்பிய பணத்தைக் கண்டு மகிழ்ந்து, என் பிள்ளை எனக்கு அனுப்பியது என்று பெருமிதம் கொண்டு, சுவாமிப் படத்துக்கு முன்னால் வைத்துக் கும்பிட்டவர், காலப்போக்கில் எப்படி மாறிப்போனார்?!
பணம் அனுப்புபவன் என் மகன் என்கிற காலம் போய்ப் பணத்தேவைக்காக மட்டுமே அவன் மகன் என்றாகிப்போனதுதான் விந்தையிலும் விந்தை!
இதே அம்மா தானே அவன் வாழ்க்கையில் மித்ரா நுழையவும் காரணம்! சற்றுமுன் பேசியதுபோன்று அன்றொரு நாளும் புத்திசாலித்தனமாகப் பேசுவதாக எண்ணி அவன் மனதையே உடைத்தாரே. அதையெல்லாம் நினைக்கவேண்டாம் என்று எண்ணினாலும் முடியாமல் அவன் நெஞ்சில் அன்றைய நாட்கள் வந்து நின்றன.
பதினாறு வயதில் ஜெர்மனி வந்து, ஐந்து வருடங்கள் மின்னலாகக் கரைந்த போதிலும் நாட்டுக்குத் திரும்பி வந்துவிடு என்று அவனுடைய அன்னை சொல்லவேயில்லை! சொல்வதென்ன, அந்த நினைவே அவருக்குத் தோன்றவில்லை.
அவன் வந்துவிட்டால் இன்னொரு பணம் காய்க்கும் மரத்துக்கு எங்கே போவார்?
அதன் பிறகும் வருடங்கள் ஓடி அவனுக்கு இருபத்தியெட்டு வயதாகியும் அவனை வாவென்று கூப்பிடும் எண்ணம் அவருக்கு என்ன, அவன் வீட்டில் யாருக்குமே தோன்றவில்லை. ஆனால், ஜெர்மனிக்கு அவனை அதற்குமேல் வைத்திருக்கப் பிரியம் வரவில்லை போலும்!
அதுநாள் வரை நாட்டுப் பிரச்சனைகளைக் காரணம் காட்டி, விசாவுக்கு அவன் கொடுத்திருந்த மனுக்கள் முதல்கொண்டு வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட, அவன் நாட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று அறுதியும் இறுதியுமாக அறிவித்தது ஜேர்மன் நாடு!
திகைத்துப்போனான் கீர்த்தனன். பன்னிரண்டு வருடங்களாகப் போராடியும் ஒரு பலனும் இல்லாது போய்விட்டதே!
இனி என்ன செய்வது? அவர்களின் கட்டளையையும் மீறி அவன் இருப்பானாக இருந்தால், அவர்களே வீடு தேடிவந்து விலங்கிட்டு அழைத்துச் சென்று விமானம் ஏற்றிவிடும் அவமானம் நிகழும்!
அது தேவையா? அப்படி இல்லையென்றால், பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிஸ் என்று ஏதாவதொரு நாட்டுக்கு மீண்டும் அவன் மாறவேண்டும். அதை நினைக்கவே சலிப்பும் வெறுப்பும் எழுந்தது.
பின்னே, திரும்பவும் அல்லவா முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். புது மொழி, புது இடம், புது வேலை, திரும்ப மனுக்கள், வழக்குகள், கோர்ட்டுகள், வக்கீலுக்குச் சுளை சுளையாகப் பணம் என்று அலைய வேண்டுமே! அப்படி அலைந்தாலும் விசா கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லையே!
என்ன செய்யலாம்? நிதானமாக யோசித்தபோது நாட்டுக்கே போய்விட்டால் என்ன என்றுதான் தோன்றியது. அந்தளவுக்குத் தனிமை வாழ்க்கை அவனை வெறுமைக்குள் தள்ளியிருந்தது.
காலையில் எழுந்தால் வேலை, மாலையில் வீட்டுக்கு வந்தால் பெயருக்கு எதையாவது உண்டுவிட்டு தொலைக்காட்சியைப் போட்டுக்கொண்டு கட்டிலில் புரள்வது. எப்போது உறங்கினோம் என்று தெரியாது உறங்கி, திரும்பவும் காலையில் அலாரம் அடிக்கையில் எழுந்து, முதல் நாள் என்ன செய்தானோ அதையே அன்றும் செய்வது என்று, ஒரே சுழற்சியில் சுழன்று சுழன்று சுவாரசியம் அற்று, பிடிப்பில்லாத ஒரு வாழ்க்கையைப் பன்னிரண்டு வருடங்களாக வாழ்ந்து வாழ்ந்து சலித்துப் போயிருந்தவனுக்கு, சொந்தமண்ணின் மீது ஆசை வந்ததில் தப்பொன்றும் இல்லையே!
தாய் மண்ணுக்கும், அவன் வீட்டுச் சோலைக்கும், அது வீசும் சுகந்தமான காற்றுக்கும், அதன்கீழே பாய்விரித்து உறங்கும் சுகத்துக்கும் ஏங்கத் தொடங்கியது மனது.
அது மட்டுமன்றி, இப்போதெல்லாம் மனதில் மெல்லிய ஏக்கம் ஒன்றும் படரத் தொடங்கியிருந்தது. அது அவனுக்கான வாழ்க்கையின் தேடல். வாலிப வயதின் நாடல்! அவனின் வருங்காலத் துணைக்கான ஏக்கம். அந்தத் துணையின் பிம்பமும் மனதில் மெதுவாகப் பதிந்து, இதமான சாரலை வேறு தூவிக்கொண்டிருந்தது, யமுனாவின் வடிவில்!
அதற்குக் காரணமும் இருந்தது. எப்போதெல்லாம் பெற்றவர்களின் முகம் பார்க்க ஆசைப்பட்டு அவன் ஸ்கைப்பில் அழைத்தாலும் அப்போதெல்லாம் யமுனாவும் அவன் குடும்பத்தோடு நிற்பாள். அல்லது அவன் அழைத்துக் கதைக்க ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே வந்துவிடுவாள்.
ஆரம்பத்தில், பெரியதங்கை கவிதாவின் வகுப்புத் தோழி என்றறிந்ததில் அறிமுகப் புன்னகையை மட்டும் புரிந்துவிட்டு வீட்டினரோடு பேசிவிட்டு வைத்துவிடுவான். ஆனால், போகப்போக அவளின் தொடர் வரவுகளும், ஆர்வப் பார்வைகளும் தனிமையில் வாடிக் கிடந்தவனின் மனதில் மெல்லிய சலனத்தை, ஆர்வத்தை உண்டுபண்ணியது என்னவோ உண்மைதான்.
அது தாயின் திட்டமிட்ட செயல் என்பதை அறியாதவனோ, புத்திசாலித்தனமாக நடந்துகொள்வதாக எண்ணி அவளையும் அவர்களின் பேச்சுக்குள் மெல்ல மெல்ல இழுத்துக்கொள்வான்.
ஆனால், தனிமையில் கதைப்பதற்கான சந்தர்ப்பம் மட்டும் அவர்களுக்கு அமைந்ததில்லை. அப்படி அமைய அன்னை விட்டதில்லை என்பதைப் பின்னாட்களில் ஊகித்திருக்கிறான். உனக்கு இவள்தான் என்று மறைமுகமாகக் காட்டிவிட்டால் அவன் பார்வையும் எண்ணங்களும் வேறிடம் நோக்கிப் பாயாதில்லையா!
அது தெரியாத அந்நாட்களில் மனதின் ஆசையை, ஆவலை அவன் அவளிடம் வாயால் பகிர்ந்துகொள்ளாத போதும் அதை மறைத்ததில்லை. அந்த ஆர்வமும், ஆவலும் இருபத்தியெட்டு வயதாகிறதே.. இனியாவது இலங்கை சென்று திருமணத்தை முடிப்போம் என்று நினைக்க வைத்தது.
அதோடு, சொன்னதுபோல அம்மா அப்பாவுக்குக் காணி வாங்கி, வீடு கட்டிக் கொடுத்தாயிற்று. கவியும் படித்துவிட்டு வேலைக்குச் சேர்ந்திருந்தாள். அடுத்தவள் பவித்ரா அப்போதுதான் கல்லூரியில் சேர்ந்திருந்தாள். இருவருக்கும் என்று தனித்தனியாக ஒவ்வொரு வீடு, நகைகள், பணம் என்று சீதனம் சேர்த்து வைத்துவிட்டான்.
அவர்கள் இருவரினதும் திருமணத்தை நடத்தும் செலவு ஒன்றுதான் அவன் இன்னும் செய்யாதது.
கையில் இருக்கும் பணத்தோடு சென்று அங்கு ஒரு தொழிலை தொடங்கினால், தங்கைகளின் திருமணங்கள் நடக்கும்போது, அதையும் சிறக்கச் செய்துவிடலாம் என்று எண்ணினான். தாய்க்கு அழைத்து நாட்டிலிருந்து வெளியேறச் சொல்லிவிட்டார்கள் என்று சொன்னவன், “நான் ஊருக்கே திரும்பி வந்துவிடலாம் என்று இருக்கிறேன் அம்மா..” என்றான் ஆர்வமான குரலில்.
அவனை வெளிநாட்டுக்கு அனுப்பவே மாட்டேன் என்று அன்று அழுது கரைந்த அன்னை, சந்தோசத்தில் துள்ளிக் குதிக்கப் போகிறார் என்று அவன் காத்திருக்க, “நீ இங்கே வந்துவிட்டால் பிறகு பிழைப்புக்கு என்ன செய்வது?” என்று ஒருமாதிரிக் குரலில் கேட்டார் அவர்.
காற்றுப்போன பலூனாய் அவனுக்குள் இருந்த உற்சாகம் அனைத்தும் சட்டென வடிய எரிச்சல் சுள்ளென்று ஏறியது.
அப்போ வெளிநாட்டில் பிள்ளைகள் இல்லாத குடும்பம் எல்லாம் பிழைப்பின்றிப் பட்டினியா கிடக்கிறர்கள் என்று கேட்கத் துடித்த நாவை அடக்கி, “என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது அம்மா. அதைக் கொண்டுவந்து ஏதாவது தொழில் தொடங்கலாம் என்று இருக்கிறேன். ரெண்டு ஆட்டோ வாங்கிவிட்டால், அதில் தினச் செலவுக்குப் பணம் வரும். அப்படியே கல்லுடைக்கும் ஒரு கிரஷர் வாங்கிவிட்டால் கஷ்டப்படாமல் உழைக்கலாம். இல்லை ஒரு கடையை ஆரம்பிக்கலாம.” என்று அவன் மனதில் இருக்கும் திட்டங்களைச் சொன்னான்.
“விசரன் மாதிரி கண்டதையும் உளறாமல் உன்னிடம் இருக்கிற காசை அப்படியே இங்கே அனுப்பு தனா. அப்பா ஒரு மோட்டார் வண்டி வாங்கித் தரச் சொன்னார். அதோடு, இங்கே ஊரில் எல்லோரிடமும் கார் இருக்கிறது. எங்கள் வீட்டில் மட்டும் தான் இல்லை. நல்ல காராகப் பார்த்து ஒன்று வாங்கலாம். பவி வேறு இன்னும் படிப்பு முடிக்கவில்லை. அந்தச் செலவு இருக்கிறது. கவி, பவியின் வீடுகளுக்கு இன்னும் சுற்றுமதில் கட்டவில்லை. இதற்கெல்லாம் பணம் வேண்டாமா? நீ என்னவென்றால் கையில் காசை வைத்துக்கொண்டு இவ்வளவு நாட்களும் ஒன்றும் சொல்லாமல் இருந்திருக்கிறாய்.” என்று ஆத்திரப்பட்டார் அவர்.
திகைத்துத்தான் போனான் கீர்த்தனன். அவன் நிலையைப் பற்றி, அவனது திருமணத்தைப் பற்றிச் சற்றும் யோசிக்க அவர் தயாராக இல்லையே!

