அம்மா அம்மா என்று அவரை மட்டுமே நம்பி, அதுநாள் வரை எதற்குப் பணம் கேட்கிறார் என்றில்லாமல் கேட்டபோதெல்லாம் அனுப்பியவனுக்கு இன்று மனதின் எங்கோ ஒரு மூலையில் அன்னை பொய்த்துப் போனதை எண்ணி வலித்தது.
ஆண்பிள்ளை அல்லவா அதை மறைத்துக்கொண்டு, “அப்போ நான் என்னம்மா செய்வது? வேற நாடுமாறி திரும்பவும் என்னால் அலைய முடியாது. இப்போது எங்கேயும் இலகுவில் விசா கொடுக்கிறர்கள் இல்லை.” என்றான் அவன்.
“உனக்குக் கொஞ்சம் கூட மூளை என்பதே இல்லை தனா. இன்னும் நான்தான் எல்லாம் சொல்லித் தரவேண்டி இருக்கிறது.” என்று சலித்தவர், “ஒன்றுக்கும் யோசிக்காமல் ஒரு வெள்ளைக்காரியை பிடித்துப் பதிவுத் திருமணம் செய்துகொள். அவளுக்குக் கொஞ்சம் காசு தருவதாகச் சொல், சம்மதிப்பாள். இரண்டு வருடம் கழித்து அவளை விவாக ரத்து செய்துவிடு. உனக்கு விசாவும் கிடைத்துவிடும். நிரந்தரமாக நீ ஜெர்மனியிலேயே இருக்கலாம்.” என்றார், அருமையான திட்டம் ஒன்றைச் சொல்லும் குரலில்.
இப்படியெல்லாம் சொல்வது தன் அம்மாவா என்று நம்ப முடியாமல் வாயடைத்துப் போனான் கீர்த்தனன். அவன் மனதில் ஒருத்தி இருக்கிறாள் என்பதை அறிந்திருந்தும் எப்படி இப்படிச் சொல்கிறார்?
“என்னம்மா இப்படிச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டவனின் குரல், அதுவரை இருந்த கம்பீரத்தை தொலைத்திருந்தது.
“இதில் என்னடா இருக்கு? இந்தக் காலத்தில் இதெல்லாம் சர்வ சாதாரணம்.” என்றார் அவர் இலகுவாக.
ஒருவனுக்கு ஒருத்திதான், ஒழுக்கம் தான் உயிரிலும் மேலானது என்று சொல்லிச் சொல்லி அவனை வளர்த்தவரா அவர்?
அவரின் அந்த வளர்ப்புத்தானே, வெளிநாட்டு வாழ்க்கை கெட்டுப் போவதற்கான பல சந்தர்ப்பங்களை அள்ளியள்ளி வழங்கியபோதிலும் அவன் நிலை மாறாமல் நேர்வழியில் செல்வதற்கு உதவியது. இன்றானால் அவரே மாற்றிப் பேசுகிறாரே..
அந்தளவுக்குப் பணம் முக்கியமாகப் போய்விட்டதா? மகனின் மனதைப் பற்றிய அக்கறை இல்லையா? அல்லது வெளிநாட்டு வாழ்க்கைக்காக, அதன்மூலம் வரும் பணத்துக்காக எதுவும் செய்யலாம் என்கிறாரா?
அவரின் பேச்சை பொறுக்க முடியாமல், “ஏன்மா, அதற்கு நான் அங்கே வந்து யமுனாவை கட்டிக்கொண்டு, அங்கேயே ஏதாவது வேலையும் பார்க்கலாமே.” என்றான். “இப்போது கவியும் வேலைக்குப் போகிறாள். அப்பாவும் தோட்டம் செய்கிறார். பிறகு என்ன?”
“ஓ.. இந்தளவுக்கு எல்லாம் யோசித்துவிட்டாயா? அப்போ நீ வந்து கல்யாணத்தைக் கட்டி, உன் மனைவி உன் குடும்பம் என்று போய்விடுவாய். எங்களைக் கவியின் உழைப்பில் வாழச் சொல்கிறாய். அவள் பெண்பிள்ளை என்கிற நினைப்புக்கூட உனக்கு இல்லை. நல்ல சுயநலக்காரனடா நீ!” என்று ஆத்திரப்பட்டார் அருமை அன்னை.
“அதோடு, ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக்கொள். நீ வெளிநாட்டு மாப்பிள்ளை என்றபடியால் தான் யமுனா வீட்டில் உனக்கு அவளைக் கட்டிக்கொடுக்கப் பிரியப் படுகிறார்கள். நீ ஊருக்கு வந்துவிட்டால் அது நடக்காது. அதேபோல நீ வெளிநாட்டில் இருந்தால் தான் நல்ல சீதனமும் அவர்களிடம் வாங்கலாம். ஒரேயொரு தங்கை. இரண்டு அண்ணன்களும் வெளிநாட்டுக்கு வந்துவிட்டார்கள்.” என்று அன்னை சொன்னபோது, ஏன் யமுனாவை அவனோடு கதைக்க விட்டிருக்கிறார் என்கிற உண்மை புலப்பட்டது அவனுக்கு.
சீதனம் வாங்கி ஒரு பெண்ணைக் கட்ட அவன் என்ன கையாலாகதவனா? அதோடு, அவனுக்கான தகுதி ‘வெளிநாட்டு மாப்பிள்ளை’ என்பதா?
அப்போ திருமணச் சந்தையில் நல்ல மனம், ஒழுக்கம், நல்ல உழைப்பாளி என்பதெல்லாம் இன்று முக்கியம் இல்லையா? அவனது தன்மானமும் சுயமரியாதையும் அடிவாங்கியது. அது கொடுத்த ஆத்திரத்தில், “நான் இதைப்பற்றி யமுனாவுடன் கதைக்கிறேன் அம்மா.” என்றான்.
“ஓ..! அம்மா சொல்வதை நம்பாமல் அவளோடு தனியாகக் கதைக்கும் அளவுக்கு வந்துவிட்டாயா?” என்று கோபமாகக் கேட்டவர், “என்ன தம்பி உனக்கு அதற்கிடையில் கல்யாண ஆசை வந்துவிட்டது போல. தங்கைகளைப் பற்றி மறந்துவிட்டாய் போல.. அவள்கள் தான் உன் குணம் தெரியாமல் அண்ணா அண்ணா என்று சாகிறார்கள்.” என்றார்.
அவர் கேட்ட விதத்தில் அவன் என்னவோ பெண்ணுக்கும் கல்யாணத்துக்குள் அலைவது போன்ற மாயையைக் கொடுத்ததில் ‘ச்சை!’ என்றானது அவனுக்கு.
இருபத்தியெட்டு வயதில் கல்யாண ஆசை வராமல் இருந்தால் தான் தப்பு என்று சூடாகச் சொல்லத் துடித்த நாவை அடக்கிக் கொண்டான்.
முடிந்தவரை தன்னை விளக்க எண்ணி, “விசாவுக்காக ஒரு வெள்ளைக்காரியை கட்டுவதாக இருந்தால் நான் இத்தனை வருடம் கஷ்டப்பட வேண்டிய அவசியம் இல்லையே அம்மா. அதை முதலிலேயே செய்து இருப்பேனே. திருமணத்தை எல்லாம் அப்படி என்னால் விளையாட்டாக எடுக்க முடியாது. அது என் வாழ்க்கையில் ஒரு தடவைதான். பிடிக்கிறதோ இல்லையோ.. திருமணம் என்று ஒன்று நடந்தால் கடைசிவரை அவளோடுதான் என் வாழ்க்கை. அது வெள்ளைக்காரியாக இருந்தாலும் சரி யமுனாவாக இருந்தாலும் சரி!” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்தபடி.
“இப்போ என்னடா பெரிதாக நடக்கப் போகிறது? சும்மா, சட்டப்படிதானே அவளைக் கட்டப் போகிறாய். பிறகு யமுனாவை கட்டு. என்னவோ அந்த வெள்ளைக்காரியோடு உன்னைக் குடும்பம் நடத்த சொன்னதுபோல் கத்துகிறாயே. நான் சொல்வதுபோல் செய்தாய் என்றால் உன் வாழ்க்கையும் நன்றாக இருக்கும், நம் குடும்பமும் நன்றாக இருக்கும்.” என்று அதிலேயே நின்றார் பாக்கியலக்ஷ்மி.
இப்படி அவன் வாழ்க்கையில் எத்தனை திருமணத்தை நடத்திப்பார்க்க நினைக்கிறார் அவனைப் பெற்றவர்?
என்ன சொல்லியும் கேட்கிறார் இல்லையே என்கிற கோபத்தில், “அப்படியானால் யமுனாவுக்கு வேறு மாப்பிள்ளை பார்க்கச் சொல்லுங்கள். நான் இங்கே யாரையாவது கட்டி அவளோடே வாழ்கிறேன். நல்லதோ கெட்டதோ என் வாழ்க்கையில் திருமணம் ஒரு தடவைதான்.” என்றான் கீதன், அப்போதாவது அன்னை அவன் விருப்பத்தை ஏற்றுக்கொள்ளட்டும் என்றெண்ணி.
அவரோ, அதை ஒரு விசயமாகவே எடுக்கவில்லை. “உன்னைப்பற்றி எனக்குத் தெரியாதா தனா? அம்மாவின் பேச்சை என்றைக்கு நீ தட்டியிருக்கிறாய். அதனால், முதலில் ஒருத்தியை பதிவுத் திருமணம் செய். மற்றவைகளைப் பிறகு பார்க்கலாம்.” என்றுவிட்டு அலைபேசியை வைத்துவிட்டார் அவர்.
அவரின் கைக்குள் இருக்கும் மகன் என்றைக்கும் கைமீறிப் போகமாட்டான் என்கிற நம்பிக்கை அப்படிச் சொல்ல வைத்தது.
தாயின் பேச்சில் மனமே கசந்து வழிந்தது அவனுக்கு. கடைசிவரை அவனைப் பற்றி, அவன் மனதின் ஆசைகளைப் பற்றி அவர் யோசிக்கவே இல்லையே.
அன்று, எப்போதும்போல் அவன் வேலை செய்யும் லாரிகளுக்கான பாகங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு வேலைக்குச் சென்றவனின் முகம் களையிழந்து கிடந்தது.
அவனோடு வேலை செய்யும் பரந்தாமன் அவனிடம் தெரிந்த மாற்றத்தைக் கண்ணுற்று, “என்ன தனா, உடல்நிலை ஏதாவது சரியில்லையா?” என்று வினவினார்.
“ப்ச்! உடம்புக்கு என்ன அண்ணா, அது நன்றாகத்தான் இருக்கிறது..”
“அப்போ வேறு எதில் பிரச்சனை? மனதிலா?”
அவன் பதிலேதும் சொல்லாமல் வேலையைப் பார்க்க, அவனருகில் வந்தவர், “என்னிடம் சொல்லலாம் என்றால் சொல். உன் மனதுக்குக் கொஞ்சமாவது ஆறுதலாக இருக்கும்.” என்று தன்மையாக.
அவனுக்கும் மனக்குமுறலை யாரிடமாவது கொட்டவேண்டும் போலிருந்ததாலோ என்னவோ அன்று நடந்தவைகள் அனைத்தையும் சொன்னான்.அதைக் கேட்டவருக்கு அது ஆச்சரியத்தையோ அதிர்ச்சியையோ கொடுக்கவில்லை. காரணம், இன்று ஊரில் வாழும் பலருக்கு வெளிநாடுவாழ் சொந்தங்கள் அவர்களின் தேவைகளைத் தீர்த்துவைக்கும் கருவிகளாக மட்டுமே பயன்படுகிறார்கள் என்பதை அவரும் அனுபவத்தால் அறிந்தவர் தானே.
எனவே, அதைப்பற்றி எதுவும் பேசாது, “இனி என்ன செய்வதாக இருக்கிறாய்?” என்று மட்டும் கேட்டார்.
“வெள்ளைக்காரியைத்தான் கட்டப்போகிறேன். ஆனால், பெயருக்கு இல்லை. கடைசிவரை அவளோடுதான் வாழவும் போகிறேன். அவள் என்னை வேண்டாம் என்று போனால், அதன்பிறகு எனக்கு வேறு திருமணமும் இல்லை அண்ணா..” என்றான் ஒருவித ஆவேசத்துடன்.

