தனிமைத் துயர் தீராதோ 11 – 4

“டேய்! என்ன பேச்சுடா இது? அம்மாமேல் இருக்கும் கோபத்தில் உன் வாழ்க்கையை நீயே நாசமாக்குவாயா?”

 

“பின்னே, வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? ஊருக்கும் போகமுடியாது. இங்கும் இருக்க முடியாது. அல்லது வேறு நாடு ஏதும் தான் மாறவேண்டும்.” என்றான் சலிப்பும் வெறுப்புமாக.

 

“ஒன்றும் வேண்டாம். கொஞ்ச நாட்களுக்குப் பொறு தனா. ஆத்திர அவசரத்தில் எடுக்கும் எந்த முடிவும் சரியாக இருக்காது…”

 

“எதுவரை பொறுப்பது? போலிசே வந்து என்னை விமானம் ஏற்றும் வரையா?”

 

“அப்படியெல்லாம் உடனேயே எதுவும் செய்யமாட்டார்கள். கொஞ்சம் பொறு. என் மனதில் ஒரு யோசனை இருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் ஏதாவது சொல்கிறேன்.” என்றார் அவர்.

 

அவரால் அப்படி என்ன செய்துவிட முடியும் என்று எண்ணியவன் அதற்குமேல் ஒன்றும் சொல்லாமல் சும்மா பெயருக்கு ம் கொட்டிவிட்டு வேலையைத் தொடர்ந்தான்.

 

அன்று வேலை முடிந்ததும் வழமையாகச் சண்முகலிங்கத்தைச் சந்திக்கும் பாருக்குச் சென்றார் பரந்தாமன். இருவருமாகச் சேர்ந்து மது அருந்தத் தொடங்கியதும், “மித்ரா எப்படி இருக்கிறாள் சண்முகம்?” என்று விசாரித்தார்.

 

“அவளைப் பற்றி என்னிடம் கதைக்காதே என்று எத்தனை தடவையடா உனக்குச் சொல்வது?” என்று எரிந்துவிழுந்தார் சண்முகலிங்கம்.

 

“என்ன இருந்தாலும் அவள் உன் மனைவியின் மகள்.”

 

“அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறாய்?”

 

“அவளுக்கு ஒரு கல்யாணம் செய்துவைக்க வேண்டியது உன் கடமை சண்முகம்.” என்று மெதுவாக விஷயத்தை ஆரம்பித்தார் பரந்தாமன்.

 

“வேற வேலையில்லை எனக்கு? அந்தத் திமிர் பிடித்த கழுதைக்கு நான் கல்யாணம் செய்து வைப்பதா?”

 

“அப்படிச் சொல்லாதே சண்முகம். அவளுக்குச் செய்யாமல் உன் பிள்ளைகளுக்கு நீ எதுவுமே செய்ய முடியாது. சும்மாவே அவளை அடித்து, போலிஸ் வந்ததில் பெரும் பிரச்சனை ஆகியிருக்கிறது. இப்போது வீட்டிலிருந்தும் வெளியேற்றி விட்டாய் என்று ஊரே கதைக்கிறது. இதில் அவளுக்கு ஒரு நல்லதை செய்யாமல் விட்டாய் என்று வை. ஊரே உன்னைக் காறித்துப்பும்.” என்று அவரின் தன்மானத்தில் கையை வைத்தார் பரந்தாமன்.

 

ஒன்றுமே சொல்லாமல் மீண்டும் தன் கிளாசை மதுவினால நிறைத்தார் சண்முகலிங்கம். பரந்தாமன் சொல்வதிலும் நியாயம் இருப்பதாகவே பட்டது அவருக்கு.

 

பதினெட்டு வயதிலிருந்து தனியாக வசிப்பது ஜேர்மன் நாட்டுப் பிள்ளைகளுக்கு வழமை என்றாலும், அதையே பெற்றவர்களும் பிள்ளைகளும் விரும்புவார்கள் என்றாலும் தமிழர்கள் யாருமே அதைச் செயலாக்குவது இல்லை. முடிந்தவரை பிள்ளைகளைத் தங்களோடுதான் வைத்துக் கொள்வார்கள். அப்படியிருக்க மித்ரா அவளுடைய பதினெட்டாவது வயதிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகத் தனியாக இருப்பதில் மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர் இல்லைதான். திருமண வயதில் இருக்கும் மகளுக்குத் திருமணம் செய்யவில்லையா என்கிற கேள்வி வேறு. அந்தக் கழுதை தன்னுடைய பதின்மூன்று வயதிலிருந்து இன்றுவரை அவரின் மானம் மரியாதையை வாங்கிக்கொண்டே இருக்கிறது என்று எண்ணியவருக்கு அப்போதும் ஆத்திரம்தான் எழுந்தது.

 

அன்று பட்ட அவமானம் இன்றும் தாக்க, கிளாசில் இருந்ததை ஒரே மடக்காக விழுங்கிவிட்டு மதுவினால் சிவப்பேறியிருந்த விழிகளால் நண்பனை நிமிர்ந்து பார்த்தார்.

 

“நீ சொல்வது உண்மைதான் என்றாலும், எதற்காகவும் அந்தக் கழுதைக்காக நான் ஒரு யூரோவும் செலவழிக்க மாட்டேன்.” என்றார் ஆத்திரமாக.

 

இந்தச் சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்த பரந்தாமனும், “நீ ஒரு யூரோவும் செலவழிக்காமல் நல்ல பெயர் வாங்குவதற்கு ஒரு வழி இருக்கிறது..” என்று, கீர்த்தனனை பற்றிச் சொன்னார்.

 

“அவனுடைய அம்மா கொஞ்சம் பணம் பிடுங்கி. இரண்டு தங்கைகள் வேறு. சீதனம் என்கிற பேச்சை எடுத்தாலே கத்துகிறான். அவனுக்கு மித்ராவை கட்டிக் கொடுத்தாய் என்றால் அவனுக்கு விசாவும் கிடைக்கும், உன் கடமையும் முடியும். நீயும் ஒரு யூரோவும் செலவழிக்கத் தேவையில்லை. உன் பிள்ளைகளுக்கும் நீ நினைத்தபடி எந்தத் தடையும் இல்லாமல் எல்லாம் செய்யலாம். ஊருக்குள்ளும் உனக்கு நல்லபெயர் கிடைக்கும்.” என்று எடுத்துரைத்தார்.

 

சற்றுநேரம் யோசித்த சண்முகலிங்கத்தின் விழிகள் பழிவாங்கும் வெறியில் பளபளத்தன. “அவனுக்கே கட்டிக் கொடுக்கலாம் பரமா..” என்றார் ஆனந்தமாக.

 

சந்தேகமாகப் பரந்தாமன் பார்க்க, “என்னடா பார்க்கிறாய்? இவனுக்கு என்ன இவ்வளவு சந்தோசம் என்றா? பின்னே.. என் மானத்தை வாங்கியவளை, என்னை வீட்டை விட்டு துரத்தியவளை பழிவாங்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. அதை விடுவேனா..” என்று கேட்டார் சண்முகலிங்கம்.

 

புரியாமல் பரந்தாமன் புருவங்களைச் சுருக்க, “அவனுக்கு விசா இல்லை என்றால் நல்ல சம்பளம் இருக்காது. அம்மாக்காரி வேறு பணம்புடுங்கி. இரண்டு தங்கைகளின் கடமை வேறு இருக்கிறது. அந்த வீட்டுக்கு மருமகளா போய்க் காலம் முழுக்க மாமியார் தொந்தரவு, மச்சாள்மார் தொந்தரவு என்று கிடந்து கஷ்டப்படட்டும் இந்தக் கழுதை.” என்றார் விழிகள் இரத்தச் சிவப்பில் மின்ன.

 

என்ன மனிதன் இவன்? என்று தோன்றினாலும் ஒன்றும் சொல்லாமல் அடக்கி வாசித்தார் பரந்தாமன். கீர்த்தனன் அப்படிப் பொறுப்பில்லாமல் இருக்கமாட்டான் என்பதை அவர் அறிவார். அதோடு மித்ராவுக்குக் கீர்த்தனன் போன்ற பொறுப்பான இளைஞன் கணவனாக வந்தால், அவள் வாழ்க்கை அதன் பிறகாவது நன்றாக இருக்குமே என்கிற அவா அவரின் வாயை அடைத்தது.

 

“அப்போ மேலே பேசலாமா? அந்தப் பெடியனிடம் உனக்குச் சம்மதம் என்று நான் சொல்லவா. சொல்லி குறிப்பு வாங்கித் தருகிறேன். முதலில் பொருத்தம் பார். அது பொருந்தினால் பிறகு மித்ராவிடம் சொல்லிக்கொள்ளலாம்.” என்றார் காரியத்தில் கண்ணாக.

 

“பொருத்தமும் தேவையில்லை ஒன்றும் தேவையில்லை. அவன்தான் அவளுக்கு மாப்பிள்ளை. எப்போது வேண்டுமானாலும் அவளைக் கட்டிக்கொள்ளச் சொல்.”

 

சண்முகத்தின் பேச்சில் கோபம் எழுந்தாலும், அடக்கிக்கொண்டார்.

 

“சரிதான் விடு. ஆனால் இதைப்பற்றிக் கட்டாயம் உன் மனைவியிடம் பேசு. நாளைக்கு வரும்போது மித்ராவின் போட்டோ ஒன்றை எடுத்துவா. நானும் தனாவின் போட்டோவை கொண்டு வருகிறேன். எல்லோரும் பாருங்கள். பிடித்திருந்தால் மற்றவைகளைப் பிறகு பார்க்கலாம்.” என்றார்.

 

பிறகு, “சரி.. நான் கிளம்புகிறேன் சண்முகம். இதற்கு மேலும் இங்கிருந்தால் என் மனைவி சண்டைக்குத்தான் வருவாள்.” என்றுவிட்டுக் கிளம்பினார் அவர்.

 

அடுத்த நாள், எதற்கு என்று கேட்ட கீதனிடம் காரணம் சொல்லாது அவனது போட்டோ ஒன்றை வங்கி சண்முகலிங்கத்திடம் கொடுத்துவிட்டு, அவர் கொடுத்த போட்டோவை எடுத்துக்கொண்டு வந்து, அதற்கு அடுத்தநாள் கீதனிடம் கொடுத்தார் பரந்தாமன்.

 

என்னவென்று கேள்வியாகப் பார்த்தவனிடம், “உள்ளே ஒரு பெண்ணின் போட்டு இருக்கிறது. திறந்து பார்.” என்றார் அவர்.

 

யமுனா மனதில் இருந்ததிலும், தாயினால் உண்டான காயத்திலும் அதைப் பிரிக்காமல், போட்டோ இருந்த கவரைக் காட்டி, “யார் இந்தப் பெண் அண்ணா? எதற்கு என்னைப் பார்க்கச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டான்.

 

“அவள் பெயர் மித்ரா தனா. என் நண்பனின் மகள். அவளுக்கும் மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருந்தார்கள். நீயும் நல்லபிள்ளை என்பதால் உன்னைப் பற்றிச் சொன்னேனா.. அவர்களுக்கு உன்னை அவளுக்குக் கட்டிவைப்பதில் சம்மதமாம்.” என்றவர், அவள் முதல் தாரத்து மகள் என்பதையும், சண்முகலிங்கத்துக்கு அவளை அவ்வளவாகப் பிடிக்காது என்பதையும் மட்டும் சொன்னார்.

 

மற்றவைகள் இரு தரப்பினரும் பேசிக்கொள்ள வேண்டியது என்று எண்ணினார் பரந்தாமன். நடந்தவைகளில் எதைச் சண்முகலிங்கம் வீட்டினர் சொல்ல நினைக்கிறார்கள், எதை மறைக்க நினைக்கிறார்கள் என்று அவருக்குத் தெரியாதே. அதோடு, எல்லாவற்றையும் அவர் சொல்லப்போய் அதுவே மித்ராவுக்குக் கிடைக்கவிருக்கும் இந்த வாழ்க்கைக்கு எதிராக அமைந்துவிட்டால்?

 

விசா இல்லாத தன்னை அவளுக்கு ஏன் கட்டிவைக்க நினைக்கிறார்கள் என்கிற யோசனை எழுந்தது கீதனுக்கு. பின்னே, அங்கேயே பிறந்து வளர்ந்து, வரித்திணைக்களத்தில் பொறுப்பான பதவியில் இருப்பவளை வசதியான இடத்தில் கட்டிக்கொடுக்க இயலுமே?!

 

அதை அவன் கேட்டபோது, “அதுதான் சொன்னேனே தனா, முதல் தாரத்துப் பிள்ளை என்று. பெரிதாக எதையும் செலவழிக்க அவர்கள் தயாராக இல்லை. நீயும் எதையும் எதிர்பார்க்க மாட்டாய் என்று சொன்னேனா.. அவர்களுக்குப் பிடித்துக்கொண்டது.” என்று முடித்தார் பரந்தாமன்.

 

கீதனும் அதற்குமேல் தோண்டித் துருவாமல் விட்டுவிட்டான். அவன் இருக்கும் நிலையில் அது முடியாதும் கூட. கிடைப்பதை கவ்விக்கொண்டாக வேண்டிய நிலை அல்லவா!

 

எனவே, வெள்ளைக்காரியையே கட்டத் தயாராக இருந்தவனுக்கு, படித்து நல்ல வேலையில் இருக்கும் தமிழ் பெண் எவ்வளவோ மேல் என்று தோன்றியது.

 

எல்லாவற்றிற்கும் முதலில் அவளோடு கதைக்கவேண்டும். அவளின் கைபேசி இலக்கத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டான்.

 

அவன் அவளுக்கு அழைக்கும் தேவையே இல்லாமல், அன்றே அவனுக்கு அழைத்தாள் மித்ரா.

 

சட்டெனக் கைபேசி அலறவும், அதுவரை நேரமும் கட்டிலில் மல்லாந்து படுத்து பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த கீதன் விழிகளைத் திறந்து பார்த்தான்.

 

நிஜத்திலும் அவனது கைபேசி அலறிக்கொண்டிருந்தது. இன்று அவனை யாருமே நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள் போலும் என்று எண்ணிக்கொண்டு அதை எடுத்துப் பார்த்தான்.

 

அழைப்பது கவிதா என்று விழவும், ‘இனி இவள் பங்குக்கு எதைச் சொல்லப் போகிறாளோ’ என்று எண்ணியபடி அதைக் காதுக்குக் கொடுத்து, “சொல்லு கவி..” என்றான்.

error: Alert: Content selection is disabled!!