“எனக்கு மட்டும் அந்த மித்ராவை கூப்பிட விருப்பமா என்ன? அவளைப் போன்றவளை எல்லாம் திரும்பியும் பார்க்க மாட்டேன். ஆனால் என்ன செய்வது? என் வாழ்க்கையை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டாமா.. அதோடு திவியின் பிறந்தநாள் எந்தக் குறையும் இல்லாமல் நன்றாக நடக்கவேண்டும் என்று எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்துச் செய்துகொண்டு இருக்கிறோம். இதில் நீ குறுக்கே நிற்காதே அண்ணா. வருவதாக இருந்தால் அவளோடு வா. இல்லாவிட்டால் வராதே. ஆனால், என் பிள்ளைக்கு நீதான் தாய் மாமன். நீயில்லாமல் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நம் குடும்பத்திலும் சேகரின் குடும்பத்திலும் பேரக்குழந்தைக்கு என்று பெரிதாக நடக்கும் முதல் விழா இதுதான். அதை நன்றாக நடத்திவைப்பதும், உன் தங்கையின் வாழ்க்கையும் உன் கையில் தான் இருக்கிறது.” என்றவள், அவன் பதிலை எதிர்பாராமல் தொலைபேசியை வைத்தும் விட்டிருந்தாள்.
கீதன் அயர்ந்தே போனான்.
தாய் மாமனாய் இருந்துகொண்டு திவியின் பிறந்தநாள் விழாவுக்குப் போகாமல் இருக்கவே முடியாது. குடும்பத்தோடு வா என்றால்.. திடீர் குடும்பத்துக்கு எங்கே போவான்? எந்த முகத்தை வைத்துக்கொண்டு மித்ராவிடம் அதைக் கேட்பான்?
ஆனால், கேட்டுத்தான் ஆகவேண்டும்!
அடுத்தநாள் வேலை முடிந்து வந்ததும் யமுனாவுக்கு அழைத்தான். அவளோடு பேசப் பிடிக்காதபோதும், அவளுக்கு அவன் செய்ததை எண்ணி மனம் குற்றக் குறுகுறுப்பில் திளைத்தாலும் வேறு வழியின்றி அழைத்தான்.
அந்தப் பக்கம் எடுத்ததுமே, “ஹாய் தனா. எப்படி இருக்கிறீர்கள்?” என்று உற்சாகமாக விசாரித்தாள் யமுனா.
அவனது அழைப்பை எதிர்பார்த்துக் காத்திருந்திருக்கிறாள்! அது யார் பார்த்த வேலை என்று தெரியாமல் இல்லை! திரும்பத் திரும்ப அவள் மனதில் நிறைவேறாத ஆசையை வளர்க்கும் அன்னையின்மீது செயலற்ற ஆத்திரம் எழுந்தது.
“நன்றாக இருக்கிறேன். அழைப்பது நான்தான் என்று எப்படித் தெரியும்?” என்று கேட்டான்.
“நீங்கள் அழைப்பீர்கள் என்று ஆன்ட்டி நேற்றே சொன்னார் தனா. உங்கள் நம்பரை என் கைபேசியில் பதிந்து வைத்திருக்கிறேன். பிறகு எப்படித் தெரியாமல் இருக்கும்?” என்று எதிர்கேள்வி கேட்டாள் அவள்.
உரிமையோடு தனா என்று அழைத்துப் பேசுவது உறுத்தியபோதிலும், என் பெயர் சொல்லிக் கதைக்காதே என்று சொல்ல முடியுமா? சிறுபிள்ளைத் தனமாகத் தோன்றிவிடாதா?
ஆனாலும், தன் மனதை எப்படியாவது தெளிவாக உரைத்துவிட வேண்டும் என்றுமட்டும் உறுதியாக எண்ணிக்கொண்டான்.
“சரிதான். சொல்லு, ஜெர்மனி எப்படி இருக்கிறது?”
“ஒரே குளிர். கைகால்கள் எல்லாம் நடுங்குகிறது. எப்படித்தான் இங்கே இவ்வளவு காலமாக இருக்கிறீர்களோ தெரியவில்லை. நீங்கள் இங்கே இருப்பதால் தான் நாநானும் இருக்கிறேன். இல்லையென்றால் வந்த அடுத்தநாளே திரும்பவும் இலங்கைக்கே ஓடியிருப்பேன்.” என்று கலகலத்தவளின் பேச்சில் உற்சாகக் குறைவு சற்றும் இல்லை.
அதோடு, தன் மனதை அவள் ஒழித்து மறைக்க நினைக்கவும் இல்லை என்பதும் விளங்கியது அவனுக்கு.
“ஆரம்பத்தில் எங்களுக்கும் அப்படித்தான். போகப் போகப் பழகிவிடும்.” என்றவன், “உன்னை உன் அண்ணாக்கள் எப்படி இங்கே கூப்பிட்டார்கள் என்று கேட்கத்தான் நான் அழைத்தேன்.” என்றான் தெளிவாக.
அவளைத் தேடியோ, அவளோடு கதைக்கும் ஆவலிலோ அவன் எடுக்கவில்லை என்று சொல்லாமல் சொன்னதில், “ஓ…!” என்று இழுத்தவளின் குரலில் சற்றே சுருதி இறங்கிப்போயிற்று!
அதைக் கவனியாதவன் போல், “என் மகனுக்கு இரண்டே முக்கால் வயதாகிறது யமுனா. இனி என் வாழ்க்கையில் அவன் மட்டும்தான். பவித்ராவை கூப்பிட்டால் வாரத்தில் இரண்டு நாட்களுக்கு அவன் என்னோடு இருப்பான். அதுதான் நீ எப்படி வந்தாய் என்று கேட்க நினைத்தேன்.” என்று தன் மனதை தெளிவாகச் சொன்னான் கீதன்.
சற்று நேரம் அந்தப்பக்கம் சத்தமே இல்லை. “ஏன் தனா? நான் உங்கள் மகனை பார்த்துக்கொள்ள மாட்டேனா? உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று தெரிந்துதான் நான் இங்கே வரைக்கும் உங்களைத் தேடி வந்ததே.”
“அவனைப் பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன். அவன் தாய் இருக்கிறாள். தாய்மாமன், சித்தி என்று அவனைச் சுற்றி நிறைய உறவுகள் இருக்கிறார்கள். இதில் நீ எதற்காக என் பிள்ளையைப் பார்த்துக்கொள்ள வேண்டும்?” அழுத்தமான குரலில் சற்றே கோபமாகக் கேட்டான்.
“நான் என்ன நினைத்துச் சொல்கிறேன் என்று புரியாதவர் போல் பேசவேண்டாம் தனா. அவனுக்கு நல்ல அம்மாவாக இருப்பேன் என்று என்னால் பொய் சொல்ல முடியாது. நிச்சயம் நல்ல சித்தியாக இருப்பேன். என்னை நம்புங்கள்.” என்றாள் சற்றே கெஞ்சலாக.
சினம் மூண்டது கீதனுக்கு. “திருமணமாகி அடுத்த வீட்டுக்குச் செல்லவேண்டிய பெண் நீ. தேவையில்லாத ஆசைகளையோ எண்ணங்களையோ வளர்த்துக்கொள்ளாதே!” என்று கடுமையான குரலில் எச்சரித்தான்.
அந்தக் குரல் அவளைத் தாக்கியது போலும், அவள் அமைதியாக இருக்க, “உன் அண்ணாக்கள் யாராவது இருந்தால் கைபேசியைக் கொடு. நான் அவர்களோடு கதைக்கிறேன்.” என்றவன், அவளின் மூத்த தமையனோடு பேசி தனக்குத் தேவையான விபரங்களைச் சேகரித்துக் கொண்டான்.
அப்படியே அவன் விடைபெற முயல, “யமுனா நிற்கிறாள். அவளிடம் சொல்லிவிட்டு வையுங்கள்.” என்று மீண்டும் கைபேசியைத் தமையன் யமுனாவிடம் கொடுக்க, இவனுக்குத்தான் சினம் மூண்டது.
ஆனாலும், வேறு வழியில்லையே!
அவள், “ஹலோ தனா..” என்றதுமே, “உன் வீட்டினரின் உதவிக்கு நன்றி யமுனா. நான் வைக்கிறேன்.” என்றான் பேச்சைக் கத்தரிக்க முனைய, “ஒரு நிமிஷம் பொறுங்கள் தனா.” என்று வேகமாக இடை மறித்தவளின் குரல் வழமைக்குத் திரும்பியிருந்தது.
“என்ன?” என்று சுருக்கமாகக் கேட்டான் கீதன்.
“கவியின் மகளின் பிறந்தநாள் விழாவுக்கு நீங்கள் வருவீர்கள் தானே. நானும் அங்கே வருவேன். நாம் அப்போது சந்திக்கலாம் தனா.” என்றாள் உற்சாகக் குரலில்.
இது என்ன அடுத்தத் தலைவலி என்றிருந்தது அவனுக்கு. அவன் மனதை வெளிப்படையாக, தெளிவாகச் சொன்னபிறகும் இப்படிச் சொன்னால் என்னதான் செய்வது?
ஆத்திரத்தில் வார்த்தைகளை விட்டுவிடுவோமோ என்று பயந்து, “பார்க்கலாம்..” என்றுவிட்டு, அதற்கும் அவள் எதுவும் சொல்லமுதல் கைபேசியை அணைத்தவனுக்கு ஏதோ பெரிய இக்கட்டில் இருந்து தப்பியது போலிருந்தது.
கைகள் இரண்டாலும் தலைமுடியைக் கோதிக் கொடுத்தவன், ஊஃப் என்று காற்றை வாயால் ஊதித் தள்ளினான்.

