தனிமைத் துயர் தீராதோ 12 – 3

அந்தளவுக்குப் பெரும் தலையிடியைக் கொடுத்திருந்தாள் யமுனா. அலைபேசியிலேயே இந்தப்பாடு என்றால் நேரே சந்தித்தால்? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

 

நடப்பதை நடக்கும்போது கண்டுகொள்வோம் என்று எண்ணியவன், பவியைக் கூப்பிடுவதற்குத் தேவையான வேலைகளைக் கவனித்தான்.

 

அவன் கொடுத்த பத்திரங்கள் அனைத்தும் உண்மையானது என்று உறுதியான பிறகு, அகதிகளுக்கான எந்தச் சலுகைகளோ உதவிகளோ அவளுக்குக் கிடைக்காது என்றும், அவளுக்கான முழுச் செலவையும் அவனே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், அப்படி ஏதாவது உதவி நாடி அவள் அவர்களை அனுகுவாளாக இருந்தால் உடனடியாகச் சொந்த நாட்டுக்கே திருப்பி அனுப்புவோம் என்றும் சொல்லி பவித்ரா ஜேர்மன் வருவதற்கு அனுமதி வழங்கியது தூதரகம்.

 

கீதனுக்கோ மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. தங்கை வரப்போகிறாள். இனி நிரந்தரமாக மகன் வாரத்தில் இரண்டுநாட்கள் அவனோடு இருக்கப் போகிறான். இனியென்ன கவலை அவனுக்கு? சிறுபிள்ளை போல் துள்ளிக்குதிக்க வேண்டும் போலிருந்தது.

 

இதற்கிடையில் திவ்யாவின் பிறந்தநாளும் இன்னும் இரண்டு வாரங்களில் என்கிற நிலையை அடைந்திருந்தது.

 

அன்று அவனுக்கு அழைத்த கவிதா, “சுவிஸ் வரும்போது திவிக்கு ஒரு வயது குழந்தைக்கான உணவுவகைகள் கொஞ்சம் வாங்கி வா அண்ணா..” என்று சொன்னபோதுதான், தான் இன்னும் மித்ராவிடம் அதைப்பற்றி ஒன்றுமே கதைக்கவில்லை என்பதே நினைவில் வந்தது அவனுக்கு.

 

அடுத்தச் சனிக்கிழமை வழமைபோல் மகனைக் கூப்பிடப் போகாமல், ஒரு கபெடேரியாவின் பெயரை எழுதி மித்ராவை மகனோடு அங்கு வருமாறு மெசேஜ் அனுப்பினான்.

 

அதைப்பார்த்த மித்ராவுக்கோ குழப்பம். இப்போதெல்லாம் அவனே வந்து மகனை அழைத்துச் செல்வதும் திரும்பக் கொண்டுவந்து விடுவதும் தானே வழமை! இதென்ன திடீரென்று இப்படிச் சொல்கிறான் என்று பல கேள்விகள் எழுந்தாலும், மகனோடு தயாராகி அவன் சொன்ன கபேடேரியாவுக்குச் செல்லத் தவறவில்லை அவள்.

 

அங்கே காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இறங்கி மகனைக் கைகளில் தூக்கிக்கொண்டு நடந்தாள். இரண்டடி வைக்க முதலே, “அவனை இறக்கிவிடு..” என்கிற குரல் அருகில் கேட்டது.

 

அவனது கம்பீரக் குரலில் உடல் முழுவதுமே சிலிர்க்க, விழிகளில் ஆர்வம் பொங்க அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, ஏன் சொன்னான் என்று விளங்காதபோதும் மகனைக் கீழே இறக்கிவிட்டாள்.

 

அடுத்த நொடியே மகனைக் கைகளில் அள்ளிக்கொண்டான் கீதன்.

 

அவளை நெருங்கி மகனை வாங்கிக்கொள்ளப் பிடிக்கவில்லை என்று சொல்லாமல் சொன்னவனின் செயலில், அவனைக் கண்டதும் துள்ளிய அவள் மனது சுருண்டுபோனது.

 

பின்னால் அவள் வருகிறாளா இல்லையா என்று கவனிக்காமல் மகனோடு கொஞ்சி விளையாடிக்கொண்டு முன்னால் செல்பவனின் முதுகை வேதனையோடு நோக்கியவளுக்கு, இந்தப் புறக்கணிப்பெல்லாம் எனக்குப் புதிதா என்ன என்று தோன்றியது. எப்போதும்போல் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு அவனைத் தொடர்ந்தாள்.

 

ஒரு சின்ன வட்ட மேசையின் அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் இரு நாற்காலிகள் போடப்பட்டிருக்க, அதில் ஒன்றில் மகனோடு அமர்ந்துகொண்டான் கீதன். அடுத்ததில் சென்று அமர்ந்தவள் கேள்வியாக அவனைப் பார்த்தாள்.

 

அதை உணர்ந்த போதிலும் உடனேயே பேச்சை ஆரம்பிக்காமல் அவர்கள் இருவருக்கும் இரண்டு கபேக்களை ஆர்டர் கொடுத்தவன், மகனுக்கும் பழச்சாறு சொன்னான்.

 

“உன்னிடம்..” என்று பேச்சை ஆரம்பித்தபடி அவளைப் பார்த்தவன், அவளும் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருக்க, பார்வையைப் பக்கவாட்டில் திருப்பிக்கொண்டு, “ஒரு உதவி கேட்கத்தான் கூப்பிட்டேன்.” என்றான் வேகமாக.

 

“என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள், கட்டாயம் செய்கிறேன்!” என்றாள் மித்ரா எந்த யோசனைகளும் இன்றி.

 

“நீ சந்துவோடு ஒரு வாரத்துக்கு என்னோடு கவிதா வீட்டுக்கு வரவேண்டும்!” என்றான் அவன் அவள்மீதே விழிகளைப் பதித்து.

 

நீ வந்தே ஆகவேண்டும் என்கிற அழுத்தம் இருந்தது அவன் குரலில்.

 

அவளோ வாரத்தில் ஒருநாள் சில நிமிடத்துளிகள் அவன் முகத்தைக் காண்பதையே வரமாக எண்ணி வாழ்பவள். அவனோடு ஒருவாரம் கழிக்கக் கிடைத்தால் மறுப்பாளா?

 

எந்த யோசனையும் இன்றி, “வருகிறோம். ஆனால் ஏன்?” என்று கேட்டாள்.

 

இவ்வளவு இலகுவாகச் சம்மதிப்பாள் என்று கனவிலும் எதிர்பாராதவன் தான் சட்டெனக் குழம்பிப் போனான். அதுவும் ஒரு கணம் தான்.

 

அடுத்தக் கணமே அவன் முகத்தில் கோபமும் வெறுப்பும் தாண்டவமாட, “இதைச் சாக்காக வைத்து மீண்டும் ஒட்டிக்கொள்ளலாம் என்றோ, இதையே தொடரலாம் என்றோ அதிகமாக ஆசைப்பட்டு விடாதே! அது கனவிலும் நடக்காது!” என்றான் கடினப்பட்ட குரலில்.

 

அகன்ற விழிகளில் துயர் துலங்க அவனைப் பார்த்தாள் மித்ரா. “பயப்படாதீர்கள். அப்படியெல்லாம் அதிகமாக ஆசைப்பட்டுவிட மாட்டேன். என் ஆசைகளை நிறைவேற்றவோ, எதிர்பார்ப்புக்களைப் பூர்த்திச் செய்யவோ எனக்கென்று யாருமில்லை. அதனால் எதையும் எதிர்பார்க்கவோ, ஆசைப்படவோ தோன்றியதில்லை.” என்றாள் கம்மிய குரலில்.

 

பதிலின்றி ஒருவித திகைப்போடு அவன் அவளைப் பார்க்க, தன் முன்னால் இருந்த கபேயை நடுங்கும் கரங்களால் ஏந்தி, அதிலேயே பார்வையைப் பதித்துப் பருகினாள் மித்ரா.

 

அப்போதாவது துக்கத்தால் அடைத்த தொண்டைக்குழியின் அடைப்பு எடுபடுகிறதா என்கிற நப்பாசையில்!

 

துக்கம் மேலும் பெருகியதே ஒழிய குறையக் காணோம்!

 

அதற்கு மேலும் அங்கிருந்தால் தன் கட்டுப்பாட்டை இழந்து கண்ணீர் வடித்துவிடுவோம் என்று பயந்து வேகமாகக் கபேயை பருகியவள், “எப்போது எப்படிப் போவது என்று மெசேஜ் அனுப்புங்கள். அப்போதான் லீவு எடுக்க வசதியாக இருக்கும்.” என்று முணுமுணுத்துவிட்டு, வேகமாக எழுந்து காரை நோக்கி நடந்தாள்.

error: Alert: Content selection is disabled!!