மகனோ மாட்டேன் என்று தகப்பனின் கழுத்தை இன்னும் அழுத்தமாகக் கட்டிக்கொண்டான். அருகில் சென்று ஊட்டலாம் என்றால்.. இந்த யமுனாவின் முன்னால் அவன் எதையாவது சொல்லிவிட்டான் என்றால் அவளால் தாங்க முடியாதே. அழுகை வரும் போலிருந்தது.
என்ன செய்வதென்று தெரியாது அவள் திகைக்க, “இங்கே தாருங்கள். சந்துக் குட்டிக்கு நான் கொடுக்கிறேன்.” என்றபடி, சட்டென அவள் கையிலிருந்து அந்த டப்பாவை வாங்கிக்கொண்டாள் யமுனா.
இதுதான் சாட்டென்று கீதனை இன்னுமே நெருங்கி நின்றபடி, “சந்துக்குட்டி ஆ காட்டு. சித்தி தருவதை அப்படியே சாப்பிட்டால் ஒரு குட்டிக் கார் வாங்கித் தருவேனாம்.” என்றாள் அவள்.
சித்தியா?
திகைத்துப்போய்க் கீதனைப் பார்த்தாள் மித்ரா. அவனும் அவளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவித ஆராய்ச்சியோடு!
கரித்த கண்களையும் விடைத்த மூக்கையும் அவனுக்குக் காட்டப் பிடிக்காமல் “பாத்ரூம் போய்விட்டு வருகிறேன்..” என்றவள், கிட்டத்தட்ட அந்த இடத்திலிருந்து ஓடினாள்.
கட்டிய மனைவிபோல் கீதனின் அருகில் நின்று அவள் பெற்ற மகனுக்கு இன்னொருத்தி உணவூட்டுகிறாள்! அதை அவள் வேடிக்கை பார்க்கிறாள்! என்ன கொடுமை இது?!
அவளின் அருகாமையை விரும்பாதவன் அந்த யமுனாவின் நெருக்கத்தை அனுமதிக்கிறான்!
மகனுக்கு அப்பா மட்டும் கிடைத்தால் போதும், அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்கொள்ளட்டும், எனக்கு இந்த வாழ்க்கையே போதும் என்பது அவள் எடுத்த முடிவுதான்! ஆனாலும்… கண்ணெதிரே அவளது காதலின் நாயகனை இன்னொருத்தி சொந்தம் கொண்டாடுவதை எப்படித் தாங்குவாள்?
இப்போதே இப்படி என்றால் இன்னும் ஏழு நாட்கள் இருக்கிறதே.. இன்னும் என்னென்ன நடக்குமோ? எதையெல்லாம் பார்க்க நேரிடுமோ? அதையெல்லாம் தாங்க இயலுமா? நெஞ்சு தகித்தது.
ரெஸ்ட் ரூமுக்குள் போய்க் கதவடைத்தவளுக்கு அதற்குமேலும் முடியாமல் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது. அவன் கேட்டான் என்றதும் எதைப்பற்றியும் யோசிக்காது சம்மதித்தது தப்போ?
அன்றும் இன்றும்!
ஆனால் அவன் ஒன்றைக் கேட்டால் அது அவளது உயிராக இருந்தாலும் கூட அவளால் மறுக்கவும் இயலாதே!
அன்று யாரோ ஒருவனாய், முதன் முதலில் பார்த்த அன்னியனாய் இருந்தவனிடம் கூட அவளால் மறுக்க இயலவில்லையே! இன்றுமட்டும் எப்படி முடியும்?
ஆனால்.. அன்றைய அந்தச் சம்மதத்தின் பின்னால் தானே அவள் வாழ்க்கையில் சொர்க்கவாசல்கள் அத்தனையும் படார் படார் என்று திறந்து கொண்டன! அந்த நாட்கள் இன்று அவள் கண்முன்னால் வந்துநின்று சிரித்தன.
அப்போது மித்ராவுக்கு இருபத்திமூன்று வயதாகியிருந்தது. அன்று அவளுக்கு வரித்திணைக்களத்தில் காலையில் இருந்தே மீட்டிங் இருந்ததால் மதியம் அது முடிந்ததுமே அவள் வேலையும் முடிந்திருந்தது. உடல் களைக்காதபோதும் மூளை களைத்துப்போனதில் வீட்டுக்கு வந்ததுமே, கட்டிலில் தொப்பென்று விழுந்து, சற்று நேரத்திலேயே உறங்கியும் போனாள்.
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளை கைபேசி சத்தமிட்டு எழுப்பியது. யார் என்று பார்த்தால் அழைப்பது ஈஸ்வரி. நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அதை எடுத்துக் காதுக்குக் கொடுத்து, “அம்மா..?!” என்றாள் ஆர்வம் பொங்க.
ஈஸ்வரியின் உயிரையும் ஊடுருவி சென்றது அந்தக் குரல்.
ஒருநொடி ஒன்றும் சொல்லாமல் நின்றவர், தன்னைச் சமாளித்துக்கொண்டு, “உன்னோடு கொஞ்சம் கதைக்கவேண்டும்.” என்றார் மெல்ல.
“என்னம்மா? சொல்லுங்கள்? என்ன கதைக்கவேண்டும். எதுவானாலும் தயங்காமல் சொல்லுங்கள்.” அவர் அவளைத் தேடி அழைத்துவிட்ட சந்தோசத்தில் பரபரத்தாள் மித்ரா.
“அது.. நீ இங்கே.. வீட்டுக்கு ஒருதடவை வந்துவிட்டு போ.”
“வீட்டுக்கா? அப்பா.. ஒன்றும் சொல்ல மாட்டாரா?”
“பின்னேரம் நான்கு மணியளவில் வா. அவர் நிற்கமாட்டார்.” என்றுவிட்டு அவர் தொலைபேசியை வைக்க, துள்ளலோடு எழுந்து குளிக்கப் போனாள் மித்ரா.
உற்சாகத்தோடு தயாராகிச் சென்றவளிடம், ஒரு போட்டோவை எடுத்து நீட்டினார் ஈஸ்வரி.
“யாரம்மா இது?” என்று கேட்டபடி அதில் பார்வையை ஓட்டினாள் மித்ரா.
அதற்குப் பதிலைச் சொல்லாது, “எப்படி இருக்கிறார்?” என்று கேட்டார் அன்னை.
மீண்டும் ஒருதடவை அதைப் பார்த்துவிட்டு, “நன்றாகத்தான் இருக்கிறார். ஆனால் யார் இவர்? எதற்கு இவர் போட்டோவை என்னிடம் காட்டுகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“பெயர் கீர்த்தனன். இவரைத்தான் அப்பா உனக்குத் திருமணம் பேசியிருக்கிறார்.” என்றார் ஈஸ்வரி, அவள் முகம் பாராது.
திருமணமா? அவளுக்கா? சற்று நேரம் ஒன்றுமே விளங்கவில்லை மித்ராவுக்கு. இப்படி ஒரு விஷயத்தை அவள் யோசித்தே பார்த்ததில்லை.
அதோடு, அவள் வாழ்க்கையில் இனியும் திருமணமா? தன்னைச் சமாளித்துக்கொண்டு, “எனக்குக் கல்யாணம் வேண்டாம் அம்மா.” என்றாள்.
“ஏன்?”
என்ன சொல்வாள்?
“பிடிக்கவில்லை..” என்றாள் சுருக்கமாக.
“இந்தப் பெடியனையா?” போட்டோவில் இருந்த கீதனைக் காட்டிக் கேட்டார் ஈஸ்வரி.
“எனக்குத் திருமணத்தைப் பிடிக்கவில்லை என்றேன் அம்மா. திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் இருந்தால் தானே இவரைப் பிடிக்கிறதா இல்லையா என்று நான் யோசிக்க?” என்றவள், அந்தப் போட்டோவை அவரிடமே திரும்ப நீட்டினாள்.
அதை வாங்காமல், “காரணம் என்ன?” என்று கேட்டார் அவளைப் பெற்றவர்.
அவள் ஒன்றும் சொல்லாமல் நிற்க, “யாரையாவது விரும்புகிறாயா?” என்று கேட்டார்.
ஒருகணம் தாமதித்தவள், அன்னையின் முகத்தை நேராகப் பார்த்து, “இல்லை.. அப்படி எதுவுமில்லை.” என்றாள்.
“பிறகு என்ன? இந்தப் பெடியனையே கட்டிக்கொள். மிகவும் நல்லவனாம். அப்பாதான் சொன்னார். அவர் உனக்காக என்று ஒரு நல்லதை செய்திருக்கிறார். அதை மறுத்து இன்னுமின்னும் அவர் கோபத்தைக் கிளறாதே!” என்றார் அன்னை.
அந்த வார்த்தைகள் அவள் வாயைக் கட்டியது. தந்தையின் மனதில் அவள் மேலிருந்த கோபம் போய்விட்டதோ என்று எண்ணியதும் மகிழ்ச்சியாக உணர்ந்தாள். அதற்காகத் திருமணம் எல்லாம் செய்ய இயலாதே!
அதோடு, அவளுக்குத் திருமணமாகி விட்டால் சத்யனையும் வித்யாவையும் யார் பார்த்துக்கொள்வது? இதை அன்னையிடம் வெளிப்படையாகச் சொல்ல முடியாது. சொன்னால் கோபப்படுவார். முக்கியமாக மாறியிருக்கும் தந்தையின் கோபமும் இன்னும் அதிகரிக்கும்.
ஆக, அவளின் விருப்பமின்மையை அவர்களிடம் சொல்லி, உண்டாகியிருக்கும் சுமூக நிலையைக் குலைக்க விரும்பாமல், “அவரின் கைபேசி இலக்கம் இருந்தால் தாருங்கள்.” என்று கேட்டு வாங்கிக்கொண்டாள்.
அங்கேயே சற்றுநேரம் இருந்து, அன்னை கொடுத்த தேநீரையும், அவர் செய்து வைத்திருந்த முறுக்கையும் உண்டுவிட்டு மனநிறைவோடு அங்கிருந்து வெளியேறியவள், காரில் ஏறி அமர்ந்து கீதனுக்கு அழைத்தாள்.
அந்தப்பக்கம், “ஹலோ..” என்று அவன் சொல்ல,
“ஹாய்..! நான் மித்ரா. உங்களோடு சற்றுப் பேசவேண்டுமே.” என்றாள் இவள் சரளமாக.
அவனும் அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். எனவே, “எங்கே என்று சொல்லுங்கள். சந்திக்கலாம்.” என்றான்.
அவன் இருக்கும் இடத்தைக் கேட்டு, அதற்கு அருகே உள்ள ரெஸ்டாரென்ட் ஒன்றைச் சொல்லி, அங்கே அவனை வரச்சொன்னவள் தன் காரை அங்கு விட்டாள்.

