மித்ரா சொன்ன ரெஸ்டாரென்ட்க்கு சற்று முன்னதாகவே சென்றிருந்தான் கீர்த்தனன்.
வருகிறவள் என்ன சொல்வாளோ என்கிற கேள்வி அவன் மனதில் எழுந்துகொண்டே இருந்தது. சம்மதித்தால் அவன் பிரச்சனைகள் அனைத்துமே தீர்ந்துவிடும். இல்லையோ இன்னொரு நாடுமாறி என்னென்ன பாடெல்லாம் படவேண்டி வருமோ என்று சிந்திக்கவே வாழ்க்கை வெறுத்தது. மொத்தத்தில் அவனது மிகுதி வாழ்க்கை மித்ராவின் கையில்!
அவனை நீண்டநேரம் காத்திருக்க விடாமல் சில்வர் நிற ‘கோல்ஃ ப்ளஸ்’ கார் ஒன்று வழுக்கிக்கொண்டு வந்து நின்றது.
இளம் பெண்களுக்கு ஏற்ற கார் என்று எண்ணுகையிலேயே அதிலிருந்து இறங்கினாள் பெண்ணொருத்தி! இல்லையில்லை தேவதைப் பெண்ணொருத்தி! அப்படித்தான் இருந்தாள் அவள்! மித்ரா!
போட்டோவைப் பார்த்துவிட்டு நல்ல அழகி என்று நினைத்தான் தான். ஆனாலும் இந்தளவுக்கு எதிர்பார்க்கவில்லை.
வட்ட முகம். அதிலே வேல்விழிகள் இரண்டு. பொன்மஞ்சள் முகத்தை இன்னும் எடுப்பாய் காட்டுவேன் என்று சபதம் பூண்டது போன்ற கறுத்தடர்ந்த நீண்ட புருவங்கள். அவள் நெற்றியில் இட்டுக்கொள்ளாததால் பொட்டுகள் அத்தனையும் தற்கொலை செய்துகொண்டன போலும். பொட்டில்லாத பிறை நெற்றி! அளவாய் அமைந்த நாசி. ஈரமான ரோஜா போன்று சதைப் பற்றுடன் கூடிய செப்பு இதழ்கள்.
சுருள் சுருளாய் சுருண்டுகிடந்த அடர்ந்த கூந்தல் அவளின் கன்னங்களைத் தொட்டு கள்ளுண்ட மயக்கத்தில் இருபக்கத் தோள்களிலும் மயங்கிக் கிடந்தது! ஓடிந்துவிடும் இடையோ என்று அஞ்சுமளவுக்கு ஒடிசலான தேகம். நெடுநெடுவென இருந்தவளின் உயரம் அவளை இன்னுமே மெல்லிடையாளாய்க் காட்டியது. கறுப்பில் ஒடுக்கமான ஜீன்ஸ் அணிந்திருந்தாள். மேலே முக்கால் கையுடன் கூடிய வெள்ளையில் கறுப்பு நட்சத்திரங்கள் மின்னும் தொளதொள சட்டை. மேலிருந்து இடைவரை தொளதொளப்பாக வந்து கடைசியில் அவளின் இடையைக் கவ்விக்கொண்டு நின்றது.
கார் திறப்பிலிருந்த பட்டனை அழுத்தி காரை மூடிவிட்டு இயல்பான நளினத்தோடு நடந்து வந்துகொண்டிருந்தாள்.
கண்ணாடிக் கதவைத் தள்ளித் திறந்துகொண்டு வந்தவள் நிதானமாக நின்று அங்கிருந்தவர்களின் மீது தன் விழிகளை ஓட்டினாள்.
அவனைக் கண்டதும் அறிமுகப் புன்னகை ஒன்றைச் சிந்தியபடி அவனை நோக்கி நடந்து வந்தவளிடம், “ஹாய்..!” என்று கைகொடுத்தான் கீதன்.
“ஹாய் கீர்த்தனன். வந்து நிறைய நேரமா?” அவனுக்கெதிரே அமர்ந்தபடி கேட்டாள் மித்ரா.
“இல்லை. நானும் இப்போதுதான் வந்தேன். என்ன குடிக்கிறீர்கள்?” என்று உபசரிப்பாகக் கேட்டான்.
“எனக்கு ஒரு மில்க்கஃபேயும் தீராமிசும் போதும்.” அனாவசிய அலட்டல்கள் இல்லாமல் இயல்பாகச் சொன்னாள்.
மெல்லிய ஆச்சர்யம் பரவியது அவனுக்கு. காரணம், அவனுக்கும் அது இரண்டும் மிகவும் பிடிக்கும். அவர்களிடம் வந்த பணியாளனிடம் இருவருக்கும் அதையே ஆர்டர் கொடுத்தான்.
அவன் டொச் பேசியவிதம் வெகு சரளமாக இருக்கவே, “நீங்கள் இங்கே வந்து நிறையக் காலமா?” என்று சும்மா பேச்சை ஆரம்பித்தாள் மித்ரா.
எப்படியும் திருமணத்தை மறுக்கத்தான் போகிறாள். அதை முகத்தில் அடித்தாற்போல் ஏன் சொல்வான்? நட்போடு சொல்லிவிட்டுப் போகலாமே! அது மட்டுமல்லாமல் கஃபே அருந்தி முடிக்கும் வரையாவது எதையாவது பேசவேண்டுமே!
“பன்னிரண்டு வருடங்களாகிறது. ஏன் கேட்கிறீர்கள்?”
“டொச் நன்றாகக் கதைக்கிறீர்கள். அதுதான் கேட்டேன்.” என்றவள், “அப்போ உங்களின் அம்மா அப்பா எங்கே இருக்கிறார்கள்? இங்கா அல்லது இலங்கையிலா?” என்று விசாரித்தாள்.
அதுவரை இலகுவாக இருந்தவன் அவளைக் கூர்ந்தான். “இலங்கையில் தான்.” என்றான் சுருக்கமாக.
பேரர் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போன தீரமிசுவை சுவைத்தபடி, “அப்போ உங்களைப் பார்க்க அவர்கள் இங்கே வருவார்களா அல்லது நீங்கள் போய்விட்டு வருவீர்களா?” என்று அவள் கேட்டபோது வெளிப்படையாகவே அவன் புருவங்கள் சுருங்கின.
அதைக் கவனித்துவிட்டு, “நான் ஏதாவது தப்பாகக் கேட்டுவிட்டேனா?” என்று கேட்டாள் மித்ரா.
“இல்லை.. அப்படியில்லை.. ஆனால்..” என்றவன் கேட்க வந்ததை விடுத்து, “எனக்கு விசா இல்லை. அதனால் நானும் போக முடியாது. அவர்களையும் இங்கே கூப்பிட முடியாது.” என்றான் இறுக்கமான குரலில்.
“ஓ..!” என்றவளுக்கு உடனே என்ன சொல்வது என்று தெரியவில்லை.


