அம்மா இதைப்பற்றி எதுவும் சொல்லவே இல்லையே..! மறைத்தாரா இல்லை மறந்தாரா? விசா இல்லாத ஒருவனை அவளுக்கு மாப்பிள்ளையாகத் தேர்வு செய்யக் காரணம் என்ன? குழப்பத்தோடு அவள் பார்க்க அவனும் ஒருவித கசப்போடு அவளைத்தான் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவனிடம் வேண்டுமென்றே கேட்டதாக நினைத்துவிட்டானோ?
தன் குழப்பங்களை ஒதுக்கிவிட்டு, “சாரி.. மெய்யாகவே எனக்கு இது தெரியாது.” என்றாள் மனதிலிருந்து.
“பரவாயில்லை. ஆனால்.. என்னைப்பற்றி உங்கள் வீட்டில் எதுவும் சொல்லவில்லையா?” என்று கேட்கையிலேயே, அன்று பரந்தாமன் அண்ணா அவளை முதல்தாரத்துப் பிள்ளை என்று சொன்னது நினைவில் வந்தது.
அன்னையைக் காட்டிக்கொடுக்கப் பிடிக்காமல், “நான்தான் கேட்காமல் விட்டுவிட்டேன்.” என்றாள்.
அது உண்மையும் கூடத்தானே!
“நாம் ஏன் இங்கே சந்தித்து இருக்கிறோம் என்றாவது தெரியுமா?”
“ம்.. நமக்குத் திருமணம் பேசுகிறார்கள்.”
இதையாவது அறிந்துகொண்டாளே என்றிருந்தது அவனுக்கு. தன் நிலையைத் தெளிவாகத் தானே அவளிடம் உரைக்க எண்ணியவனுக்கு, விசாவுக்காக ஒருத்தியை மணக்கும் நிலையிலிருக்கும் தன்னை எண்ணி அவமானமாய்ப் போயிற்று!
ஆனாலும் ஒரு பிடிவாதத்துடன் அவனது குடும்பம் தொடங்கி, பதினாறு வயதில் வந்ததில் இருந்து இன்றைய நிலை வரை எதையுமே மறைக்காமல் சொன்னவன், “நீங்கள் சம்மதித்தால் திருமணம் இல்லையென்றால் வேறு நாட்டுக்குத்தான் மாறவேண்டும்.” என்றான் கடைசியாக.
அவன் சொன்னதை உள்ளூர ஒரு திகைப்போடு கேட்டுக் கொண்டிருந்த மித்ரா,
ஒவ்வொருவர் வாழ்விலும் பல சிக்கல்கள் உண்டுபோலும் என்று எண்ணியபடி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
ஆண் என்கிற அந்தக் கம்பீரம் என்னை மணந்து கொள்கிறாயா என்று வெளிப்படையாகக் கேட்க விடாதபோதும், அவள் சம்மதிக்க வேண்டுமே என்கிற எதிர்பார்ப்பை முகத்தில் காட்டாதிருக்கப் பெரும் பிரயத்தனம் செய்தபடி, அவளைப் பார்த்தவனின் அந்த ஒற்றைப் பார்வை, அவள் மனதிலிருந்த உறுதியான முடிவை ஒரேயடியாய் மாற்றியது!
அதோடு, யாருக்கும் எந்தப் பிரயோசனமும் இல்லாமல் இருக்கும் அவளால் அவனாவது பயன் அடையட்டுமே! முடிவானதும், “எனக்கு இதில் சம்மதம். ஆனால், சில விஷயங்கள் பேசவேண்டும்.” என்றாள் தெளிவான குரலில்.
அதைக் கேட்டதும், அவன் முகத்தில் தோன்றிய நிம்மதி அவள் முடிவு சரியே என்று சொல்லிற்று!
“எனக்குச் சத்யன், வித்யா என்று தம்பியும் தங்கையும் இருக்கிறார்கள். என்றைக்குமே அவர்கள் என் பொறுப்பு. அவர்களுக்கான சகலதையும் நான்தான் செய்யவேண்டும். அதற்கு எந்தத் தடங்கலும் வரக்கூடாது. என்றைக்குமே! அவர்கள் என் உயிர்.” என்றாள் அவன் விழிகளை நேராகப் பார்த்து.
அவன் உதடுகளில் புன்னகை அரும்பியது. “இதுநாள் வரை பொறுப்புக்களை நான் தட்டிக் கழித்ததில்லை. அதனால் இனி அவர்களும் என் பொறுப்பு.” என்றான் அவனும் இலகுவான அதே நேரத்தில் உறுதியான குரலில்.
“அப்படியானால் மேலே ஆகவேண்டியதைப் பாருங்கள்.”
“உறுதியான முடிவு தானா? வேண்டுமானால் வீட்டினரோடு கதைத்துவிட்டுச் சொல்லுங்கள். ஏனெனில் விசாவுக்காகத்தான் என்றாலும் இந்தத் திருமணம் நிலையானது!” என்றான் கீதன் உறுதியான குரலில்.
வீட்டில் அவளின் நலன்விரும்பிகள் யார் உண்டு? சத்யனும் வித்யாவும் தான். அவ்வப்போது எப்போதக்கா உன் திருமணம் என்று கேட்கும் சத்யனுக்கு இந்த விஷயம் மகிழ்ச்சியைத் தான் கொடுக்கும். வித்தியும் சந்தோசமாகத்தான் ஏற்றுக்கொள்வாள்.
“அவர்களுக்கும் இதில் சம்மதம் தான். அதனால் உறுதியான முடிவுதான்.” என்றாள் மித்ரா.
அவன் விசாவுக்காகக் கேட்டான் என்றால் அவள் அவனுக்கு ஒரு உதவியாக இருக்கட்டும் என்று சம்மதித்தாள். இருவருமே திருமணத்தின் பின்னான இல்லற வாழ்க்கையைப் பற்றி யோசிக்கவே இல்லை!
அதன் பிறகு அடுத்து என்ன செய்யவேண்டும் என்று நிறையப் பேசினார்கள். திருமணத்தைப் பதிவது தொடங்கி, அதற்கு அவளிடமிருந்து என்னென்ன வேண்டும் என்பதில் இருந்து, அவர்கள் வசிக்கத் தேவையான வீடு வரைக்கும் அனைத்தையும் பேசி முடிவு செய்துவிட்டே அங்கிருந்து கிளம்பினார்கள்.
அதன்படியே அவர்களது பதிவுத் திருமணமும் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல், முக்கியமாகச் சண்முகலிங்கம் இல்லாமல் நடந்தது.
அவர் எதற்காக இந்தத் திருமணத்தை அவளுக்குப் பேசினார் என்பது புரியாதபோதும், அன்று அவள் நினைத்ததுபோல் அல்லாமல் அவருடைய கோபம் இன்னும் போகவில்லை என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு. திருமணத்தைப் பதிவு செய்த கையோடு அன்னையும் புறப்பட்டுச் சென்றதில் ஏமாற்றமாக உணர்ந்தாலும் தாங்கிக்கொண்டாள்.
சத்யனும் வித்யாவும் தான் துள்ளிக் குதித்தனர். அதுவும் புன்னகை நிறைந்த முகத்தோடு பாசமாக அவர்களிடம் உரையாடிய அத்தானை அவர்களுக்கு நிரம்பவுமே பிடித்துப் போனது.
கையிலிருந்த கைபேசியின் சத்தத்தில் திடுக்கிட்டுப்போய்ப் பார்த்தாள் மித்ரா. அப்போதுதான் தான் பாத்ரூமுக்குள் நிற்பதும், ஏன் அங்கு வந்தோம் என்பதும் நினைவில்வர நெஞ்சு மீண்டும் கனத்தது.
அழைப்பது வித்யா என்று தெரிந்ததும் காதுக்குக் கொடுத்து, “சொல்லு வித்தி..” என்றாள், மனதின் கனத்தைக் குரலில் காட்டாதிருக்க முயன்றபடி.
“வகுப்பு நடந்துகொண்டு இருந்ததில் செல்லை நிறுத்தி வைத்திருந்தேன் அக்கா. அதனால் நீங்கள் கலையில் அனுப்பிய மெசேஜை உடனே படிக்க முடியவில்லை. இதென்னக்கா சுவிஸ் போவதாக மெசேஜ் அனுப்பி இருக்கிறீர்கள். இதைப்பற்றி முதலில் நீங்கள் சொல்லவே இல்லையே..” என்று, இடைவேளையின்போது அழைத்துக் கேட்டாள் வித்யா.


