முதலே சொன்னால் தடுத்து விடுவீர்களோ என்று பயந்துதான் சொல்லாமல் விட்டேன் என்று சொல்லவா முடியும்?
“அது.. கீதனின் தங்கை கவியின் மகளுக்குப் பிறந்தநாளாம். அதற்கு அவர்தான் வரச்சொன்னார். அதுதான்..” என்று தட்டுத் தடுமாறினாள் மித்ரா.
தமக்கையின் அந்தத் தடுமாற்றம் புதிதாக இருந்தது வித்திக்கு. எப்போதும் துள்ளிக் குதித்தோ, கோபத்தில் கத்தியோ பேசுபவள் அல்லதான். ஆனாலும், ஒரு நிதானம் இருக்கும். பொறுமை இருக்கும். எந்தப் பேச்சிலும் ஒரு நேர்த்தி இருக்கும். இப்படித் தடுமாறமாட்டாள்.
அதற்கான காரணம் புரியாமல் இருக்க அவள் ஒன்றும் குழந்தை அல்லவே!
அதைக் கேட்க வாய் வராததில், “அப்போ அத்தானோடா சுவிஸ் போகிறீர்கள்?” என்று கேட்டாள்.
“ம்.. ஆமாம். இப்போது ஒரு பார்க்கிங்கில் நிற்கிறோம்.”
“ஓ…!” என்று கேட்டுக்கொண்டவளுக்கு அடுத்து என்ன சொல்வது என்று தெரியவில்லை. அதோடு தாயைப்போல் அவளைப் பேணும் தமக்கையிடம் விடுத்து விடுத்து எதையும் கேட்கவும் முடியவில்லை. அது அவளுக்குப் பழக்கமில்லாத ஒன்று!
எனவே, “சரிக்கா. கவனமாகப் போய்வாருங்கள். சந்துக்குட்டி கவனம்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் வித்யா.
அவள் வேகமாக அழைப்பை துண்டித்த விதமே சத்யனிடம் இந்த விஷயத்தைச் சொல்லப் போகிறாள் என்று தெரிய பெருமூச்சொன்று வெளியேறியது மித்ராவிடம்.
அவனிடம் சொன்னால் தடுத்து விடுவானோ என்று பயந்துதான் வித்திக்கு அதுவும் நேரே அழைத்துச் சொல்லாமல் மெசேஜ் அனுப்பிவிட்டு வந்தாள். சத்யனிடம் இந்தப் பயணத்தைப் பற்றி மூச்சே விடவில்லை.
இப்போது கட்டாயம் அவன் அழைத்துக் காரணம் கேட்பான். என்ன சொல்வது?
அவனைச் சமாளிப்பது ஒன்றும் சாதாரணக் காரியம் அல்லவே! சும்மாவே கீதன்மேல் கோபத்தில் இருப்பவன்.
அழுதது தெரியாமல் இருக்கக் குளிர்ந்த நீரை முகத்தில் அடித்துக் கழுவிக்கொண்டு வெளியே வந்தாள்.
உணவு ஊட்டல் முடிந்திருந்தால் நல்லது என்று எண்ணியபடி நடக்கையில் மீண்டும் அவள் கைபேசி தாளமிட்டது.
அதைப் பார்க்காமலே அழைப்பது சத்யன் என்று தெரிய, கத்தப் போகிறானே என்று தோன்றினாலும், அவர்கள் இருவரும் தன்மேல் வைத்திருக்கும் பாசத்தை எண்ணி நெஞ்சம் நெகிழ செல்லைக் காதுக்குக் கொடுத்து, “சொல்லுடா..” என்றாள்.
“நான் என்னக்கா சொல்ல? நீதான் சொல்லாமல் கொள்ளாமல் என்னென்னவோ செய்கிறாயாமே?” என்றான் அவன்.
“அப்படி இல்லை சத்தி..”
“என்னக்கா இல்லை? நீ இப்போது சுவிஸ் போய்க்கொண்டு இருக்கிறாய் என்பது உண்மைதானே..” அவளைப் பேசவிடாமல் கோபத்தோடு இடையிட்டான் சத்யன்.
“உண்மைதான்..”
“பிறகென்ன? எதற்கு அந்தாளோடு போகிறாய் நீ?”
“அவர் கேட்கும்போது எப்படிடா மறுப்பது?”
“ஏன் மறுக்க முடியாது? மறுக்க முடியாத அளவுக்கு அவர் யார் உனக்கு?”
அந்தக் கேள்வியில் விக்கித்து நின்றாள் மித்ரா. உண்மைதானே! இப்போது அவன் யார் அவளுக்கு?
நெஞ்சம் அடைத்தாலும், “என் பிள்ளையின் அப்பாடா..” என்றாள் கம்மிய குரலில்.
“அதோடு, இன்னொருத்தியை மணக்கப் போகிறவர். அதை மறந்துவிடாதே!” என்றான் அவன்.
நெஞ்சுக்குள் சுரீர் என்று வலித்தாலும், “அவர் யாரை வேண்டுமானலும் கட்டிக்கொள்ளட்டும். ஆனால், எனக்கு? என்றைக்குமே அவர் மட்டும் தான்டா..” என்று குரல் கம்மச் சொன்னாள் மித்ரா.
“இப்படியே நீ சொல்லிக்கொண்டிரு. அந்தாள் உன்னை நன்றாக ஏமாற்றட்டும்.” தமக்கை விளங்கிக் கொள்கிறாள் இல்லையே என்கிற இயலாமையோடு சொன்னான் அவன்.
“அப்படிச் சொல்லாதேடா. உன் அத்தான் அப்படியானவர் இல்லை.”
“அவர் ஒன்றும் என் அத்தான் இல்லை!” என்றான் அவன் பட்டென்று.
“சந்தோஷின் அப்பா உனக்கு யார் சத்தி?”
அதற்குப் பதிலைச் சொல்லாமல், “உன் கணவர் தான் என் அத்தான்.” என்றான் அவனும்!
அவனை எப்படிச் சமாளிப்பது என்றே தெரியவில்லை அவளுக்கு. இதற்கே இந்தத் துள்ளுத் துள்ளுகிறான். யமுனாவும் அவர்களோடு வருவது தெரிந்தால்? அவள் சித்தி என்று சொன்னது தெரிந்தால்?
“உன்னை நோகடிக்க வேண்டும் என்பது என் எண்ணம் இல்லையக்கா. ஆனால், தன் தேவைக்காக மட்டும் உன்னைப் பயன்படுத்துவதுதான் அவர் வேலையே. அது தெரிந்தும் திரும்பத் திரும்ப உன்னை நீயே ஏன் வருத்திக்கொள்கிறாய் என்றுதான் கேட்கிறேன்.” என்றான் அவன் மனத்தாங்கலுடன்.
“இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை சத்தி. சந்தோஷ் மேல் பாசமாக இருக்கிறார். அதுவே போதும். அதற்காக எதவுமே செய்யலாம்டா.”
“என்ன சொன்னாலும் கேட்டுவிடாதே! பெற்ற மகன் மீது பாசமாக இருப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.” என்றவன், “சரி விடு. இனி ஒன்றும் செய்ய முடியாது. அதனால் கவனமாகப் போய்விட்டு வா. அவரோ அவர் வீட்டு ஆட்களோ உன் மனம் நோகும்படி ஏதாவது செய்தால் எனக்கு உடனே சொல்லவேண்டும். இதையாவது செய்வாயா?” என்று கேட்டான்.
அவனிடம் சொல்லாமல் வந்ததைச் சுட்டிக் காட்டுகிறான். “சாரிடா சத்தி..”
“லூசாக்க நீ? எதற்கு மன்னிப்பு எல்லாம் கேட்கிறாய்? அதுவும் என்னிடம்? நீ அவரிடமே செல்லைக் கொடு. நான் பேசுகிறேன்” என்றான் அவன்.
“அருகில் அவர் இல்லைடா. நான் இங்கே ரெஸ்ட்ரூமுக்கு வந்தேன். அதோடு, அப்படி ஏதாவது நடந்தால் நானே உனக்குச் சொல்கிறேன். மறைக்கமாட்டேன்.” என்றாள் மித்ரா.
“இன்னும் அவரைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இரு!” என்றவன், பல கவனங்களைச் சொல்லிவிட்டு வைத்தான்.


