‘ஹப்பாடி..’ என்று அவள் மூச்சு விடுவதற்குள்ளேயே, “இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே நிற்பதாக உத்தேசம்?” என்று வெகு அருகாமையில் கோபமாய் ஒலித்த குரலில் துள்ளித் திரும்பினாள் மித்ரா.
இவன் எப்போது வந்தான்? அவள் கதைத்ததை எல்லாம் கேட்டிருப்பானோ? சும்மாவே அவளைக் குத்திக் குதறுவானே.. இனி? அதிர்ந்து நின்றவளின் கால்களைச் சந்தோஷ் கட்டிக்கொள்ளவும், குனிந்து பார்த்தவளின் கைகள் தன்னிச்சையாய் மகனைத் தூக்கிக்கொண்டாலும் திகைப்பிலிருந்து மீளவில்லை அவள்.
கீதனையே பார்த்து விழித்துக் கொண்டிருந்தாள்.
அவளையும் மகனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு, “இவனுக்கு உணவை நீ கொடுக்காமல் எதற்காக அவளிடம் கொடுத்தாய்?” என்று சிடுசிடுத்தான் அவன்.
“அது.. அது.. உங்களுக்குத்தான்.. நான் அருகில் வந்தால் பி..டிக்காதே..”
அவள் சொல்லி முடிக்க முதலே, “அப்படியென்று உன்னிடம் நான் சொன்னேனா?” என்று பாய்ந்தான் அவன்.
இல்லையா பின்னே? இதோ இப்போதுகூடப் பிள்ளையை அவன் தரவில்லையே! இறக்கித்தானே விட்டான். என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் முழிக்க, “வா நேரமாகிறது!” என்றபடி முன்னே நடந்தான் அவன்.
இவன் இப்போது என்ன சொன்னான்? அவள் அருகில் வர அவனுக்குப் பிடிக்கும் என்கிறானா? பிறகு எதற்குப் பார்க்கும் நேரமெல்லாம் அவளை வாட்டியெடுக்கிறான்? வார்த்தைகளால் வதைக்கிறான்?
இப்படிப் பல கேள்விகள் அவளைத் தொடர அவளோ அவனைத் தொடர்ந்தாள். அங்கே யமுனா உம் என்றபடி முன்னிருக்கையில் அமர்ந்திருப்பது தெரிந்தது.
அதன் பிறகு, சந்தோஷின் சத்தத்தைத் தவிரக் காரில் வேறெந்த சத்தமும் கேட்காததில் பெருத்த நிம்மதியாக உணர்ந்தாள்.
மூன்று வீதிகள் கொண்ட அதிவேக வீதியில் சென்றுகொண்டிருந்த கீதனின் காருக்கு முன்னால் பாரமேற்றிய லாரி ஒன்று அளவான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அதை முந்துவதற்காக அடுத்த வீதிக்கு காரை எடுத்தவன் வேகத்தைக் கூட்டினான்.
அந்த லாரிக்கும் முன்னால் ஓரளவான இடைவெளிகளில் மேலும் சில லாரிகள் சென்று கொண்டிருந்ததில் அவற்றை எல்லாம் முந்துவதற்காக அவன் வேகத்தை இன்னுமே கூட்ட, அதுவரை ஊமையாக இருந்த யமுனா வாயை திறந்தாள்.
“வாவ்! சூப்பர் தனா! இதே வேகத்திலேயே போங்கள். பறப்பது போலவே இருக்கிறது..” என்று குதூகலித்தாள்.
பேசுவதற்குச் சந்தர்ப்பம் பார்த்துக்கொண்டு இருந்தாள் போலும்!
கீதனும் வேகமாகச் செல்ல, அதைப்பார்த்த மித்ராவுக்கோ பதட்டம் தொற்றிக்கொண்டது. பயத்தில் நடுங்கினாலும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் ஒருகட்டத்தில் முடியாமல் போகவே, “கீதன் ப்ளீஸ்.. கொஞ்சம் வேகத்தைக் குறையுங்கள்.” என்றாள் நடுங்கும் குரலில்.
ஆச்சரியம் மிக அவளை முன்பக்கக் கண்ணாடி வழியே பார்த்தான் கீர்த்தனன். “பின்னால் நம் மகனும் இருக்கிறான் கீதன்..” என்றாள் தவிப்போடு.
அடுத்த நொடியே அவன் கால் அழுத்தமாகப் பிரேக்கை அழுத்த வேகம் அளவுக்கு வந்தது. அப்போதுதான் இருக்கையில் நிம்மதியோடு சாய்ந்துகொண்டாள் மித்ரா.
அதன்பிறகு வீதியில் கவனம் வைத்து வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தாலும், கீதனின் விழிகள் அவ்வப்போது மித்ராவை யோசனையோடும் ஆராய்ச்சியோடும் தொட்டுத் தொட்டு மீண்டன.
இப்படி அவள் பயப்படும் அளவுக்கு அவன் ஒன்றும் தாறுமாறாகவோ, கட்டுப்பாட்டைக் கடந்த வேகத்திலோ செல்லவில்லை. லாரிகளை முந்தவேண்டும் என்பதற்காகச் சற்றே வேகமாகச் சென்றான். அவ்வளவுதான்! அந்த வேகமெல்லாம் அவளுக்கு ஒரு விசயமே அல்ல என்பதை அவன் நன்கு அறிவானே!
ஏன்.. அவளே இதையும் விட வேகமாக ஓடுபவள் தான். அதுவே அவளுக்குப் பிடித்தம் என்பதையும் அறிவான். திடகாத்திரமான ஆண்மகன் அவனையே தன் வேகத்தால் கலங்கடித்திருக்கிறாள். இவ்வளவு வேகம் வேண்டாம் என்று அவனே பலமுறை சொல்லி எச்சரித்திருக்கிறான்.
அப்படியானவள் இந்த நடுங்கு நடுங்குவதற்குக் காரணம் என்ன? காரணம் எதுவாயினும் நெஞ்சின் ஏதோ ஒரு மூலையில் சுருக்கென்று வலித்தது அவனுக்கு.
“இது சுத்த போர் தனா. கொஞ்சம் வேகமாகப் போங்களேன்..” என்று யமுனா சொல்லவும், ஆசுவாசமாய்ச் சீட்டில் சாய்ந்திருந்தவள் திடுக்கிட்டுப்போய்ப் பயத்தோடு அவனைப் பார்க்க, தன்னை அறியாமலேயே விழிகளை மூடித்திறந்து ‘பயப்படாதே!’ என்று ஆறுதல் படுத்தினான் அவளின் முன்னாள் கணவன்!
அதன்பிறகே அவளது சுவாசம் சீரானது. அதன்பிறகு யமுனா எவ்வளோ சொல்லியும் அவன் கேட்கவில்லை. காரும் அளவை தாண்டி வேகமெடுக்கவில்லை.
கார் சீட்டில் சாய்ந்தபடி மகன் இருந்த பக்கத்து யன்னலோரம் முகத்தைத் திருப்பியபடி வீதியில் பார்வையைப் பதித்து இருந்தவளைப் பார்க்கப் பார்க்க அவனுக்கு என்னவோ செய்தது.
ஒருவழியாகக் கவிதாவின் வீட்டின் முன்னால் காரை கொண்டுபோய் நிறுத்தினான் கீதன். கிட்டத்தட்ட ஒரு முழுநாள் பயணத்தின் அலுப்போடு மித்ரா சந்தோஷை தூக்கிக்கொண்டு இறங்கினாள்.
இவர்களின் காரைக் கண்டுவிட்டு, கவிதாவும் அவள் குடும்பமும் வருவதைக் கண்ட யமுனா சட்டென்று மித்ராவின் அருகில் வந்து, “நீங்கள் பாக்குகளை எடுத்துக்கொண்டு போங்கள். நாங்கள் பின்னால் வருகிறோம்.” என்றபடி சந்துவை தான் வாங்கிக்கொண்டாள்.
அவளின் திட்டம் புரிந்தாலும் அதைத் தடுக்க முனையாது தொண்டைக்குழி அடைக்க, கீதன் இறக்கி வைத்த பாக்கை எடுக்க முனைந்தாள் மித்ரா.
கீதனோ மித்ராவை முறைத்தான். “சந்துவை நீ வாங்கு!” என்றான் அதட்டலாக.
அந்த அதட்டலில் பட்டென்று மகனை அவள் வாங்கிக்கொள்ள, யமுனாவிடம் திரும்பி, “நீ போ யமுனா. நாங்கள் வருகிறோம்!” என்றான் அழுத்தமான குரலில்.
யமுனாவின் முகமோ விழுந்து போனது. அவளது ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டானே!


