“கிழிக்கும்! போகிற போக்கில் அவளையே உன் அண்ணா திரும்பவும் கட்டிக்கொள்கிறாரோ தெரியவில்லை.”
“கடைசி வந்தாலும் அது நடக்காது! என் அண்ணாவைப் பற்றித் தெரியாமல் பேசுகிறாய் நீ.” என்று உறுதியாக மறுத்தாள் கீதனின் தங்கை.
“அவரைப்பற்றித் தெரியாவிட்டாலும் ஒரு பெண் நினைத்தால் எந்த ஆணையும் மடக்கலாம் கவி. அங்கே ஒரே அறையில் அவளும் அவரும் உறங்குகிறார்கள். இந்த நாட்டில் பிறந்து வளர்ந்த அவளுக்குத் தெரியாத ஒரு ஆணை மயக்கிக் கையில் போட்டுக்கொள்ள? அவரும் ஏற்கனவே அவளோடு வாழ்ந்தவர் தானே.” என்றாள் வெறுப்புடன் யமுனா.
“லூசு மாதிரி உளறாதடி. அண்ணாவுக்கு அவள் என்றால் உயிர்.. ப்ச்! முறைக்காமல் நான் சொல்வதை முழுவதுமாகக் கேள் யமுனா. அப்படி உயிராக இருந்தவளையே வயிற்றில் பிள்ளையோடு இருந்தும்கூட விவாகரத்துச் செய்தார் என்றால் ஒழுக்கத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்று யோசி! அப்படியானவருக்கு முன்னால் அவள் கவர்ச்சி டான்ஸ் ஆடினால் கூட மாறமாட்டார். மகன்மேல் உயிரையே வைத்திருக்கிறவர் அந்த மகனுக்காகக் கூட அவளோடு சேர்ந்து வாழ நினைக்கவில்லையே. இதிலிருந்தே யோசி அவர் எப்படியானவர் என்று. இப்போதும் அவராக விரும்பியா அவளைக் கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார். இல்லையே! எல்லாம் என் மாமியாரால் வந்தது. அதனால்தான் உன்னையும் அவரோடு வரச்சொன்னோம்.”
அதும் இவர்களின் திட்டமா என்று இவன் யோசிக்கையிலேயே அவனுடைய அருமைத் தாயார் வாய்த் திறந்தார்.
“உண்மைதான் யமுனா. அவளை அவனோடு தனியாக வரவிடக் கூடாது என்றுதான் உன்னையும் வரவைத்தேன். உன் முன்னிலையில் அவள் அவனோடு எதுவும் பேசமுடியாது இல்லையா. அதோடு, இப்போதுதானே உன்னையும் அவன் நேரில் பார்க்கிறான். நீ அவனோடு சிரித்துப் பழகினால் தானே அவன் மனம் உன் பக்கம் சாயும்.” என்று அவரும் சொன்னபோது, அருவருத்தே போனான் கீதன்.
ஒரு அன்னை செய்யும் காரியமா இது?
முதல்நாள் இரவு வேலை முடிந்து வந்தவனை அழைத்து, “யமுனாவின் அண்ணாக்களுக்கு ஏதோ முக்கியமான வேலையாம், அதனால் அவர்கள் ப்ளைட்டில் அவளை அனுப்புகிறோம் என்று சொன்னார்கள் தனா. நான்தான் காசை சும்மா எதற்குக் கரியாக்குவான், என் மகனே அவளைக் கூட்டிக்கொண்டு வருவான் என்று அவர்களிடம் சொல்லிவிட்டேன்.” என்று லக்ஷ்மி சொன்னதும்,
அதோடு, அதைக்கேட்டு அவன் சினந்தபோது, “அங்கே இலங்கையில் அவர்கள் குடும்பம் எங்களுக்கு எவ்வளவோ உதவி செய்திருக்கிறார்கள். அதற்குப் பதிலாக இந்தச் சின்ன உதவியைக் கூட உன்னால் சொல்ல முடியாதா?” என்று அவர் கேட்டபோது, அவன் என்ன அவளுக்கு என்று தனியாகவா கார் ஓடப்போகிறான் என்று எண்ணி, விருப்பம் இல்லாதபோதும் சம்மதித்ததும் நினைவில் வந்தது.
எல்லாம் திட்டமிட்ட செயல்! அது தெரியாத மூடனாக இருந்திருக்கிறான். பெற்ற மகனையே அன்னை முட்டாளாக்கி இருக்கிறார்.
“நீங்கள் வேறு ஏன் ஆன்ட்டி எரிச்சலை கிளப்புகிறீர்கள்? அங்கே பார்க்கிங்கில் வைத்து நான் சந்தோஷிடம் என்னைச் சித்தி என்று சொன்னதும் அந்த மித்ரா அழுதுகொண்டு ஓடிவிட்டாள். அதைப் பார்த்துவிட்டு உங்கள் மகன், ‘உன்னை யார் இப்படியெல்லாம் கதைக்கச் சொல்லிச் சொன்னது? நீ என் மகனுக்கு என்றைக்குமே சித்தி ஆகமுடியாது. அதனால் யாரையாவது பார்த்துத் திருமணம் செய்யும் வழியைப் பார்!’ என்று காய்ச்சி எடுத்துவிட்டார். இதில் நான் அவரோடு சிரித்துப் பேசுவதா?”
“உடனேயே எல்லாம் சரியாகிவிடுமா யமுனா? மனதை தளர விடாதே. இங்கிருந்து போகையில் அண்ணாவின் மனதில் நீ இருப்பாய். அதற்கு நாங்கள் உத்தரவாதம். சொல்லுங்களேன் அம்மா!” என்று தன் கூற்றுக்குத் தாயிடம் வலு சேர்க்க முயன்றாள் கவி.
“கவி சொல்வது நிச்சயம் நடக்கும் யமுனா. நீதான் என் மருமகள். அதில் எந்த மாற்றமும் இல்லை.” என்றார் அன்னை.
“எனக்கு நம்பிக்கை இல்லை ஆன்ட்டி. இதில் அண்ணாக்களுக்கு வேறு என்னால் கவலை. உன் வகுப்புத் தோழியின் மகளுக்குப் பிறந்தநாள் என்று போகிறாய். உனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை என்கிறார்கள். அதோடு இரண்டாம் தாரமாக ஒருவனை ஒற்றைக்காலில் நின்று கட்டவேண்டிய அவசியம் என்ன என்று கேட்கிறார்கள். அது உண்மையும் தானே. இன்று நடந்ததை எல்லாம் பார்த்த பிறகு எனக்கே எல்லாம் வெறுத்துப் போனதுபோல் இருக்கிறது. இதில் அவருக்கு ஒரு மகன் வேறு!” என்றவளை அதிர்ச்சியோடு தாயும் மகளும் பார்த்தனர்.
வெளியே இருந்து கேட்டுக்கொண்டிருந்த கீதனுக்கோ பலதும் விளங்குவது போலிருந்தது. சும்மா இருந்தவளின் மனதில் அவன் பற்றிய விதையைத் தூவியது அவனது தாயும் தங்கையும் தான். இப்போது அவனை வேண்டாம் என்று ஒதுக்க நினைப்பவளை விடாமல் பிடித்து வைத்திருப்பதும் இவர்கள் தான். அதற்குக் காரணம் அவள் மூலம் சீதனம் என்கிற பெயரில் வரப்போகும் பணம்!
உங்களுக்குக் காசு தானே முக்கியம்? என்று கேட்டு அதை அவர்களின் முகத்தில் விசிறி அடித்துவிட்டு, உங்களின் சங்காத்தமே வேண்டாம் என்று ஒதுங்கிவிட மனம் ஆவேசம் கொண்டது. உயிரில்லாப் பணம் உயிருள்ள மனிதர்களைப் படுத்தும் பாடு!

