“அப்படிச் சொல்லாதே யமுனா! ஆசைப்பட்டவனோடு வாழ்வது தானே வாழ்க்கை. உன் ஆசைப்படி எல்லாம் நடக்கும், பாரேன்!” என்று ஆசைகாட்டினாள் யமுனாவின் தோழி.
“என்னவோ கவி. ஆனால், இங்கிருந்து போய் அண்ணாக்களுக்கு நான் ஒரு முடிவைச் சொல்லியே ஆகவேண்டும். இதற்குமேல் அவர்கள் பொறுக்க மாட்டார்கள். ஒன்றில் நான் கீதனை கட்டவேண்டும். அல்லது அவர்கள் பார்க்கும் மாப்பிள்ளைக்குத் தலையாட்ட வேண்டும். பாவம் என் அண்ணாக்கள். அவர்களும் எனக்காக இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் திருமணம் ஆகாமல் இருப்பது? பெரிய அண்ணாவுக்குத் தலைமுடி வேறு கொட்ட ஆரம்பித்து விட்டது.”
“நல்ல முடிவாகவே சொல்லலாம் யமுனா. நீ ஒன்றுக்கும் யோசிக்காதே. என்ன இருந்தாலும் அவன் மனதில் அவள் இல்லை. அது எனக்கு நன்றாகத் தெரியும். அதேபோல ஏற்கனவே உன்னை விரும்பியவன் தான் அவன். அதைக் கொஞ்சம் தூண்டிவிட்டால் போதும். பிறகு எல்லாம் நாம் நினைத்த மாதிரியே நடக்கும்!” என்றார் லக்ஷ்மி அம்மாள்.
“எனக்கு என்னவோ அந்த நம்பிக்கை கொஞ்சமும் இல்லை ஆன்ட்டி. அவள் மீது கோபம் இருந்தாலும் இன்னும் பாசமும் இருக்கிறது என்றுதான் தெரிகிறது. இல்லையென்றால் அவள் பயமாக இருக்கிறது என்று சொன்னதும் வேகத்தைக் குறைப்பாரா? நான் எவ்வளவோ சொல்லியும் அவர் வேகத்தைக் கூட்டவே இல்லை.” என்று,நடந்ததைச் சொன்னாள் யமுனா.
சற்று நேரம் அங்கே அமைதி நிலவியது.
அடுத்து என்ன திட்டம் போட்டு என்னைக் கவுக்கலாம் என்று ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறர்கள் போலும் என்று இளக்காரமாக எண்ணிக்கொண்டான் கீதன்.
“என்னம்மா இது? அப்போ அண்ணா அவளோடு திரும்பச் சேர்ந்து விடுவாரா?” அழாக்குறையாகக் கவிதா கேட்க,
“ச்சே ச்சே! அப்படியெல்லாம் அவன் செய்யமாட்டான். பிடிவாதக்காரன்! அதைவிட ஒழுக்கம் நிறைந்தவன். யமுனாவை வேண்டாம் என்று சொல்வது கூட இரண்டாம் தாரமாக ஒருத்தியை கட்டப் பிடிக்காமல் தான். அப்படியானவன் அவளோடு சேரவே மாட்டான்!” என்று அவர் உறுதியாக மறுத்தபோது, இவர்களின் வாய்க்காகவே அவளோடு சேர்ந்தால் என்ன என்று தோன்றியது அவனுக்கு.
“பொறு! இன்னும் ஏழு நாட்கள் இருக்கிறது தானே. அதற்குள் அவளுக்கு நல்ல பாடம் கற்பிக்கலாம். என் மகனை திரும்பியே பார்க்காத படி செய்யலாம். நான் படுத்தியெடுக்கிற பாட்டில் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று அவள் ஓடுகிறாளா இல்லையா பார்!” என்று அவர் சொன்னபோது,
‘பார்க்கலாம்! என்னைத் தாண்டி எப்படி அவளை நீங்கள் படுத்தி எடுக்கிறீர்கள் என்று நானும் பார்க்கிறேன்’ என்று எண்ணிக்கொண்டான் கீர்த்தனன்.
அதற்கு மேலும் சூனியக்காரர்கள் போல் பேசிக்கொள்ளும் அவர்களின் பேச்சைக் கேட்கப் பிடிக்காமல் எழுந்து அறைக்குள் சென்றவனை நிர்மலமான
முகத்தோடு மகனின் முகத்தை மார்பில் தாங்கியபடி, ஒருகையால் அவனை அணைத்துக்கொண்டு உறங்கும் மித்ரா வரவேற்றாள்.
அசையமுடியாமல் அவன் பாதங்கள் நின்றுவிட, அவள் மீதே நிலைத்தது பார்வை.
கடும் குளிர்காலத்தில் கூட இரவினில் உறங்குகையில் தொளதொள முக்கால் கால்சட்டையும் கையில்லா மேல்சட்டையும் அணிவதுதான் அவள் இயல்பே! அப்படியானவள் இன்று முழுக் கால்சட்டையும் முழுக்கை மேல் சட்டையும் அணிந்திருந்தாள். நெஞ்சில் தலைவைத்து உறங்கும் மகனின் கழுத்துவரை போர்வையால் மூடி, உறக்கத்தில் கூடக் கண்ணியமாக உறங்கும் அவளா அவன் முன் கவர்ச்சி நடனம் ஆடுவாள்? அவனை மயக்கப் பார்ப்பாள்?
காரில் வரும்போதும் யமுனாவை போன்று தன்னைக் கவரும் விதமாக அவள் எதையுமே செய்ய நினைக்கவில்லையே! முடிந்தவரை ஒதுங்கித்தானே இருந்தாள். அப்படியானவளைப் பார்த்து ஏன் இப்படியெல்லாம் பேசுகிறார்கள்? என்று சிந்தனை ஓடுகையிலேயே இப்படியானவள் ஏன் அப்படியான ஒழுக்கக் கேட்டை செய்தாள் என்கிற கேள்வியும் எழுந்து அவனை வதைத்தது.
அப்படி ஒன்றை அவள் செய்திராவிட்டால் இன்று அவன் குடும்பம் அவனுக்கு எதிராக நிற்க முடியுமா?
ஏன், அவளைப் பற்றிக் குறையாக ஒன்றைச் சொல்லிவிட்டு அவனிடமிருந்து அவர்கள் தப்பிக்கத்தான் முடியுமா? எது எப்படியாயினும் அவனது குடும்ப நன்மைக்காகக் கட்டாயம் இல்லாதபோதும் அவனோடு வந்தவளை காக்கவேண்டியது அவன் கடமை!
பெருமூச்சுடன் மின்விளக்கை அணைத்துவிட்டு விடிவிளக்கை மட்டும் ஏற்றிக்கொண்டு கட்டிலின் அந்தப் பக்கமாகப் படுத்துக் கொண்டவனின் மனதிலும் அலைப்புருதல்கள் ஆரம்பமாகின!
கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின்னால் அவள் உறங்கும் கட்டிலில் அவனும் உறங்குகிறான்! யாரோ ஒருவனைப்போல் விலகி! உயிரையும் உடலையும் வதைத்தது அந்த எண்ணம்!

